Tuesday, December 26, 2006

ஒரு கவிதையின் பிறப்பு..



என் எதிரேயிருக்கும்
தேனீர்க் குவளையுள்
வீழ்ந்து ஓய்கிறது
மின் விசிறி.....

நான்
மூடப் படாத
கவிதைப் புத்தகத்தை
மறுபடியும் பிரிக்கிறேன்....

தாள்களிடையில்
தட்டுப் படுகின்ற
உன்
ஞாபக ஸ்பரிசங்கள்
என்
விரல்களில் வழிய

இந்தக் கவிதையை
எழுதத்
தொடங்கினேன் ....

Thursday, December 21, 2006

கிறிஸ்மஸ் - கொண்டாடப்படும் ஒரு அகதியின் பிறப்பு

"அன்பென்ற மழையிலே அகிலங்கள்
நனையவே அதிரூபன் தோன்றினானே"

இதைப் பாடியது அனுராதா சிறீராம் தான் என்று நான் கொஞ்காலம் நம்பவேயில்லை. அவர் "டேய் கையை வைச்சுகிட்டு சும்மாயிருடா" என்கிற மாதிரியான மார்க்கப்பாடல் களைத்தான் பாடுவார் என் நினைத்துக்கொண்டிருந்தேன். ம் இந்தப்பாடல் அனுராதாசிறீராமின் குரல்வளத்தின் ஒரு மைல்கல்.



கிறிஸ்மஸ் கொண்டாட உலகம் தயாராகிறது. ஊரில் கொண்டாடிய நினைவுகளை மீட்டிப்பார்க்கிறேன். நான் ஒரு சைவக்காரனாக இருந்தாலும் கிறிஸ்மஸ் எப்போதும் என் கூடவே வருகிறது. எங்கள் வீட்டின் பின்வேலியோடு ஒரு தேவாலயமிருந்தது அதன் திருவிழாக்கள் பூசைகள் வித்தியாசமாக இருந்தன அவர்கள் பூசையின் போது பாடல்களை பாடுவார்கள் அப்போது நாங்கள் வேலிக்குள்ளால தலையை ஓட்டி பார்த்துக்கொண்டிருந்திருக்கிறோம். அந்த கோயில் திருவிழாக்கள் வருகிறதென்றால் ஒரு மாதத்துக்கு முன்னாலேயே கொஞ்ச அக்காக்கள் சேர்ந்து பாடுறதுக்கு பயிற்சி எடுப்பினம் மறுபடியும் மறுபடியும் ஒரே பாடல்களைப்பாடி பாடிப்பாடி அவர்கள் பயிற்சி எடுப்பதை பார்த்துப்பார்த்தே எனக்கு பாடல்கள் பாடமாகிவிடும் அந்தப்பாடல்களைப்பாடிக்கொண்டு திரிவேன்.

பிறகு கிறிஸ்மஸ் என்றால் கொலுவைக்கிற மாதிரி மாட்டுத்தொழுவத்தில் பாலன் பிறந்த காட்சியை தேவாலயத்தின் ஒரு ஓரமாக ஒரு மேசையைப்போட்டு சவுக்கு மரத்தை வெட்டி ஒரு குடில் அமைத்து சின்னசின்ன உருவ பொம்மைகளை வைத்து புது வருடப்பிறப்பு வரை வைத்திருப்பார்கள். நாங்கள் அந்த பொம்மைகளையும் அது விபரிக்கிற காட்சிகளையும் அடிக்கடி போய் பார்த்து விட்டு வருவோம். இதற்காகவே அந்த நாட்களில் எங்கள் பின்வேலியில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையால் ஒரு சிறப்பு பாதையை ஏற்பாடு செய்திருப்போம் வீட்டுக்கு யாராவது எங்கள் வயதில் விருந்தாளிகள் வந்தால் நாங்கள் உடனே அவனை அல்லது அவளை எங்கள் பிரத்தியேக பாதை வழியாக அழைத்துச்சென்று அந்த கொலுவினைக்காட்டுவோம்

(யாரிட்டயும் சொல்ல மாட்டியள் என்றால் ஒரு விசயம் சொல்லுறன் ஒருக்கா இப்பிடி போய் பார்க்கும் போது கைகளைக்கட்டுப்படுத்த முடியாமல் ஒரு பொம்மையை நான் தூக்க தம்பி பறிக்க அது உடைஞ்சு போய்ச்சுது கோயிலைப்பார்க்கிற அம்மம்மா பிறகு அம்மாவைக்கூப்பிட்டு கேட்டா உவங்கள் வந்தவங்களோ எண்டு அம்மா கேக்கேக்க நாங்கள் உண்மையை சொல்லிப்போட்டம் நாங்கள் போகவே இல்லை எண்டு ஹிஹி)



அப்படி கிறிஸ்மஸ் என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான். கிறிஸ்மசில் எனக்கு இன்னொரு மகிழ்ச்சியும் இருக்கும் என்னெண்டா அது நத்தார்பாப்பா

"யேசுபாப்பா ஓடிவாறாராம்
ஏழைகளைத் தேடிவாறாராம்"


எண்டு மேளதாளங்களொடு ஆடிக்கொண்டு ஒரு பெரிய வயித்தோடு ஆட்டமே ஒரு மாதிரி கிக்காக இருக்கும் நத்தார் பாப்பா வருவார். அப்பிடியே ஆடியபடி அவர் ரொபிகளை எடுத்து எங்களிடம் தருவார் நாங்கள் அதைவாங்கி தின்னுவம் சில துணிஞ்ச கட்டைகள் நத்தார் பாப்பாவோட சேர்ந்து ஆடுங்கள் நாங்கள் அம்மாட அகப்பைக்காம்பை நினைச்சுக்கொண்டு பேசாம இருப்பம். ம் ...

பிறகு பள்ளிக் கூடத்திலயும் கிறிஸ்மஸ் நடக்கும் இலங்கைப்பள்ளிக் கூடங்களில் மார்கழி மாதம் விடுமுறை என்பதால் நவம்பர் மாதத்திலேயே ஒரு நாளை ஒளிவிழா என்று கொண்டாடுவார்கள் பள்ளிக்கூடத்தில படிக்கிற வேதக்காரப்பெடியள் சந்தோசப்படவேண்டுமே அதற்குத்தான். சந்தோசம் அவங்களுக்கு மட்டுமே எங்களுக்கும்தான் கேக் உட்பட்ட இத்தியாதி தின்பண்டங்களை பாக்கில போட்டு தர திண்டுவிட்டு அப்பிடியே போடுற நாடகங்கள் பாடுற பாட்டுக்கள் எண்டு பாத்திட்டு வருவம் சந்தோசமா.

இது சின்னப்பொடியனா இருக்கேக்க வளர்ந்தாப்பிறகு ஒளிவிழாவை நடத்துறதே நாங்கதான் ஒரு குண்டான பெடியனை பிடிச்சு அவன் வயித்துல தலகாணியைக்கட்டி நத்தார்ப்பாப்பாவின் உடுப்பை போட்டு அவனை ஆடவிடுவம். ஒளிவிழா தொடங்கும் போதே அறிவிப்பாளர் சொல்லத்தொடங்கியிருப்பார் உங்களை மகிழச்சிப்படுத்துவதற்காக நத்தார்ப்பாப்பா வந்து கொண்டிருக்கிறார் என்று ஆனா மற்ற நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து கடைசியாத்தான் நத்தார்ப்பாப்பாவை வரவிடுவாங்கள்

அப்போதெல்லாம் மேடைக்கு நத்தார் பாப்பா வந்தால் அவர் கூடுதலா ஒரு மொழிபெயர்ப்பாளரோட தான் வருவார். கசுபுசு என்று சும்மா நத்தார் பாப்பா அவர் மைக்கில சொல்ல மொழிபெயர்ப்பாளர் அதைமொழிபெயர்ப்பார்.

அந்த உரையாடல் இப்பிடி இருக்கும்

ந.பாப்பா - கசுபுசு
மொழி. பெ – அவர் அமெரிக்காவில் இருந்து வந்தவராம்
ந. பாப்பா - ஸ்சிக்மழகுபு
மொழி.பெ – அவ்வளவு தூரம் வந்ததால தனக்கு சரியா களைக்குதாம்
ந.பாப்பா – கினிகதடட

மொழி பெ – வரும்போது பயங்கர செக்கிங்காம்(அப்போது வன்னிக்குள் வருவதெண்டால் கடுமையான செக்கிங் இருக்கும் இப்போதும் தான்)
ந.பாப்பா – (வயித்தை தடவிக்கொண்டே) கிசபிசபா
மொழி.பெ - ஆமி வயித்துக்க குண்டு இருக்கோ எண்டு கேட்வனாம்.

இப்படி போகும் உரையாடல்.



இந்த உரையாடல் முடிஞ்சோண்ண அப்பிடியே நத்தார் பாப்பா இனிப்பு பொட்டலங்களை வீசிய படியே சின்னனுகளுக்குள்ளால நடந்து போய் அதிபர் உட்பட்ட முக்கிய பிரபலங்களுக்கு கைகொடுப்பார்.( யார் அவயளிட்ட படிக்கிற இந்த பாப்பா) இப்பிடி ஒரு முறை விஜந் எண்டொரு குண்டன் பாப்பாவா வேசம் போடேக்க கெமிஸ்ரி வாத்தி ஜெகதீஸ்வரனின் கையை பிடித்து நசிநசியெண்டு வேண்டிய மட்டும் நசித்து விட்டான். (வாத்தி அடுத்தநாள் அவனைக் கேள்விமேல் கேள்வி கேட்டு பின்னியெடுத்தது வேறு கதை)

இதெல்லாம் முடிந்தவுடன நத்தார் பாப்பா மேடையில ஏறி ஒரு குத்தாட்டமான பாட்டுக்கு ஆட்டம் போடுவார் இப்பிடி ஒரு முறை ஆடிக்கொண்டிருந்த பாப்பா தன்ர ஆட்டத்தை திடீரென்று நிறுத்தினார் அவசரமா நாங்கள் திரையை இழுத்து மூடினம் நடந்தது என்ன?

?
??
???
????...................

ஆடிக்கொண்டு இருந்த பாப்பா திடீரென்று தன் ஆட்டத்தை நிறுத்த சின்னனுகள் ஹோ எண்டு கத்த கிட்டப்போய் என்னடா எண்டால் தலையாணி அறுந்து போச்சு மச்சான் பிறகென்ன விவேக் பாணியில்
"கவலைதோய்ந்த உங்கள் முகங்கள் முன்னால் இருந்தாலும் கட்சிப்பணிகள் அழைப்பதால் என்று சீச்சி"

"நத்தார் பாப்பாவுக்கு அமெரிக்காவில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக போகிறார்"
எண்டு சொல்லி திரையை இழுத்து மூடிவிட்டோம்.

இது ஒன்று.

நான் அப்பகவிதைகள் எல்லாம் எழுதுவன். ஒளிவிழாவுக்கு ஒரு கவியரங்கம் வைச்சோம் தலைவர் நான்தான் (நம்புங்கள்) பாலன் பிறந்தார் என்று தலைப்பு அப்ப எங்கட வகுப்பில அருள்நேசன் எண்டொரு நண்பன் இருந்தான் அவன் எங்களோடயே படிக்கிற உதயா எண்டொருத்திய காதல் அதுவும் ஒருதலைக்காதல் பண்ணினான்.
ம் நாங்கள் யார் காதலை வாழவைக்க வந்த தெய்வங்கள் அல்லவா
அதனால் அவனை கவிபாட மேடைக்கு அழைக்கும் கவிதையை நான் இப்படி எழுதினேன்

அடுத்து வருவது அருள்
அவர்
எடுத்து வருகிறார்
கவிதைகள் எழுதிய
பேப்பர் சுருள்

பௌர்ணமி நிலவின்
உதயம் பார்த்து இவர் சிலிர்த்ததுண்டு
சூரிய உதயம் பார்த்து
பனித்துளி போல் இவர் கரைந்ததுண்டு.
இறை அருளின் உதயம் பாடவரும்
கல்லூரிக்கவியுலகின் புது உதயம்
அருளே வருக
இறைஅருளின் உதயம் உன் கவியில் தருக(இயேசு மன்னிப்பாராக)

இப்படி நிறைய உதயத்தை கொஞ்சமாய் அழுத்திச் சேர்க்க வகுப்பு பெடியள் விசிலடிச்சு அரங்கத்தை நிறைக்க( எல்லாம் ஏற்கனவே செய்த ஏற்பாடுதான்)
எப்படிப்பட்ட புனிதமான பணி நான் செய்தது பார்தீர்களா?(மெய் சிலிர்த்திருக்குமே) பிறகு மேடைய விட்டு இறங்க உதயா பல்லைக்கடிச்சுக்கொண்டு பத்திரகாளியாய் மாறின விசயம் உங்கள் ஒருத்தருக்கும் தெரியாது எண்ட நம்பிக்கையில் ம் அதையெல்லாம் விடுவோம்.


இயேசு பிறக்கும் போது ஒரு அகதி. தனது நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட தாய்க்கும் தந்தைக்கும் இரவல் வீட்டு மாட்டுத்தொழுவத்தில் பிறந்த குழந்தை. இந்தக் கோணத்தில் இந்த விழாவை நாம் எத்தனை பேர் அணுகுகிறோம் அல்லது அணுகத் தயாராகிறொம். அகதியின் வேதனையையும் சோதனைகளையும் நான் நிச்சயமாக இப்போது தான் உணர்கிறென் என் கேள்வியெல்லாம் இயேசுவுக்காவது மாட்டுத்தொழுவம் கிடைத்தது. உலகமெங்கும் அதிகாரவர்க்கங்களால் அகதியாகிற எத்தனை பேருக்கு மாட்டுத் தொழுவங்களாவது கிடைக்கின்றன?

த.அகிலன்

Wednesday, December 13, 2006

காத்திருப்பொன்றின் முடிவு(ஒரு அஞ்சலி)

ஈழத்துக்கவிஞர் சு.வில்வரத்தினம் பற்றிய நினைவுப்பகிர்வு


நான் அவரை சுமார் நான்கு வருடங்களிற்கு முன்பாக ஒரு மழைக்கால காலைப் பொழுதில் சந்தித்தேன். இவர்தான் கவிஞர் வில்வரத்தினம் என நிலாந்தன் அவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார் . இவர் அகிலன் கவிதைகள் எழுதுவார் என்று அவருக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

எனக்கு ஞாபகமிருக்கிறது நான் உடனே யார் சுனா.வில்வரத்தினமா என்று கேட்டேன். சுனா கொஞ்சம் அழுத்தமாக இருந்தது கேள்வியில் சு.வி ரசித்துச்சிரித்தார். பெரிய சிரிப்பு ஓமப்பு நான் சுனா வில்வரத்தினம் தான் என்று கைகளைப்பற்றிக்கொண்டார். இன்றைக்கும் உறைந்து போன அந்தச்சிரிப்பு நான் இதை தட்டச்சிக்கொண்டிருக்கையிலும் நிழலெனப்படிகிறது நினைவுகளில்.

அதற்கு ஒரு இரண்டு வருடங்கள் முன்பாக நாங்கள் எமது இடப்பெயர்வு வாழ்க்கையின் இறுதிக்காலங்களில் இருந்தபோது கவிரும் புகைப்படகலைஞருமான அமரதாஸ் எனக்கு சு.வியின் நெற்றிமண் கவிதைத் தொகுதியைக்கொடுத்தார். அதுதான் எனக்கும் சு.விக்குமான முதல் பரிச்சயம் அவரது பெயரைiNயு நான் அப்பொழுதுதான் கேட்கிறேன். (நான் கவிதைகள் என்று எதையோ கிறுக்கி கொண்டிருந்த காலம் அது) நெற்றிமண் படித்து பிறகு அவரது கவிதைகள் எல்லாவற்றையும் படிக்கும் ஆர்வத்தில் அலைந்து அவரைப்பற்றி பிரமாண்டமான எண்ணங்களை எனக்குள் நிரப்பிக்கொண்டிருந்த காலத்தில் தான் நிலாந்தனின் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது கலகலப்பான மனிதர் அவர் மட்டு மல்ல அவர் இருக்கும் சூழலையும் கலகலப்பாக்க வேண்டு மென்பதில் குறியாயிருப்பார். அவரது துணைவியாரும் அவரும் அற்புதமான தம்பதிகள்; என்று தோன்றும். சு.வி தனது மனைவியை கிண்டலடிக்கும் விதமே தனிதான் எனக்கு ம் இந்த வயதிலும் இளமை தாண்டவமே ஆடகிறது இந்த மனிதரிடம் என்று நினைத்திருக்கிறேன்.

தொடாச்சியாக நான்கைந்து நாட்கள் அவரை நிலாந்தனின் வீட்டில் சந்தித்திருக்கிறேன். கூடவே தாயகத்தின் அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு அவர்களும் உடனிருப்பார் அவர்கள் எல்லோரும் இலக்கியம் பேசுவார்கள் அல்லது அரசியல் பெரும்பாலும் இப்போதெல்லாம் இலக்கியம் அரசியல் என்று தனித்தனியாக ஏதுமில்லை அங்கே அல்லது இல்லாமலாக்கப்பட்டிருக்கிறது. எல்லாமே அரசியல் தான் இருப்பே பிரச்சினையாகிய பிறகு இலக்கியம் என்ன வேண்டிக்கிடக்கிறது.அவர்கள் ஏதோ பேசுவார்கள் நான் கேட்டுக்கொண்டிருப்பேன் எப்போதாவது ஓரிரண்டு வார்த்தைகள் பேசியருப்பேன்.


சு.வியுடன் எனது பிறந்தநாளைக்கொண்டாடும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. சும்மா சின்னதாய் ஒரு றீட் அதில் சு.வி பாட்டுப்பாடினார் அற்புதமான பாடல் நான் நினைக்கிறேன் அது கிருஸ்ணணை நினைத்து உருகும் பாடல்

“யமுனை ஆற்றிலே ஈரக்காற்றிலே” இந்தப்பாடல் தான் சு.வி பாடினார் நன்றாக பாடினார். நிலாந்தன் அவர் முடித்தவுடன் சொன்னார் வில்வண்ணைக்கு மிகவும் பிடித்த பாடல் இது என்று. அது தவிரவும் சு.வி ஆன்மீகத்தில் ஈடுபாடுள்ளவராக இருந்தார். அதே நேரம் சடங்குகளிலே நம்பிக்கையற்றவராகவும் இருந்தார்.

பெரிய மூக்கு பளிச்சென்ற மனசின் அடியாளங்களைத் தேடுகிளன்ற பார்வை என்று அந்த நான்கைந்து நாட்கள் நான் சு.வியை ரசித்தபடி இருந்தேன். அவர் உள்ளுணர்வுகளை தான் நம்புகிறேன் என்றார் அவைதான் என்னை வழிநடத்துகின்றன.



தீவுப்பகுதியிலே இந்திய ராணுவம் குடியிருந்தபோது இவரும் அங்கேதான் இருந்தார்
ஒரு நாள் இரவு திடீரென்று தோன்றியிருக்கிறது.மனிசியை அழைத்து வா வெளிக்கிடு உங்கட அப்பாவீட்டை போவம் என்றிருக்கிறார். மனிசி என்னப்பா இந்த நேரத்தில போவம் எண்டுறியள் என்ன பிரச்சினை? இல்லையப்பா மனம் சரியில்லை போவம் என்றிருக்கிறார். இரண்டு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு இரவிரவாக வீட்டை விட்டு கொஞ்ச தூரத்தில் இருந்த மாமனார் வீட்டிற்கு போய்விட்டார்கள் மொத்தக்குடும்பமும். அவர்கள் கையில் எடுத்துப்போனது தமது குழந்தைகளும் காலச்சுவடு சஞ்சிகை ஒன்றும் தான். அன்று இரவு பெரிய வெடிச்சத்தம் ஒன்று கேட்டதாம் அடுத்தநாள் வீடு திரும்பும்போது அவர்களது வீட்டுக்கு இந்தியராணுவம் குண்டுவைத்து தகர்த்து விட்டிருந்தது. தரைமட்டமா கிடந்ததாம் வீடு. தனது உள்ளுணர்வு தனக்கு உயிர்கொடுத்ததாக சொல்லுவார். சு.வி.

இது பற்றி எங்கேயோ எழுதிய சு.வி தான் கொண்டு போன காலச்சுவடு பற்றி சொல்லும்போது சொல்லுவார் சுந்தரராமசாமி ஆசிரியராக இருந்த போது வந்த இதழ் அது. இலக்கியம் குறித்து சர்ச்சைகளிலும் ஆரோக்கியமான விவாதங்களிலும் ஆர்வமாக கலந்து கொண்டார். சு.வி.

ஆத்மா ஒரு முறை ஒரு கட்டுரையில் குறிப்பிட்டார் சு.வியிடம் கவிதை கேட்டால் உடனேயே பேப்பரும் பேனாவும் எடுத்துக்கொண்டு ஒரமாகப்போய் எழுதிக்கொடுப்பாராம் என்று..

எல்லாம் முடிந்துவிட்டது ஒரு இலக்கிய ஆளுமையை தழிமர்கள் இழந்து விட்டார்கள். சு.வி ஒரு முன்னோடு பல இளைய தலைமுறை கவிஞர்களுக்கு அவர் வழிகாட்டிவிட்டிருக்கிறார் படைப்பிலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் ஆவர்வமோடு இயங்கினார்.ஈடு செய்ய முடியாத பேரிழப்பு இது.


என்;னிடம் கடைசியாக சந்தித்தபோது கேட்டார் உன்ர கவிதைகள் எல்லாத்தையும் ஒரேயடியா ஒருக்கா தாடாப்பா படிக்கோணும் பிறகொருக்கா கொண்டு வந்து காட்டு எண்டு.. பிறகு நான் அவரை சந்திக்கவில்லை எனது கவிதைகளை ஒட்டு மொத்தமாக அவரிடம் காட்வே முடியவில்லை பெரும்பாலும் நாட்டுப்பிரச்சினை சந்திப்பதற்கான முட்டுக்கட்டைகளை நீட்டிக்கொண்டே சென்றது. இப்போ இன்னும் தீராமல் நீண்டு கொண்டே போய் முடிந்தும் விட்டது.

ஏக்கங்களுடன்
த.அகிலன்

சு.வி சிறுகுறிப்பு(1950-2006

ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் தனது 56 வயதில்
(09.12.06)சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.
புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார்.70களில் எழுதத்தொடங்கிய சு.வி இறுதிவரை எழுதிக்கொண்டே இருந்தார்.

இவரது கவிதைத்தொகுதிகளாவன, அகங்களும் முகங்களும் (1985),
காற்றுவெளிக்கிராமம் (1995), காலத்துயர். நெற்றிமண், 2000 இலே வெளியானது. இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக இந்தியாவில் இரந்து வெளிவந்திருந்தது. ஈழத்தின் மிகு முக்கியமான கவிதைத்தொகுதியான மரணத்துள் வாழ்வோம் தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

இவரது "காற்றுவழிக் கிராமம்" என்னும் கவிதைத் தொகுதி விபவி சுதந்திர இலக்கிய அமைப்பின் 1995 ஆம் ஆண்டிற்கான சிறந்த கவிதை நூலுக்கான விருதினை பெற்றுக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.



படங்களுக்காக நன்றி வசந்தன் மற்றும் பெயரிலி

Tuesday, December 12, 2006

கடந்து விடமுடியா நினைவுகள்


நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்

மரணத்தின்
வாசனை மிகும்
ஊரின் தெருக்களைக்
கடந்தாகி விட்டதென்றும்......

நகரத்தின்
இடுக்குகளில்
எனக்கான பூஞ்செடிகள்
காத்துக் கிடக்குமெனவும்.....


தடைகளும் எல்லைகளுமற்று
விரியும்
புதிய வானத்தில்
என்சிறகுகள் கொண்டே
எனக்கான வானவில்லை
வரைந்து விட முடியுமென்றும்.....

நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்.....

மரணத்தின்
வாசனைமிகும்
அத்தெருக்கள் தான்
என்
உள்ளங்கையின் ரேகைகள்
என அறியாது...

த.அகிலன்

Thursday, December 07, 2006

வற்றிக்கொண்டிருக்கும் பிரியம்..


பிரியத்தின்
சொற்கள் வற்றிக்கொண்டிருந்தன.

தாகித்தலையும்
நம்
இறுதிப்பார்வைகள்
நதியைப்போல்
ஓடிக்கொண்டிருக்கிறது
நமக்கிடையே

பற்றியிருந்த
விரல்கள்
இளகத்தொடங்குகையில்

வானம்
குமுறத்தொடங்கியிருந்தது

இருவரும்
கண்கள்
ஏன் முதுகுகளிடம்
இல்லை என்பதாய்
நடக்கத்தொடங்கினோம்

சுவடுகளைக்
கரைத்தபடி
பெய்து கொண்டிருந்தது
மழை.

த.அகிலன்

Sunday, December 03, 2006

கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்..


"பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒருபாட்டு"

இந்த பாடல்காட்சிதான் எனக்கு நான் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவில் தீபங்களை வைத்து எடுக்கப்பட்டவற்றில் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்.

எங்கள் சின்னவயதில் விளக்கீடு என்றால் ஒரே கொண்டாடடம் தான் .தீப்பந்தங்களை கொழுத்தி வளவுக்குள் ஆங்காங்கே குத்திவைத்து திரையயைப்போல விரிந்திருக்கும் இருளுக்குள் அது அணையும் வரை பார்த்துக்கொண்டே நிற்போம். சின்னக்கா அண்டைக்கு ஒரு மூண்டு மணிபோல சொல்லுவா தம்பி ஒரே அளவான தடி வெட்டிக்கொண்டுவாங்கோ என்று. எனக்கு ஒரே புழுகமாக இருக்கும். ஒரு பெரிய மனுசனைப்போல கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். எல்லாவீடுகளிலும் அப்பான்ர கத்தி என்று ஒர கத்தி இருக்கும். அது தான் வீட்டிலேயே பெரிசு அநேகமாக அப்பாவைத்தவிர அதை எடுப்பதற்கு யாருக்கும் அனுமதிகிடையாது. அதற்கு ஒரு வரலாறு கூட இருக்கும்(கத்திக்கு வரலாறா எண்டு நினைக்கிறியளோ) அப்பா அதை எங்கேயாவது வெளியூர் போய் வரும் போது வாங்கியிருப்பார். அல்லது ரொம்பபிரபலமான கத்தி அடிக்கும் கொல்லரிடம் இருந்து சொல்லி அடித்திருப்பார். அல்லது அப்பப்பா அதை அப்பாவுக்கு கொடுத்திருப்பார். இப்படி கத்தியின் முக்கியத்துவம் வீட்டிலுள்ளவர்களால் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்.

அதனால் சிறப்பு அனுமதிகளோடு மட்டும் அதை எடுக்கலாம்.யாராவது எதையாவது வெட்டிக்கொண்டு வா எண்டு என்னிடம் சொன்னால் நான் உடனே அப்பாவின் கத்தியைக்கொண்டு போகட்டா என்றுதான் கேட்பேன். டேய் சும்மா இரு சின்னக் கத்தியை கொண்டுபோ அப்பா அடிப்பார் என்று சின்னக்கா வெருட்டுவா? நானா மசிவன் அப்ப நீங்களே போய் வெட்டுங்கோ என்று சொல்லுவன். கடைசயில் செயம் எனக்குத்தான்.

என்ன ஒன்று அப்பாவின் கத்தியை தூக்கி வெட்டும் போதெல்லாம் ஒரு பெரியமனுசத்தனம் வந்து ஒட்டிக்கொள்வது போல இருக்கும். ம் உள்ளே ஒரு குரல் கர்ஜிக்கும். ஆனா அப்பிடி பட்ட சந்தர்ப்பங்கள் வருவது குறைவு. வீட்டில நண்டுக்கறிகாய்ச்சும் போது முருக்கம்பட்டை வெட்டுதல். அதை விட்டா இப்பிடி கார்த்திகை விளக்கீடு இப்படித்தான் சந்தர்ப்பங்கள் அமையும். நான் அதை மிஸ் பண்ணாம உள்ளே கர்ஜிக்கிற பெரிய மனுசனை யாருக்கும் தெரியாம கூட்டிக்கொண்டு வெட்டுவதற்கு போனேன். (ம் அப்பிடி ஒரு நாள் முருக்கம் பட்டை வெட்ட போகும் போது தான் என்னை பேய் வெருட்டினது அதை பிறகு ஒரு பதிவா போடுறன்)


அப்பாவின் கத்தியை எடுத்துக்கொண்டு ஒரே அளவா தடியை வெட்டி சின்னக்காவிடம் கொடுத்தால் அதில அவா வெள்ளைத்துணியை வடிவாசுத்தி எண்ணைநிரப்பப்பட்ட கிண்ணத்துக்குள் வைப்பா ஒரு ஆறுமணிவரைக்கும் அது எண்ணைக்குள்ள ஊறும். எப்படா ஆறு மணியாகும் எண்டிருக்கும் எங்களுக்கு. அண்டைக்கெண்டு சூரியன் மெதுவாப்போகும். ஒரு மாதிரி ஆறுமணி ஆகினோன்ன அம்மா படவிளக்கை கொழுத்திப்போட்டு வந்து பந்தங்களை கொழுத்துவா. ஆ நான் ஒண்டு சொல்ல மறந்து போட்டன் இந்த பந்தம் கொழுத்துறது வளவுக்குள்ள தான் கேற்றடிக்கு ஸ்பெசலாக வாழைத்தண்டை வடிவாக வெட்டி அதை கிடங்கு வெட்டி கேற்றுக்கு சரியா நடுவில நட்டிருக்கும் அதுக்கு மேல ஒரு சிட்டியை வைச்சு அதைத்தான் கொழுத்துறது. அம்மா எல்லா பந்தங்களையும் கொழுத்துவா கிணத்தடிக்கு ஒண்டு வீட்டு வாசலுக்கு ஒண்டு வீட்டுகோடிக்கை ஒண்டு கழிவறைக்கு ஒண்டு. பிறகு தோட்டத்துக்க ஒண்டு என்று எல்லா இடத்துக்கும் எண்ணி பந்தங்களைக்கொழுத்துவா நாங்கள் பந்தங்களை யார் கொண்டு போய் நடுகிறது என்று சண்டை பிடிப்பம் தங்கச்சி ரொம்ப சின்னப்பிள்ளை அதால அவளுக்கு இதில போட்டியிடும் தகுதியே கிடையாது. இதில மட்டும் தான் சாப்பாட்டு சாமானுகள் எண்டால் எல்லாரும் அவளுக்குத்தான் கூட குடுப்பினம். நாங்கள் அந்த ஆத்திரத்தை தீர்க்கிற மாதிரி அம்மா அவளிட்ட குடுக்காம இருக்கேக்க நக்கலா சிரிப்பம். சின்னக்கா போட்டியே போடமாட்டா. போட்டி நானும் தம்பியும்தான் கடைசியா அம்மா இரண்டு பேருக்கும் சரியா பிரிச்சு தருவா? நாங்கள் ஒவ்வொரு இடமா ஓடி ஓடி குத்துவம் ஆனா தோட்டத்துக்க குத்தேக்க மட்டும் சின்னக்காவை கூப்பிடுவம் தோட்டத்தக்க ஏதாவது இருந்தா எண்ட பயம்தான். சின்னக்காவோட போய் குத்தினாப்பிறகு யார் குத்தின பந்தம் கனநேரம் எரியது எண்டு பார்ப்பம்.சிலவேளை என்ரை எரியும் சிலவேளை தம்பியின்ர எரியும்(அதெல்லாம் சகஜமப்பா) அப்பிடியே அணையும் வரைக்கும் பார்த்தக்கொண்டு நிப்பம்.

ஒழுங்கையில் எல்லாருமே கேற்றடிக்கு வாழைத்தண்டில தான் விளக்கு கொழுத்தியிருப்பினம் அது பார்க்க வடிவாஇருக்கும். நாங்கள் கேற்றடிக்கு வந்து பார்த்துக்கொண்டு நிப்பம். இப்ப நான் சொன்னது ஒரு பத்து பன்னிரண்டு வயது அனுபவங்கள்.

நான் அப்பிடியே வளர்ந்து ஒரு 18வயதான உடனே வீட்ட கேப்பா அம்மா எங்கடா போறய்? வெளியில போறன் எண்டு மட்டும் சொல்லுவன். அவ்வளவுதான் எங்கே? ஏது? ஏன்? என்ற கேள்விகள் வராது வந்தாலும் பதில் சொல்ல நான் அங்க நிற்கமாட்டன். பிறகு பந்தத்துக்கு தடி வெட்ட எங்களுக்கு எங்க நேரம் பந்தா பண்ணவே நேரம் பத்தாம கிடக்கு அதுக்குள்ள பந்தமாம் பந்தம் விளக்கீடும் மண்ணாங்கட்டியும் எண்டு மனம் மாறியிருந்தது. அப்பிடியே சைக்கிளை எடுத்துக்கொண்டு விளக்கீடு அண்டைக்கு வீதிகளால் வலம் வருவோம். அப்பிடியே வகுப்பு பெட்டையளின்ர வீட்டு ஒழுங்கையளுக்குள்ளால சும்மா தெயியாதே ஆ ம் பெல்லை அடித்தபடி போவோம் அவளுகளும் கேற்றடியில் வந்து நிப்பாளவை. அப்பிடி யாரும் கேற்றடியில் நிண்டா காணுமே அப்பிடியே சைக்கிளை ஒரு பஜீரோவா நினைச்சு சும்மா ஸ்ரைலா ஆ அப்பிடியே ஒரு மன்மதகுஞ்செண்ட நினைப்பில ஆ(வெக்கமாக்கிடக்கு) அப்பிடி அவளுகளின்ற கேற்டியில் யாரும் கிடையாது எண்டு தெரிஞ்சா பிறகென்ன அப்பிடியே சைக்கிளை ஓடீயபடியே காலால வாழைமரத்தீபத்தை ஒரு தட்டு.பொத்தெண்டு விழும் கொல் என்று சிரிப்பு. பெரும்பாலும் எதிர்ப்புக்கள் வராது சிலவேளை டேய் யார்ரா எண்டு சவுண்டு கிவுண்டு வரும். அப்ப உழக்குவம் பாருங்க ஒரு உழக்கு அதான் உழக்கு.சைக்கிள் சும்மா பறக்கும்.

எல்லாவற்றையும் விட விளக்கீடு அன்று மிகமுக்கியமான ஒரு பணியிருக்கும் எங்களுக்கு அது கணக்குவாத்தி கணேசலிங்கத்தின் கேற்றடி வாழையைத்தட்டுறது. எங்களை வகுப்பில படுத்துற பாட்டுக்கு நேரடியாக காட்ட முடியாத கோபத்தை அவர் வீட்டு வாழையில் காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடுவமா என்ன? அப்பியே அவற்றவீட்டு பக்கமாப்போய் வாழையைத்தட்டி விட்டு அதோட நிக்காம குரலை மாத்தி டேய் மொட்டை கணேசலிங்கம் எண்டு ஹோ எண்டு கத்திவிட்டு ஓடிவருவம். அதெல்லாம் ஒரு சூப்பர் அனுபவங்கள் இப்படி வயது ஏற ஏற கார்த்திகை விளக்கீட்டில் கலந்துகொள்கிற அனுபவங்கள கலகலப்பாய் மாறினாலும் மனம் நெகிழ கலந்து கொள்கிற இன்னனொரு விளக்கீடு ஈழத்தழிழர்களுக்கு உண்டு அது கார்த்திகை இருபத்தியேழு அதில் எல்லா குறும்புகளையும் விட்டு விட்டு வீரச்சாவடைந்த கணேசலிங்கம் வாத்தியின் மூத்த பெடியனின் கல்லறையில் எரிகிற தீபம் அணையாமல் காவல்நிற்போம் நாங்கள்.

த.அகிலன்

Thursday, November 30, 2006

காத்திருத்தல்


மொட்டை மாடியில்
காத்திருக்கிறேன்
நிலவாவது
வரட்டும் என்று...

கறுத்தக்கட்டிடங்களின்
மேலாக மிதந்து
கொண்டிருக்கிறது
தனிமை
ஒரு பறவையைப்போல..

கொடியில்
காயப்போட்ட
துணிகளில்
தொங்கிக் கிடக்கிறது
நினைவுகள்

தொலைவில்
தெரியும்
தொலைபேசிக் கோபுரததின்
சிவப்பு வெளிச்சங்கள்
ஒரு
அசரீரியைப்போல
திகிலூட்டும்

அறைமுழுதும்
நிரம்பிய புத்தகங்கள்
சிடீக்களில்
நிரப்பப்பட்ட இசை
எதுவுமே போதுவதில்லை
எரிந்து கொண்டிருக்கும்
தனிமையை
அணைக்க...

த.அகிலன்

Wednesday, November 29, 2006

மயானங்களை புனிதமாக்கும் மாவீரர்நாள்

தமிழீழ மாவீரர் நாள் ஒரு அனுபவம்

நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது உறவினர்கள் யாவரும் செல்லடியில் செத்துப்போனாலோ அல்லது அகதியாகி உலகில் எங்கேனும் அவலப்பட்டாலோ அவன் கல்லறையை சீச்சி அவனை தத்தெடுத்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் தயார். அவன் என்பிள்ளை அவனுக்கு நான் சுடரேற்றுகிறேன் என்று எல்லாரும் முன்வருவார்கள்.(இதைத்தான் அல்லது இதனால்தான் புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்கிறார்கள்) மாவீரர் நாள் அன்று துயிலுமில்லம் கல்லறைகளாலும் கண்ணீராலும் நிரம்பியிருக்கும் எல்லாரும் ஒரே நேரத்தில் சுடரேற்ற ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். உயிர் உருக்கும் பாடல்அது.

மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் அழுங்குரல் கேட்குதா
குழியினுள் வாழ்பவரே

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

உங்களை பெற்றவர்.உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்



இந்தப்பாடல் விடுதலைப்புலிகளின் வீரச்சாவுகளில் மட்டுமே ஒலிக்கும் பாடல் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது.வர்ணராமேஸ்வரன் பாடியது. உயிர் உருக்கும் வரிகள் மாவீரர் தினத்தன்று அவர்களுக்காக சுடரேற்றும் போது மட்டுமே இது ஒலிக்கும். இதில் வரும்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்


என்ற வரிகள் வரும்போது கோரசாக நிறைய பாடகர்கள் பாடுவார்கள்


எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

என்று
அப்படி பாடிய பாடகர்களில் ஒருவரான பாடகர் சிட்டுவும் களத்தில் வீரச்சாவடைந்தபோது அவருக்காகவும் இந்தப்பாடல் ஒரு முறை ஒலித்தது. அப்போது சிட்டுவின் வீரச்சாவு அஞ்சலி நிகழ்வை தொகுத்து வழங்கியவர் சொன்னார் இதோ சிட்டுவுக்காக இறுதியாக ஒருமுறை சிட்டுவே பாடிய பாடல் .. கூடியிருந்த சனங்கள் ஹோ என்று கதறின. சிட்டுவின் ஞாபகங்கள் உணர்வூட்டும் பாடல்களாக இன்றைக்கும் வாழ்கிறது அங்கே.

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்


இந்த வரிகளைக் கேட்டு விட்டும் யாரும் அழாமல் துயிலுமில்லத்தில் இருந்து திரும்பி வர முடியாது. கனவுகள் விழித்துக்கொள்ளும். எல்லாரும் அழுவார்கள் அங்கே கல்லறைக்குள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. யாரும் அண்ணன் தம்பீ வீரச்சாவோ இல்லையோ துயிலுமில்ல வளாகத்தில் இருக்கிற அத்தனை பேரும் வெட்கத்தைவிட்டு கதறுவார்கள். அது கவலையா கோபமா என்று தெரியாத அழுகை. தீபங்களின் ஒளியில் கண்ணீர்த்துளிகள் மட்டும் மினுங்கிக்கொண்டிருக்கும். மௌனம் ஒரு பெரிய பாசையைப்போல எல்லாவற்றையும் ஆட் கொண்டிருக்கும். தீபங்கள் குரலெடுத்து அழுவது எல்லோருக்கும் கேட்கும். கல்லறைகள் மெல்லப்பிழப்பது போல இருக்கும். எதுவுமே பேச முடியாது நின்றிருப்போம். மொழியை மறந்து விட்டது போல இருப்போம் அங்கே அப்படித்தான் இருக்கமுடியும்.


துயிலுமில்லம் தான் இன்றைக்கு தமிழர்களின் புனிதப்பொருளாகிவிட்டது. விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த போராளிகளின் வித்துடல்களை (உடல்களை) அங்கே விதைத்து வைத்திருக்கிறார்கள் தங்கள் அபிலாசை மீட்க தங்கள் மக்களின் துயரங்களைக் களைய அவர்கள் மறுபடியும் முளைப்பார்கள் என்று உணர்வு பொங்கச் சொல்வார்கள் தமிழ் மக்கள். அது தான் உண்மையும் கூட.அதனால் தான் அவர்களை புதைப்தில்லை விதைக்கிறார்கள்.

வரலாற்றில் நாங்கள் சுடலை என்பதை ஒரு தீட்டுப்பொருளாக துக்கிக்கும் இடமாக அல்லது எல்லாவற்றினதும் முடிவாக கருதி வந்த வழமையை மாற்றி புதிதாக அதை புனிதத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். அது புனிதம் மட்டுமல்ல எல்லாவற்றினதும் தொடக்கமும் கூட. அது மாவீரர் மயானம் அல்ல மாவீரர் துயிலும் இல்லம். அது நிச்சயமாக தீட்டுப்பொருள் அல்ல அங்கிருப்பவை வெறும் கல்லறைகளும் இல்லை இரத்தமும் சதையுமான வீரர்கள் இளமையும் குறும்புமாக ஓடித்திரிய வேண்டிய பிஞ்சுகள். கல்லறைகளின் அருகே போனால் காதை வைத்துக் கேட்டால் நிச்சயம் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக்குரல் தன் அம்மாவை அறுதல் படுத்தும் தங்கைக்கு உத்வேகம் அளிக்கும். சிலசமயம் துணைவியின் தலைகோதும்.தான் பார்த்தேயிராத தன் குழந்தையை முத்தமிடும்.தோழர்களை உற்சாகப்படுத்தும்.

உள்ளேயிருப்பவர்களின் புன்னகை கல்லறைகளின் முகங்களில் ஒட்டியிருக்கும். கல்லறை ஒரு வேர்விட்ட மரம்போல உறுதியாய் இருக்கும். அங்கிருந்துதான் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்குவதற்கான சக்தியை தமிழர்கள் பெறுகிறார்கள். போராளிகளிற்கும் தமக்குமான சின்னச்சின்ன முரண்பாடுகளை மக்கள் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கடக்கிறார்கள். எத்தனை தடவைகள் குண்டு வீசினாலும் என்னதான் பொருளாதாரத்தடை போட்டாலும் உயிர்வாழ்கிற எங்கள் சனங்களின் உறுதியின் ரகசியம் இவர்களின் தியாகங்கள் தான்.

இந்த தமிழர்களின் புனித இடத்தைத்தான் சிங்களஅரசுபடைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது புல்டோசர் போட்டு தோண்டியது.ராணுவ டாங்க்கினை ஏற்றி கல்லறைகளை மிதித்தது.எங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்களா எங்கள் மனங்களுக்கு மதிப்பளிப்பார்கள். அவர்களிடமா நாங்கள் மனிதாபிமானம் பேசுவது.சொல்லுங்கள் உறவுகளே?

(மன்னிக்கவும் நண்பர்களே முதலில் போட்ட பதிவை புளொக்கர் விழுங்கி விட்டதால் மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது)
த.அகிலன்

Saturday, November 25, 2006

மழை என்னும் பிராணி


திடீரென
முழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்டியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

த.அகிலன்

Wednesday, November 22, 2006

தனிமனித தாக்குதல்களும் செ.வலைப்பதிவர் சந்திப்பும்

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் கொண்டேன்.அப்பா ரொம்ப்பிரபலமாயிட்டேனோ என்று தோன்றுகிறது.ஈழப்பிரச்சினையை சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் அதை ஏற்றுகொண்டவர்கள்,கொள்ளாதவர்கள் அவர்களின் கருத்துக்கள் இப்படி சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்ற காரணத்தால்
எனக்கும் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்ளாதவர்கள் என்று நிறையப்பேர் எழுதித்தள்ளிவிட்டார்கள் (நானும் ஜோதியில் கலந்து கொள்ளவேண்டாமா)அது மட்டுமல்ல சூடான விவாதங்களும் தனிமனித தாக்குதல்களும் அதனை தொடர்ந்தான மனத்தாக்கங்களும் ஏற்பட்டுளன.அது குறித்து கட்டுரைகள் குறிப்புகள் எழுதியவர்களில் அரைவாசிக்கும் மேலே என்பெயரைக்குறிபிட்டு எழுதியிருக்கிறார்கள். முடிந்தவரை லிங்க் வேறு கொடுத்திருப்பதால் என் கிட்கவுண்டரும் பரவாயில்லாமல் போயிருக்கிறது.இதை எப்படி எடுத்துக்கொள்வதுஎன்பது எனக்கு தெரியவில்லை ஆனால் சென்னை வலைப்பதிவர் சந்திப்பிற்கு என்னை முதலில் அழைத்த லக்கிலூக் மற்றும் பாலபாரதி பிரியன் ஆகியவர்களுக்கு எனது நன்றிகள் என்றைக்கும்.

சென்னைப்பபட்டண வீதிகளும் விதிகளும் தெரியாத என்னை சந்திப்பு நடக்குமிடம் வரை அழைத்துச்சென்று மறுபடியும் என்வீட்டுவாசல்வரை கொண்டு வந்து விட்ட விக்கி(பிரியன்) அண்ணாவுக்கு என் விசேட நன்றிகள்.

நான் ஒரு பதட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் தான் பிரியன் அண்ணாவுடன் சென்றேன். அரங்கினுள் ஒரு ஓரமாக உட்கார்ந்திரநத என்னை திடீரென்று பாலபாரதி அண்ணா முன்னுக்கு வா என்று அழைக்கவும் இவன் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்று அங்கிருந்தவர்களை கேட்டுக்கொள்வும் மிகச் சிறப்பான அந்த அனுபவம் எனக்கு வாய்த்ததது. ஈழம் குறித்து அத்தனை ஆர்வத்துடன் அவர்கள் கேட்டார்கள் ஆர்வத்துடன் என்னைக் கவனித்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் கவலைப்பட்டார்கள். எனக்கு நம்பிக்கையாக இருந்தது ஈழமக்கள் தனித்தில்லை ஆதரவோடு இருக்கிறோம் எங்கள் இந்திய உறவுகள் எங்களை கடைசி வரை கைவிட மாட்டார்கள் என்று இந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பு எனக்கு உணர்த்தியது. அதற்காக அந்த சந்திப்பினை ஏற்பாடுசெய்த சென்னைப்பட்டினம் நண்பர்களுக்கும் பாலபாரதி அண்ணாவிற்கும் என் நன்றிகள்.

லக்கிலூக் அவரது பதிவில் அகிலன் அருமையாகப்பேபசினார் என்றிருக்கிறார். நான் சொல்கிறேன்.நான் அருமையாகவெல்லாம் பேசவில்லை கொஞ்சம் உண்மைகள் சொன்னேன். அவ்வளவுதான் ஈழம் இவற்றையெல்லாம்இழந்திருக்கிறது இவற்றையெலல்லாம் தனக்குள் வைத்திருக்கிறது.என்று என் அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். அதிலும் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது கொஞ்ச உண்மைகள்தான் இன்னும் புண்கள் என்னிடமுண்டு
நாங்கள் மனிதர்கள் மாதிரி நடத்தப்படாத சந்தர்ப்பங்ககள் சொல்லலாமா வேண்டாமா என்று சொல்லக்கூசுகிற அவமானங்கள். எல்லாம் என்னிடம் இருக்கிறது.

விக்கி(பிரியன்) அண்ணா என்னை அழைத்துப்போகும் போது சொன்னார் வந்து விட்டீர்கள் அல்லவா போகப்போகத்தெரியும் இந்த வலைப்பதிவர்களின் சண்டைகள் குறித்து என்று . எனக்கு இப்போது பார்க்க பயமாகத்தான் இருக்கிறது.இத்தனை காழ்ப்புணர்வா இத்தனை ஓட்டுமாட்டடா என்று ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இலக்கிய உலகில் சிறபத்திரிகைச்சூழலில் எப்படி வெட்டுக்குத்து தனிமனித தாக்குதல் என்று கிளுகிளுப்பாகவும் சூடாகவும் போகிறதோ அதைவிடப்படுகேவலம் இங்கே ஒரு சில ஆறுதல்களைத் தவிர தனிமனித தாக்குதல்கள் மலிந்துவிட்டதா வலைப்பதிவுலகில். இதற்கு மேலும் இது குறித்து பேசினால் என்னையும் போட்டு குமுறி கும்மி அடித்து விடுவார்கள் எனவே நான் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.கட்டாயம் இது குறித்து ஒரு தனிப்பதிவு விரைவில் போடுவேன்.

இந்நதச்சந்திப்புக்கு என்னை அழைத்து பேசுவதற்கும் சந்தர்ப்பம் கொடுத்த சென்னைப்பட்டினம் நண்பர்கள் மற்றும் பாலபாரதி அண்ணா, இந்தச்சந்திப்பு தொடர்பாக வும் அதன்பின்னால் ஏற்பட்ட ஈழமக்கள் மீதான அக்கறை குறித்தும் பதிவுகள் போட்ட வலைப்பதிவர்களிற்கும் என் சார்பாக அல்லது தமிழ்ஈழ மக்கள் சார்பாக பின்னூட்டங்களில் நன்றி சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

த.அகிலன்

Tuesday, November 07, 2006

கடைசிக் கவிதை....



என் கடைசி வரிகளை
கடல் மடியில் எழுதி வருகிறேன்
யாரிடமும் பகிர்ந்து கொளமுடியாத படிக்கு

பேசாமல் இருக்கும்
அலைகளிடம்
தொலைந்து போகும்
கண்ணீர்த்துளியைப் போல
போய் விடட்டும்
என் கவிதை

எல்லாம்
முடிந்து போய் விட்டது

எப்போது கேட்டாலும்
யோசிக்காமல்
பணம் தரும் பெரியம்மாவின்
கண்ணீர் நிறைந்த முகம்
கடந்து வந்தாகி விட்டது

இனி
மறுபடியும் வீட்டு முற்றத்துக்குப்
போய்விட முடியாது

இனி
அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிட முடியாது

இனி
குட்டிப் பையனின் எச்சில் முத்தங்கள்
கிடையவே கிடையாது

இனி
என் தேவதையை
உயிர் கொல்லும்
அவள் கண்களை மறுபடியும்
சந்திக்கவே முடியாது

இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது.

த.அகிலன்

Wednesday, October 25, 2006

ஜேசுதாஸ் ஏன் அழுதார்?

“நா ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்
நாலும் தெரிஞ்ச ரூட்டுக்காரன் நல்லா பாடும் பாட்டுக்காரன்” எஸ்.பி.பி சும்மா சக்கை போடு போட்டுக்கொண்டிருந்தார்.பாட்சா படம் வந்தபோது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது இதுதான் மிகவும் பிரபலமான பாடல் எனக்கு பிடித்த பாடலும் கூட.நான் படத்தை பிறகு நான்கைந்து வருடம் கழித்து தான் பார்க்கமுடிந்தது.

பாட்டுக்களை கேட்பது எப்படி என்றால் அது ஒரு பெரிய புதினம் ஒரு சைக்கிளை கவிட்டுப்போட்டு அதிலிருக்கும் டைனமோவை இயக்கி கிடைக்கும் மின்சாரத்தில் தான் றேடியோ போடுவது. எவ்வளவு வேகமாக சுத்துகிறோமோ அவ்வளவு அதிகமாக மின்சாரம் கிடைக்கும். கூட கரண்ட வந்தால் தான் றேடியோ பெரிசாகப்படிக்கும் இல்லாவிட்டால் ஓய்ங் ஓய்ங்……. என்று இழுபட்டு இழுபட்டு படிக்கும். றேடியோ என்று சொல்வது (2 இன் 1) கசட் பிளேயரும் இருக்கும் கசட்டில பாட்டுப்போட்டா அது ஒரு பிரச்சினை இல்லாமல் படிக்கும் ஆனா ஏதாவது ஸ்ரேசன் பிடிக்க றேடியோவை இயக்கினால். அவ்வளவுதான் ட்ர்ர்ர்ர்ர்ர் ஒரே இரைச்சல் மயம்தான்.

FM என்றால் ஒரே இரைச்சல் மயம் தான். MW என்றால் பரவாயில்லை. நான் எங்கேயாவது விளையாடிக்கொண்டிருப்பேன் எந்த வீட்டு ரேடியோவிலாவது எனக்கு விருப்பமான பாட்டுகள் கேட்டாலும் உடனே வீட்டுக்கு ஓடிச்சென்று அந்த மீற்றரை பிடித்து சவுண்டை கூட்டி விட்டு கேட்பேன்.(எந்த ரேடியோ என்றாலும் என் வீட்டு ரேடியோ போல வருமா என்ன)அம்மா பேசுவா ஏன்ரா இப்பிடி சவுண்டை கூட்டி வைச்சிருக்கிறாய் எண்டு. நான் கேட்டால் தானே பாட்டு முடிய ஒரே ஓட்டம் விளையாட்டுக்கு.

சிலபேர் டைனமோக்கெண்டே ஒரு சில புதிய உபகரணங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். பழைய சைக்கிள் பார் எடுத்து அதை கட்டையில் இறுக்கு இறுக்கெண்டு இறுக்கி இன்னும் ஏதோதோ செய்து கீழே படத்தில் இருப்பது மாதிரி ஒன்றை செய்து வைத்து ரேடியோக் கேட்டார்கள். அநேகமாக தமிழர் பிரதேச வீடுகளில் றேடியோக் கேட்டது இப்படித்தான்.

ஒளிப்படம் அமரதாஸ்
( வாழும் கணங்கள் புகைப்படத் தொகுப்பிலிருந்து)
எங்களை வீட்ட இருக்கிற ஒலிபரப்பு நிலையமாக கருதிக்கொண்டுதான் எங்கள் பெரியம்மா மாமா க்களின்ர அண்ணாக்கள் மச்சாள் மார் எல்லோரும் நினைச்சினம். அப்பிடியெ மச்சாள் களும் அக்காக்களும் அவையள் மாறி மாறி பேன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தம்பி இந்தப்பாட்டு ஒருக்கா போடமாட்டியே என்று கேப்பினம் எங்களுக்கு புழுகம் எங்களையும் ஒரு மனுசரா மதிச்சு கேக்குதுகளே எண்டு நாங்களும் மாஞ்சு மாஞ்சு சவுண்டை கூட்டி விட்டு சுத்துவம்.


(ஒளிப்படம் கானாபிரபா)
எங்கட வீட்டதான் அந்த ஏரியாவில் எல்லோரும் குடிதண்ணி அள்ள வருவினம். பெரியம்மான்ர ஜீவன் அண்ணா பக்கத்து வீட்டு பவானி அக்கா தண்ணி அள்ள வரேக்க மட்டும் ஒரு சோகப்பாட்டு கசட்டை குடுத்து இதைப்போடு தம்பி என்று சொல்லுவார். பாட்டுகளில் ஜேசுதாஸ் அழுவார் “ஏலேலங்கிளியே என்னைத்தாலாட்டும் இசையே” என்று. எனக்கு ஏன் அண்ணா இப்பிடிச் செய்யிறார் என்று விளங்கவில்லை. இருந்தாலும் ஏதோ விசயமிருக்கு எண்டு நினைச்சு ஒரு நாள் போடமாட்டேன் என்று ஸ்ரைக் பண்ணினேன். அவர் டக்கெண்டு காமதேனுவுக்கு கூட்டிக்கொண்டு போறன் எண்டு சத்தியம் பண்ணினார். எனக்கு யார் எப்பிடிப்போனா என்ன காமதேனு தானே முக்கியம் (ம் அப்ப காமதேனு மட்டும் தான் வன்னியில் இருந்த ஒரே ஒரு கூல்பார்) அதை விட யாருக்கும் மனம் வருமே. எனக்கு ஜஸ்கிரீம்தான் முக்கியம். ஜீவன் அண்ணாக்கு பவானி அக்கா என்ன செய்ய… சைக்கிளை கவுட்டுப்போட்டு சுத்தும் போது இப்பிடி சில நல்ல விசயங்களக்கு உதவியிருக்கிறம் எண்டு நினைக்கும் போது பெருமையாக் கிடக்கு (சீ என்னை அப்பிடி கேவலமாப் பாக்காதேங்கோ)



அப்போதெல்லாம் வீட்டிலிருக்கும் பெரியவர்கள் எல்லாச்செய்திகளும் கட்டாயம் கேட்பார்கள். நாட்டு நிலைமை அப்படி அதிகமாக லண்டன் பி.பி.சி. வெரித்தாஸ் போன்ற வானொலிகள் அதிகம் கெட்கப்படும். இரவு 7.30 வெரித்தாஸ் வானொலியில் நிகழ்ச்சிகள் தொடங்கும் என்று நினைக்கிறேன். இப்போது இளையராஜாவுடன் சேர்ந்து திருவாசகம் இசையமைப்பு பணிகளில் இயங்கினாரே ஜெகத் கஸ்பார் அடிகளார் அவர்தான் வெரித்தாஸ் வானொலிக்கு பொறுப்பாக இருந்தார். தமிழர் தரப்பு நியாயங்களை உலகிற்கு சொன்னதில் வெரித்தாசின் பங்கு குறைவில்லாதது என்றே சொல்ல வேண்டும். அந்த வானொலியையும் நாங்கள் சைக்கிளை கவிட்டுப்போட்டு சுத்தியே கேட்டோம். வெரித்தாஸ் வானnhலி தனது வெள்ளி விழாவை யொட்டி போட்டியே நடத்தியது. சைக்கிளில் சுத்தி றேடியோ கேட்பது மாதிரி புகைப்படம் எடுத்து அனுப்பும் படி வெரித்தாஸ் வானொலி போட்டி வைத்தது.

இப்படித்தான் நாங்கள் எல்லாவற்றையும் கேட்டோம் 1994 ல் சந்திரிகா எனக்கு நினைவு தெரிந்த பிறகு முதல்முதலாக இலங்கையில் சமாதானம் என்று பேசிக்கொண்டு தேர்தலில் நின்றார். நாங்கள் அப்போது சந்திரிகா ஆட்சிக்கு வரவேண்டும் என்று வைக்காத நேத்தியெல்லாம் வைத்தோம் சந்திரிகாவுக்கு எதிராக நின்ற காமினி திசநாயக்கா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வைத்து கொல்லப்பட்போது மகிழ்ந்தோம். தேர்தலன்று இரவு டைனமோவை சுத்தி சுத்தி தேர்தல் முடிவுகளை கேட்டுக்கேட்டு ஒரு கொப்பியில் குறித்துக்கொண்டிருந்தேன் சந்திரிகாவின் கட்சி எந்தந்த மாவட்டங்களில் எவ்வளவு ஒட்டு வித்தியாசத்தில் ஜெயித்தது என்பதையும் மொத்தமாக நாட்டில் எவ்வளவு ஒட்டு அவர்களுக்கு அதிகமாக கிடைத்தது என்பதையும் நான் எழுதிக் குறித்து வைத்தேன். பிறகு நான் பாதுகாத்து வைத்த அந்தக் கொப்பியையும் விட்டு விட்டு ஓடும்படி சந்திரிகாவே செய்தார். நாங்கள் ஊரை விட்டு ஓடினோம்.

1996 ல் சந்திரிகா சமாதானம் என்று சொல்லிக்கொண்டிருந்த காலத்தில் எனக்கு நினைவு தெரிந்த நாளில் முதல் முதலாக இலங்கை வானொலி தமிழில் கிரிக்கெட் நேர்முக வர்ணணை செய்தது. அரவிந்த டீ சில்வா லாகூரில் அவுஸ்ரேலியர்களை பின்னியெடுத்தபோது முரளி முறித்துக்கொட்டியபோது அர்ஜூன ரணதுங்க உலகக் கிண்ணத்தை எந்தி புன்னகைத்தபோது நான் சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.

ஒவ்வொரு சிக்சருக்கும் சுற்றல் வேகமெடுக்கும் . அவுட்டென்றால் கை ஓய்ந்து போகும் மறுபடியும் யாராவது வாணவேடிக்கை நிகழ்த்த கை வெகமெடுக்கும் றேடியோவின் வழியாக லாகூரை காதுக்குள் கொட்டிக்கொண்டிருந்தார் எழில்வேந்தன். என் எதிரே வெறித்த படி இருந்த ஜன்னல் காணமல் போய் அப்டியெ மைதானமாகி டீ சில்வா நானாகி அப்டியே சிக்சரும் பவுண்டரிகளுமாய் கனவுகள் விரிய அப்பிடியே ஒய்ங்.. ஒய்ங்.. என்று குரல் இழுபட்டு தேய்ந்து கொண்டிருப்பார் எழில் வேந்தன். அடுத்தநாள் எல்லாரும் தென்னை மட்டைகளை சீவிக்கொண்டு கிரிக்கெட் ஆட கிளம்பிவிடுவோம்.

இப்படி சைக்கிளை கவிழ்த்துப்போட்டு சுற்றி றேடியோக் கேட்ட அனுபவம் மைதானம் வரை விரியும். ம் இப்போது மறுபடியும் சமாதானம் வந்து மின்சாரம் வந்து இணையம் வந்து எவ்வளவு வசதியாக இருந்தம். ஒரு நாலுவருசம் தான் இப்ப மறுபடியம் பொருளாதாரத் தடை கரண்ட இல்லை எனக்கு ஒரே யோசினையாகக் கிடக்கு மறுபடியும் சைக்கிளைக் கவுட்டுப்போட்டு சுத்த வேண்டி வருமோ என்று….

த.அகிலன்

Tuesday, October 24, 2006

உதிர்ந்து கொண்டிருக்கும் நான்..


உன்
கொலுசின் அசைவுகளில்
நான் உதிந்து கொண்டிருக்கிறென்…

உதடுவரை வந்து
உள்ளடங்கிப்போகும்
உனக்கான ஒரு சொல்…
எனை தின்றுவிட்டுப்போகட்டும்.

நான்
ஏங்கிக்கொண்டிருக்கிறேன்...

நடுக்கடலில்
கப்பலினின்றும்
உதிர்ந்த
காலி மதுப்புட்டியைப்போல
உன்
மனசின் ஆழங்களுக்குள்
போய்விடமாட்டேனா?

த.அகிலன்

மூழ்கும் கப்பல்கள்....


பெருமாள் கோவில்
சிற்பங்களைக் கழுவிக்
கொண்டிருக்கிறது மழை

நிர்வாணப்பெண்கள்
மறுபடியும் நனைய
மரங்களினிடையே
மறையும் கண்ணன்.

என்
காலகளினடியில் மறுபடியும்
நழுவி ஓடிக்கொண்டிருக்கிறது
பூமி

நீரின் மீது
முடிவிலிக்கோடுகளை
ஒற்றைப்புள்ளியில் இருந்து
வரைந்து கொண்டிருக்கிறது
இலையிருந்து நழுவும்
ஒற்றைத் துளி.

குழந்தைகள்
கொப்பிகளைக்கிழிக்கின்றன

எனக்குள்
மிதக்கத்தொடங்கின கப்பல்கள்

இப்போது
நீரினிலாகிறது
குழந்தைகளின் உலகு
யாரேனும் அதை
மறுக்கையில்

மழை
இடம்பெயர்கிறது
குழந்தைகளின்
கண்களிற்குள்..

எனக்குள்
மூழ்கத் தொடங்கின
கப்பல்கள்...

த.அகிலன்

Tuesday, October 17, 2006

அபிராமியின் அட்டிகை என்னாச்சு?

நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று தீர்த்துவிட இப்போது மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது.மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
த.அகிலன்


நிலாவுல ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். எவ்வளவு தான் வடிவாக பார்த்தாலும் தடியுடன் ஒரு பாட்டியின் முகம் எனக்கு நிலவில் தெரிந்து கொண்டேதான் இருந்தது. அம்மா என்னை மடியில் இருத்தி பாட்டி வடை சுட்ட கதைதான் சொல்லுவாள் நீங்கள் எல்லாரும் உங்கள் வாழ்வில் முதல் கேட்ட கதை என்ன அநேகமாக பாட்டி வடை சுட்ட கதையாகத்தான் இருக்கும். பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க காகம் தூக்கிக்கொண்டு போக….நரி அதை கேட்க காக்கா பாட்டுப்பாட என்று காகம் இழந்து பொன வடைக்காக கவலைப்படுவதில் தான் கதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது.

கதைகள் எப்போதுமே மனதை வசீகரிப்பவை என்னை வேறு ஓர் உலகத்துக்குள் புதிய மாயாஜால வித்தைகளுக்குள்.பிரமாண்ட மான ஏழு லோகங்களுக்குள் நகர்ந்து கொண்டேயிருக்கும். அரக்கர்கள் அரசர்கள் கடவுள்கள் எல்லாரும் எட்டுக்கைகளுடனும் 10 தலைகளுடனும் விதவிதமாக உலாவினார்கள். எப்போதும் எனக்கு கதை சொன்னவர்கள் பெரிய ஒலி களை எழுபப்பிய படி சொல்வார்கள். கதைகள் ஒலிவடிவில் இருந்த காலம் அது. நான் அது வெல்லாம் நிஜமென்று நம்பிக்கிடந்தேன். நானே அரசன் நானே மந்திரி என்று இறுமாந்த கனவுகள் அதிகமாயிருந்த காலம் அது.

கதைகள் என்னை கவரத்தொடங்கியது அப்போது முதல்தான்.பிறகு புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய பிறகு கதைகளின் உலகம் முற்றிலும் வரிவடிவமாகியது. அம்புலிமாமா, பாலமித்ரா,பூந்தளிர்,ரத்னபாலா,பார்வதி சித்திரக்கதைகள்,ஆ.. முக்கியமாக ராணிகாமிக்ஸ் இப்படி அம்மா எனக்கு எல்லாப்புத்தகத்தையும் வாங்கித்தருவார்.


அம்புலிமாமா எப்போதும் ஒரு புராண இதிகாச தொடரைக்கொண்டிருக்கும். நான் முதல் முதலாகப் படித்த அம்புலிமாமா புத்கத்தில் சீதை அசோக வனத்தில் மிகவும் வருந்திக்கொண்டிருந்தாள் . அப்போது ராவணன் அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் வந்துபேசுவான்.அதை அனுமன் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அப்போதெல்லாம் நான் அனுமன் கட்சி சாத்தியம் அசாத்தியம் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்தித்ததே இல்லை இராவணன் சபையிலே அனுமன் வாலை ஆசனமாக்கி அமர்ந்த போது குதூகலித்தேன். அம்புலிமாமாவில் இன்னொன்று தொடர்ச்சியாக வரும் விக்கிரமாதித்தன் கதை வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட அடுத்த தடவையாவது அது அவன் தோளிலே போய்விடும் என்று நம்பினேன். இன்றைவரைக்கும் அது அவனோடு போகவில்லை.

பாலமித்ரா அம்புலிமாமாவைப்போல ஒரு பத்திரிகை தான் ஆனால் தொடராக ஒரு மாயாஜால தொடர் இருக்கும்.இளவரசர்கள் மந்திரவாதிகளின் சதிகளை முறியடித்து கிளிகளாக மாறிய இளவரசிகளை சுயஉருவம் பெறச்செய்து கல்யாணம் கட்டிக்கொள்வார்கள் எனக்கு ஒரு கேள்வி இருந்தது ஏன் இளவரசிகளின் அண்ணன் தம்பிகள் வந்து மீட்கக் கூடாது என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ராணி காமிக்ஸ் தான். அது குறித்த ஆவல் எப்போதும் தீராததாகவே இருக்கிறது.ஒரு வேளை அதில் கீறப்பட்ட சித்திரங்களும் கதாநாயகர்களின் சாகசங்களும் காரணமாக இருக்கலாம். அப்போதெல்லாம் அடுத்த காமிக்ஸ்சுகாகக் காத்திருந்திருக்கிறேன் புத்தகக் கடைக்காரரிடம் ராணிகாமிக்ஸ் என்று கேட்காமல் அடுத்த புத்தகத்தின் பெயரைச்சொல்லியே கேட்பேன்.


(உதாரணமாக கப்பல் வேட்டை, மாயக்காரி,தங்கக்கடற்கரை இப்படி இதற்கும் அவற்றின் பெயர்கள்) கடைசிப் பக்கத்தில் அடுத்த காமிக்ஸ் பற்றிய ஒரு விளம்பரம் இருக்கும் இப்படி
படிக்கத்தவறாதீர்கள்
அடுத்தகாமிக்ஸ்
காட்டுக்குள் புகுந்தது கொள்ளையர் கும்பல்
விடுவாரா மாயாவி கும் கும் ..




இப்படித்தான் இருக்கும் அந்த விளம்பரம். மாயாவி மட்டுமல்ல பிளாஸ்கார்டன் ,ஜேம்ஸ்பாண்ட, போன்றவர்களின் சாகசங்களிற்கும் குறைவில்லைத்தான் ஆனாலும் முகமூடி வீரர் மாயாவிதான் எப்போதும் விரும்பப்பட்டார். காட்டுக்குள் இருந்து கொண்டே டயானா என்கிற வெள்ளைக்காரியை கட்டியதற்காக அவருக்கு ஒரு பாராட்டு.

(முடிந்தால் மாயாவியைப்பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்)

கோகுலம் பிற்காலத்தில் தான் வந்து இந்தப்பட்டியலில் சேர்ந்து கொண்டது.ஆனாலும் கோகுலத்துக்குள் இலவச இணைப்பா வரும் லேபிள்கள். கலண்டர்கள், போன்றவை எம்மை வெகுவாக கவர்ந்தன. கோகுலத்தில் வரும் தொடர்கதைககள் சிறுவர்களின் சாகசங்களைப்பற்றியிருக்கும். நூறு ரூபாய் ரகசியம் என்;று ஒரு தொடர்கதை வந்தது.நான் மிகவும் ரசித்த கதை அது. பிறகு ஒரு கதை வந்தது அபிராமியின் அட்டிகை என்ற ஆனால் அந்தக்கதை யை நான் படித்து முடிக்குமன்பே ஈழத்தின் போர்சூழல் மெலும் விரிவடைந்து பாதைகள் மூடப்பட்டு அந்தப்புத்தகங்கள் வருவதே நின்று விட்டது.எனக்கு மிகவும் வருத்தம்தான் என்ன செய்ய எனக்கு அரசியல் புரியாத காலத்திலேயே அதன் கொடும் கரங்கள் என் ஆசைகளைத் தின்னத் தொடங்கிவிட்டன.


இப்போது எனது வாசிப்பின் தளங்கள் காலச்சுவடு உயிர்மை , ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று பெஸ்டு கண்ணா பெஸ்ட ரேஞ்சுக்கு மாறிவிட்டாலும்.இன்னமும் என்க்கு அபிராமியின் அட்டிகை தொடர்கதை முடியும் வரை வாசிக்க முடியவில்லை என்கிற பால்யகால ஏக்கம் உண்டு. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அபிராமியின் அட்டிகைக்கு என்ன நடந்தது?

ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கோ
அன்புடன்
த.அகிலன்

Monday, October 16, 2006

ஏன் இந்த மெளனமோ(புகைப்படம்)


ஒளிப்படம் கஜானி
இது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம்
தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின்
ஏக்கத்தை சொல்கிறதா ?

த.அகிலன்

Friday, October 13, 2006

சாட்சியாயிருத்தல்.....


எல்லாவற்றிற்கும்
சாட்சியாயிருப்பதன்
இயலாமை
எனை விழுங்குகிறது..

ஒரு
நாற்பது வயதுக்கன்னியின்
கறுத்தப்பொட்டைப்போல
நிஜத்தின் உறுத்தல்
என் கனவுகளின் மேல்
பயணிக்கிறது…..

முடியாது

புன்னகைக்கும்
வேதனைக்கும்
அழிவுக்கும்
மீட்சிக்கும்
அவமானத்திற்கும்
…………………….
இப்படி
எல்;லாவற்றுக்கும்
சாட்சியாய்
மௌனத்தை விழுங்கிக் கொண்டு
எத்தனை நாளைக்கு
இருந்துவிட முடியும்…ம்.

த.அகிலன்

கஜானியின் ஒளிப்படங்கள் தாகத்தின் ஒளியும் நிழலும்

நண்பர்களே நான் பழைய பதிவுகளிலே இட்ட முகத்தில் அறையும் நிஜம்,போர்ப்பசி,இன்றைக்குச்சேறு நாளைக்குச்சோறு என்பவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர் கஜானியைப்பற்றி ஈழத்தின் மூத்தபடைப்பாளியான கருணாகரன் அவர்கள் எழுதிய குறிப்பு இங்கே கஜானியின் படத்தின் பார்வையாளர்களுக்காக தருகிறேன்.
அன்புடன்
த.அகிலன்

வண்ணங்களாலான உலகத்தையும் வண்ணங்கள் சிதையும் உலகத்தையும் தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் காண்பிக்கிறார் கஜானி. கஜனிக்கு ஒளியையும் வெளியையும் கையாளும் நுட்பம் நன்றாகத் தெரிகிறது. ஒளியைக் கையாள்வதன் மூலம் தனது உலகத்தை அவர் வலிமையாகப் படைக்கிறார். ஒளியினூடாக நமது ஆன்மாவில் அவர் நிகழ்த்தும் நடனம் பெரியது. அது கட்டற்றது. எல்லையும் ஓய்வுமற்றது. நம்மைவியப்புக்குள்ளாக்குவது. நாம் விட்டுவிலகிய யதார்த்தங்களில் மீண்டும் நம்மை இணைக்கமுயல்வது.

இவர்தான் கஜானி


காலங்களைக் கடந்து செல்லும் பிரக்ஞைபூர்வமான தன்னுடைய ஒளிப்படங்களின் மூலம் இயற்கையையும் எதிர் இயற்கையையும் படைக்கிறார் கஜானி. கஜானியின் படைப்புலகம் இயல்பினூடாக ஆச்சரியங்களை உருவாக்கும் தன்மையுடையது. இதனால் அவருடைய படங்கள் ஒருபோது பேரிசையாகவும் இன்னொருபோது பெருநடனமாகவும் இருக்கின்றன. வேறு ஒருபோது அழகிய ஓவியங்களாகவும் பிறிதொருபோது உன்னத சிற்பங்களாகவும் வேறொரு சமயத்தில் மெய்ததும்பும் கவிதைகளாகவும் கூட அவை தோன்றுகின்றன.
கஜானியின் ஒளிப்படங்கள் இயற்கையை மறுபடைப்புச் செய்கின்றன. அதேவேளை சிதையும் சூழலின் தவிப்பையும் அதன் மூலத்தையும் அவை சாட்சிபூர்வமாக்குகின்றன. இயற்கையை அவர் படைப்பாக்கம் செய்யும் போது நாம் விட்டுவிலகிய இயற்கைக்கு மீண்டும் நம்மை சிநேகமாகவும் வலிமையோடும் அழைத்துச் செல்கிறார். நமது வாழ்க்கை எப்படியெல்லாம் இயற்கையைப் புறக்கணித்தும் நிராகரித்தும்விட்டு அலைகிறது என்பதை அவருடைய மறுப்படைப்பாக்கம் பெறுகின்ற இயற்கை நமக்கு உணர்த்துகின்றது. நாம் பொருட்படுத்தத்தவறிய உலகத்தை மீண்டும் நம்முன் நிகழ்;த்தி இதனைச்சாதிக்கிறார் கஜானி.

நாம் பொருட்படுத்ததவறும் சூழல் பற்றிய குற்றவுணர்ச்சி அப்போது நம்மை ஆழமாகப் பிளக்கிறது. மனதில் அது வலியையெழுப்புகிறது. ஆனால் அதேவேளை இந்ததவறு தொடர்ந்துவிடாமல் நம்மைச் சூழலோடும் இயற்கையோடும் இணைக்கும் பதிவாக அவரின் படைப்பியக்கமிருக்கின்றது. தண்டணைகளை விதிக்காமலே நம்மை நாமே ஒழுங்குபடுத்தி இணைத்துக் கொள்கிற மாதிரி ஆக்கிவிடுகிறார் அவர்.

கமெரா அவருடைய இனிய பயணியாக அவருக்கு ஒரு நெகிழ்ச்சிமிக்க துணையாக இருக்கிறது. பல சமயத்திலும் மாயங்களை நிகழ்த்தும் விதமாக அல்ல. பதிலாக மீண்டும் மீண்டும் இயற்கையோடும் சூழலோடும் வாழ்வை இணைப்பதற்தான ஆர்வத்தையும் அவசியத்தையும் தூண்டும் விதமானது என்பதே இங்கே பொருள்.
நமது குற்றவுணர்ச்சிகள் கொடிபோல படர்ந்து செல்லாமல் தன்னுடைய படங்களின் மூலம் அதனை கரைத்தொழிக்கிறார் கஜானி.; கஜானியின் கமெரா எதனிலும் கட்டுண்டுவிட வில்லை. அவர் இயற்கையை படமாக்கும் அதே ஆர்வத்தோடும் நுட்பத்தோடும் துயரப்படும் மனிதர்களையும் படமாக்குகிறார். அதனூடே அவர்களின் வாழ்கையைப் பகிர்ந்து கொள்கிறார்.
அத்துடன் அதைக் கவனப்படுத்தி சமூகத்தின் முன் சமர்ப்பிக்கிறார். புறக்கணிக்கப்பட்டிருக்கும் அந்த மக்களை அவர் அங்கீகரிக்கிறார்.
கஜானியின் ஏராளமான படங்களில் நெருக்கடிமனிதர்களின் வாழ்வையும் ஆன்மாவையும் காணமுடியும். குறிப்பாக உழைக்கும் மனிதர்கள் பற்றியபடங்கள் இதில் முக்கியமானவை. சிறுவர்கள் முதல் சகல வயதிலும் உழைக்கும் மனிதர்கள் ஆண் , பெண் வேறுபாடின்றியிருக்கிறார்கள். அதிலும் பெண் உழைப்பாளர்கள் சிறுவர் நிலை உழைப்பாளர்கள் முக்கியமான கவனத்திற்குரியவர்கள் ஆகின்றார்கள்.

இன்று அதிக கவனம் பெற்று வரும் சிறுவர் மற்றும் பெண்கள் உரிமை குறித்த கவனத்திற்கும் யதார்த்தத்திற்குமிடையிலான முரணை துல்லியமாக்குகின்றார் கஜானி.
யதார்த்தத்தில்; பெண்கள் கலாச்சார ரீதியாகவும் சமூகவாழ்கையின் நிரப்;பந்தங்கள் காரணமாகவும் இன்றும் இரண்டாம், மூன்றாம் நிலைகளியே உள்ளார்கள். சிறுவர் நலன்குறித்த சிந்தனைகளும் சட்டங்களும்; விழப்புணர்வும் முன்னரைவிட வலுவடைந்தபோதும் இன்றும் சிறுவர்கள் உழைப்பாளர்களாகவும் கல்வி மற்றும் வாழக்;கை உரிமை மறுக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றார்கள் என்பதை ஆதாரப்படுத்துகிறன கஜானியின் ஒளிப்படங்கள். பல சந்தர்ப்பங்களில் கஜானியின் கமெரா பொறுப்புள்ள சாட்சியாகப் பேசுகின்றது.

சமூகம் மீதான கரிசனையும் ;சகமனிதர்கள் மேலுள்ள பரிவும் அக்கறையும்தான் இதன் அடிப்படை. நாம் வாழுகின்ற சூழல் எப்படிச் சிதைந்துபோய்யிருக்கிறது என்பதைக்காட்டுவதன் மூலம் நமக்குரிய பொறுப்பை அவர் உணர்த்த முற்படுகிறார்.
நாம் நாளாந்தம் பல இடங்களிலும் சாதாரணமாகக் காணுகிற காட்சிகளை ஆழப்படுத்தி அவர் காட்டுகிறார். அதன் மூலம் தொடர்ந்தும் நாம் அந்தக்காட்சிகளை சாதாரணமாகக் கடந்து போய்விடமுடியாதபடி அவர் ஆக்குகிறார். இதன் மூலம் சூழலின் சிதைவுகள் குறித்த அக்கறையை நமது புலனுள் நுழைத்து வளர்த்து நமக்குள் அதை நொதிக்கச் செய்கிறார்.
கமெராவை வெறுமனே ஒரு தொழில்நுட்பக்கருவியாகவோ காட்சியை பதிவு செய்யும் படமாக்கல் சாதனமாகவோ வெறுமனே கஜானியால் கையாளமுடியவில்லை.

அப்படிக்கையாள்வது அந்தச்சாதனத்துக்கும் சமூகத்துக்கும் தவறானது என்ற தெளிவு கஜானிக்கு இருக்கிறது. கமெராவை அறிவுப+ர்வமாக அதன் பெறுமானத்திற்குரியவாறு அவர் கையாள்கின்றார்.
தமிழ்ச் சூழலில் புழங்கும் கமெராக்கள் பன்முகத்தன்மையையும் ஆழத்தையும் இழந்தவை. வளர்ச்சியடையாத கமெரா பார்வையே தமிழ்ச்சூழலில் அதிகமுண்டு. கமெரா மூலம் நிகழ்த்தப்பட்டிருக்கவேண்டிய மிகச்சிறிய வேலைகள்கூட முழுமையாகாத நிலையே நமது சூழலில் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சாதனைகள் குறித்து நாம் எப்படிச் சிந்திக்கமுடியும்?

முடிவிலாப்பயணத்தில் நகர்ந்துகொண்டிருக்கும் பேரியற்கையையும் வாழ்வையும் ஒரு புள்ளியில் வைத்து அள்ளிக்கொள்கிறது. ஒளிப்படம். நிலையற்ற காட்சிப் புலத்தையும் ஒளித்தருணத்தையும் அதன் போக்கில் வைத்துவிட்டு ஒரு புள்ளியை அல்லது ஒரு பகுதியை வெட்டி நிலைப்படுத்தும் பேரியக்கம் அது.

ஒளித்தருணம் நிலையற்றது. அது சதா மாறிக்கொண்டேயிருப்பது. பொருட்களும் இடங்களும் மாற்றமடைந்துகொண்டேயிருப்பன. வேகமாக மாறும் ஒளித்தருணத்தையும் அதன் வழியான காட்சிப்புலத்தையும் பதிவு கொள்வதன் மூலம் மாறாப்புள்ளியொன்றை தன்வசப்படுத்தி விடுகிறது ஒளிப்படம். அது நிலையற்ற காட்சிகளை நிலைப்படுத்திக்கொள்ளும் வலிமை பொருந்திய வடிவம். மாறியபடியிருக்கும் காட்சிப்புலத்தை அதன்வழி நகரவிட்டு ஒரு தருணத்தை அல்லது ஒரு புள்ளியை அள்ளிக்கொள்ளும் ஒளிப்படம். மாறிய தருணங்களின் மாறிய காட்சிகளின் ஓர் மாறா அடையாளம். ஒரு தருணமும் ஒரு காட்சியும் இருந்ததற்கான ஆதாரம் அது. ஒரு புதிரான வடிவம். குலையும் வடிவத்தில் குலையா வடிவம்.

ஒளிபடங்கள் ஒரு வகையில் அழியா ஞாபகம். அது காட்சியொன்றின் ஞாபகம். மேலும் ஒளித்தருணமொன்றின் ஞாபகம். இந்த ஞாபகத்தின் வழி அது ஒரு காட்சியினதும் தருணத்தினதும் நிலை. நிலையின்மைக்குள் ஊடுருவும் நிலை. இத்தகைய வலிமைமிக்க நவீன கலைவடிவத்திற்கும் தமிழ்ச்சூழலுக்குமான நெருக்கம் மிகக்குறைவு.
தொழில்நுட்பம் பாதியும் கலை ஆழுமை பாதியுமாக இணைந்து திரட்சியுறும் ஒளிப்படக்கலை உலகளவில் நீண்டகாலமாக பெரும் அதிர்வுகளையும் மாற்றங்களையும் ஏற்படுத்திய தூண்டல்களின் வடிவமும்கூட.

இன்றைய தகவல் யுகத்தில் ஒளிப்படம் வகிப்பது அல்லது பெறுவது முதன்மையான பாத்திரம். ஒளிஊடகம் மற்றும் அச்சு ஊடகத்துறையில் ஒளிப்படங்களின் வலிமையும் அதிகம். பேசாப்படங்களாக நின்று அவை பேசும் சங்கதிகள் நிறைய. அத்துடன் வாழ்வின் சகல பருவங்களிலும், சகல நிலைகளிலும் தடையின்றி மிக இயல்பாக சேர்ந்தும் ஊடுருவியும் ஒளிப்படக்கலை நிற்கிறது.

தமிழ் வாழ்வில் சுருங்கிய நிலையில் மிக வரையறுக்கப்பட்ட வடிவங்களுக்குள் அடங்கியதாகவே ஒளிப்படம் பொதுப்புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஒளிப்படத்தைக் கலையாகவும் அதனை விரிந்த தளங்களில் அணுகுவதிலும் புரிந்துகொள்வதிலும் பெரும் தயக்கங்கள் நிரம்பி வழிகின்றன.

புறக்கணிக்க முடியாதவாறு ஒன்றிணைந்து நிற்கும் ஒளிப்படக்கலையின் மெய்ச் சாத்தியப்பாடுகளைப் புறக்கணிக்கும் போக்கே தொடர்கிறது. மிகச்சிறிய வட்டத்தினர் மட்டும் உயிர்ப்பு நிரம்பிய ஒளியின் சகாசங்களையும் அதன் நுட்பங்களையும் நாடகத்தையும் கவனிக்கின்றனர்.

அரசியல் மற்றும் சமூகவியல் புலத்தில் ஒளிப்படம் பெற்றிருக்கும் இடத்தைக் கடந்த நூறு ஆண்டு கால வரலாற்று நிகழ்வுகள் சொல்கின்றன. இன்றும் அச்சு ஊடகங்கள் தொடக்கம் சகல ஊடகங்களும் ஒளிப்படத்தினூடாகப் பலரையும் பலதையும் அறிதலாக்கியபடியே இருக்கின்றன.ஏதோ ஒரு நாட்டிலுள்ள ஒருவரை, ஒன்றை, ஒரு காட்சியை உலகம் முழுவதற்கும் ஒளிப்படம் அறிமுகப்படுத்தி வைக்கிறது.
ஒரு பருவத்தில் எடுக்கப்பட்ட ஒரு படத்தை அவருடைய இன்னொரு பருவத்தில் வைத்துப் பார்த்துக் கொள்ளும் பரவசம் எத்தனை இனியது. அதன் எல்லை மிகப்பெரியதல்லவா. ஞாபகத்தை மீட்டிப் பார்க்கவும் வரலாற்றைக் கற்றுக்கொள்ளவும் தன்னை நெகிழ்ந்து கொடுக்கிறது ஒளிப்படம்.

இன்று ஒளிப்படங்கள் ஊடகத்தளங்களில் நிரம்பிக் கிடக்கின்றன. முடிவுறா உரையாடலையும் பகிர்வையும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் ஒளிப்படங்கள் கனவின் சாயலுடையவை. கழிந்த காட்சி கனவு இப்போது கழிந்துகொண்டிருக்கின்ற காட்சியும் கனவு. நிஜம் எத்தனை உண்மையாக இருந்தாலும் அது அடுத்த கணம் கனவாக மாறிக்கொண்டிருக்கின்றது. நிஜம் தோற்றுக்கொண்டேயிருக்கின்றது. கனவு நிலைக்கிறது. கழிந்த போனதெல்லாம் இனிக் கனவுதான். ஞாபகத்தின் துளிர்போல சிறகுடையது கனவு. அந்தக்கனவின் முகமாக ஒளிப்படம் மாறிவிடுகிறது. கழிந்த காட்சி கனவாகிவிட ஒளிப்படம் மட்டும் நிஜமாக அந்தக்காட்சியின் மெய்யாக மாறும் விந்தை அது.


ஒளியை ஆழும் ஒரு கலைஞன் காட்சியை தன் அக ஒழுங்கிற்கும் விரிவிற்கும் ஏற்ப அதனை இழைக்கின்றான். எண்ணற்ற வேர்களையும், இலைகளையும், பூக்களையும் அவற்றின் வண்ணங்களையும, வாசனைகளையும் கனிகளையும் அவற்றின் சுவையையும் மரம் என்ற வடிவத்தையும் தன்னுள் கொண்டிருக்கும் ஒரு சிறு விதை போல நல்லதொரு ஒளிப்படம் எல்லா உயிர்ப்புகளையும் தன்னுள் அடக்கியபடியிருக்கிறது. அதற்கு வாசல்களும் அதிகம் திசைகளும் அதிகம்.

இவ்வாறெல்லாம் விரிவுகொண்டிருக்கும் ஒளிப்படத்துறையில் ஈடுபாடு கொண்ட கஜானி தன்னுடைய ஒளித்தருணங்களை தான் அள்ளிய சில புள்ளிகளை காட்சிப்படுத்தியுள்ளார். இங்கே காட்சி என்பது வெறுமனே ஒரு பொருளின் தோற்றத்தையோ ஒன்றின் அடையாள விரிப்பையோ குறிப்பதல்ல. அவர் ஒளி அடுக்குகளை கண்டவிதமே.
ஓளியின் வடிவங்களை அறிந்துகொள்வதில்;தான் ஒரு ஒளிப்பதிவாளரின் திறனும் பலமும் தங்கியிருக்கிறது.

ஓளி நாடகத்தை வைத்துத் தான் புரியும் விந்;தைகள் மூலம் பார்வையாளரின் அகப்புலத்தைத் திறக்கும் ஒளிப்பதிவாளரே சிறந்த கலைஞர்.
போரின் நெருக்குவாரங்கள் ஒரு ஒளிப்படக்கலைஞரை உந்துதலுடன் செயற்பட வைப்பது இயல்பு. போரின் பிடியில் இருக்கும் சூழல் சடுதியான சிதைவுகளுக்குள்ளாவதால் ஒளிப்படக்கலைஞரின் கவனம் அங்கே இயல்பாகக் குவிகிறது. முதற்கணத்திலிருந்த காட்சி அடுத்த கணத்தில் முற்றாக அழிந்துவிடும் அல்லது சிதைந்துவிடும் நிலை போர்க்களத்திலேயே அதிகமுண்டு. ஒரு குண்டுவீச்சோ, செல்தாக்குதலோ அச்சூழலின் விதியை மாற்றி விடுகிறது சடுதியாக.

இத்தகைய நிலையில் ஒளிப்படக்கலைஞர் இரண்டு தருணங்களையும் ஒரு படச்சுருளிலேயே படமெடுக்கும் நியதிண்டு. இது போர்ச்சூழலுக்கே பெரிதுமுடையது. இவ்வாறானதொரு சூழலில்த்தான் மக்கள் வாழ்க்கையும் இருக்கும்.

போர்க்காலம் ஒன்றின் மக்கள் திரளில் வாழும் ஒளிப்படக்கலைஞர் செயற்படும் விதம் தீவிரமானது. நிழலும் தீப்பிடித்தெரியும் வாழ்க்கையுடைய சூழலது. தன் சூழலையும் தன் காலத்தையும் சர்வதேச எல்லைகளை நோக்கி விரிக்கக்கூடிய சாத்தியங்கள் அந்தச் சூழலின் ஒளிப்படங்களுக்கும் ஒளிப்படக்காரர்களுக்குமுண்டு
-கஜானி இந்தக் குறைநிறையை மாற்றமுனைகிறார். கமெராவை அதன் பொருள் பொதிந்த நிலையில் கையாள வேண்டும் என்று அவர் தீர்மானித்திருக்கிறார். அதிலும் தனியே ஒளியையும் சட்டகத்தையும் கையாள்வதன்மூலம் மட்டும் எதையும் படமாக்கிவிட முடியும் என்ற இலகுவான பொறிமுறையைவிட்டு விலகவேண்டும் என்ற விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அவர் இயங்குகிறார்.

-ஒளியினூடாக காட்டப்படும் வினோதங்கள் ஒளிப்படத்தில் கூடுதல் கவர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.ஆனால் அது மட்டும் ஒளிப்படத்தின் வெற்றியாகாது. அது முன்மாதிரியாகப் பின்பற்றக்கூடிய ஒரு வழிமுறையுமல்ல எனபதை கஜானியின் ஒளிப்படங்கள் வாதிடுகின்றன.

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளாக ஒளிப்படத்துறையில் ஈடுபட்டுவரும் கஜானியின் அனேக படங்கள் பல இதழ்களிலும் நூல்களிலும் வெளியாகியிருக்கினறன. ஆயிஷா,ஒரு பயணியின் நிகழ்காலக் ;குறிப்புகள், எலும்புக்கூட்டின் வாக்குமூலம், இருள் இனி விலகும், இனி வானம் வெளிச்சிரும் எனப்பல நூல்கள். இவை தவிர சர்வதேச ஒளிப்பட இதழ்களிலும் கஜானியின் படங்கள் பிரசுரமாகியுள்ளன.

-தமிழ்ப்பெண் ஒளிப்படக்கலைஞர்களில் கஜனிக்கு இருக்கின்ற கூடுதல் சிறப்பம்சம் அவர் போர்க்களப்படங்களையும் பிடித்துள்ளவராக இருப்பதன்மூலம் கிடைக்கிறது. வெளிச்சூழலிலும் போர்க்களச்சூழலிலும் கவனம் பெறக்கூடியமாதிரியான இருதள இயக்கம் இது. அநேகமாக அபூர்வமாகவே இது வாய்க்கும்.

விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப்படையினருக்கும் இடையிலான போரக்காட்சிகளை ஆச்சரியப்படுமளவில அவர் படமாக்கியிருக்கிறார். படையினர் கைவிட்டுச்சென்ற காப்பரண்கள், படைத்தளங்கள், மக்களில்லாத கிராமங்கள், இடப்பெயர்வுகள், சூனியப்பிரதேசங்கள் என சகலவற்றையும் அவர் படம்பிடித்துள்ளார். இன்னும் மக்கள் வாழும் நகரங்களிலும் கிராமங்களிலும் படையினர் ஆக்கிரமித்து நிற்பதையும் அவருடைய கமெரா சாட்சி பூர்வமாக காட்சிப்படுத்தியுள்ளது.

எவையெல்லாம் இன்று தன் சூழலை நெருக்கடிக்குள்ளாக்குகின்றனவோ அவற்றை அவர் எதிர் வினையாக்குகின்றார். அவருடைய பலமும் ஆயுதமும் கமெராதான். மறுக்கமுடியாத சாட்சியாக அந்தப்படங்கள் நிரூபணம் கொள்கின்றன.
பெண்பேராளிகளின் களமாடல் தொடக்கம் களவாழ்வுவரையான தொகுதிப்படங்கள் தமிழ்பெண்வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பண்பாட்டு விரிதலுக்கு புதிய அடையாளக்குறியானவை. அந்தப் பெண்களின் உடை தொடக்கம் அவர்களின் வாழ்முறைகள் அத்தனையும் தமிழ்ச்சூழலுக்கும் தமிழ்ப்பெண்பற்றிய புறச்சூழலுக்கும் அதிர்ச்சிகரமான ஒரு காட்சிப்புலமே.
விடுதலைப் புலிகளின் பெண்போராளிகள் பற்றிய படங்கள் கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிறைய வெளியாகியிருக்கின்றன. இதில் கஜானியின் படங்களும் அடங்கும். ஆனாலும் கஜானியின் ஒளிப்படங்களை ஒன்று சேரத்தொகுத்துப் பார்க்கும்போது அவர் பெண்போராளிகளின் வாழ்வையும் ஆற்றலையும் காட்சிப்புலத்தின் வழியாக சீராக ஒழுங்குபடுத்தியுள்ளமையைக் காணலாம். இன்றுள்ள போராட்டவாழ்வில் பெண் வாழ்க்கையும் அதன் அடையாளமும் பெற்றுள்ள இட்ததை அவர் கவனங்கொண்டுள்ளார். பெண்போராளிகளின் பல பரிமாணங்களையும் துலங்கவைக்கும் நோக்கில் அவருடைய பல படங்கள் உள்ளன. துலக்கம்பெறவேண்டிய அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஒளிபாய்ச்சுகிறார். அவற்றை அவர் போக்கஸ் ஆக்குகின்றார்.

ஒளியைக்கையாள்கை மற்றும் சட்டகங்களின் கவனம் பின்னகரும் சில படங்களும் இவருடைய செகரிப்பிலுண்டு. ஆனால் அவை படமாக்கப்பட்ட சூழ்நிலையும் களமும் வேறு. படமெடுப்பதற்கு அவகாசமற்ற சூழ்நிலைகளிலும் களத்திலும் அவற்றில் சில படமாக்கப்பட்டிருக்கின்றன.
தீர்மானிக்கப்பட்டிருக்காத சூழ்நிலைகளில் இயங்கும் ஒளிப்படக்கலைஞருக்குள்ள சவால்கள் எப்போதும் நெருக்கடிகள் நிறைந்தவை. குறிப்பாக போர்க்களம் மற்றும் அதுபோன்ற திடீர்ச் சந்தர்ப்பங்கள். அதில் தேர்வென்பது நெருக்கடிச் சூழ்நிலையும் அந்தக் களமுமே. அப்படியான தருணங்களில் எடுக்கப்படுகின்ற படங்கள் அவை எதிர்கொண்ட சவால்களுக்குரியவாறு பெரும் நிலைபேறைப் பெறுகின்றன. அப்படியான நிலமைகளின் போது எடுக்கப்பட்ட பல சர்வதேசப் புகழ் பெற்ற படங்கள் நமது ஞாபகப்பரப்பில் அழியாதவாறு பதியம் பெற்றிருக்கின்றன. பல ஒளிப்படக் கலைஞர்கள் இந்தச் சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இதில் கஜானியும் சேரத்துடிக்கிறார்.

கஜானி தன்னளவில் தனக்குச் சாத்தியமான எல்லைவரையில் இயங்கியிருக்கிறார். அவருடைய கவனத்திற்கமைய இந்த ஒளிப்படங்கள் பதிவாகியுள்ளன.
போர்ச்சூழலில் ஒடுக்கப்படும் இனமொன்றின் பிரதிநிதியாக நின்று கொண்டு ஒளிப்படத்துறையில் இயங்குவதென்பது மிகவும் சிரமம். தமிழ்ச் சூழலில் ஒளிப்படம் குறித்த ஆர்வமுள்ள அளவுக்கு அதன் கலைப்பெறுமதி குறித்த புரிதல் இல்லை. இது ஒளிப்படத்துறையில் இயங்கும் ஒருவருக்கு இன்னொரு மறைமுகமான நெருக்குவாரம். இதைவிட இத்துறைபற்றி கண்டுகொள்ளாத்தனம் வேறு. இவையெல்லாம் சேர்ந்து தமிழ் வாழ்வில் ஒளிப்படத்துறையை ஒடுக்கிவைத்துள்ளன.

கஜானி இத்தகைய சூழலை எதிர்கொண்டபடிதான் இயங்குகின்றார். கஜானி தன்னார்வத்தின் வழி செய்த பயணத்தின் புள்ளிகளைக் கோர்வையாக்கியுள்ளர்.
கஜானியின் படங்கள் கொந்தழிக்கும் ஒரு சமூகத்தினது ஆன்மாவை காட்சி ரூபமாக்குகின்றன. இதற்காக அவர் தீராத தாகத்தோடு கமராவில் இயங்குகின்றார். இதற்கு அவர் தன்வாழ்வையும் ஈடுபாட்டையும் மக்கள் விடுதலை குறித்த திசையில் வைத்திருப்பமே அடிப்படை.

அவருடைய புலனில் பதியம் பெற்றுள்ள சமூக்கக் கவனம் சக மனிதர்கள் பற்றிய அக்கறை இயற்கை மற்றும் பிரபஞ்சம் மீதான பிரியமெல்லாம் அவரை முன்னோக்கி நகர்த்துகின்றன.
அவர் ஒளி;யை விரும்புகின்றார். ஒளியே அவருடைய ஆதாரம். ஒரு வகையில் சொன்னால் அவர் ஒளியைத் தொடர்கின்ற ஒரு பயணி.

Thursday, October 12, 2006

இண்டைக்குசேறு நாளைக்குசோறு


ஒளிப்படம் கஜானி
இது யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட காட்சி

Wednesday, October 11, 2006

போர்ப்பசி(புகைப்படம்)


(ஒளிப்பம்.கஜானி)
தமக்கும் நண்பர்களுக்குமான உணவை போர்க்களத்துக்கு எடுத்துச்செல்லும் இரண்டு பெண் புலிகள்.கூட இருந்தவன் செத்துப்போக எப்படிச் சாப்பிட மனம் வரும் சாப்பிட்டதை விட கொட்டியதூன் மிச்சம் என்கிறார்கள் அவர்களைக்கேட்டால்.

எனது முதல் பதிவான முகத்தில் அறையும் நிஜம் இற்கு கிடைத்த வரவேற்பை பார்த்தவுடன் பிறந்த நம்பிக்கையில் அடுத்தது இது. நீங்கள் விரும்பினால் இன்னும் வரும்.
த.அகிலன்

Tuesday, October 10, 2006

வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு….(தேன்கூடு போட்டிக்காக)


“வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”
இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி
“நானொரு சிந்து காவடிச்சிந்து”
இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம்.

அப்பல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை சின்னக்கா எப்பவும் ஒரு கை விளக்குமாறு கையில வைச்சுக்கொள்ளுவா. நாங்கள் எல்லாரும் சந்தோசமா அவவுக்கு பின்னாலதிரிவோம். புல்லு பத்தை எண்டு ஒரு வண்ணாத்திப்பூச்சியையும் விடாமல் அடிப்பம் அடிச்சு அடிச்சு மஞ்சள்கலர், வெள்ளைப்புள்ளிபோட்ட கறுத்தக்கலர், தாச்சிச்சட்டிக்கலர், கோப்பிக்கலர், எண்டு விதவிதமா கலர்கலரா வண்ணத்திகளைச் சேர்ப்பம் சின்னக்கா அடிச்சு அடிச்சு எங்களிட்ட தருவா. அடிச்சு எண்டா உயிரைக்கொல்லுற இல்ல அவ வண்ணத்துப்பூச்சி அடிக்கிற ஸ்ரைலே தனி வண்ணத்துப்பூச்சிக்கு தெரியாம நைஸ் நைஸ்சா அதுக்குப்பின்னால போய் சட் என்ற ஒரே அடி. வண்ணத்துப் ப+ச்சி புல்லுகளுக்கிடையில் விழும் நாங்கள் பாய்ஞ்சு எடுப்பம்.



எப்பவும் எனக்கு மஞ்சள் கலர் வண்ணத்துப்பூச்சி தான் விருப்பம் அதால மஞ்சள் வண்ணத்துப்பூச்சியை சின்னக்கா அடிக்குமட்டும் நான் பாத்துக்கொண்டிருப்பன். ஆனா வண்ணத்துப்ப+ச்சி அடிக்கிறது அவ்வளவு சுகமில்லை சின்னக்கா நைஸ் நைஸா கிட்டப் போய் அடிக்;க விளக்குமாறு ஓங்க அது திடீரென்று பறந்து போய் மற்றப்புல்லில இருக்கும். புல்லுகள் எல்லாம் மஞ்சள் கலரில பூப்பூத்து வடிவா இருக்கும் அதில வண்ணத்தப்பூச்சி இருந்தா இன்னும் வடிவா இருக்கும்.

நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளை அதுகளின்ர காலில பிடிப்பம் அதுகள் துடிக்குங்கள் எங்களுக்குச்சிரிப்பு வரும். எங்கட கையில வண்ணத்துப்பூச்சிகளின்ர நிறம் பிரளும் நாங்கள் அதுகளை கொஞ்ச நேரம் வைச்சு பாப்பம் பிறகு விடுவம் ஆனா அப்பவே வண்ணத்துப்பூச்சி அரைவாசி செத்திருக்கும்.

ஒருநாள் வண்ணத்துப்பூச்சிகள் திடீரென்று அலையலையா கிளம்பி பின்வளவுல இருந்து கேற்றடிப்பக்கமா போகும். நாங்க அப்பிடியே உறைஞ்சு போய் பாத்துக்கொண்டு நிப்பம் பாக்க ஆசையா கிடக்கும் (அவ்வளவு வண்ணத்திகளையும் பிடிச்சா என்ணண்டு) அப்ப பெரியம்மாட்ட கேட்டன் “வண்ணத்துப்பூச்சியெல்லாம் எங்க போகுது” பெரியம்மா தான் சொன்னவா அதெல்லாம் காசிக்குப்போகுது எண்டு. வண்ணத்துப்பூச்சியெல்லாம் காசிக்குப்போனாப்பிறகு எங்களுக்குப் பிடிக்க வண்ணத்தி இருக்கேல்ல.

நாங்க விடுவமா பிறகு தும்பி பிடிச்சம் வண்ணத்துப்பூச்சியை விட தும்பி பிடிக்கிறது பயங்கர கஸ்டம் ஆனா பிடிச்சா சந்தோசம்தான். தும்பி ஹெலிஹொப்பரர் மாதிரி இருக்கும்.


அப்போதெல்லாம் ஹெலி எங்களின்ர வீட்டுக்கு மேலால எல்லாம் பறந்து போகும் நாங்கள் முத்தத்தில் நிண்டு பாப்பம் உள்ளுக்கு ஆக்கள் இருக்கிறது தெரியுதா எண்டு. சில நாட்கள் உள்ளுக்குள்ள இருக்கிற ஆட்களை கண்டுமிருக்கிறம்.

நாங்கள் ஹெலி மாதிரி இருக்கிற தம்பியின்ர கால்ல நூலைக்கட்டுவம் அது மேலே பறக்கும் எங்கட கையில இருக்கிற நூல் முடியுமட்டும் பறப்பார் பிறகு அப்பிடியே வட்டமடிப்பார். நாங்கள் சிரித்து சிரித்து விளையாடுவம். எங்களுக்கு திருப்தி யான பிறகுதான் தும்பிக்கு விடுதலை. தும்பி அப்பாடா என்று பறந்து போகும்.

மெல்லிய நூலால் தும்பியைக்கட்டி விளையாடிய அந்தப்பொழுதில் எனக்கு புரிந்ததே இல்லை. தும்பியின் வேதனை விடுதலைக்காக தும்பி எவ்வளவு தவித்திருக்கும் என்று புரியவேயில்லை.

பிறகொரு நாள் திடீரென்று எல்லாம் புரிந்தது. தும்பியைப்போல் இருந்த ஹெலி ஊருக்கு மேலால வந்தது அம்மா எங்களை இழுததுக்கொண்டு வீட்டுக்குள் ஓடினா. அம்மா ஏன் இப்படி செய்யிறா எண்டு விளங்காமலிருந்தம். நாங்கள் மேசைக்கு கீழை பதுங்கி இருக்கிறம் ஹெலி திடீரென்று சுடத்தொடங்கியது விட்டு பிளாற்றுக்கு மேல சட்சடவென்று சத்தம் கேட்டது இரண்டு மூண்டு ஓடுகளும் உடைஞ்சு விழுந்தது. நாங்கள் மேசைக்கு அடியில் ஒடுங்கிப்போயிருந்தம். நான் அப்ப சரியா நம்பினன் தும்பியைப்பிடிச்ச கோபத்திலதான் எங்கட வீட்டுக்கு ஹெலி சுடுகுதெண்டு. பிறகு வளர வளர அதுவும் புரிஞ்சுது.

தும்பியைக்கட்டி விளையாடேக்க எனக்குப்புரியாத விடுதலையின் ருசி எனக்கு இப்ப புரிஞ்சுது. விடுதலை எப்போதும் ஒரு அவாவாகவே இருந்தது. பிறகு நாங்கள் தும்பிகளைப்போல் நடத்தப்பட்டோம். ஊருக்குள் திரியவே வரையறைகள் இருந்தன. எத்தனை மணிக்குத்தான் வீட்டுக்கு வெளியால வரலாம் எண்டு இருந்தது. திடீர் திடீரென்று ராணுவம் எங்கட வீடுகளுக்குள்ள வரும் துவக்குகளோட. (அப்போதெல்லாம் எனக்கு விளக்குமாறோட நிக்கிற)
எங்கட பழைய ஞாபகம் வருவது தவிர்க்கமுடிhயமலிருந்தது.

விடுதலை வாழ்வின் தேவை மிக அவசியமான சாமான் என எனக்குப்பட்டது . சின்ன வயதில் என்னிடம் சிறைப்பட்ட தும்பிக்காய் மிகவும் வருத்தமெல்லாம் பட்டேன் (நம்புங்கள்). வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் விடுதலை தேவை விடுதலைதான் வாழ்வை பூரணமாக்குகிறது. பூக்களுக்கு மொட்டுகளிடமிருந்து,மழைக்கு மேகங்களிடமிருந்து இப்படி எல்லாவற்றிற்கும் விடுதலைதான் மூச்சாயிருக்கிறது ஒரு குழந்தையின் புன்னகையைப்போல விடுதலை மிக அழகானது.

நாம் தும்பியை நூலால் கட்டி விளையாடுகையில் புரியாத அது எனக்கு பிறகு புரிந்தது. நானும் தும்பியைப்போலான போது புரிந்தது. யார் யாரோ கயிறு கட்டி விளையாடும் பொம்மைகளாய் எம்மை உணர்ந்த போது விடுதலையின் ருசி உணர்ந்தேன்.

ஊர்நதியின் மூலங்களை விட்டு, ஊர்க்குருவியின் பாடலை விட்டு, ஊர் முழுதும் நிறைந்து கிடக்கும் எங்கள் வியர்வைகளை விட்டு, சுவடுகள் தொலையத்தொலைய துரத்தப்பட்போது விடுதலை ஒரு புன்னகையைப்போல இயல்பாய் இருக்க முடியாது என நம்பினேன். ஊர் நிலம் நிச்சயமாக மறுபடி பாhக்கும் போது அம்மாவின மடியைப்போலிருக்காது என்றும் நம்பத்தொடங்கினேன். காலம் எனக்கு கனவுகளைத் தந்தது. கனவுகள் கவிதைகளைத் தந்தன. கவிதைகள் விடுதலையைப்பாடின. விடுதலையை ஊர் கேட்டது. ஒர் நதியைப்போல ஒரு புன்னகையைப்போல , ஓர்பூவின் மலர்தலைப்போல , நான் இழந்துபோன ஊரின் விடுதலையும் கனவுகளும் மறுபடியும் வரக்காத்திருக்கிறேன்.

த.அகிலன்

முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)



ஒளிப்படம்- கஜானி)
நாங்கள் ஊரைவிட்டுப்போய் மறுபடியம் எமது ஊருக்குள் வந்து தேடி எடுத்தவை.யாருடைய அம்மாவோ அல்லது அப்பாவோ,அக்காவோ...இன்னும்..... இதில் யார் அது தெரிகிறதா

த.அகிலன்

Sunday, October 08, 2006

மரண தண்டனையும் மண்ணாங்கட்டியும்

என் அன்னலச்சுமி போனதுக்கப்பறம் எனக்கு வாழ்க்கையில பிடிப்பில்லாமபோச்சு ஆனா மரணதண்டனையை விலக்கினாங்கண்ணா நான் நல்ல மனுசனா வாழமுயற்சி செய்வேன்…

அட இது என்னுதில்லீங்க விருமாண்டியோடது.

ஏன் நான் இதை சொல்றேன்னா தமிழ்மணத்தில நானும் பார்க்கிறேன் கொஞ்சநாளா எல்லோரும் மரணதண்டனை மரணதண்டனை எண்டு ஒரே மரணதண்டணை மயமாப்போச்சு நானும் என் பங்குக்கு எதையாவது போட்டுத்தாக்க வேண்டாமா அதான் கோதாவுல இறங்கிட்டேன்.

கமல்ஹாசன் தனது விருமாண்டி படம் மரணதண்டனைக்கு எதிரானது என்று சொன்னாலும் அந்தப்படம் எந்தளவுக்கு மரணதண்டனைக்கு எதிராக பாதிப்பை ஏற்படுத்தியது என்பது கேள்விக்குரியதே என்னைக்கேட்டால் அந்த மரணதண்டனை குறித்த சமாசாரங்களை விட்டுப்பார்த்தால் விருமாண்டி நல்லபடம்.



எத்தினை சினிமா பாத்திருப்போம் நீதிபதி தன் சுத்தியால டமார் டமார் எண்டு அடித்து இ.பி.கோ 302வது சட்டப்படி மரணதண்டனை அழித்து தீர்பளிக்கிறேன் என்பார்.

மரணதண்டனை தேவையா இல்லையா? எவ்வளவு பெரிய கேள்வி இது. மரணதண்டனை யாருக்கு கொடுக்கப்படுகிறது. பெரிய பெரிய கிரிமினல்களுக்கு கொடுக்கப்படுகிறது கொலை கொள்ளை இப்படி இனிமே அவனை திருத்தவே முடியாது இவனை விட்டு வைச்சா மத்தவங்களுக்கு ரொம்ப கெடுதல் எண்டு நீதிதேவதை நினைச்சா உடனே மரண தண்டனை வழங்கப்படகிறது.
(ம் அவ கண்ணை வேற கட்டி வைச்சிட்டு கை நீட்டி லஞ்சம் வாங்கி இந்த நீதிபதிகள் நிரபராதிகளுக்கு மரணதண்டனை வழங்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்).

அட என்னைக்கேட்டா நான் சொல்லுவன் மரணதண்டனை தேவையில்லலை என்று. தூக்குப்போட்டா ஒருத்தன் எப்பிடி செத்துப்போவான் தெரியுமா கழுத்து எலும்புகள் கழண்டுதான் செத்துப்போவான். அட நம்ப உடம்பு அவ்வளவு லேசில எங்களை சாக விடாது முதல் தரம் எலும்பு கழர கழுத்து தன்பாட்டுக்கு அதை பூட்டும் மூண்டாந்தரம் எக்கி எக்கிப்பாத்து அது முடியாம செத்துப்போவான் இந்த மரணத்திற்கிடையில் எவ்வளவு அவஸ்தை தெரியுமா?(வலியே தெரியாம சாகிறதுக்கு நிறைய எங்கட விஞ்ஞானிகள் கண்டு பிடிச்சிட்டாங்கள் தான். இருந்தாலும்)

அட அவன் எவ்வளவு பெரிய தப்பும் பண்ணியிருக்கட்டும் அதுக்காக அவனை கொல்லுறதா அப்பிடி நீங்க கொண்டா அவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியம். வன்முறைக்கு வன்முறைதான் தீர்வுண்ணு உலகம் சொல்கிறது என்றால் அமைதிக்கான நோபல் பரிசை அணுகுண்டு செய்ய பயன்படுத்துங்கள். கத்திக்கு கத்தி குத்துக்கு குத்து என்பதெல்லாம் தப்பு என்பது தான் என்கருத்து.

சாதாரணமா ஊருக்குள் கொலை செய்யிறவனை பிடிச்சி மரணதண்டனை வழங்குகிறீர்கள் அட அமெரிக்க கழுகு புஸ்சுக்கு யார் மரணதண்டனை கொடுப்பது எத்தனை கொலைசெய்கிறார்.பயங்கரவாதத்தை தடுப்பது என்று சொல்லி செய்யாத பயங்கரவாதம் எல்லாம் செய்கிறார். ஏன் அண்மையில் இலங்கை முல்லைத்தீவில் 52 குழந்தைகளை குண்டு போட்டு கொன்றாரோ மகிந்த ராஜபக்ச அவருக்கெல்லாம் மரதண்டனை குடுப்பீங்களா? இப்பிடி பெரிய பெரிய கொலைகாரங்களையெல்லாம் சாதாரணமா சீச்சி ராஜமரியாதையோடு நடமாட விட்டு விட்டு உள்ளுர்கொலைகாரன் நாக்கை தொங்கப்போட்டுக்கிட்டு தூக்கில தொங்கணுமா? சும்மா போங்கய்யா மரணதண்டனை வேணும் என்று கத்தாம…..

Saturday, October 07, 2006

நிர்ப்பந்தம்

அலைகிறது மனசு
அப்படியே
ஸ்தம்பித்துப்போன
வாழ்வின் நினைவெழுந்து
மனவெளியெங்கும் அலைகிறது..

நிலவின் பின்னழகு போலவே
நிதர்சனங்களும்
விழிகளுக்கு தெரியாமலே....

முகங்களின் கொந்தளிப்பில்
மூடிவைக்கப்படுகின்றன மனசுகள்...

வா
நானும் நீயும்
திறந்த மனசோடு
காற்றைப்போல்
எங்கும் நுழைவோம்..

எனக்கு நானும்
உனக்கு நீயும்
எல்லைகள் வகுத்துக்கொண்டு
வறண்டுபோகாமல்
எனக்கு உன்னையம்
உனக்கு என்னையும்
முழுவதும் காட்டுகிறவரை
இருட்டுக்குள் இருக்கிற
நம் வாழ்க்கை

இருட்டுக்குள்ளேயே
இருக்க நிர்ப்பந்திக்கப்படுவதாய்....

த.அகிலன்

Friday, October 06, 2006

மரணத்தின் வாசனை - 03

அழுது கொண்டிருக்கும் பள்ளிக்கூடச் சுவர்கள்

அவனது வெறித்த விழிகள் நிலைகுத்தி இருந்தது.கண்களை இமைக்கவேயில்லை அவனது அருகில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்த வைத்திய சாலையின் வேகமும் பயமும். தொற்றாமல் அவன் சிலைபோல் நின்றான். பதட்டமும் அவலமும். பாதிக்கவேயில்லை இந்த மனிதனை…..

நான் அவனருகே கீழே பார்த்தேன்.ஓ……… என்து வார்த்தைகள் தட்டையானது. குடல் வெளியில தள்ளியபடி ஒரு பிள்ளை அவனது தங்கச்சியாயிருக்கலாம். தலை புரண்டு கிடந்தது நான் அருகே போனேன். குருதி வழிந்த வெறும் தரையில் கிடத்தப்பட்டிருந்தாள். கடைசிக் கணங்களின் புன்னகை அவளது முகத்தில் உறைந்து போய்க்கிடந்தது. என்னை யாரோ நெரிப்பது போலிருந்தது…

நான் அவளுக்கு யாருமில்லை… அண்ணனா தம்பியா மாமனா மச்சானா யாருமில்லை…எனக்கே நெஞ்சடைத்தது. வைத்திசாலையில் மரணத்தின் வாசனை விரவியிருந்தது வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்தன. நான் அவனை அண்ணை அண்ணை... என்று கூப்பிட நினைத்தேன்.. வாயை பலம் கொண்டசைத்தேன் வெறும் காத்துதான் வந்தது. திடீரென்ற ஒரு முடிவற்ற கிணறொன்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போன்ற அவஸ்தை தரை தட்டாமல் கூகூகூகூகூகூகூகூகூகூகூ என்று விழுந்து கொண்டேயிருந்தேன் அந்தரமாய் இருந்தது. வைத்தியசாலையின் மனிதர்கள் உறைந்து போனார்கள். என்னால் நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு ஒட வேண்டும் போல இருந்தது ஒடினேன். கால்கள் தரையில் பாடவேயில்லை……


எங்கும் ஒரே கூக்குரலாய் இருந்தது. யாரையும் பொருட்படுத்தாது வாகனங்கள் வந்து கொண்டேயிருந்தன… முடிவில்லாமல் போனது.. குவியல் குவியலாக பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன சில மணிநேரங்களுக்கு முன்னர் நிறைய நம்பிக்கைகளோடு இருந்தவர்கள் மரணத்தை நினைத்திருக்கவே மாட்டார்கள். ஏன் நினைக்கிறார்கள் யாராவது விடிய எழும்பினவுடன் மரணத்தையா நினைக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது அன்றைக்கு பிற்நதநாளாய் இருக்கலாம். துயர் நினைவுகளைத் தாங்கியபடி எழுந்திருக்கிற வயதா? எல்லாம் விடலைகள் கனவுகள் கொழுந்து விட்டெரியும் வயசுதானே அவர்களுக்கு...


அவர்கள் ஏன் மரணத்தை நினைக்கப்போகிறார்கள். இப்போது உயிரற்ற உடல்களின் குவியல்களுள் கனவுகளற்று கிடக்கிறார்கள். அவர்களது கனவுகளையும் உயிர்களையும் கிபிர்க்குண்டுகள் கொண்டு போயின…


யார்யாருடைய அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோ இலக்கற்று அந்தப்பிணக்குவியல்களிற்குள் அலைந்தார்கள்.எல்லா உடல்களையும் புரட்டிப்புரட்டிப் பார்த்தார்கள் என்னுடைய பிள்ளையாய் இருக்ககூடாது என்ற நப்பாசையில் ஓடினார்கள் அழுகையும் கூக்குரலும் நிரம்பியிருந்தது அந்த ஆஸ்பத்திரியின் மைதானம்….

இதுவா அதுவா மற்றதாயிருக்குமோ என்று ஒவ்வொரு உடலும் புரட்டிப்பார்க்கப்பட்டது. சிதறிப்போன உடல்களை எங்கிருந்து கண்டு பிடிப்பது. உடல்களே இல்லாத மரணமும் நிகழ்ந்தது. அத்தனையும் பள்ளிக் கூடப்பிள்ளைகள் விடலைகள் எந்தவிதமான அரசியல் விருப்புவெறுப்பும் அற்வர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசினார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். வேறென்ன பாவம் செய்தார்கள் மரணம் சுவடுகளற்று நிகழ்த்திப்போயிருந்த கொடுரம் அது.

அதன் பிறகு முல்லைத்தீவில் சில பள்ளிக்கூடங்களில் உயர்தர வகுப்பில் படிக்க ஆட்களே இல்லாமல் போனது. அவர்களது வகுப்பறைச்சுவர்களில் அவர்களது சிரிப்புகள் இன்றைக்கும் எதிரொலிப்பதாய் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.


மரணத்தின் வாசனை நுகர்ந்த காயப்பட்ட பெண்பிள்ளைகள் விறைத்துப்போயிருந்தார்கள். ஒரு அப்பா கத்தி அழுகிறார் நான் என்ன செய்யப்போறேன் என்ர பிள்ளைக்கு கையில்லாமப்போச்சே.. இன்னொருத்திக்கு இரண்டு கால்களும் இல்லை வயது பதினேழு செத்துப்போயிருக்கலாம்.. என்கிறாள்.... உலகமே இவள் செத்துப்போகத்தான் வேண்டுமா?...........

கீறீச்ச்ச்ச்;…… என்று ஸ்ரெச்சர் தள்ளும் ஒலி வைத்தியசாலையின் சுவர்களில் தெறிக்க. ஐயோ கிபிர் கிபிர் கட்டிலில் இருந்து குதித்து விட முனைகிறாள் ஒருத்தி. வீரிட்லறியபடி கட்டிலில் இருந்து தவறி விழுகிற ஒருத்தியின் காயம் மறுபடியும் இரத்தமாய்ப்போனது. மறுபடியும் சத்திரசிகிச்சை கூடத்துக்கு அழைத்துப்போகிறார்கள்.

மறுபடியும் வேதனை மறுபடியும் அவலம்.. அவர்கள் எப்போது அந்த நினைவுகளைக்கடப்பார்கள். அவர்களது அழுகை இன்றை வரைக்கும் நிற்கவேயில்லை என்றைக்கு நிற்கும்.

த.அகிலன்

Thursday, October 05, 2006

பிரிவின் சித்திரம்


எனக்கும்
உனக்குமான இடைவெளி
பிரிவின் சொற்களால்
நிரம்புகிறது…

உதிர்ந்து விழும்
நட்சத்திரத்தின் பேரோசை
பிரிவின் காலடியில்
மௌனித்து வீழ்கிறது.

தாகித்தலையும்
நதியின் தடங்களில்
நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…
நம் பிரிவின் சித்திரத்தை..

த.அகிலன்

Wednesday, October 04, 2006

இது கவிதையில்லை...

ஒரு கடிதம்


அக்கா!
பிளாஸ்ரிக் பின்னணியில்
நீ முகம் காட்டும்
புகைப்படங்களில்
உன்
புன்னகை இயல்பற்று
தொங்கிக் கொண்டிருப்பதாய்
படுகிறது எனக்கு.

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்-
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்து விட்டார்கள்
என்பது

அவர்களை
மன்னித்து விடு
அவர்கள் அறியாதவர்கள்.

அந்த அதிகாரிக்கு
உனது பிரார்த்தனைகளின்
பின்னணியில்
ஒரு தாயின்
இருமல் சத்தம்
நிச்சயமாய் கேட்டிருக்காது

உன்தங்கையின்
கல்யாணம் பற்றி

தம்பியின் வேலைபற்றி

உறவுகளின் தேவைபற்றி

எல்லாவற்றையும் விட
உறவுகளற்று தனிக்கும்
மகளின் முகவரி பற்றி ஏக்கம்
அதுவும்கூட
அவரிற்குத் தெரிந்திருக்காது….

அவர் மறுப்பது
உனது இருப்பை மட்டுமல்ல
அவர்களின் கண்களிற்கு
தெரியாத இச்சிறுதீவில்
உன் மனிதர்களின்
இருப்பையும் மறுக்கிறார்
என்பது
அவருக்கு
தெரியாதிருக்கலாம்….

அக்கா! - இப்போது
நீ- மேல்முறையீட்டாரிடம்
எம் புன்னகைக்காய்
பிரேரிக்கலாம்…..

நான்!
ஏது சொல்ல- அந்த
மனிதர்களிற்கு
புரிய வேண்டுமே!
வேறென்ன
ஓ!
சுஹானா அந்த
சின்ன தேவதைக்கும்
அத்தானுக்கும்- என்
வாழ்த்துக்களைச் சொல்
இப்படிக்குத்
தம்பி.

த.அகிலன்.

ஐரோப்பிய நாடொன்றில் அகதியாகிப்போன ஒரு அக்காவுக்கு எழுதியது இது

Saturday, September 30, 2006

மீறல்


நிழலுருவில் வசந்தம்
நிஜம்
ஒளியின் எத்தொலைவிலோ

ஒளியின் தொலைவை
விரட்டும் என்காலம்
வழிநெடுக
இருளின் கரங்கள்
என் விழிமறைக்கும்

என்வயசையும்மீறி
மனம் கொதிக்கும்
அதன்தகிப்பில்
என் கரம் எரித்து
ஒளி படைத்தேன்

உயிர் உருக்கி
வழி கடந்தேன்
வலியையும்...

இருள்சொன்னது
நீ வயசுக்கு மீறியவன்
நான் சொன்னேன்
இன்னும் இருக்கிறார்கள்
வயசுக்கு மீறியவர்கள்..

த.அகிலன்

Wednesday, September 27, 2006

மரணத்தின் வாசனை - 02

உருகித்தீர்ந்த ஒரு மெகுவர்த்தி


சந்தையில் வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது இரைச்சல் காதைப்பிளந்தது

ஓருவன் தலைதெறிக்க ஒடிவந்தான். நண்பா நண்பா

மற்றவன் என்னடா? என்கிறான்.

நான் இந்த சந்தையில் மரணதேவதையை பார்த்தேன். அவள் என்னைப்பார்த்து நக்கலாக சிரிக்கிறாள் நீ உன் குதிரையைக்கொடு நான் பக்கத்து நகரில் ஓடிஒளிந்து கொள்கிறேன் என்றான்.(குதிரையை அபேஸ் பண்ண பார்க்கிறானோ)

இவன் உடனடியாக குதிரையைக் கொடுத்தான். அவன் அடுத்தநகரை நோக்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் மரணதேவதையை இவன்கண்டான்.

அவளிடம் “என்ன என் நண்பனை பார்த்து நக்கலாக சிரித்தாயாமே” என்றான்.

மரணதேவதை சொன்னாள் “சீ சீ நான் அவனை பக்கத்து நகரில் தானே சந்திக்க வேண்டும் என்ன இங்கே நிற்கிறான் என்று சிரித்தேன்” என்றாள்.

மரணதேவதையை பார்த்து தலைதெறிக்க ஒட எல்லாரும் தயாராக இருக்கிறோம். யாராவது அவளைக்காதலிக்க தயாரா? அல்லது வா வா என்று அவளுக்கு விருந்து வைக்கவும் யார் தயார்.

மரணதேவதையை விருந்துக்கு அழைத்தவனைப்பற்றி அவளை ஒரு சாதாரணப்பெண்ணாகப் பாவித்தவனைப்பற்றிய கதை இது.


ஒரு பொதுக்கூட்டம்

பேச்சாளர் கரகரவென்று அழுகொண்டிருக்கிறார் தனைமறந்து.

“அந்தப் பிள்ளை சொன்னவன் நான் இரண்டு மூன்று நாட்களில் நினைவிழந்து தண்ணீர் தண்ணீர் என்று அரற்றினாலும் தண்ணீர் தராதீர்கள் என்று”

ம்.. அந்தப்பிள்ளை திலீபன்.

அவன் அப்படித்தான் செத்துப்போனான். தண்ணீரும் அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து செத்துப்போனான். அவர் அழுதழுது சொன்னதைப்போல திலீபன் அவனது இறுதி நாட்களில் நினைவிழந்து அரற்றினான்.

தண்ணீர் தண்ணீர் என்று அவன் நினைவிழந்து அரற்றுகையில் யாரும் தரவில்லை அவனது வார்த்தைகள் அவனைச் சுற்றியிருந்தவர்களைக் கட்டுப்படுத்தியது. ஆயிரக்கணக்கானவர்கள் அவனது சாவுக்கு சாட்சியாய் இருந்தர்கள். அவனது சாவு தடுக்கப்பட முடியாததாயிருந்தது.

“ஐயா தீலீபா எங்கய்யா போகின்றாய்”
திலீபன் உண்ணாவிரதமிருந்த மேடைக்கு அருகில். இப்படி ஒரு கவிதை அழுதுகொண்டிருந்தது.

அவன் அதைக் கேட்டானோ கேட்கவில்லையோ தெரியாது. ஆனால் அவன் செத்துவிடக்கூடாதே என்று அத்தனை பேரும் துடித்தர்கள்.

முதல்நாள் திலீபன் மிகுந்த உற்சாகமாகப்பேசுகிறான். எனது மண்விடுதலை பெறவேண்டும். மக்கள் புரட்சி இங்கே வெடிக்க வேண்டும் என்று மிகவும் உற்சாகமாகப்பேசுகிறான்.

பிறகு நாளாக நாளாக அவன் பேசும் சக்தியை இழந்து கொண்டு போகும் நாட்களிலும் அவனது முகத்தின் புன்னனை மாறாதிருந்தது. நம்பிக்கையிழந்துவிட்டன் சாயல் துளியம் இருக்கவில்லை. மரணத்தின் வாசனை தனது நாசிகளில் ஏறுவதை அவன் மறைத்தான் உண்மையில் மக்களிடம் அவன் பிழைத்து விடுவான் என்கிற நம்பிக்கைகள் வீழ்ந்துகொண்டிருந்தது.

திலீபன் தனது நம்பிக்கைகள் சாகும் கணத்தில் அவன் சொல்கிறான்
“உறவுகளே நான் நம் நாடு மலர்வதை எனது தோழர்களொடு வானத்தில் இருந்து பார்ப்பேன்”


அவன் மரணம் நிச்சயமானது என்று அவனுக்கு புரிந்திருந்தது. அது அவனால் தானே நிச்சயிக்கப்பட்டது. அந்த தெளிவுதான் அவன் பலம் அது தெளிவா அல்லது சாகும் துணிவா எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால் அது மரணத்தை அதன் நிரந்தரத்தை அதன் மீதான மனிதர்களின் அச்சத்தை நிச்சயமாக வென்றுவிட்டது.

திலீபனிடம் கடைசியாக ஒரு வைத்தியர் வருகிறார். அவர் திலீபனைப்பார்த்தார். அவன் சாந்தமாக கிடந்தான் நிரந்தரமான அவனது அந்தப்புன்னகை அவரால் எதிர்கொள்ள முடியாததாயிருந்தது. காலம் அவனைக் கொண்டு போய் விட்டது விடுதலையின் மூச்சென்று மேடைகளில் முழங்கியவன் மூச்சடங்கிப்போனான் அவன் மரணத்தை அறிவிக்க வேண்டும். தன் உறவுகளை தன் அன்பான மக்களை துடிக்கவைத்து விட்டு மெழுவாத்தி அணைந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

வைத்தியர் இப்போது என்னசெய்வார். அவரைச்சங்கடத்துக்கும் துக்கத்துக்கும் உள்ளாக்கப்போகும் அந்தக்கணங்கள் வந்துவிட்டன. மரணம் அவனை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது.

மரணம் கொடியைப்போல அவன் மீது படர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கணீர்க்குரல் வலுவிழந்து தொய்து தீனித்து கடைசியில் மௌனித்தது. அந்தப் பெரும் மௌனம் கூடிக்கதறிய மக்கள் வெள்ளத்திடம் கொடுந்தீயெனப்பற்றியெரிகிறது இன்றைக்கும். எப்படி முடிந்தது அவனால். மரணம் அத்தனை இலகுவானதாதா காதலியைக் கட்டிக்ககொண்டதைப்போல மரணத்தை இலகுவில் முத்தமிட்டானே. அது சாத்தியமா மரணம் அத்தனை சாதாரணமா.


அவர் திலீபனை அவனது கால்களை தொட்டு கும்பிட்டார்.வைத்தியரின் உடல் குலுங்கிக்கொண்டிருந்தது (வேறென்ன செய்யமுடியும்) அவனது மரணம் அறிவிக்கப்பட்டது. அந்த திடுக்கிடும் கணங்களில் ஓஓஓஓஓஓ என எழுந்த கூக்குரலும் கதறலும் அடங்க நாளானது. அத்தனை பேரும் அழுதார்கள் மரணத்தை விருந்துக்கு அழைத்த அவனுக்காய் வழிந்த எந்தத்துளிக் கண்ணீரிலும் பொய்யில்லை. அத்தனையும் துயரம். நல்லூரின் தெருக்களில் வாhத்தைகளுக்குச்சிக்காத கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. உறைந்து போன அந்தக்கணங்கள் இன்றைக்கும் நல்லூரின் தெருக்களில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.




ஒரு மிகப்பெரும் மனோபலமிக்க தலைவன் திலீபன். அவன் மனோபலம் இதனை சாத்தியமாக்கியதா? இந்தப்பூமியின் சுகங்களை தவிர்த்து அவன் முன்பு கூடியிருந்து கதறும் குரல்களைத்தவிர்த்து மரணத்தை எதிர்பாhத்து காத்திருப்பதற்கு அது அத்தனை இன்பமானதா? மரணம் சிலருக்கு ஆச்சரியம் சிலருக்கு சாதாரணமா. சாகப்போகிறோம் என்று தெரிந்த பிறகும் நடுங்காமலிருக்க புன்னகைக்க அதற்காககாத்திருக்க எத்தனை மனிதரால் முடியும் என்னால் உங்களால் யாரால்……..? ஒரு சில அதிசயர்களால் மட்டும் தான் முடியும் போலிருக்கிறது.

த.அகிலன்

Monday, September 25, 2006

பாழடைந்து போகும் நகர்



வெம்பிய நகரின்
கானல்
நீர்மிகும் தெருக்களில்
மழையின்
தேவதைகள் யாரும்
வருவதற்கில்லை

குரல்களற்ற
மனிதர்களின்
கண்கள் ஒளியற்று
மங்கின

நகருக்குள்
தாகித்தலையும்
சாத்தான்கள்
பெருநகரின்
கானல்நீரள்ளிப்பருகி
தெருக்களில்
வேட்டையாடித்திரிந்தன…

இறுதியிலும் இறுதியில்
தேவதைகளின் சாபம்
நகரின் ஓளிவிழுங்க
பாழடைந்து போகிறது
நகர்….

த.அகிலன்

Sunday, September 24, 2006

மரணத்தின் வாசனை - 01

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்



கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள்

“எனது மகனைக் காப்பாற்றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்”.

சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து கொண்டிருந்தது.

புத்தர் அமைதியாய் சொன்னார் “ அம்மா மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிவா” புத்தரின் முகம் புன்னகை மாறாதிருக்கிறது.

அவள் தெருவெங்கும் ஒடினாள் தன்மகனைக்காப்பாற்றி விடுகிற வெறியில் ஓடினாள் ஆனால் மரணம் இறுதியில் அவளை வென்றுவிட்டது. மரணம் காற்றைப்போல எங்குமிருந்தது. மரணத்தின் வாசனை தெரியாத ஒரு பிடி கடுகு கூட இந்தப் பூமியில் கிடையாது.

மரணத்தை வென்று விடுகிற ஆசை எல்லோருக்கும் உண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற சகசவீரனைப்போல் மரணம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு கூட வருகிறது . கடைசிவரை பின்னாலேயே ஒடீ வந்து இறுதியில் முந்திக்கொண்டு விடுகிறது.

எனது வழியில் கடந்து போன மரணத்தின் சுவடுகளின் சிலகாட்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அப்பாவின் மரணத்தை பார்த்திருக்கிறேன் மிகநெருக்கமாக மரணத்தின் வாசனை அவர் முகத்தில் மிதந்து கொண்டிருக்க அவரது இறுதிவார்த்தைகள் எனக்கானவையாய் இருந்தன.

எனக்கு அப்போது 7 வயது அதற்கு முன்பாக என்னிடம் மரணம்குறித்த சேதிகள் அனுபவங்கள் ஏதும் கிடையாது என்னிடம் மரணம் குறித்து இருந்ததெல்லாம் சவஊர்வலமும் அதில் கொழுத்தப்படுகின்ற சீனா வெடி குறித்த பயமும் தான் அதைவிடவும் "பொடிக்கு கையைக்காட்டாதடா கைஅழுகிப்போகும்" என்ற அக்காக்களில் வெருட்டலுக்கும் நான் பயந்து போயிருந்தேன். கை அழுகிப்போகாதிருக்க சவஊர்வலங்களைப்பார்க்கிறபோதெல்லாம் கையைப் பின்னால் கவனமாய் கட்டி மறைத்திருக்கிறேன். என்னையும் மீறிக்கையைக்காட்டிய பொழுதொன்றில் கை அழுகப் போகிறது என்று அழுது அழுது ஊரைக்கூட்டியிருக்கிறேன்.

இப்போது அப்பாசெத்துப்போனார். பாம்பு அப்பாவைக்கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறினார்கள். அப்பாவை சூழ்ந்து கொண்டார்க்ள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பாவைச்சுற்றி நின்ற சனங்களுக்குள் நான் இடறுப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவைக்காப்பாற்றி விடவேண்டும் என்று எல்லோரும் நினைத்தார்கள் அப்பாவை தூக்கிக்கொண்டு எல்லோரும் றோட்டுக்கு ஒடினார்கள். சந்தி வைரவர் கோயிலடியில் கிடத்தினார்கள். அவர்கள் நினைத்திருபார்கள் வைரவர் காப்பாற்றி விடுவார்.


அப்போதெல்லாம் இந்தியராணுவம் எங்கள் றோட்டுச்சந்தியில் முகாமிட்டிருந்தது. அஞ்சரை மணியோட பெரிய வட்டம் வட்டமாக முள்ளுக்கம்பிகளை போட்டு வீதியைமூடிவிடுவார்கள் யாரும் போகமுடியாது ராணுவ வாகனங்களைத்தவிர யாரும் போகமுடியாது. அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்கு ராணுவத்துடன் யார்யாரேவெல்லாம் கதைக்கிறார்கள் நான் குரல்களை மட்டும் கெட்டுககொண்டிருந்தேன் என்னால் மனிதர்களின் கால்களை மட்டும் தான் பார்க்கமுடிந்தது. சேர் மூர்திசேர் பாம்புகடிச்சிட்டுது சேர் .யாரோ இந்திய ராணுவத்திடம் கெஞ்சினார்கள். NO NO ராணுவம் பலமாக மறுத்துக்கொண்டிருந்தது.நான் சனங்களின் கால்களிடையில் நசிபட்டுக்கொண்டிருந்தேன். கால்களிடையில் புகுந்து புகுந்து அப்பாவிடம்போனேன். அப்பா ஏன்அழுகிறார்? “அப்பா அப்புசாமியிட்ட போட்டு வாறன் பிள்ளை வடிவாப்படியுங்கோ” அவர் குரல் தளுதளுத்தது. அந்த வார்த்தைகளின் இறுதியையும் நிரந்தரத்தையும் என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் மரணம் மறுபடி ஆளைத்திரும்பத்தராது என எனக்கு அப்போது புரியவேயில்லை.

இந்தியராணுவம் இறுதிவரை அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக விடவில்லலை.(ராஜீவ்காந்தி வாழ்க) அப்பாசெத்துப்போனார். வைரவரும் கைவிட்டார்.

அப்பாவை வீட்டைகொண்டு வந்து கிடத்தினார்கள் யார்யாரோ என்னைக்கட்டிப்பிடித்து அழுதார்கள் நான் கொஞ்சம் அசௌகரியப்பட்டேன் அவ்வளவுதான் துக்கம் எல்லாம் அப்போதிருக்கவுமில்லை தெரியவுமில்லை. நான் அப்பாவை கிட்டபோய் பார்த்தேன் அவர்விழிகள் ஒருமுறை திறந்து மூடியது போலிருந்தது நான்நிச்சயமாய் பார்த்தேன் அந்த வெளிறிய வழிகளை பார்த்தேன். யாரிடமும் சொல்ல முடியவில்லை அப்பா முழிப்பு என்று . அந்த வேதனை இன்றைவரைக்கும் எனக்கு உண்டு. (நான் இப்போது யோசிப்பது உண்டு அது ஒரு பிரமையோ என்று) ஒரு பிரமையின் ஞாபகங்கள் இருபது வருடம் தாண்டியம் மனசில் தங்கியிருப்பது என்பது ம்;;;;;;;… .


ஒப்பாரி காதைக்கிழித்தது. பிறகு எல்லாம் வேகமாக நடந்தது நான் அப்பா இப்போது பொடி என்பதால் அப்பாவுக்கு முன்னுக்கு கையை வெளியில் எடுக்காமல் பின்னாலேயே கட்டிக்கொண்டிருந்தேன். அல்லது அப்பாதானே கையை எடுக்கலாமா விடலாமா என்று நயாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது அப்பாவுக்கு நிறையப்பேர் கண்ணீர் அஞ்சலி அடித்தார்கள். நான் அதையெல்லாம் ஒரு மூட்டைக்கு மேலிருந்து உரத்து மரணஅறிவித்தல்பாணியில் வாசி;த்துக்கொண்டிருந்தேன்.

நான் அழவேயில்லையா அழுதேன். கடைசியாக சுடலையில் அப்பாவைக்கொழுத்தியபோது. அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று எனக்கு புரிந்த போது வீறிட்டு கத்தினேன். யார் யாரோ என்னை அணைத்தார்கள் சமாதானப்படுத்தினார்கள். சோடா கொடுத்தார்கள். இப்போதும் அந்த அழுகை உறங்கிக்கொண்டிருக்கிறது எனக்குள்.

இப்போது 18 வருடங்கள் கழித்து மரணம் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து தொடங்கினேன். அப்பாவின் மரணத்தை தவிர்த்து விட்டு எப்படி?அப்பா எனக்கு சரியாக நினைவுகளில் பதியாத பிம்பம் அவர் மரணம் என்னை நிச்சயமாக பாதித்தது என்னிலும் அதிகமாக தம்பியை அதைவிட அப்போதுதான் பிறந்திருந்து தங்கையை(அவளுக்கு அப்பாவின் முகமே தெரியாது) அந்த மரணம் பாதித்தது அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும் தந்து கொண்டேயிருக்கிறது.

18 வருடம் கழித்து இப்போது யோசித்தேன் இதற்கெல்லாம் காரணம் யார் அப்பாவா அந்த நேரம் அவரைக்கடித்த பாம்பா இல்லை அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவிடாத இந்தியராணுவமா?(அவர்கள் கட்டளைக்கு பணிபவர்கள்)அல்லது இந்திய ராணுவத்தை இங்கே அனுப்பினாரே ராஜீவ்காந்தி அவரா? யார் நண்பர்களே.

த.அகிலன்

Monday, September 11, 2006

நினைவுகள் மீது படியும் நிழல்…


எனை விலகி
புல்லின்
நுனியில் இருந்து
ஒரு பறவையைப்போல்
எழுகிறது
உன் முத்தத்தின்
கடைசிச்சொட்டு ஈரமும்

நான்
புதினங்கள்
அற்றுப்போன
செய்தித்தாளைப்போலாகிறேன்
நீயிராப்பொழுதுகளில்..


மழைநின்ற
முற்றத்தில்
உன்
காலடித்தடங்களற்ற வெறுமை
நிழலெனப்படிகிறது
நம்
நினைவுகளின்மீது

த.அகிலன்

Monday, September 04, 2006

எறும்புகள் உடைத்த கற்கள்


வலி
உணரும் தருணங்களில்
எங்கிருந்தோ முளைக்கிறது
எனக்கான கவிதை

காற்றழிந்த
மணல்வெளியில்
காத்திருக்கும்
என்காலடி
காற்றில் அழிவதற்காய்

நான்
கானலைஅருந்த
தயாராகையில்
எப்படியாவது
காப்பாற்றிவிடுகிறது மேகம்

எனக்குத் தெரியும்
கடித்துவிடுகிற
கடைசிநொடி வரைக்குமே
புகழப்படும் எறும்புகள்

ஆனாலும்
எறும்புகளிற்கு
கவலைகிடையா
எதைக்குறித்தும்

என்
வழியெங்கும்
நிறுவிக்கிடக்கிறது
எறும்புகள் உடைத்த
கற்கள்

த.அகிலன்

Tuesday, August 29, 2006

அழகுதிர்ந்த கவிதை


என்னிடம்
மகிழ்ச்சியின்
சுவடு தானுமில்லை

என்னால்.....
உலர்ந்து போன
இரத்தத்தின் அடியில்
ரோஜாவின் இதழ்களைக்
கற்பனை செய்ய முடிகிறது

நேற்றுப் பிடுங்கியெறியப்பட்ட
பெருமரத்தின்
மொட்டுக்களையும்
பிஞ்சுகளையும் குறித்த
துயர்மிகும் சொற்கள் மட்டுமே
இப்போது
என்னிடமுண்டு

அழகுதிர்ந்த கவிதை
துயரமும்
பிணமும் நாறிக்கிடக்கும்
தெருவழியே
அழுதலைகிறது

கேள்விகளற்ற
நிலத்தில்
துயர்மிகும்
சொற்களைத் தவிரவும்
வேறென்னதான் இருக்கமுடியும்?

த.அகிலன்

Saturday, August 26, 2006

தாயாய்; ,சகோதரியாய், தோழியாய்....

நான் அண்மையில் இலங்கை வன்னியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்குப் போயிருந்தேன் அந்த
அனுபவங்களை ஒரு குறிப்பாக எழுதியிருக்கிறேன்

- த அகிலன்



"குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம்
அண்ணனின் அன்பு குழந்தைகள் நாம்"
என்று

ஆடிப்பாடுகிற சிறுவர்கள் எல்லோரும் 3-12வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மழலைமுகம்
மாறாது இன்னமும் இருக்கின்ற தமிழ்மண்ணின் புன்னகைகள்.ஆனாலும் அவர்கள் வயது களையும்
முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற புன்னகைகளையும் மீறி துருத்திக்கொண்டிருக்கிற ஏக்கமும்
துயரமும். மனசின் ஆழங்களை ஊடுருவி நெருமாமலில்லை.

ஏதோ ஒரு விதத்தில் போர் இவர்களைப்பாதித்திருக்pறது.இவர்கள் கடந்து வந்து வாழ்வின்
சிறிய தூரத்துக்கிடையில் துயரம் அவர்களைத் தடுத்துத் திசைமாற்றியிருக்கிறது. அந்தக்
கசப்பான அனுபவங்களின் வலி அவர்களின் புன்னகைகளின் வளி எம் முகத்தில் அறைகிறது.


எல்லாரும் போரின் பிரசவிப்புக்கள்போர் அவர்கள் பெற்றோரைத்தின்றுவிட இப்போது செஞ்சோலை
என்கிற அவர்களின் வீட்டில் ம் அப்படிதான் அழைக்கிறார்கள் 250 பேர் இருக்கும் வீடு ஆச்சரியமான
250பேர்கொண்ட குடும்பம். எனக்கு ஆச்சரியம் நிறைந்து போன வார்த்தையாயிருந்தது வீடு என்பது.

செஞ்சோலை ஏதோ ஆச்சிரமமோ னொதை இல்லமோ என்றநினைப்புடன் நுழைகிற எமக்கு
ஆச்சரியமாயிருக்கிறது அவர்களின் நிறைவும் அன்பும் மகிழ்ச்சியும். அனாதை இல்லம்,ஒரு
ஆச்சிரமம்,ஆதரவற்றோர் இல்லம், இப்படியான இடங்களில் இருக்கிற குழந்தைகள் யாராவது தங்கள்
இடத்தை வீடு என்று சொல்கிறதா? ஆனால் இவர்கள் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார்கள் வீடு…


அந்தக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும்
போயிருந்தோம். வாங்கோ கணீராய் கரிசனையாய் ஒலிக்கிற செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனியின்
குரல்.கட்டடாயம் எங்களுக்கு ஒரு பிரதி தந்திரவேணும் என்கிறாhம் செஞ்சோலையின் பெரியம்மா.
குழந்தைகள் ஜனனி அக்காவை பெரியம்மா என்றே அழைக்கிறார்கள். எப்போதும் இவரைச் சுற்றி
குழந்தைகள். அவரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தொங்குகின்றன குழந்தைகள்.

உள்ளே நுழைந்ததும் இருக்கிற பூங்கா குழந்தைகளாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்திருக்கிறது.
அங்கே யாரும் துயரமாயில்லை யாரும் தனித்தில்லை எல்லோரும் வித்pயாசமின்றி இருந்தார்கள்.
கோபம், சின்னதாய் பொறாமை, செல்லப்போட் என்று குறும்பும் கும்மாளமும்
தலைவிரித்தாடின.அவர்களின் உலகம் இயல்பாயிருந்தது. போரின் துயர் களைந்த அவர்களின் அந்தக்
கணங்களை படமாக்கத் தொடங்கினோம் நானும் பகியும்.

குழந்தைகள் எங்களைச் சூழ்ந்து கொண்டு மாமா என்னை எடுங்கோ மாமா என்னை எடுங்கோ என்று
கத்தின. எல்லாக் குழந்தைகளும் சேர்ந்தாற்போல கேட்க திணறிப்பேனொம் நானும் பகியும்.ஏதோ ஒரு
குழந்தையைப் படமெடுத்துத் திரும்புவதற்கிடையில் அடுத்தது கோபித்துக்கொண்டு விழிகளை
உருட்டும் அந்த விழிஉருட்டலைப் படமெடுத்து திரும்ப அடுத்தது என்னை மாமா என்று
வெகுளியாய் சிரிக்கும்.

மாமா மாமா என்ற அவர்களின் அழைப்பில் துளியும் களவில்லை வேசமில்லை தூய்மையான
அவர்களின் அந்த அழைப்பு அதுதான் எனக்குள் அவர்களை நிறைத்தது.
எனக்கு என் சின்னவயசு ஞாபகங்கள் நிறைத்தன என்னைப் படமெடுத்தவர்களையும் நான் மாமா
என்றுதான் அழைத்திருக்கிறேன். ஆனால் அது அம்மா எனக்குச் சொல்லித்தந்தது. அதில் அன்பில்லை
உறவில்லை எந்த உரிமையும் கிடையாது. ஆனால் இவர்கள் நெருககமாக சூழ்ந்து கொண்டு
சொல்கிறார்கள் மாமா மனசை பிசைகிற குரல் அதில் ஏதோ இருக்கிறது.


எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோ
அப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்
எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியை
ஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயத
அக்கா சீ 7 வயது தாய்.மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ நான் திணறிப்போனேன் ஏனோ
தொண்டை வற்றியது.


மாமா நான் இந்த ரோசாப் பூவுக்குப் பக்கததில நிக்கட்டா சீ இது சரியில்லை
திருப்தியில்லாது சிலபேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடீனேன்.

மாமா எங்கட வீட்டுக்கு வாங்கோ அவர்கள் அழைப்புக்குப் பணிந்தபோது பூங்காவை விட்டு கொஞ்சம்
தள்ளியிருந்தது வீடு. ஒரு அளவான கட்டடங்கள் கொண்ட பல தொகுதிகள் 14 பேர் வசிக்கும் பல
வீடுகள் அவர்களது வேலையை அவர்கயே செய்தார்கள் வீடு கூட்டினார்கள்,முத்தம் கூட்டினார்கள்
பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றினார்கள். செஞ்சோலையின் ஒவ்வொரு துளியும் அந்தக் குழந்தைகளின்
அன்பையும் திருப்தியையும் சேர்த்துக்கொண்டு செழித்திருந்தது.

மாலை தேனீர் குடித்து வெளியேறுகையில் எதையோ விட்டு விட்டு வருவது
மாதிரியிருந்தது.திரும்பிப்பார்த்தேன் எம்மைப்பார்த்து கையசைத்த குழந்தைகளின் புன்னகைகளைப்
பத்திரப்படுத்திக்கொண்டேன். வரும் போதுதான் கவனித்தேன் பூங்காவின் ஒரு கரையோரமாக பங்கர்
புதிதாக வெட்டப்பட்டிருக்கிறது.மறுபடியும் யுத்தம் விழுங்கப்போகிறதா?மனம் அலை பாய்கிறது.


திரும்புகின்ற வழிமுழுதும் நெடுநேரமாய் காதுகளில் வழிந்து மனசை நிறைத்தது துளியும்
கலப்படமில்லாத மாமா மாமா என்கிற அன்பின் குரல்.

இந்தக்கட்டுரை அவள்விகடனின் செப்ரெம்பர் மாத இதழில் வெளிவந்துள்ளது இது அவள் விகடனில் வெளிவரக்காரணமாக இருந்த பிரியன் மற்றும் பாலபாரதி இருவருக்கும் நன்றி

Friday, August 11, 2006

அருவம் மீதான நம்பிக்கை


இவர்கள்
அழிவுகளினின்றும்
சிதைவுகளினின்றும்
எதிர்பார்க்கிறார்கள்
கலையும் மேகங்களிடையே
அவன் வருவதாய்
யாவரும் நம்புகின்றனர்.

ஆயிரம் குளம்படி ஓசைகளுடன்
நிறையப் புரவிகளினிடையில்
ஒளிரும் அருவமாய்
அவனை வருணிப்பர்
சிதைவுகளினின்றும்
குருதியூறிய,
வயல்வெளிகனின்றும்
முகாரியினுடைய
எல்லைகளிற்கு -வெளியே
துயரம் கடந்து
எப்போதோ எரியூட்டப்பட்ட
அவர்களின் கனவுகளை
அவன் தங்களிற்கு
பரிசளிப்பனென்றும்
பேரட்சகனாய்
அவனிருப்பதால்
பேரற்புதங்கள் நிகழ்த்துவனென்றும்
எதிர்பார்க்கின்றார்கள்.

ஒவ்வோர் எதிர்பார்த்தலின் போதும்
அவன் ஏமாற்றினாலும்
ஆச்சரியமாய் - இவர்கள்
மறுபடியும் எதிர்பார்ப்பர்.

அவன் வரவை
முன்னிலும் அதிகமாய்...
அழிவுகளோடும்
காத்திருப்பர் -முன்னிலும்
அதிக அற்புதங்களோடான
அவன் வருகையின் மீதான
நம்பிக்கைகளோடு......

த.அகிலன்

Wednesday, August 02, 2006

கனவு வெளி


ஜதார்த்தங்களை
சிலவேளைகளில்
ஜீரணிக்க முடிவதில்லை

மனசின்
வடிவமைப்புக்களிற்கு
வெளியே
தீர்மானிக்கப்படும்
முடிவுகளினால்
நொருங்கும் கனவுகள்

எண்ணங்களிலானது
கனவு வெளி
அவ்வெளியின் மீது
ஏற்றப்பட்டிருக்கிறது
வாழ்வு

சிதைகிற அதற்காய்
அழுகிறது என் மனசு
ஆளறுந்த தெருவின்
ஒற்றைநாயென
பிரக்ஞை அற்று...

வடுக்களின் மீதமர்ந்தும்
மனசு
மிச்சம் வைக்கிறது வாழ்வை
கனவுகளைக் கோர்ப்பதற்காய்

எனினும்

என்
கனவுகளை
கோர்ப்பதற்காய்
எனினும்
என்
கனவுகளை ஓரம் கட்டுகிற
ஜதார்த்தங்களிற்கு
தெரிவதில்லை
கனவுகளின் மீதான
என் மனசின் அக்கறை

த.அகிலன்

Sunday, July 30, 2006

மெளனம்...


எல்லாவற்றையும்
உன்னுள்ளே குமைத்து
ஏன்
நீ
மௌனம் சமைக்கிறாய்.

எல்லாவினாவுதல்களின் போதும்
உன்
புன்னகைக்குள்
எதனை நீ
சொல்லநினைக்கிறாய்

ஒலிகள்
எதுவுமற்ற
உனது மொழி
இரைச்சலை ஜெயிக்குமா?

அடுத்தவனையே
பேசுபொருளாக்கி
எப்போதும்
அலைகிறது உலகம்.

அதனாலும்
மௌனம் நிறைவுதான்
ஆனால்
சலசலப்பே
சங்கீதம் என்றாயிற்று.

ஏது சொல்ல

மௌனம்
ஒரு மின்சாரத்தைப்போல
பாதைகளைப்பற்றிய
அக்கறைகளற்றுப் பயணிக்கும்
வேகமாய்.

எப்போதும்
மொட்டுக்களின்
மௌனம் உடைகையில்
தான் அழகு

நீ
பேசு
கண்ணிவெடிகளின்
நிலத்தில் நடப்பதைப்போல்
சற்றே அசந்தாலும்
காத்துக்கிடக்கிறது இரைச்சல்
உனக்கான வார்த்தைகளை
ஓலமிட..

த.அகிலன்