Thursday, December 27, 2007

சித்தி

01.
வன்னிவிளாங்குளத்திற்கு கிட்டவாக சித்தி கேட்டாள் தம்பி நான் கொஞ்ச தூரம் ஓடுறன் தாங்கோவன். நான் வேண்டாம் சித்தி நான் ஓடுறன் எண்டு சொன்னன். எனக்கு சைக்கிள் ஓடுறதுக்கு கஸ்டாமாகத் தான் இருந்தது. ஆனாலும் சைக்கிள் ஓடுவதை முழுத்தூரமும் யாரிடமும் கொடுக்காமல் ஓடுவது கிட்டத்தட்ட வீரம் மாதிரி. நான் வீரன் என்று பெருமைப்பட்டுக்கொள்வது மாதிரி. அப்போதெல்லாம் சைக்கிள் தான் வாகனம். சைக்கிள்களால் கடக்கமுடியாத் தொலைவென்று ஒன்று இருப்பதாகவும் படவில்லை. சைக்கிளால் எல்லாவற்றையும் கடந்து விடலாம்.

நான் ஓடிக்கொண்டிருப்பது ஒரு அரைச்சைக்கிள். அது நான் ஸ்கொலசிப் பாஸ்பண்ணினதற்காக மாமா வாங்கித்தந்தது. நான் பத்தாமாண்டு படித்துக்கொண்டிருந்தபோதும் அதையேவைத்து ஓடிக்கொண்டிருந்தேன். அந்த சைக்கிள் பார்ப்பதற்கு வித்தியாசமாக ஒரு ஒட்டகச் சிவிங்கியைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். சைக்கில் சீற்றை உயர்த்து உயர்த்தென்று உயர்த்தி அப்பவும் கால் கான்டிலில் முட்ட, பிறகு நாதன் கராச்சில் சொல்லி ஒரு வட்ட இரும்புக்குழாய் வைச்சும் உயர்த்தியிருக்கும் சைக்கிள். என் உயரம் அவ்வளவு அசாதரணமானதொன்றும் அல்ல பதினைந்து வயதுக்கு கொஞ்சம் கூடத்தான். என்றாலும் கவலைப்படக்கூடிய ஒன்றல்ல. ஆனால் சைக்கிளின் உயரம் கவலைப்படவேண்டிய ஒன்று. நிச்சயமாக ஒரு பத்தாம் வகுப்பு படிக்கிற பெடியன் ஒடக்கூடிய சைக்கிள் அது அல்ல. ஆனால் நான் அந்தச்சைக்கிளில் தான் நாங்கள் கிளிநொச்சியில் இருந்து இடம்பெயர்ந்து வந்தபோது. தம்பியை முன்னுக்கிருந்து பெடல்போடச் சொல்லிவிட்டு கிளிநொச்சியில் இருந்து கனகராயன் குளத்துக்கு பின்னால் ஒரு மூட்டை சாமானுடன் வந்தேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். கிளிநொச்சியிலிருந்து கனகராயன் குளத்துக்கு வருமட்டும் அந்தச் சைக்கிள் ஒருக்காக்கூட காத்துப்போகவில்லை. நான் மட்டுமல்ல எங்கட குடும்பத்தில ஏலாதாக்கள் தவிர மிச்சாக்கள் எல்லாரும் சைக்கிளில்தான் வந்தோம். கனகராயன் குளத்திலிருந்து இடம்பெயர்ந்து துணுக்காய்க்கு வந்தபோதும் நான் அதே சைக்கிளைத்தான் ஓடிக்கொண்டு வந்தேன். பிறகு திரும்ப கிளிநொச்சிக்கு நாங்கள் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து திரும்பியபோதும் சைக்கிள்தான். இப்படி எல்லாமே சைக்கிள் தான். ஆனால் சைக்கிளைத்தான் நான் மாற்றிவிட்டிருந்தேன். கிளிநொச்சியிலிருந்து போகும் போது ஓடிக்கொண்டு போன அரைச்சைக்கிளை ஒரு மாதிரி லேடீஸ் சைக்கிளாக மாற்றிவிட்டிருந்தேன். அதைத் தவிர போகும் போதுஇருந்ததிற்கும் வரும்போது இருந்ததற்கும் பெரிய மண்ணாங்கட்டி மாறுதல்களெதுவும் இருந்ததில்லை.

கனகராயன்குளத்திலிருந்து வரும்போது நான்கு பெரிய ஏத்தங்களையும் இரண்டு சின்ன ஏத்தங்களையும் கடந்து கொஞ்ச தூரம் வந்தால் மாங்குளம் சந்திவரும். மாங்குளம் சந்தியில் நிண்டு இடது கைப்பக்கம் பாக்குமாப்போல திரும்பி உழக்கினால் மல்லாவிக்கும் துணுக்காய்க்கும் உயிலங்குளத்துக்கும் ஸ்கந்தபுரத்துக்கும் போகலாம். சித்தி ஏத்தங்கங்கள் வரும்போதெல்லாம் சைக்கிளில் இருந்து சொல்லாமல் கொள்ளாமல் குதித்து இறங்கிவிடுவாள். அவளுக்கு நான் எழும்பி எழும்பிக் கஸ்டப்பட்டு உழக்குவது காணச்சகியாது. அப்படி ஒருக்கா கனகராயன் குளத்தில இருந்து மல்லாவிக்கு போகிற வழியிலதான் சித்தி கேட்டாள் தம்பி நான் ஓடுறன் எண்டு. ஆனால் சித்தி என்னைவிடவும் பயங்கரக்கட்டை என்னுடைய சைக்கிள் சீற்றோ ஓட்டகத்தின் திமில் மாதிரி கரியலுக்கும்,பாருக்கும் சம்பந்தமே இல்லை எனுமாப்போல தனித்து எழும்பியிருக்கிறது. ஆக அதைச்சித்தி ஓடமுடியாது. நான்தான் தொடர்ந்து ஓடினேன். தண்ணிப்பானைகளைக் கண்டஇடமெல்லாம் நிண்டு தண்ணிகுடிச்சோம். அப்போதெல்லாம் சித்தி எனக்கு வெளிநாட்டுக்குப்போய்விடுகிற பலன் இருக்கெண்டு சொல்லுவாள். வளர்ந்தாப்பிறகு நாதன் மாமா மாதிரி பெரிய மோட்டசைக்கிள் ஒண்டு எடுத்து ஓடவேண்டும். இப்படிச் சைக்கிள் ஓடித்திரியப்படாது என்கிற கனவு எனக்கு இருந்தது. சித்தி அதுக்கிடையில் நான் வெளிநாட்டுக்குப்போய்விடவேண்டும் என்று நினைத்தாள். சித்தியுடன் போகிற தூரச்சைக்கிள் பயணங்களிலெல்லாம் சித்தி கதைசொல்லுவாள் அநேகமாக படக்கதைகள் மூண்டு மணித்தியாலப்படத்தை கிட்டத்தட்ட 2 மணித்தியாலம் சொல்லுவாள். அப்படிச் சித்தி எனக்குச் சொன்ன கதைகள் எக்கச்சக்கம் நிறையக்கதைகள் சொல்லியிருக்கிறாள். அப்போதெல்லாம் சினிமாப்படங்கள் தடைசெய்யப்பட்டிருந்தன என்பதால் சித்தி வாயாலயே எனக்கு படம் காட்டிக்கொண்டிருந்தாள். அநேகமாக சித்தி சொல்கிற கதைகள் எல்லாம் பெண்கள் சம்பந்தப்பட்ட கதைகளாயிருக்கும் ஆண்கள் பெண்களை காதலித்து ஏமாற்றிவிட்டு போகிறகதைகள் பிறகு பெண்கள் அதைப்போராடி ஜெயிக்கிறமாதிரிக் கதைகள். எனக்கு நல்ல நினைவிருக்கிறது சித்தி எனக்கு நீயா படத்தின் கதையைச் சொன்னது. மாங்குளத்திலிருந்து திரும்பினாப்பிறகு சித்தி அந்தக்கதையை சொல்லத் தொடங்கினாள் வன்னிவிளாங்குளத்து அம்மன் கோயிலடியைக்கடந்ததும் சைக்கிளுக்குள் ஒரு பாம்பு முன்சில்லுக்க சிக்கித் சீறித் தப்பி ஓடியது. எனக்கு அதுக்கு மேல வேண்டாம் சித்தி வேறகதை சொல்லுங்க எண்டு சொல்லிவிட்டேன். பிறகு இப்போது யோசித்துப்பார்க்கிறேன் சித்தி அந்தக்கதைகளை சொல்லும்போதான உளவியலை. சித்தி ஏமாற்றப்பட்டிருந்தாள் ஒரு காதலால். அந்த ஏமாற்றம் அதை அடைவதற்கான வழிமுறைகள் உத்திகள் சித்தியைச் சாகும்வரைக்கும் வழிநடத்திக்கொண்டிருந்தன. அவளது வாழ்க்கை கடைசிவரைக்கும் போராட்டமாகவே கழிந்தது.

02.
அவளது சகோதரிகள் எல்லோருக்கும் அவள் பிடிவாதக்காரி,சகோதரர்கள் எல்லாருக்கும் அவள் அடங்காப்பிடாரி. ஆனால் அவளது அம்மாவிற்குமட்டும் தான் அவள் கடைக்குட்டி. சித்தியின் முகம் எப்போதும் எதையோ தீர்க்கமாக சிந்தித்த படியே இருக்கும். மனிதர்களின் உள்ளே என்ன ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை எல்லாரிடத்திலும் கண்டறியமுடியாது. சித்தியிடமும் கண்டறிவது சிரமம் தான். சிந்தனைகள் இவளது முகத்தில் பிரதிபலிப்பதில்லை. சலனமற்ற தண்ணீர்போல இருக்கும் முகம் அவளுடையது. அவளை ஒரு இறுகிக்கிடக்கிற பாறையைப்போல என்று நான் உணர்ந்திருக்கிறேன். அவளது புன்னகைகள் செத்துப்போய் விட்ட நந்தியாவட்டைப்பூப்போல இருக்கும். அவள் சில சம்பிரதாயங்களிற்காக வாழ்ந்து கொண்டிருந்தாள். கேள்விகள் அவளைத் துளைத்த காலம் என்றொன்றிருந்தது. கேள்விகள் அவளைச் சுற்றிலும் கேள்விகள். விடையளித்துத் தீராதகேள்விகள். அவளது விடைகளுக்குள்ளிருந்தும் முளைக்கிற கேள்விகள். கேள்விகள் ஆயிரம் கரங்கொண்டு இறுக்கத்தொடங்குகையில் அவள் ஆக்ரோசமாய் உதறுவாள். மொய்த்துக்கிடக்கும் பிள்ளையார் எறும்புகளை வழித்து எறிவது போல சித்தி கேள்விகளை உதறுவாள். எனக்கு யாரும்; தேவையில்லை என்பதுமாப்போல உதறுவாள். கொஞ்ச நாளில் கேள்விகள் சலித்துப்போயின. யாரும் அவளைக் கேள்விகளோடு நெருங்குவதேயில்லை அவர்களும் சலித்துப்போய்விட்டார்கள்.

ஆனால் அம்மம்மா எப்போதுமே அவளைக் கேள்விகளெதுவும் கேட்பதில்லை. ஆனால் எனக்குத் தெரியும் எனக்குள் நிறையக் கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அந்தச் சலனமற்ற முகத்தின் தோலினடியில் உறைந்திருக்கும் கொழுப்பைப்போல அவளிடம் கேள்விகள் இருந்தன. சித்தி கடைசி வரைக்கும் அப்படியே இருந்தாள். அண்ணா தம்பி அக்கா எல்லாவற்றையும் கடந்து,வெறுத்து தனது கனவுகளை ஜெயித்துவிடவேண்டும் என்பதில் ஆக்ரோசமாய் இருந்தாள். எனக்கு சித்தியிடம் புரியாமலிருந்ததே இதுதான். யாரெல்லாம் தன்னை நேசிக்கிறார்களோ அவர்களை சித்தி ஓரங்கட்டினாள். ஆனால் யார் தன்னைப் புறக்கணித்தபடி விலகி ஓடினானோ அவனுக்குச் சித்தி இன்னமும் நித்திய காதலியாய் இருந்தாள். அவன் இனிமேல் கிடைக்கவே மாட்டான் என்பதை அறிந்திருந்தும் அறியாதவள் போல அவனைத் துரத்திக்கொண்டேயிருந்தாள்.

அவளது காதல் புரியவேயில்லை எனக்கு. அது அறிவு நிலைக்கு முற்றிலும் புறம்பானது என்கிற நினைப்பு எனக்குத் தோன்றியது. சொல்லப்போனால் அது காதலே அல்ல வெறும் காமம். அவளது பதின்மங்களில் நிகழ்ந்து போன முதல் தொடுகை அது. ஒரு தாமரைக்குளத்தில் குளித்துப்போன எருமைமாட்டுக்காக குளம் காத்துக்கொண்டேயிருக்கிறது என்றுதோன்றும். இந்தச் சிக்கலான காதல் எனக்கு ஆச்சரியமூட்டியது அவனைப்பொறுத்தவரையில் அது காதலோ அல்ல பசி உடம்புப்பசி அவளைக் கல்யாணம் கட்டுவதாகச் சொன்னால் தான் கிடைக்குமென்றால் சொல்லிவிட்டுப்போவோமே என்னவாகும் என்கிறமாதிரியான எண்ணம் அவனுடையது.அவனுக்கு மனசுக்கும் உடம்புக்குமான தூரங்கள் தெரியவேயில்லை. ஆனால் சித்திக்கு அது காதல். என்றைக்கும் தீராத காதல். அவ்வளவுதான் எருமைமாடு குளித்துப்பின் கடந்து போயிற்று. ஆனால் குளம்தான் காத்துக்கொண்டேயிருந்தது. நதியின் தடங்கள் தீர்ந்து நீர்வற்றிப்போன பின்பும் குளம் காத்துக்கொண்டிருந்தது.

அவளது பருவத்தின் கதவுகளைச் மயக்கும் சொற்கள் மூலாமாகத்திறந்து உள்நுழைந்தவனை, அவனது வருகையை அவள் இன்னமும் காதலென்று நம்பினாள். அது உண்மையான அன்பென்று நம்பினாள். இருபது வருடங்களிற்கும் மேலாய் அந்தப்பதின்மத்தின் நினைவுகள் அவளிடம் ஓடிக்கொண்டிருப்பது அதுவும் அதுதான் வாழ்க்கை என்று எந்தவித சங்கடங்களுமின்றி பின்தொடர்ந்து கொண்டிருப்பதுதான் ஆச்சரியம். அம்மம்மா அவளோடு கூடவேயிருந்தாள் எதையும் அம்மம்மா கேட்பதுமில்லை, அபிப்பிராயம் சொல்வதுமில்லை. அம்மம்மா கோயில் வைத்திருந்தாள் துர்க்கை அம்மன் கோயில். கொஞ்சம் கோபமான சாமிதான். ஆனால் சித்தி துர்க்கை அம்மனைக் கும்பிடுவதில்லை. எப்பவாவது கோயிலில் பொங்கல் பொங்கும்போது பூசைக்கு அம்மம்மாட கோயிலில் சித்தி தேவாரம் மட்டும் படிப்பாள். அது அவள் எல்லாநாட்களும் நான் அறிந்த வரையில் ஒரே தேவாரத்தைத்தான் படித்துக்கொண்டிருந்தாள். அவள் தேவாரம் படிக்கும் போதெல்லாம் ஒரு விருப்பின்மை அதில் ஒளிந்துகொண்டிருந்ததோ என்று தோன்றும் எனக்கு. ஆனால் அவளுக்கு நல்ல குரல் வளம் இருந்தது கணீரென்ற குரல். அவள் வளவுக்குள்ள இருந்த துர்க்கை அம்மனைக் கும்பிடவில்லை ஆனால் அவள் காளியைக் கும்பிட்டாள் சிவந்த கண்களும் தொங்கியநாக்கும் மண்டையோட்டு மாலையும் கொண்ட தெய்வம் காளி. துர்க்கை அம்மனைக் காட்டிலும் ஆக்ரோசமான தெய்வம். சித்தி ஏன் வீட்டிலிருக்கும் தெய்வத்தை விட்டு விட்டு காளியிடம் வேண்டுகிறாள் என்பது எனக்கு விளங்காமலிருந்தது. பிறகு என் பதினெட்டு வயசில் சித்தி என்னிடம் சொல்லுகிற வரை.

காதல் அறிவுபூர்மானதில்லை என்பதை நான் முதலில் சித்தியின் சொற்களில் இருந்துதான் கண்டடைந்து கொண்டேன். அது சில விசித்திரமான நம்பிக்கைகளும் சிந்தனைக்கோணங்களும் கொண்டது. சித்தி காளியிடம் அல்ல காளி கோயில் வைத்திருக்கும் செட்டிச்சியிடம் சரணடைந்திருந்தாள். சித்தியும் நானும் ஒருக்கா மல்லாவியில் இருந்து ஸ்கந்தபுரம்போகிற வழியில் சித்தி என்னிடம் மிக ரகசியமான குரலில் கேட்டாள். தம்பி நான் ஒரு இடத்திற்கு கூட்டிக்ககொண்டு போவன் ஆனா அம்மாக்களிற்கு இந்த விசயம் தெரியக்கூடாது. நான் சரியெண்டு சொன்னேன் சித்தி அதைச்சொல்லியிருக்கவே தேவையில்லை சும்மாவே நான் வீட்டில் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை. அன்றைக்குத்தான் நான் முதல் முதலில் செட்டிச்சியின் கோயிலுக்குப் போனேன். செட்டிச்சி தான் செய்வினை சூனியம் செய்வதிலெல்லாம் வல்லவள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். முகத்தில் மந்திரவாதிகளிற்கெல்லாம் இருக்கிற உக்கிரம். சிவந்த கண்கள், ஆளுயுரக் காளிபடம் என்று அந்த கோயிலின் சூழலே அச்சமூட்டுவதாயிருக்கும். சித்திக்கு அவளது காதலனை அடைவதற்கு கடந்த இருபது வருடங்களாக அவா செய்வினை செய்துகொண்டிருக்கிறாவாம். எனக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் மனசுக்குள் செய்விiனை சூனியத்தின் மீதான பயம் ஒரு ஓரத்தில் இருப்பதால் அடக்கிக்கொண்டேன். சரி இவ்வளவு காலமாக காளி ஏன் சித்திக்கு ஒண்டும் செய்யவில்லை என்று நான் செட்டிஆச்சியிடம் கேட்டேன். அதற்கு ஒரு பேச்சிரிப்பு சிரித்தா அவா. ஆத்தாக்கு விரும்பம்தான் தன்குழந்தைக்கு உதவவேண்டும் என்பது அவளுக்கு இஸ்டம்தான். ஆனா அவா களத்தில நிக்கிறா எண்டா? நான் எந்தக்களத்தில எண்டன்? செட்டிச்சி என்னை உத்துப்பாத்தா? போர்க்களத்திலயடா போர்க்களத்தில கொஞ்சம் உறுக்கிச்சொன்னா. போர்க்களத்தில நடக்கிறது மக்களோட பிரச்சினை. நாட்டுப்பிரச்சினை. இது ஆத்தாடமகளோட பிரச்சினை வீட்டுப்பிரச்சினை எதுமுக்கியம்? நாட்டுப்பிரச்சினைதானே அது முடிய அம்மா வந்து தன்ர மகளின்ர பிரச்சினையைத் தீர்த்து வைப்பா இதைச்சொல்லி முடிய செட்டிச்சி குரல் கம்மி மயங்கிவிழுந்துவிட்டார். நான் அப்பநாட்டுப்பிரச்சினை தீர்ந்ததத்தான் சித்தியின் பிரச்சினையும்தீருமோ எண்டு கேக்கநினைத்த கேள்வியை மனசுக்குள்ளேயே அடக்கிக்கொள்ள வேண்டியதாகிவிட்டது. அவாட உபதேச மொழிகளை பரவசத்தோடு கேட்டுக்கொண்டிருந்த சித்தி அவாவைத் தூக்கித் தண்ணிதெளித்து எழுப்பிவிட்டா. எனக்கு செட்டிச்சியின் தொழில் கனயோராக நடப்பதன் சூக்குமம் விளங்கிச்சுது. சித்தி கோயிலை விட்டு வெளியில வந்தோண்ண என்னிடம் கொஞ்சம் கோபமாகவே சொன்னாள் தம்பி தெய்வங்களோட விவாதிக்கக் கூடாது எண்டு. எனக்கு செட்டிச்சி குறைந்தபட்ச தொழில் நேர்மையுடன் இருப்பதாயும் பட்டது. சித்தியின் பிரச்சினை தீராது என்பதை சூசகமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறா அவா என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அதை அப்போதே சித்தியிடம் சொல்லி அவள் கோபத்தை சம்பாதிக்க விரும்பவில்லை. நான் எதுவும் சொல்லவில்லை பேசாமல் வந்தேன்.

அதற்குப்பிறகு சித்தி அம்மாவோடு சண்டைபோட்டுக்கொண்டு போய்விட்டாள். சண்டைபிடிப்பதற்கு எளிய காரணங்கள். கறிக்கு உப்புக்கூடிவிட்டது என்பதுமாதிரியான காரணங்கள். உண்மையைச் சொன்னால் சித்திக்கு ஒரு இடத்தில் கனநாளைக்கு இருக்கமுடியாது அது அவளைச் சங்கடப்படுத்தும் தான் கல்யாணம் கட்டாமல் தனது அக்காக்களின் பிள்ளைகளிற்கு சமைத்துப் போடுவது என்பதை அவள் வெறுத்தாள். அது தனது இயலாமையைச் சொல்வதாக மற்றவர்களில் தான் தங்கி வாழ்வதாக அவள் நினைத்தாள். அது தவிரவும் மலர் இப்ப என்ன இங்கயோ? என்கிற மாதிரியான விருந்தினர்களின் இரக்கம் பொதிந்த கேள்விகளிற்கு பதில் சொல்வதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கவிரும்பினாள். அதனால் அவள் யார்வீட்டிலும் அதிகநாள் தங்குவதில்லை. இடம்பெயர்வுக்கு முதல் சித்தி அம்மம்மாவுடன் திருநகரில் இருந்ததால் பிரச்சினையில்லை இடப்பெயர்வுக்கு பிறகுதான் இந்தச்சிக்கல் எங்கேயிருப்பது என்கிற சிக்கல். சித்தி அம்மம்மாவையும் கூட்டிக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். ஒரு சில நாட்கள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பதே தெரியாது. பெரியமாமா அவர்களிற்கு செலவுக்கு காசுகொடுப்பதற்காக அவர்களைத் தேடித்தேடிக்கண்டு பிடித்துக்கொண்டிருந்தார். ஆனால் சித்தி இந்தப்பழக்கத்தை விடவேயில்லை. கொஞ்சநாள் எங்கேயும் சொல்லாமல்கொள்ளாமல் போய்விடுவாள் பிறகு திடீரென்று முளைத்து எதுவுமே நடக்காதது போல நாங்கள் பள்ளிக்கூடத்தால் வரும்போது பெரியம்மாவுக்கு வெங்காயம் உடைச்சுக்கொடுத்துக்கொண்டிருப்பாள். பெரியம்மா இவள் அலைகையில் எல்லாம் திட்டுவாள் ஆட்டக்காரி அம்மாவையும் கூட்டிக்கொண்டு திரியுறாள் ஒரு இடத்தில இருக்கிறாளா? அது இதெண்டு திட்டு திட்டென்று திட்டுவா. சித்தி அம்மம்மாவுக்கு செட்டிச்சியைக்கொண்டு செய்வினை செய்து மனிசியைத் தன்ர இஸ்டத்திற்கு ஆட்டுவிக்கிறாள் என்றெல்லாம் பேசுவா. ஆனா சித்தி திடிரென்று திரும்பி வந்ததும் எதுவுமே பேசாமல் இருந்து விடுவா. அதனால்தானோ என்னவோ சித்தியும் இந்தப்பழக்கத்தை விட்டுவிடாமல் இருந்தாள்.

03.
திடீரென்று ஒருநாள் நான் ரியூசன் விட்டு வரும்போது. அம்மம்மா வீட்டு முற்றத்தில் இருந்தாள். எனக்கு சித்தி இல்லாமல் அம்மம்மாவை காண்பது பெரிய விசயமாக இருந்தது. அம்மம்மாவின் சோடாபுட்டிக்கண்ணாடிக்குள்ளால் அவளது கண்களில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல் அவளது கண்கள் உலக உருண்டைபோல தோற்றம் காட்டியதால் நான் அம்மாவைக் கேட்கலாம் எண்டு நினைத்து போனேன். சித்தி ஆஸ்பத்திரீலயாம் அம்மம்மாவை ஆரோ கொண்டு வந்து விட்டுப்போகினம் எண்டு தங்கச்சி சொன்னாள். நான் சைக்கிள்ள ஆஸ்பத்திரிக்கு போனன். சித்தியைப் பாம்பு கடிச்சுட்டுதெண்டு சொன்னாங்கள். ஆனா உறுதியா என்ன கடிச்சதெண்டு சொல்ல முடியாம இருக்கிறதாய்ப் பட்டது. சித்தியை ஏதோ கடித்திருக்கிறது. இடப்பெயர்வுக்கு பிறகு எல்லாருடைய வாழ்க்கையும் காடுகளுக்குள் என்றுதான் ஆகிவிட்டது ஆனால் சித்தி இந்தமுறை போயிருந்ததோ பெருங்காடு ஒரு ஆயுர்வேத வைத்தியர் கூட இல்லாத காட்டுக்கிராமம். ஏதோ கடிக்க அவளை பார்வை பாக்கிற பரியாரியிட்ட கூட்டிக்கொண்டு போவதற்கே ஆட்களைத்தேடி அலைந்து கடைசியில் பரியாரியிடம் கொண்டு போயிருக்கிறார்கள். அவரது கைங்கரியங்கள் தோற்றபிறகு தான் அக்கராயன் ஆஸபத்திரிக்கு அயர் மோட்டசைக்கிளில் சித்தியைக்கொண்டு வந்திருக்கிறார்கள். நல்லவேளை சித்திக்கு விசகடி என்பதால் ஒரு கட்டில் கிடைத்தது. மற்றும்படி அங்கே கட்டில் கிடைப்பது அபூர்வம். இப்படி விசகடிக்கேசுக்கும் முதலைவாயில் ஆப்பட்டு தப்பிவந்த கேசுகளுக்கும், அல்லது செல்லடி கிபிரடியில காயப்பட்டு வாற கேசுகளிற்கம் கட்டில் நிச்சயம். விசகடிக்காரனெண்டாலும் தப்புறதுக்கான சான்ஸ் நிறையக்கிடக்கு. ஆனா முதலையிட்ட மாட்டினா கதி குளத்துச்சகதிதான்.

ஒட்டுமொத்தமா கிளிநொச்சியில இருந்த சனம்முழுக்க இடம்பெயர்ந்து வந்து அக்காராயனையும்,ஸ்கந்தபுரத்தையும் தீடீர் நகரமாக்கினார்கள். அதுகளோ தாங்களுண்டு தங்கடவிவசாயம் உண்டு எண்டிருந்த விவசாயக்கிராமம். பக்கத்திலயே யானைகள் வசிக்கும் காடு. ஆடுமாடுகள் பின்னேரம் நாலுமணியில் இருந்து றோட்டில படுக்கலாம் யாரும் கேட்பாருமில்லை றோட்டால போவாருமில்லை. கிளிநொச்சிக்கு ஆமி எப்படி திமுதிமுவெண்டு வந்தானோ? அதே மாதிரி இந்தச் சுற்றுவட்டாரக் கிராமங்களிற்கு சனங்கள் திமுதிமுவெண்டு வந்தார்கள். அந்த கிராமத்து வாசிகளின் மனங்கள் அநேகமாக அவர்களுடைய காணிகளைப்போலவே பெரிசாக இருந்தன. அவர்கள் தங்கள் காணிகளில் இவர்கள் தங்க இடம்கொடுத்தார்கள். ஆனால் ஆடுமாடுகளும் பக்கத்து காடுகளில் வசித்த யானைகளும்தான் பாவம். இந்த சமநிலை மாற்றத்தை அவைகளால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இந்தப்புதிய மண்பட்டினத்தின் ஆரம்ப நாட்களில் யானைஅடித்து நாள்தோறும் ஆட்கள் செத்தார்கள். ஆடுமாடுகள் வயல்களில் தூங்கின. ஊர்க்கிணறுகளில் நீண்ட வரிசைக்கு சனம் நிண்டது. கிணறுகள் போதவில்லை தண்ணீர் இல்லை. அக்கராயன் குளத்து முதலைகளுக்கு வரலாறுகாணாத வேட்டை. அங்கங்கே ஓரமாக குளித்துக்கொண்டிருக்கிறவரை இழுத்துப்போய்விடும். அப்போதெல்லாம் முதலை மனிதர்களைச் சாப்பிடுகிற விதம்குறித்து வாய்மொழி மூலமான ஆராய்ச்சிக்கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. அதைப்போலவே முதலையிடமிருந்து தப்பும் வழிகளும் சொல்லப்பட்டு வந்தன. முதலை பிடிச்சிழுக்கும் போது அய்யோ என்று கத்தவே வராது வெறும் காத்துத்தான் வரும். இதுக்குள்ள முதலையின்ர வயித்தை தடவவருமே? குளத்திலும் அவ்வளவு காலமும் இல்லாமல் நிறைய விருந்தினர்கள் வந்தார்கள். குளத்தில குளிக்கேக்க முதலை வருதோ இல்லையோ வட்டக்கடி,சொறி, சிரங்கு இவைகள் கட்டாயம் வரும். சனமெண்டால் அவ்வளவு சனம். அநேகமாக எல்லாரும் அந்தக்குளத்தைத்தான் எல்லாரும் நம்பியிருப்பதால் அநேகமாக ஒரு நோய் வந்தால் எல்லாருக்கும் வருவது நிச்சயமம் அதனால் ஆஸ்பத்திரி நிரம்பி வழியும். ஆனால் மருந்துகள் தான் இருக்காது. சனங்கள் விடியப்புறம் இரண்டு மூன்று மணிக்கே ஆஸ்பத்திரிக்கு வந்துலைனில் நிக்கத்தொடங்குவார்கள் சரியாக விடிவதற்கிடையில் அப்படியே ஆஸ்பத்திரி நிரம்பி நோயாளிகளில் தீனக்குரல் அந்தப்பிராந்தியத்தையே நிரப்பும். அநேகமாக எல்லா வருத்தங்களிற்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி மருந்தையே கொடுத்துக்கொண்டிருந்தார்கள். நோயாளிகளை மருந்துகளை விட நாங்களும் மருந்தெடுத்தோம் என்கிற நம்பிக்கைதான் காப்பாற்றிக்கொண்டிருந்தது. மலேரியா வராத ஆள் ஒருத்தன் அந்தக்காலத்தில் வன்னிக்குள்ள இருந்ததாய் எவராவது சொன்னால் நான் அரைமொட்டை அடிக்கத் தயார். மூளைக்காய்ச்சல் நெருப்புக்காய்ச்சல் இப்படி டிசைன் டிசைனான காய்ச்சல்கள் வந்தன. நெருப்புக்காய்ச்சல் வந்து அங்க ஒருத்தன் செத்தானாம். மூளைக்காய்ச்சல் வந்து இங்க ஒரு பள்ளிக்கூடப்பிள்ளை செத்துட்டுதாம். இன்னொருத்தருக்கு விசராக்கினதாம் எண்டதையெல்லாம் நீங்கள் கேட்டு திகைச்சுப்போய் நிக்கத்தேவையில்லை அதுஅங்க சர்வசாதாரணம். வயித்தாலடி ஒரு ஊரில இருக்கிற கந்தசாமி அண்ணையிட கடைசிப்பெட்டைக்கு வந்தாக்காணும் அந்த ஊரில இருக்கிற வயசுபோன கிழவர் வரைக்கும் ஒரு தர்மஅடி அடிச்சுத்தான் நிப்பாட்டும். அந்த அடியோட சேத்து கிழவரின் உயிர்போகாம இருக்கிறது அவற்ற அதிஸ்டத்தைப்பொறுத்து.

சித்தி இப்ப பேசமுடியாமல் கிடந்தாள். அவளை என்ன கடித்தது என்பது அவளுக்கே தெரியவில்லை என்பதைவிட அவளுக்கு தெரியுமா என்பது யாருக்கும் தெரியாது அவளுக்கு நினைவு திரும்பவில்லை. பாம்பாக இருக்கலாம் என்று தீர்மானித்து சிகிச்சை அளித்தார்கள். திடீரென்று விசகடிக்கு குடுக்கிற மருந்து ஆஸ்பத்திரியில் முடிஞ்சு விட்டது எண்டு சொன்னார்கள். அம்மா பெரியம்மா எல்லாரும் அழத்தொடங்கிவிட்டார்கள். எல்லாம் கடந்து சித்தி மருந்தில்லாமச் சாகப்போறாளோ என்று எல்லாருக்கும் பயம். ஆஸ்பத்திரியில அந்த மருந்து ஜெயபுரம் ஆஸ்பத்திரியில இருக்குது எண்டு சொல்லிச்சினம். ஆஸ்பத்திரிக்காரரிட்ட ஒரு கடிதத்தை வாங்கிக்கொண்டு ஜெயபுரத்திற்கு அயர் மோட்டசைக்கிளில இரவு எட்டுமணிக்கு ஆனைவிழுந்தான் யானைகளுக்கெல்லாம் பயந்து கொண்டிருக்காமல் போனேன். ஆனையடிக்காமல் திரும்பிவந்தால் ஆஸ்பத்திரி வாசலில் இருக்கிற பிள்ளையார் கோவிலுக்கு ஊதுபத்தி கொழுத்துறதா வேண்டிக்கொண்டேன். கற்பூரம் அப்ப தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜெயபுரத்தில் அந்த மருந்து இருக்கவில்லை. நாங்கள் திரும்பி வரும்போது மோட்டார் சைக்கிள்ள ஆஸ்பத்திரிக்கு கிட்ட இருக்கிற அம்பலப்பெருமாள் சந்தி வரும்வரைக்கும் மோட்டசைக்கிள் சில்லு தரையில் முட்டிக்கொண்டிருந்ததா என்பதை என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியாது. பெரிய நீட்டுப்பலகை வைத்துக்கட்டப்பட்டு பின்இருக்கையில் கிட்டத்தட்ட சீற்றில் குண்டியை முட்டியும் முட்டாமலும் வைத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் திரும்பி வந்து அங்க இல்லை என்று சொன்னோம் மல்லாவியில் இருந்தாலும் இருக்கும் என்றார்கள். எவ்வளவு வேகமாக் கொண்டுவரமுடியமோ அவ்வளவு வேகமாக்கொண்டு வாங்கோ எண்டு சொன்னார்கள். நாங்கள் மல்லாவிக்கு வெளிக்கிடும் போது அம்மாவும் மாமான்ர மகளும் செஞ்சிலுவைச் சங்கத்துக்கு போனார்கள் அவர்கள் ஏதாவது அம்புலன்ஸ் ஏற்பாடு செய்து தருவார்களா? வவுனியாவுக்கு கொண்டுபோவதற்கு என்று கேட்பதற்கு . அவர்கள் வழக்கம்போலவே கொஞ்சம் இரக்கப்பட்டுவிட்டு முடியாதென்று சொல்லிவிட்டார்கள்.

பெரியமாமாவும் வவுனியாவுக்கு போனவர் வரமுடியாமல் அங்கேயே மாட்டுப்பட்டு விட்டார். சண்டை பாதைகள் பூட்டப்பட்டு விட்டன. பொருளாதாரத்தடை, மருந்துக்கு தடை, மனிதர்கள் போவரத் தடை தடையற்ற விசயங்கள் குறைவு. நாங்கள் இப்போதுதான் மருந்து பாதுகாக்கிற ஐஸ் பெட்டியைக் காவிக்கொண்டு ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாக சுத்தவில்லை. இடம்பெயர முதலும் இதே கதிதான் வீட்ட நிக்கிற நாய்க்கு விசர் பிடித்து வீட்டில எல்லாருக்கும் பாவம் புண்ணியம் பாக்காம கடிச்சப்போட்டு மாமி தண்ணிய ஊத்த செத்துப்போச்சு. மருந்தெடுக்கபோகேக்க எங்கள விட நாயில தான் கூட அக்கறையோட கேள்விகள் கேட்டினம் நாய் செத்துப்போச்செண்டோண்ண தொப்புளைச் சுத்தி ஊசி தொடர்ந்து 14 நாளைக்கு. 3வது நாளே மருந்து முடிஞ்சுது ஆஸ்பத்திரியில. அப்பயும் பெரியமாமா இப்படித்தான் அயர் மோட்டசைக்கிள்ள ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா அலைஞ்சு மருந்து கொண்டு வந்தவர்.அண்டைக்கு மட்டும் மருந்து இருந்திருந்திருக்காட்டி செல்லையற்ற பரம்பரையில் மூண்டிலொண்டு இல்லை. இப்ப மாமா வவுனியாவுக்குள்ள மாட்டுப்பட்டதால நான். சித்திக்கு மருந்து தேடி அலையுறன். ஆனா ஒண்டு மட்டும் நிச்சயம் இங்க பாம்புகடிச்சாலும் மருந்தில்ல நாய்கடிச்சாலும் மருந்தில்லை. மல்லாவியில் மருந்து இருக்கிறதெண்டு சொல்லிச்சினம் நாங்கள் வாங்கிக்கொண்டு கோட்டைகட்டின குளத்திலயும், தென்னியங்குளத்திலயும் இருக்கிற யானைகளின் மீதான நம்பிக்கையில் மறுபடியும் பறந்து வந்தோம். மோட்டசைக்கில் எத்தனை பள்ளத்தில் விழுந்ததெண்டு கணக்கேயில்லை ஏனெண்டா றோட்டே பள்ளம் தானே. நாங்கள் மல்லாவியில் இருந்து இளைக்க இளைக்க ஓடிவந்தபோது. சித்தியின் கட்டிலை காம்பிறாவை நோக்கி உருட்டிக்கொண்டு போய்கொண்டிருந்தார்கள். கடைசியில் சித்தி மருந்தில்லாமல் செத்துவிட்டாள். எனக்கு எங்களை யானை அடித்திருக்கக் கூடாதா எண்டிருந்தது.


நான் அப்பா செத்தாப்பிறகு இரண்டாவது தடவையாக வீட்டிலேயே ஒரு மரணத்தை பார்த்தேன். அப்பா சாகும் போது எனக்கு 6 வயசு மறுபடியும் பதினெட்டு வயசில் ஒரு சாவு. இந்த இரண்டு சாவுகளுக்குமே யுத்தம் ஒருவகையில் காரணம். மரணத்தின் துயரநெடி ஊர்முழுதும் விரவிக்கிடக்கிறபோது எங்களது வீட்டில் என்ன சுகந்தமா வீசும். காலம் அநியாயமாகக் ஒருத்தியைக் கொன்றுவிட்டது. எனக்கு சித்தி சாகும்போது என்ன நினைத்திருப்பாள் என்று ஓடியது. அம்மம்மாவின் துர்க்கை அம்மனைத்தான் விடு அவளது காளியாவது காப்பாற்றியிருக்கவேண்டாமா அவளை. எனக்கு அப்பாவின் மரணம் உடனடியான துக்கங்களெதையும் தரவில்லை துக்கம் நுழைகிற வயதில் நான் அன்றைக்கில்லை. ஆனால் சித்தியின் மரணம் என்னை ஏதோ செய்தது யார் மீதென்றில்லாத கோபம் மனசுக்குள் உருண்டது. காம்பிறாவுக்குள் சித்தியைப் பெட்டிக்குள் வைத்து நானும் பெரியண்ணாவும் தூக்கியபோது ஒரு பிளாஸ்டிக் பொம்மையைத் தூக்குவது போலத்தான் இருந்தாள் சித்தி அத்தனை எடைகுறைவாய். நான் முதல் முதலாய் பெட்டியைத் தூக்கினேன். அப்பாவைப் பெட்டிக்குள் பார்த்தபோது எனக்கு பிணத்திற்கு கையைக்காட்டினால் கைஅழுகிவிடும் என்கிற பயம் இருந்தது. இப்போது அழுகினால் அழுகட்டும் இருந்தென்ன எத்தனை பிணங்களைப் பாhத்துவிட்டோம் மரணத்தை தவிரவும் வேறென்ன இருக்கிறது இந்த ஊரில். செஞ்சிலுவைச் சங்கத்தில் சொல்லி சித்தியின் மரணம் கொள்ளிவைக்கவேண்டிய பெரியமாமாக்கு சொல்லப்பட்டது. கொள்ளி வைக்கவேண்டிய மாமா வரமுடியாமல் பாதைபூட்டப்பட்டிருக்கிறது யாழ்ப்பாணத்துக்கான தரைவழிப்பாதையை திறக்கிறேனென்று ராணுவம் உண்மையில் பாதையைப் பூட்டிவைத்திருக்கிறது. செஞ்சிலுவைச் சங்கத்துக்கும், இன்னும் என்னென்ன வெளிநாட்டு சங்கங்கள் இருக்கிறதோ அதுக்கெல்லாம் நாங்கள் செத்துப்போனது வவுனியாவிற்குப் போய் வரமுடியாமப்போயிருக்கிற சபாவின்ர சொந்தத்தங்கச்சி எண்டதையும் அவர் கடைசியா முகத்தை பார்க்கவேணும் எண்டதையும் அவர்தான் கொள்விவைக்கவேணும் எண்டதையும் உருக்கமா எழுதி மனுக்களாய் குடுத்தம். ஆனா ஒருத்தராலயும் அவருக்கு சித்தியின் முகத்தை கடைசியாகாணுறது என்கிற விசயத்தை செய்யமுடியாமப் போச்சுது. நாங்கள் மூண்டாவது நாளா என்னதான் போஸ்மோட்டம் பண்ணினதெண்டாலும் சித்தியின்ர பொடியை வைச்சிருக்கேலாதெண்டு ஆச்சுது.

மாமாவை எந்தச்சங்கங்களும் அவரது கடைசித்தங்கச்சிக்கு கொள்ளிவைக்கவோ? அவளது முகத்தை கடைசியாக்காணவோ உதவிசெய்யமாட்டார்கள் என்று நாங்கள் முடிவெடுத்தபோது. ஏற்கனவே அப்பாக்கு கொள்ளிவைத்து அனுபவமிருக்கிற நான்தான் சித்திக்கும் கொள்ளிவைக்கிறதென்றாயிற்று. யாரோ சித்திக்கு இப்போது பெரிய சைசில் குங்குமப்பொட்டு வைத்திருச்சினம். எனக்கு அதைப்பார்க்கிறபோது அவளது நெத்தியில் சிவப்பாய் தீ இருக்குமாப்போல இருந்தது. இதற்காகத்தானே அவள் இவ்வளவு காலமும் அலைந்தாள் இந்த அங்கீகாரத்திற்குத்தானே….. அந்தத்தீ அவளை உடலை விழுங்கித்திளைத்தது.

சுடலையால வந்து குளிச்சிட்டு எனக்கு சாப்பாடு போடும்போது பெரியம்மா சொன்னா… "இதெல்லாம் ஒரு பாக்கியம் அய்யா அவள் உன்னில பாசம்" … எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சித்திக்கு என்னில ஒரு நம்பிக்கை இருந்தது உண்மைதான். இல்லாவிட்டால் செட்டிச்சியின்ர கோயிலுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு போயிருக்கமாட்டாள். தான் ஏமாற்றப்பட்ட கதையை எனக்கு சொல்லியிருக்கமாட்டாள். நான் அவளுக்குச் சொல்லவேண்டும் என்று ஆசைப்பட்டேன் சித்தி நான் கடைசிவரைக்கும் அதை யாரிடமும் சொல்லவில்லை என்று. பெரியம்மா சொன்னது போல கொள்ளிவைக்கிறது பாக்கியமாவெண்டும், சித்தி என்னில பாசமாவெண்டும் எனக்கு தெரியாது… எனக்குத் தெரிஞ்சதெல்லாம் சித்தி ஆஸ்பத்திரியில் மருந்தில்லாமலுக்கு அநியாயமாச்செத்துப்போனாள் என்பதுதான்…

Wednesday, December 12, 2007

இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)

01.

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச் சொல்வான். அவனது இந்த திகைப்பூட்டும் இந்த உலகம் அவனது நண்பர்களாலும், அவர்களின் உதவியாலும்,கொஞ்சம் புத்தகங்களாலும் நிரம்பியிருக்கிறது. சென்னையின் நடைபாதை வாசி. வானத்தைக் கூரையாகக் கொண்டு நட்சத்திரங்களின் வண்ணங்களை ரசித்தபடி இரவுகளைக் கரைப்பவன். உலகின் அழகான விசயங்களை ஆராதிக்கவேண்டும் எல்லாவற்றையும் தன் கமராக்கண்களால் புகைப்படத்தின் சட்டகங்களிற்கள் இறுக்கிவிடவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அவனுக்கு இதுவரை வாய்த்தேயிராதது காதல். காதல் மட்டுமே. பெண்களை அறியாத அழகின் ஆராதகன். இது வரைக்கும் அவன் யாரையும் காதலிக்கவும் இல்லை காதலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால் உள்ளுக்குள்ளே யாராலாவது தான் காதலிக்கப்பட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டும் இருக்கிறான்.

வெளியூர் போகிற நண்பனின் அலுவலக அறையைப் பார்த்துக்கொள்கிற வேலை இந்த வேலைகளை வெறுப்பவனுக்கு வருகிறது. இந்த நடைபாதை வாசிக்கு கொஞ்சநாளைக்கு மின்விசிறியின் கீழ் தூங்க ஒரும் இடம் கிடைக்கிறது. தலைக்கு மேல் ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழ் அவன் மறுபடி மறுபடி கடைசி நான்கு பக்கங்களும் இல்லாத ஓரே புத்தகத்தை வாசித்துக்கிடக்கிறான். அவனையும் அவன் படுத்துக்கொண்டிருக்கும் மேசையையும் கதிரையையும் தவிர ஒரு தொலைபேசி கிடக்கிறது வெறுமனே. படம் தொடங்குகையில் அது ஒரு ஆர்ப்பாட்டமில்லாத குழந்தையைப்போல் தூங்கிக்கிடக்கும்.


இப்போது தொலைபேசியினால் அந்த ஊமை அறையின் அமைதி குலைகிறது. ஒரு அழைப்பு அது அங்கே வந்திருக்க வேண்டிய அழைப்பே அல்ல. பிறகு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு மறுபடியும் அழைக்கிறது. இப்போது எதிர்முனையில் ஒருத்தி. எதிர்க்குரல் யாராயிருக்கிறது என்பது குறித்த கவலைகளற்று உரையாடும் ஒருத்தி. ஆக அவள் இப்போது அழைத்திருப்பது வெறுமனே எதிர்முனையில் ஒரு குரலுக்காகத்தான். இப்படித்தான் நகரத்தின் அநேக அநாமதேய அழைப்புக்கள் நிகழ்கின்றன. யாரெனத் தெரியாத ஒருமுகத்துடன் ரகசியங்கள் திறக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களை நன்கறிந்தவர்களிடத்தில் மாய்ந்து மாய்ந்து எங்கள் வழமையான இயல்புகளை ஒழித்துக்கொண்டே அலைகிற நாங்கள் யாரேனும் நமக்கு அறிமுகமில்லா மனிதர்களெதிரில் எம் சுயம் திறக்க தயங்குவதேயில்லை. அது தான் இங்கேயும் நடக்கிறது எதிர்முனையில் குரல்தவிர்த்து வேறதுவும் அறியா அவளும் இவனும் பேசத்தொடங்குகின்றனர் விதவிதமான தொலைபேசி உரையாடல்கள் அவர்களை பிணைத்துக்கொண்டேயிருக்கிறது. அவள் அழகாககச் சிரிப்பதாக அவன் ஒரு நாள் அவளிடம் சொல்கிறாள். அவளோ அப்படி என்னிடம் சொல்லாதே என்கிறாள். இவன் அப்படி மனசில் பட்டதை சொல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்கிறான். அவள் தனக்கு நீ இப்படி எனக்கு விருப்பமில்லாததை பேசுகிற போது மனசுக்கு வருத்தமாயிருக்கிறது என்கிறாள். அவனோ யாருடைய மனசும் வருந்துவதைப்பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு கிடையாது என்னால் மனசில் பட்டதைச்சொல்லாமல் இருக்கமுடியாது என்கிறான் தீர்மானமாக. இப்போது அவள் அவனது இந்த முரண்நிலையை ரசிக்கதொடங்குகிறாள். எதிர்முனை பெண்ணாயிருத்தலே போதுமென்றிருக்கிற ஆண்களிடத்தில் இவன் வித்தியாசமானவன்தான் என்று சொல்கிறாள் அவள். அவன் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்குமென்றும் தன்னிடம் ஒரு கமரா இல்லையென்றும் இவளிடம் சொல்கிறான். தன்னிடம் பணம் வருகிறபோது தான் ஒரு மினோல்ட்டா கமரா வாங்க வேண்டும் என்கிற ஆசையையும் சொல்கிறான்.

அவனும் மின்விசிறியும் இதர பொருட்களாலும் ஆன அந்த அறை. இப்போது அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. எப்போதாவது இவன் வெளியே அலைந்துவிட்டு திரும்புகையில் தொலைபேசி குழந்தையைப்போல் வீரிட்டுக்கொண்டேயிருக்கிறது. இவன் நமட்டுச்சிரிப்புடன் மேலும் மேலும் அதனை அழவிட்டு பிறகு தூக்குவான். அந்த அழைப்பு அவளுடையதுதான் என்பதை அவன் அறிவான். அது ஒரு வகையான ஊடல். அவளது குரலில் கொஞ்சம் கோபிக்கமுடியாத பதட்டம் இருக்கும். இப்போது அவன் ஏதாவது சாட்டுச்சொல்லுவான், அவளது அழைப்புகளுக்காக தான் காத்திருக்கவில்லை என்பது போன்ற பாவனையில் பேசுவான். அதற்கு அடுத்த நாள் தொலைபேசி அழைக்காது. அந்த அறை வெறுமையால் நிரம்பும். அவன் தாங்க முடியாமல் பொறுமையின்றி இருக்கையில் நெளிவான். அவளது அழைப்புகளிற்குப்பதிலாக சிகரட் புகையினால் அந்த அறையை நிரப்புவான். கடைசி சிகரட்டின் நுனி புகைந்து கொண்டிருக்கையில் தனது மௌனத்தை கலைக்கிறது தொலைபேசி இவன் வேட்டையைத்தாக்கும் மிருகம்போலப் பாய்ந்து எடுக்கிறான் தொலைபேசியை.அவள்தான் காத்திருப்பின் வெறுமையும், தான் ஒருத்தியின் அழைப்புக்காக ஏங்குகிறோமே என்கிற அவனது வெட்கமும் கோபமாக மாற அவளிடம் சீறுவான். “என்னால் உனக்காக காத்திருக்க முடியாது. அது மிகவும் தொந்தரவாகவும் என்னைச் சிதைப்பதாகவும் இருக்கிறது” என்கிறான் அவன். அவள் தான் இனிமேல் தினமும் அழைப்பதாகச் சமாதானம் சொல்லுவாள்.


பிறிதொரு அழைப்பில் அவள் தான் ஒரு பாடல் பாடட்டுமா என்று இவனிடம் கேட்கிறாள். சம்மதிக்க பாடுகிறாள்… இவன் அந்தப்பாடலில் கரைந்து போகிறான். இவனுக்குள் உறங்கிக்கிடந்த ஏக்கங்கள் இவனைப்பிசையத்தொடங்குகின்றன. இவன் தாளமாட்டாமல் அழைப்பைத் துண்டித்து விடுகிறான். பிறகொரு அழைப்பில் இவனே மறுபடியும் அந்தப்பாடலைப்பாடச்சொல்லி கரைந்து அழுவான். ஒரு குழந்தையைப்போலவும், அவனது துயரங்களையெல்லாம் கண்ணீராய் அந்தப்பாடல் கரைப்பதைப்போலவும் அவன் அழுவான் அவளிடம் பேசமுடியாமல் தான் பிறகு பேசுவதாக இணைப்பைத்துண்டிப்பான்.

இவன் இப்போது ஒரு புதிய உலகத்துக்குள் தன்னை இழந்து விட்டவன். விட்டேத்தியாய் பற்றுகள் எதுவும் அற்று அலைந்து கொண்டிருக்கிற ஒருவன் இப்போது அவளது அழைப்புகளைப் பற்றிக்கொண்டுவிட்டான். அவற்றை நேசிக்கவும் செய்கிறான். அவளது அழைப்புகள் இல்லாத நாட்கள் இருக்கும் என்பதை அவன் இப்போது ஏற்கவும் சகித்துக்கொள்ளவும் மாட்டான். அந்த நண்பனின் இரவல் அறையில் அவனது கனவுலகம் மின்விசிறியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறது. வெளியூருக்கு போன நண்பன் மறுபடியும் நான்கு நாட்களில் வந்து விடுவதாக இவனிடம் சொல்கிறான். இவனுக்குள் இருக்கிற கனவுலகம் விரிசல் காண்பதை இவன் உணர்கிறான். அந்த உலகம் இரவல், அதன் நிரந்தரமின்மை இப்போது அவனுக்கு உறுத்துகிறது. அவனது இந்த ராஜாங்கத்தில் குரலால் மட்டுமே அவளைக்கொண்டுள்ளான் அவன். அவளது குரல் தவிர்ந்த வேறெதையும் அவன் அறியான். அவள் "ஏன் என் பெயரைக் கேட்க மாட்டீர்களா" என்றதற்கு "உனது குரல்தான் உன் பெயர்" என்கிறான். இப்போது அந்த குரல் ராஜாங்கம் மூழ்கப்போவதை அவன் அறிகிறான். இந்த இரவல் ராஜாங்கத்தின் காலம் முடிவடைந்து கொண்டிருப்பதை அவன் அவளிடம் சொல்கிறான். அவளோ உங்களின் இந்த ராஜாங்கம் முடிகிற அன்றைக்கு எனது தொலைபேசி இலக்கத்தை தருவேன் என்கிறாள். இவனோ இன்னும் ஒரு படிமேலே போய் நான் உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்கிறான். அவள் சம்மதிக்கிறாள். அவன் தன்னைப்பார்க்கிறபோது தான் அவனுக்கு ஒரு மினோல்டா கமராவைப்பரிசளிப்பதாக கூறுகிறாள். அவனுக்குள் அவனது ராஜாங்கம் காப்பாற்றப்படும் என்பதான நம்பிக்கைகள் வருகிறது. அப்போது அவள் தான் இரண்டு நாட்கள் அழைக்கமாட்டேன் குடும்பத்தோடு வெளியூர் போகிறேன் என்கிறாள். அவன் மௌனிக்கிறான், அந்த அறையும் மௌனிக்கிறது. அவளது அழைப்புகளில்லாத இரண்டு நாட்களின் மௌனத்தை அவனால் ஒருபோதும் தாங்கிக்கொள்ளமுடியாது. அவன் அறையின் சூன்யம் முகத்திலறைய அவளது குரலுக்கும் அழைப்புக்கும் ஏங்கி உழல்கிறான்.தொலைபேசி அழைக்கவேயில்லை ஒரு சவத்தைப்போல, கொடும்பிராணியைப்போல அவனது துயரங்களை விழுங்கிக்கொண்டு ஆனந்தித்துக்கிடக்கிறது.

அவன் மனசு அவளது அழைப்புகளைப் பிரார்த்தித்துக் கிடக்கிறது. மனசு முழுவதையும் அவளது அழைப்புக்களின் சங்கீதம் நிறைக்கிறது. அவன் அந்த அழைப்புக்களின் போதையில் மூழ்கிவிடவிரும்புகிறான். அவளது அழைப்புகளற்ற இந்த சூன்யத்தில் இருந்து தப்பிஓடிவிட முயற்சித்து முயற்சித்து இறுதியில் இயலாதவனாய் இயக்கமற்று அவளது அழைப்புகளைத் தவிர வேறnதையும் அறியாதவனாய் ஏங்கிக்கிடந்தான். மனசுக்குள் அவளது அழைப்புக்களின் மணி இப்போது கர்ணகடுரமாய் கொடும்இம்சையயாய் காலத்தின் கெக்கட்டமாய் ஒலிக்கத்தொடங்குகிறது. அவன் அந்த நினைவுகளைப் புறந்தள்ளப்பார்க்கிறான். மனம் அந்தப்புள்ளியில் அவனை அறைந்து இம்சிக்கிறது. தொலைபேசியின் அழைப்பின் ஒலி அவனது மனசை உலுக்கி இம்சித்து இம்சித்து உடலெங்கும் வியாபித்து உடலெங்கும் துயரத்தை நிரப்புகிறது. மனசே உடலாக அவன் தாங்கவொண்ணாமல் புரள்கிறான். அந்த அழைப்புகளின் இம்சை ஒலியினின்றும் தப்பிக்கும் முயற்சிகளில் தோற்று உருக்குலைந்து போகிறான். அந்த அறையின் தொலைபேசி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தது. எதையும் அவனுக்குச்சொல்லும் வழிகளெதுவும் அதனிடம் இருக்கவில்லை. அவன் தளர்ந்தான். இயலாமல் எழுந்து தீர்ந்து போய்விட்டிருக்கும் நீர்க்குவளையில் இருந்து துளிநீரைப்பருகுகிறான். இப்போது அவன் போரில் தோற்றுப்போன ஒரு ராஜாவைப் போலாகிவிட்டான்.

இப்போது மேஜைத்தொலைபேசி தன் மௌனத்தை உடைக்கிறது. அது அவள்தான். ஆனால் ஏற்கனவே குற்றுயிராய்க் கிடக்கும் அந்த அறையை உயிர்ப்பிக்க அவளது அந்த அழைப்பால் முடியவில்லை. எங்கோ குரல்களற்றவெளியில் பதுங்கிக்கொண்டு விட்ட பாடலைப்போல ஆகிவிட்டன அந்த அறையின் ஓசைகள். அவளது அழைப்பால் எதனையும் உயிர்ப்பூட்டமுடியவில்லை. அவன் அழைப்பை எடுக்கிறான் அவள் பதட்டமாய் ஏன் குரல் ஒரு மாதிரியாய் இருக்கிறது என்கிறாள் அவன் துயரச்சிரிப்பொன்றை உதிர்க்கிறான் ஏனெனில் குரல்தான் அவன் அதுதான்; அவனது உயிர். அவன் தனது ராஜாங்கம் முடிவடைந்து விட்டதாக அவளிடம் சொல்கிறான் தேய்ந்து உடைகிறது குரல். அவள் தனது தொலைபேசி இலக்கத்தை குறித்துக்கொள்சசொல்கிறாள். அவனது குரல் செத்துவிட்டது. அவளது குரல் தொலைபேசி இலக்கங்களை வெறுமனே காற்றில் இறைத்தது. அவன் தொலைபேசியை வைக்கிறான் உடல் மேசையில் சரிகிறது… அவனது குரல்ராஜாங்கம் முடிகிறது. அறை அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. வெளியேறிவிட்ட எதையோ நிரப்பும் முயற்சியாய்…….


02.
இது வெறுமனே தொலைபேசிக்கலாச்சாரத்தைப்பற்றிய படம் கிடையாது. இங்கே தொலைபேசி ஒருபாத்திரம். அது ஒரு நாகரீக நகர்சார்ந்த வளர்ச்சியின் அடையாளம். நகரம் எப்படி தனியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உறவுகளின் பிணைப்புகளினின்றும் உதிர்ந்த ஒருவனை விழுங்கிக்கொண்டு நகரம் அவனிடம் எவற்றை நிரப்புகிறது. நகரில் அலைந்து கொண்டிருக்கும் நபர்களிடத்தில். ஏழ்மையின் துயர்விழுங்க அலையும் இளைஞர்களைப் பற்றி நிச்சயமாய் இந்தப்படம் பேசுகிறது. இதன் கதாநாயகன் நிச்சயமாய் ஒரு விதிவிலக்கல்ல என்று எனக்கு தோன்றியது. வெறுமை அறையும் தனியறையில் கடத்திய எனது நாட்களை நான் அவனது நாட்களோடு பிரதியீடு செய்து கொள்ள முடிகிறது. அவன் வேலைகளெதையும் செய்யவிரும்பவில்லை என்பதும் சமூகத்தின் மீதான கோபமே. வாழ்வின் இல்லாமைகள் அழுத்தும் வாழக்கையை நகரத்தில் எதிர்கொள்கிற ஒருவன். எல்லாவற்றையும் புறக்கணிக்கிறான். காதல், கோபம் ,வேலை இப்படி தனது இயல்பின் கைகளை முறித்து அதனைவீசியெறிந்து நடக்கிறான். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிற நகரத்தின் அல்லது சமூகத்திடமிருந்து இவன் எதிர்பார்ப்பதையே புறக்கணிக்கிறான். அவனது உலகமும் கனவுகளால் ஆனது அவை தூங்கிக்கிடக்கும் கனவுகள் ஒரு வறட்டுத்தனத்தில் நேசத்துக்காககவும் கவனிப்பிற்காகவும் ஏங்குகிற ஒரு தனியனின் கனவுகள். அப்படி அலைகிற ஒரு தனியனின் சிறுகனவின் வலிசொல்கிறது இராஜாங்கத்தின் முடிவு என்கிற இந்தக்குறும்படம்.

எப்போதும் மனித மனம் அன்புசெய்யப்படுவதற்காக காத்திருக்கிறது. யாரையும் நேசிக்காத அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கிற மனிதனின் ஆழ்மனசில் யாரலாவது தான் நேசிக்கப்படமாட்டோமா! என்கிற நினைப்பு சதா உருண்டுகொண்டேயிருக்கிறது. ரவியும் அப்படிப்பட்ட ஒருவன்தான். இந்த நகரங்களில் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஒருபிம்பம் ரவி. தனிமை ஒருவனை செதுக்குகிறது. யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத துயரங்களை மனசுக்கள் இறுக்கியபடியே இருக்கிறது. துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரமில்லாததாய் ஆகிவிட்டிருக்கிறது வாழ்க்கை.

ரவிக்குத்தெரியும் இந்த உலகம் துயரங்களால் நிரம்பியதென்று. அது ஏதிலிகளிற்கு எதையும் தருவதுமில்லை அவர்களை ஏற்றுக்கொள்வதமில்லை. அவன் போட்டுக்கொண்டிருப்பது வேசம். எதனையும் புறக்கணிக்கிறவேசம். சாதிக்கவேண்டும் என்று எல்லாவற்றின் மீதும் இருக்கிற ஆசையை புறக்கணிப்பு என்கிற போர்வையால் போர்த்திக்கொண்டிருக்கிற வேசம். எதனைப்பற்றியும் எனக்கு கவலைகள் கிடையாதெனச்சொல்வது தப்பிக்கும் அவனது வழிகளில் ஒன்று. உண்மையில் ரவி பற்றிக்கொள்ள எதையாவது தேடுகிறான் அவன் மனம்விரும்பியபடி ஆனால் கிடைப்பதென்னவோ வெறுமைதான். எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைந்ததுதான் அவனது வாழ்க்கையும் எல்லாரையும் போலவே நமக்குள்ளும் நிறையரவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரச்சூழலில் தனித்துவசிக்கிற மனங்களின் கண்ணாடி அருள்எழிலன் இயக்கிஇருக்கிற இந்தப்படம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தமிகச்சிறந்த உருது மொழி கலைஞன் சதத் ஹசன் மண்டோவின் சிறுகதையை தழுவிஎடுக்கப்பட்டிருக்கிறது.

தனது கனவுகளை அடையும் வழிகள் ஏற்கனவே இந்த நியாயமற்ற மனசற்ற சமூகத்தின் கரங்களால் அறைந்து சாத்தப்பட்டிருபதை தாங்கமுடியாமல் உங்ளுக்குள் புழுங்கிக்கிடக்கிற ஒருவனது வலிமிகஅற்புதமாக வெளிப்படுகிறது. அந்த புழுக்கம்தான் அவனது புறக்கணிப்பு. அவன் தனக்கு ஒரு காதலிகிடைத்தால் தனதுவாழ்க்கையே மாறிவிடும் என்கிறான்.இந்த சமூகத்தின் எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு ஐக்கியமாகிவிட அவன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் காதலைக்கூட அவளிடம் தான் சொல்ல மாட்டேன் அவளாகவே வந்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுக்கு பயம் தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் ஏற்பட்ட பயம். மேலும் மேலும் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளை சம்பாதித்து விட அவனுக்கு விருப்பம் கிடையாது அதனால் அவன் எதையும் நெருங்குவதுமில்லை. எல்லாவற்றினின்றும் ஒதுங்கியிருக்கிறாள். இப்படித்தான் நிறையப்பேர் துவண்டு போயிருக்கிறார்கள். நகரத்தின் அன்பற்ற பெரும்சிக்கி தூக்கிஎறியப்பட்டவனின் மனோநிலை இது. புறவாழ்வு சுயங்களைச்சாப்பிட்டுவிட வெறும் கூடாகிய நிலை. அப்படிப்பட்ட பாத்திரம் தான் ரவி அவனுக்கு பற்றிக்கொள்ள கிடைக்கிற ஒரு வாய்ப்பில் அவன் உடைந்து போய்விடுகிறான் அவன் ஏங்கியது அவனுக்கு கிடைக்கிறபோது அவன் அதை இறுகப்பற்றிக்கொள்கிற மனோநிலைக்கு வருகிறான். சிறு பரிவும் அவனை உருக்குலைத்து சிதைத்து அவனைத் தின்றுவிடுகிறது. இது ரவிக்கு மட்டுமல்ல நிறையப்பேருக்கு நிகழ்கிறது. அன்றாடம் புறவிழிகளுக்கு புலப்படாத நிறைய ரவிகளின் ராஜாங்கம் முடிவடைந்துகொண்டேயிருக்கிறது.


குறைந்த வசனங்களாலும். அளவான நடிப்பாலும் (ஒருசில இடங்களைத்தவிர) இந்த குறும்படத்தை நடித்து இயக்கி செதுக்கியிருக்கிறார் இயக்குனர் டி.அருள்எழிலன். ஒரு பத்ததிரிகையாளரான அருள்எழிலன் ஒரு தேர்ந்த இயக்குனராகவும் நடிகராகவும் நிச்சயமாக ஒரு அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார். சுயவாழ்வின் கண்ணாடியாய் நம்பிம்பங்கள் தெரியும் தமிழின் சிறந்த குறும்படங்களில் ஒன்று, அருள்எழிலன் இயக்கிய இராஜாங்கத்தின் முடிவு.
இயக்குனர் பற்றி
அடிப்படையில் ஒரு பத்திரிகைக்காரரான இக்குறும்படத்தின் இயக்குனர் அருள்எழிலன். ஆனந்தவிகடன் வார இதழில் பணியாற்றுகிறார். அவர் தனது படைப்பு குறித்து இப்படிச்சொல்கிறார்.
"ம‌னித‌னின் பிற‌ப்பிற்கு எவ்வித‌ கார‌ண‌ங்க‌ளும் எப்ப‌டி இல்லையோ அப்ப‌டித்தான் ம‌ர‌ண‌மும் அதுவும் கார‌ண‌ங்க‌ள‌ற்ற‌து. நக‌ர‌ம் எப்போதும் இசைக்கும் மாய‌ப்புல்லாங்குழ‌லின் இசையில் க‌ன‌வுக்கும் வாழ்வுக்கும் இடையில் ந‌ட‌க்கும் போராட்ட‌ம‌ல்ல‌ அனுப‌வ‌மே இந்த‌ ப‌டைப்பு.."


குறும்படத்தின் இயக்குனர் டி.அருள்எழிலன்

குறும்படத்தை இணையத்தில் பார்க்க

Wednesday, October 24, 2007

CHILDREN OF HEAVEN (யாரும் நுழைய முடியாச் சுவர்க்கம்)



நல்ல விசயங்கள் எனக்கு தாமதமாகவே நிகழ்கிறது. அல்லது நான் தாமதமாகவே கண்டு கொள்கிறேனோ என்னவோ தெரியாது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சஞ்சிகைகள் மூலமாகவும் நண்பர்கள் வாயிலாகவும் நிறையத் தெரிந்து கொண்டதாக நான்நினைத்துக்கொண்டிருந்த children of heaven என்கிற திரைப்படத்தை. இன்றைக்கு பார்த்தேன். நிறைய நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்றைக்கு மழைபெய்து கொண்டிருந்தது. வழக்கமாக மழையைக் கண்டால் நின்று போகிறமின்சாரம் அதிசயமாய் இன்றைக்கு இருந்தது. நண்பர்கள் யாருமில்லை நான் தனியே. தனிமைஒரு விதமான அச்சத்தை தருகிறது இப்போதெல்லாம். தனிமை வேண்டித் தவங்கிடந்தநாட்களெல்லாம் என்னை கேலிசெய்கின்றன எனத் தோன்றும். தனிமை கொல்லும்என்பார்களே அதைப்போல இன்றைக்கு தனிமையை நிரப்பவென்று இந்தப்படத்தை போட்டேன்.

(1)
ஒரு அழுக்குப்படிந்த றோஸ்நிறச்சப்பாத்துக்களைத் தைத்துக்கொண்டிருக்கும் கைகள் திரையை நிறைக்க ஆரம்பிக்கிறது படம். தனது தங்கையின் சப்பாத்துக்களை செருப்பு தைப்பவரிடம்கொடுத்து தைத்துக்கொண்டிருக்கிறான் சிறுவன் அலி. பிறகு வீட்டுக்கு போகிற வழியில்ஒரு கடைவாசலில் வைத்து அதை தொலைத்து விடுகிறான் அவனது கவனக்குறைவால். நோயாளி அம்மா கோபக்கார,வறுமையான அப்பா என்றிருக்கிறது அந்தச்சிறுவனின் வீடு. சப்பாத்துக்களைத் தொலைத்து விட்டு வந்திருக்கிற அண்ணணிடம். "எனது சப்பாத்துக்களின்றி நான் எப்படி நாளைக்குபள்ளிக்கூடம் போவது. நான் அப்பாவிடம் சொல்லப்போகிறேன்" என்கிற தங்கையை. ஐயோ நீ சொன்னால் அப்பா என்னை தண்டிக்கக் கூடும். அதுதவிர அப்பாவிடம் இப்போது பணம் கிடையாது நீ எனது சப்பாத்துக்களை போட்டுக்கொண்டுபள்ளிக்கூடம் போ திரும்பி வந்ததும் நான் மறுபடி மாலையில் அதைப் போட்டுக்கொண்டு போகிறேன் என்று ஒரு புதிய ஏற்பாட்டுக்கு வருகிறார்கள் அண்ணனும் தங்கையும். பெற்றோரின் தண்டனைக்கு பயந்து மட்டுமல்ல அந்தக்குடும்பத்தின் வறுமைக்கும் பயந்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இருந்து சப்பாத்து தொலைந்த விசயத்தை மறைக்கிறார்கள். அவர்களது வறுமையும் அந்த பிஞ்சு மனங்களின் அண்ணன் தங்கை உறவும் அற்புதமாக மனத்தை செலுத்துகிறது அவர்களோடு. என்னதான் தங்கை தனது பள்ளியிலிருந்து வேகமாக ஓடிவந்து அண்ணணிடம் சப்பாத்துகளைக் கொடுத்தாலும். அலி பள்ளிக்கு பிந்தியே செல்லநேர்ந்து விடுகிறது தினமும். படபடக்கும் மனத்துடன் தடதடத்து பள்ளியின் படிகளில் அவன் ஏறிச்செல்லும் ஓசை அவனைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. அவனது தலைமை ஆசிரியர் அவனைக் கண்டித்து அவனதுபெற்றோருடன் வருமாறு சொல்கிறார். அலி அழுதுகொண்டே பள்ளியை விட்டுவெளியேறுகையில் அவனது வகுப்பாசிரியர் அவன் நல்ல மாணவர் என்று சொல்லி அவனைக் காப்பாற்றுகிறார்.ஒரு முறை சாரா வேகமாக ஓடிவரும்போது அவளதுகால்களுக்கு பெருசான அண்ணனின் காலணிகள் கழன்று ஓடும் தண்ணீரில் விழுந்துவிடுகிறது அவள் அதைத் பெரும்பாடுபட்டு துரத்துகிறாள் விடாமல் மூச்சிரைக்கமூச்சிரைக்க துரத்துகிறாள். எனக்கு எழும்பி அவளுக்கு உதவமாட்டோமா என்று இருந்தது நாக்கு வறண்டு ஏனோ தொண்டை அடைத்தது. கண்கள் திரண்டு நின்றது. அவளது சப்பாத்து ஒரு சிறிய பாலத்துள் தேங்கி நின்றுவிடுகிறது. அவள்அழுகிறாள் அந்தப் பாலத்தினின்றும் எடுக்க முடியாத தனது காலனிகளுக்காக மட்டுமல்ல. ஆற்றாமை மேலெழ இன்னொரு காலனிகளை வாங்கமுடியாத தனது குடும்பத்தின் வறுமையை எண்ணி,பாடசாலைக்கு போவதற்காக தான் அணிந்து வந்த காலணிகளுக்காக காத்திருக்கும் தனது சப்பாத்துக்களைத் தொலைத்து விட்ட அண்ணன் மீது எழுகிற கோபம், அவனுக்கு பள்ளிக்கு தாமதமாகிறதே என்கிற வேதனை எல்லாவற்றையும் நினைத்து அழுகிறாள். உப்பிய அந்தச்சிறுமியின் கன்னங்களில் வழிகிற கண்ணீர் ஒரு கணம் என்னை உலுக்கி எடுத்து விடுகிறது.


யாரோ ஒரு பெரியவர் அழுதுகொண்டிருக்கும் அவள்மீது கருணைகொண்டு காலணிகளைமீட்டுத்தருகிறார். நான் இப்போது அந்தப் பெரியவரிடத்தில் என்னைப் பிரதிசெய்துகொண்டு பெருமைப்பட்டேன். முற்றிலும் நனைந்து போன அந்த ஒருகாலணியுடன் அவள் மூச்சிரைக்க ஓடி அண்ணிடம் வருகிறாள். இப்போது மிகுந்த கோபத்துடன்காலணிகளை அண்ணன் முன் விட்டெறிகிறாள். அவன் காலனிகள் ஏன் நனைந்திருக்கின்ற ஏன் நீ இத்தனை தாமதமாக வருகிறாய் என்று கேட்கிறான். அண்ணின்கேள்விகளிற்கு பதிலளிக்காமல் நான் இன்றைக்கு அம்மாவிடம் சொல்லிவிடப்போகிறேன் நீ எனது காலணிகளைத் தொலைத்துவிட்டாய் என்பதைப்பற்றி என்று மட்டும் கோபமாகக் கூறுகிறாள். அவனோ நீ சொன்னாலும் அப்பாவால் உனக்கு புதிய காலணிகளை வாங்கித்தர முடியாது அவரிடம் பணமில்லை நீ தயவு செய்து சொல்லாதே என்று சொல்கிறான்.



Photo Sharing and Video Hosting at Photobucket

அவனது தந்தை அடுத்தநாள் அருகில் இருக்கிற நகரத்துக்கு சென்று நகரவாசிகளின் தோட்டத்தை பராமரிக்கும் வேலை செய்து நானும் அலியும் கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு வருவோம் என்கிறார். அங்கே ஒரு வீட்டில் வேலைசெய்து கொஞ்சம் பணத்துடன் திரும்புகையில் தந்தை சொல்கிறார் நாங்கள் நிறையச் சம்பாதிக்க வேண்டும், கொஞ்சநாள் எங்கோயவது போய் ஓயவெடுக்க வேண்டும், உனக்கும் தங்கைக்கும் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்,நாங்கள் இதைவிடப்பெரிய வாடகை வீட்டிற்கு நாங்கள் போகவேண்டும். ஏழ்மையின் கனவுகள் விரிய தகப்பன் மகனிடம் ஆசைகளை விவரித்து கொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார். அலி அப்போது சப்பாத்துக்கள் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் சொல்கிறான். அப்பா ஓம் நிச்சயமாக உனக்கு சப்பாத்துக்ள் வாங்கித் தருவேன் என்று சொல்கிறார். அலி இல்லை முதலில் சாராவுக்கு வாங்கிக்கொடுங்கள் என்று சொல்கிறான். தந்தையும் ஆமோதிக்கிறார்.ஆனால் அவர்களுடைய கனவுகள் சரிவதைப்போலவே அந்த ஏழைக்குடியானவனின் லொக்கடா சைக்கிள் ஒரு இறக்கத்தில் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கையில் பிறேக் பிடிக்காமல் தகப்பனும் மகனும் மரத்தில் மோதி காயமடைகிறார்கள்.


தானும் தங்கையும் ஒரே சோடிக்காலனிகளை பகிர்ந்து கொள்வதின் சிக்கல்கள் அதிகரித்து வருவதை அலி உணர்கிறான். தங்கையோ அண்ணணிடம் முடியுமானவரை பொறுமையோடும் பாசத்தோடும் நடந்து கொள்கிறாள். அலியின் பள்ளியில் ஓட்டப்போட்டியில் ஓடவிரும்புகிறவர்கள் தமது பெயரைப் பதிவு செய்யுமாறு ஆசிரியர் சொல்கிறார் அலி கண்களில் ஆர்வம் மின்ன அந்த அறிவிப்பைக் கவனித்தாலும் தனது காலணிகளை மற்ற மாணவர்களின் காலணிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து ஒருவகையில் ஒதுங்குகிறான். அந்த காலணிகள் இருவர் பாவிக்கவேண்டியிருப்பதையும் நினைத்து அவன் போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகி விடுகிறான்.ஆனால் பள்ளியில் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான மூன்றாம் பரிசாக ஒரு சோடிக்காலணிகள் என்று அறிவித்திருப்பதை பார்த்ததும். அவன் தன்னையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஆசிரியரிடம் சென்று கெஞ்சிஅழுகிறான். அவர் முதலில் மறுத்தாலும் பின்னர் அவன் நன்றாக ஓடுவான் என்பதைதெரிந்து கொண்டு சேர்த்துக்கொள்கிறார்.


அலி தனது தங்கையிடம் தான்ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதாகவும் தனக்கு மூன்றாம் பரிசு கிடைக்கவேண்டும் எனவும் கூறுகிறான். அவள் ஏன் மூன்றாம் பரிசு எனக்கேட்க "அது இரண்டு காலணிகள்" என்கிறான் அவற்றை நான் உனக்கு தருவேன் என்கிறான். அவளோ அது ஆண்களுக்கான சப்பாத்துக்களாக அல்லவா இருக்கும் என்கிறாள். அலி நாங்கள் அதனைக் கடையில் கொடுத்து மாற்றலாம் என்கிறான். சாரா அண்ணணை பாசத்துடன் பார்க்கிறாள் ஆனாலும் முதற்பரிசு என்ன என்றுகேட்கிறாள் அவனோ அதைச் சரியாக பார்க்கவில்லை என்கிறான்.போட்டி நாளன்று போட்டிக்கு வந்திருக்கும் விதவிதமான உயர்ந்த காலணிகளை அணிந்த நிறைய சிறுவர்களுடன் தனது பழைய காலணியை குனிந்து குனிந்து பார்த்துக்கொள்கிறான் அலி. போட்டி தொடங்குகிறது. தனது தங்கைக்கு காலணிகளை பெற்றுத்தருவதற்காக அவன் ஒடுகிறான் ஒருவன் ஒரு போட்டியில் மூன்றாம் பரிசை இலக்குவைத்து ஓடுகிறான். அவனது தங்கையின் குரலும்,தனது பாடசாலையில் இருந்து இவனிடம் காலணிகளை ஒப்படைப்பதற்காக அவள் மூச்சிரைக்க ஓடிவருவதும் இவனதுநினைவில் சுழன்று கொண்டிருக்கிறது. வேகமாக ஒடுகின்றான். இறுதியிடம் நெருங்க நெருங்க முதலிருவரை விட்டு விட்டு மூன்றாவதாக அலி ஓடுகிறான்.நான்காவதாக ஒடிவருபவனும் அலியும் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு ஒடுகின்றனர். அலி இடறி விழுகிறான். மறுபடியும் தன் தங்கையை நினைத்து அவன் எழுந்து ஒடுகிறான் முன்னிலும் வேகமாக அவன் மிகவும் களைத்துப்போய்போட்டியின்எல்லைக்கோட்டைத்தொட்டு விழுகிறான். அவனது ஆசிரியர் அவனைத் தூக்குகிறார். அலி சேர் நான் மூன்றாம்பரிசை பெற்று விட்டேனா என்றுகேட்பான் அவரோ எதற்கு மூன்றாம் பரிசு உனக்குத்தான் முதற்பரிசு என்பார்.எல்லாரும் அலியைக் கொண்டாடுவார்கள். அவன் மிகவும் கவலை தோய்ந்தவனாக சோர்ந்து போவான். ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள். அவனது மனத்தின் தயரங்களை யாரும் பகிர்ந்து கொள்வதாகவும் புரிந்து கொள்வதாகவும் இல்லை. அந்த வெற்றி அவனுக்கு வேண்டியதில்லை அவன் கண்களில் மூன்றாம் பரிசுக்காக வைக்கப்பட்டிருக்கும் காலணிகள் மினுங்கும். அவன்கவலையோடு தனக்கான பதக்கத்தையும் கோப்பையையும் வாங்கிக்கொள்வான்.கேற் திறக்கப்படுவதை முற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த தங்கை ஆர்வத்துடன் அவளது அழகிய குழந்தமையின் மினுங்கும் கண்களால் பார்ப்பாள். அலி குற்றமிழைத்தவன் போல் தங்கையில் விழிகளை எதிர்கொளவியலாதவனாய் சோர்ந்துபோய் வருவான் அண்ணன் தனக்காக காலணிகளைக் கொண்டு வரவில்லை எனத் தெரிந்துகொண்ட சாரா மௌனமாக வீட்டுக்குள் ஓடிப்போகிறாள்.படம் முடிவடைந்து திரை கறுப்பாக அரபு எழுத்துக்கள் ஓடத்தொடங்கின.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் ஆற்றாமல் அழுதேன் வெறும் பிம்பம் தான் என்று புறக்கணிக்க வியலாத அந்த சிறுவர்கள் அலிக்காகவும் சாராவுக்காகவுமா என்று சொல்லமுடியாது.எப்போதோ நான் பள்ளியில் தொலைத்துவிட்ட எல்லாவற்றுக்காகவும் அல்லது எனக்குமறுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட குழந்தமையின் நினைவுகள் உந்த அவர்கள் மீது என்னைப் பிரதிசெய்து கொண்டு அழுதேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாபார்த்து அழுதேன். அலி பந்தயத்தில் இடறி விழுகையில் காலத்தைச் சபித்தேன் அவனது தங்ககைக்கு காலணிகள் கிடைத்துவிடவேண்டும் என்று எனக்குள் துயரம் பீறிட்டெழுந்தது.இதுவரைக்கும் நான் இந்தப்படத்தை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் ஏன் நான் இது வரைக்கும் சொன்னதெல்லாம் கூட ஒன்று மேயில்லை. அது குழந்தைகளின் சொர்க்கம் நான் அதைக்கடந்திருக்கிறேன்.கிட்டத்தட்ட அதே வறுமையுடனும் வலிகளுடனும் அந்த குழந்தைமையைக் கடந்திருக்கிறேன். இதே மாதிரி குழந்தைமையைத் திணிப்புடனும் அவர்களின் உணர்வுகளைப் பகிந்து கொள்ளவியலாமல் காலம் எத்தனைநாளைக்கு விரட்டிக்கொண்டேயிருக்கப் போகிறது.

குழந்தைகள் எப்போதும் அவர்களுக்கான உலகத்தை சித்தரித்துக்கொள்கிறார்கள். பெரியவர்களால் எப்போதும் அவர்களுடைய உலகத்திற்குள் நுழைந்துவிடமுடியாது. பெரியவர்களின் கண்களிற்கு எதிரிலேயே பெரியவர்களால் குழந்தைகள் தங்கள் உலகத்துக்குள் அல்லது தங்களதுகட்டுக்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் ஆழ்ந்து கிடக்கையில் ஒரு மாயவித்தைபோல அவர்களறியாமல் விரிந்து கிடக்கிறத குழந்தைகளின் உலகம்.குழந்தைகள் இரண்டு உலகங்களில் எப்போதும் வாழ்கிறார்கள். கண்டிப்பும் ஏமாற்றமும் நிரம்பிய தங்கள் பெற்றோருடனான வாழ்க்கை ஒன்று. எந்த வரையறைகளுமற்று சோப்புநுரையைப்போல வானத்தில் வர்ணங்கள் மினுங்க பறக்கும் இன்னொரு வாழ்க்கை. படத்திலும் அப்படித்தான் ஏழ்மையும் கண்டிப்பும் நிறைந்த ஒரு பெற்றோருடன் வாழும் குழந்தைகள் சாராவும் அலியும் தமது பெற்றோர்கள் அறிந்துவிடாத நுழையமுடியாத இன்னுமோரு உலகத்துள் வாழ்கிறார்கள்.எனக்கு படம் பார்த்ததும் எனது குழந்தைப்பருவம் மீழெழுகிறது. யாரும் நுழைந்து விடமுடியாமல் நான் வாழ்ந்த ரகசிய நினைவுகள்.தீப்பெட்டிப் பொன்வண்டுக்கும் என் பூனைக்குட்டிக்கும் மட்டுமே காட்டிய அந்த உலகின் பரவசக் கணங்கணை அந்த சொர்க்கத்தை children of heaven எனக்கு மறுபடியும் கொடுத்தது. என் கைகளைப் பிடித்து அழைத்துப்போய் மறுபடியும் என் குழந்தைமையில் என் கைகளை விடுவித்து விட்டது. திருவிழாவில் குழந்தைகள் தெரிந்தே தொலைந்து போகின்றன தம்மைத்தாமே தொலைத்துக்கொள்ள விரும்புகின்றன. அம்மாவின் கிடுக்கிப்பிடியினின்றும் அவளே அறியாத ஒருகணத்தில் பலூன்காரனின் வண்ணங்களை அழைத்துக்கொண்டு வரையறைகளற்ற வானத்தின் கீழ் விளையாடச் சென்று விடுகின்றன. அப்படி நானும் தொலைந்து போய்விடலாமென்று தோன்றியது எனக்கு.

(2)
எனக்கு நினைவிருக்கிறது இன்னமும் எனது சிறுபராயங்களில் நான் எனது பொருட்களைத் தொலைத்துவிட்டு அழுகொண்டே வீடுதிரும்பிய அனுபவங்கள். சிறுபராயம் ஒரு கனவு போல மீழெழுந்து கொண்டேயிருக்கிறது இன்றைக்கும் அப்படியே இருந்துவிடமுடியாது போன துயரம் என்னை அழுத்துகிறது.மூன்றாம் ஆண்டு வரையிலும் பகல் பன்னிரண்டு மணிவரைதான் பாடசாலை பன்னிரண்டு பன்னிரண்டரைக்கு விட்டுவிடுவார்கள். யாரேனும் வீட்டில் இருந்து பெரியவர்கள் வந்து எங்களை அழைத்துச்செல்வார்கள்.அப்படி ஒரு முறை முதலாம் ஆண்டிலா இரண்டாம் ஆண்டிலா என்று நினைவில்லை. அப்பா தான் ஏதோ வேலையாக செல்வதாகக்கூறிஅவரது நண்பர்களுடன் என்னை ஏற்றி வீட்டில் இறக்கிவிடச்சொல்லி அனுப்பிவைத்தார். அது முதலாமாண்டில்தான் நிச்சயமாக ஏனெனில் இரண்டாம் ஆண்டில் அப்பா இறந்துவிட்டார். நான் இடையில் போய்க்கொண்டிருக்கும் போதுதான் தொப்பியை விளையாடிய இடத்திலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம்வந்தது. உடனே இயன்றவரை அழுதேன். என்னை மறுபடியும் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டுவிடும்படி அவர்களைக் அழுது குழறிக்கேட்டுக்கொண்டேன். எனக்கு தொலைந்து போன தொப்பியை விடவும் அம்மாவின் அகப்பை காம்பு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் அப்போதெல்லாம் எனக்கு. அம்மா தொப்பியை துலைத்து விட்டு வீட்டுக்கு போனால் அடிபின்னி எடுப்பார் என்பதில் சந்தேகமேயில்லை அம்மாவுக்கும் எனக்கும் அப்படி ஒரு ராசி. நான் அழுது குழறிப்பார்த்தேன் அவர்கள் மசிவதாக இல்லை என்னை இங்கேயே இறக்கிவிடுங்கள் நான் போகிறேன் என்று சொல்லி அரைவழியிலேயே சைக்கிளில் இருந்து குதித்து விட்டேன். பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வந்தேன். நல்ல வேளையாக தொப்பி நான் விளையாடிய இடத்திலேயே கிடந்தது. அப்போது எனக்கிருந்த பரவசமும் மகிழ்ச்சியும் அதைச் சொல்லவே முடியாது நிச்சயமாய். வானத்தில் பறக்கிற மாதிரி மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சியை நட்பாக்கிக்கொண்டது மாதிரி அத்தனை மகிழ்ச்சியாயிருந்தது. தொப்பியில் போட்டிருந்த பூனைக்குட்டிப்படம் என்னைப் பார்த்து ஒருமுறை கண்சிமிட்டியது. தொப்பியை எடுத்த பிறகு மறுபடியும் வீடு செல்லாமல் அந்த மரத்தடியிலேயயே தூங்கிக்கொண்டிருந்தேன் எல்லாரும் என்னைத் தேடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்திவிட்டு மறுபடி என் தூக்கத்தை கலைத்து என்னை வீட்டை கூட்டிக்கொண்டு போய் கொஞ்சிக் கூத்தாடி விட்டார்கள். இதுவே நான் தொப்பியில்லாமல் வீட்டை போயிருந்தால் கொஞ்சியாயிருப்பார் அம்மா கெஞ்சினாலும் அடிதான். ஆனால் என்னதான் அடிவிழுந்தாலும் என்னுடைய தொலைத்தல் புராணம் என்பது அழிறப்பர் இல் இருந்து சைக்கிள் வரைக்கும் நீண்டுகொண்டே யிருந்தது. தொலைப்பது அதை அம்மாவுக்கு தெரியாமல் மறைப்பது என்பதெல்லாம் பிறகு கைதேர்ந்த விசயங்களாகிவிட்டன.தொலைப்பதற்கும் பிறகு அதை அம்மாவிடம் இருந்து கேட்டுப்பெறுவதற்குமான இடைப்பட்ட காலம்திக்திக்கென்று நெஞ்சுக்குள் வாட்டர்ப்பம் இறைப்பதைப்போன்றது. ஒரு ஊழிக்குக் காத்திருப்தைப்போன்றது. சில வேளைகளில்நிகழலாம் நிகழாதும் போகலாம் ஒரு வானிலை அறிவிப்பு மாதிரித்தான் சொல்லமுடியும்.

அலியை மாதிரியே தம்பியின் பென்சிலை கட்டரால் சீவித்தருகிறேன் பேர்வழி என்று வாங்கி ஒரு அடியாக இருந்த பென்சிலை கட்டைவிரலளவுக்கு மாற்றியிருக்கிறேன். அவனைச் சமாளிப்பதற்காக என்னுடைய கூர்மாத்திப்பென்சிலை அவனுக்கு கொடுக்கவேண்டியதாகிவிட்டது.இப்படி நிறைய நினைவுகள் மறுபடி மறுபடி எழுந்து கொண்டேயிருக்கின்றன எனக்கு இன்று முழுதும்.

எனக்கு நினைவுதெரிந்து ஒரு முறை நான் அம்மாவைத் திட்டிக்கொண்டே ஒரு முறை பெரிதாக அழுதிருக்கிறேன். இடப்பெயர்வின் பின்னர் நாங்கள் வேறு ஒருவருடைய காணியில் ஒரு சிறிய வீட்டைப் போட்டுக்கொண்டு இருந்தோம். அது ஒரு சிறிய வீடு அம்மாவிடம் பெரிதாகப்பணமில்லை.வீடு மழை வந்தால் ஊறும், ஒழுகும். கிடுகுக் கூரைஇத்துப்போய் நாங்கள் தறப்பாள் போட்டு மூடியிருந்தோம். தறப்பாளும் இத்துவிட்டது மழை அகோர மழை, காட்டு மழை. முற்றத்து நிழல் மரவள்ளி பாறி விழுந்து விட்டது. அம்மாவும் நாங்களும் ஒரு சிறிய இடத்தில் படுத்துக்கிடந்தோம். எனக்கு பதின்மூன்று வயதிருக்கலாம். மூன்று அறைகளும் விறாந்தையும் கொண்ட எங்கட ஊர் வீடு் எனக்கு நினைவுக்கு வந்தது. வீட்டில் 13 வயசு மூத்தவன் என்பதால் எனக்கு திட்டுகளும் கொட்டுகளும் அதிகமாகவே கிடைக்கும். அதைவிட வீட்டுஆம்பிளைகள் செய்யவேண்டிய வேலைகள் என்று வரையறுக்கப்பட்ட எல்லாவற்றையும் வேறு செய்யவேண்டும். **ஒரு முறை கூரையைச் சரிசெய்வதற்காக மேலே ஏறிய நான் அந்த இத்துப்போன தறப்பாளையும் உக்கிப்போன கூரையையும் தாண்டி பொத்தென்று கூரையைப்பிய்த்துக்கொண்டு கீழே விழுந்தேன். அப்போது நான் பெரிதாக அழுதேன். எனக்கு நிச்சயமாகத் தெரியும் கீழே விழுந்த அதற்காக மட்டுமல்ல நான் அழுதது. அது மட்டுமல்ல என்னை அழத்தூண்டியது. கூரை மேய காசில்லாமல் இருக்கும் அம்மாவை நினைத்து, 7 வயதில் செத்துப்போன அப்பாவை நினைத்து, குண்டுகளிற்கும் சப்பாத்துகளிற்கும் பயந்து விட்டுவிட்டு வந்த வீட்டை நினைத்து இப்படி விழுந்த ஒரு கணத்தில் எனக்கு நிறைய நினைவுக்கு வந்தது நான் தேம்பித் தேம்பி அழுதேன். படத்தில் சப்பாத்துக்கள் பாலத்துக்குள் தேங்கி நின்று விட சாரா அழுகிறாளே அதைப்போல தன்னால் மீட்கமுடியாமல் தனது சின்னக்கைகளைத் தாண்டிய தொலைவில் செருகிக் கொண்டு விட்ட சப்பாத்துகளிற்காக மட்டும் அழவில்லை அவள். அந்த நிகழ்விற்கான புறச் சூழ்நிலைகளை நினைத்து அழுகிறாள். சிக்கிக்கொண்ட சப்பாத்துக்களினிடையில் சிக்கிக்கொண்ட இரண்டு பிஞ்சுகளின் பள்ளிக்கூடநாட்களைப் பற்றிய பயத்திலும் ஏக்கத்திலும் அழுகிறாள். அந்த ஒருகணத்தில் அவளுக்குள் மின்னிமறையும் உலகின் பெருமிருட்டு அவளை அழுத்த வெடித்த அழுகை அது.

உலகம் குழந்தைகளை அழுத்திக்கொண்டேயிருக்கிறது.தனக்கு விருப்பமானதைச் செய்ய. குழந்தைகளின் உலகம் இப்போதெல்லாம் அழுத்தங்களால் நிரம்பி வழிகிறது. ஏற்கனவே பெரியவர்களால் வரையறுக்கப்பட்டிருந்த அவர்களுடைய புன்னகைகளை, குழந்தைகளை அச்சுறுத்திக்கொண்டிருந்த பெரியவர்களினுடைய உலகம் அவர்களுக்கு தாங்கமுடியாச் சுமையைத்தலையில் அழுத்துகிறது. உலகின் எல்லா இடஙகளிலும் குழந்தைகள் வயசை மீறவைக்கப்படுகிறார்கள். அவர்களின் உலகத்துக்குள் புத்தக மூட்டைகளும் ஏன்? துப்பாக்கிகளும், பீரங்கிகளும், சப்பாத்துக்களும் நிரம்பி அச்சமூட்டுகின்றன. இப்போது அவர்களது மணல்வீடுகளையும் கனவுகளையும் கூட உலகம் தன் கொடுங்கரங்களால் ஆக்கிரமித்திருக்கிறது. கண்ணெதிரில் பெரியவர்களுக்கு புலப்படாமல் குழந்தைகள் சிருஸ்டிக்கும் மாய உலகத்தில் இப்போதெல்லாம் ராட்சசர்கள் அச்சுறுத்தியபடியிருக்கிறார்கள். குழந்தைகள் பயந்தபடி உலகின் இருண்ட மூலைக்குள் பதுங்குகிறார்கள்.



**நான் கூரையிலிருந்து கீழே வீழ்ந்து கிடக்கையில் எதற்கென்றெ தெரியாது என்னோடு கூட அழுத தங்கைக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் இன்றைக்கு. தன் ஊர்களையும் வேர்களையும் தாண்டி எங்கோ லண்டனின் வைத்தியசாலையில் புன்னகைத்துக்கொண்டிருக்கும் அந்தச் சின்னத் தேவதையின் மலர்ப்புன்னகைக்கு.

த.அகிலன்
22.10.2007

இணைப்புகள்.

children of heaven படத்தின் இணையதளம்.

இந்தப்படம் குறித்த நிவேதாவின் பதிவு.

சித்தார்த் அண்ணாவின் பதிவு

நன்றி.
DVD இரவல் தந்த அருள்எழிலன் அண்ணாவிற்கு.

ஈழத்தின் இன்னொரு பெண் கவிதை முகம்...



"இயற்கையுடன் இணைந்த கிராமத்தில் அம்மம்மாவிடம் வளர்ந்தேன்.தனிமையும் சுதந்திரமும் அப்பாவின் அடக்குமுறைகளும் அற்ற இனிய சிறுபருவம். அம்மம்மாவின் நிழலில் கிடைத்தது. அந்தச் சூழல் கற்பனைகளையும் கவிதைகளையும் எனக்கு தந்தது. 90 களின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்தேன் அங்குப் பெற்ற அனுபவங்கள்தான் பின்னர் நானெழுதிய கவிதைகளுக்கு அடித்தளமாயின"


என்று கூறும் பஹீமாஜகான் இலங்கை மெல்சிரிபுரவைத்ச் சேர்ந்தவர்.கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார்.குறைந்த எண்ணிக்கையிலான. ஆனால் காத்திரம் நிறைந்த கவிதைகளைப் பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ள இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இது.


தலைப்பு: ஒரு கடல் நீரூற்றி

எழுதியவர்: பஹீமா ஜகான்

வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்

விலை: 40.00



தொகுதியில் இருந்து எனக்கு நெருக்கமான வரிகள்:


'அவசரப்பட்டு நீ

ஊரைக்காணும் ஆவலிலிங்கு வந்து விடாதே.

வதைத்து எரியூட்டப்பட்டசோலைநிலத்தினூடு

அணிவகுத்து செல்லும் காவல்தேவதைகள்

அமைதியைப்பேணுகின்றன.

அந்த ஏகாந்தம் குடியிருக்கும்

மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?

வந்துவிடாதே'

Tuesday, October 16, 2007

காணிமுழுவதும் கண்ணிவெடியல்லவா...?

"வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ”

இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்துவிட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து கொண்டிருந்திருக்கிறேன்.கானாபிரபாவின் பாசையில் சொன்னால் சின்னனுகளாய் இருந்த அனுபவங்கள் இவை. நவராத்திரி என்கிற வார்த்தையை விட அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதிபூசை என்று சொல்லித்தான் நான் திரிந்திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் சொல்லு. எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக படவில்லை புக்கை அவல் கடலை கௌப்பி போன்றவை சகலகலாவல்லி மாலை படிக்கப்படும்போதே கண்ணுக்குள்ளால் வாயுக்குள் போய்கொண்டிருக்கும். எப்படா முடியும் இந்த தேவாரம் என்னு தவமிருப்போம்.ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

அந்தக்காலத்தில நான் திடீரென்று பெரிய பேச்சாளரா மாறிப்போனேன்.

சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி சக்திக்கு நவராத்திரி

போன்ற பத்து வசனங்களைப்பாடமாக்கி வெற்றிகரமாக ஒப்பித்தல் அதுதான் என்னைப்பேச்சாளர் ஆக்கியது.

அப்பிடியே பத்து வசனங்களையும் தலைகரணமாகப்பாடமாக்கி தலையை இடமிருந்து வலமாகவும் பிறகு வலமிருந்து இடமாகவும் ஒரோ சீராக ஆட்டுவதற்கும் பழகி(எல்லா பார்வையாளர்களுடைய முகத்தையும் பார்க்க) அப்பாவின் சால்வையை வேட்டியாகச் சுற்றியபடி கடைசியாக விஜயதசமி அன்று மேடையில் ஏறினால்

பிறகென்ன, பெருமதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,ஆசிரியர்களே,என்சக மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் இந்நேர வந்தனங்கள் என்று தொடங்கவே குரல் தழுதழுக்கும் மெல்லாமாய் கண் இருட்டி மண்டைக்கள் பட்டாம் பூச்சி பறக்கும். ஒரு மாதிரி சமாளித்து முதலாவது வசனத்தை பேசி முடித்து

நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை தேவியையும் அடுத்த மூன்று நாட்களும்…. அடுத்த மூன்று நாட்களும் தலைகரணமாப் பாடமாயிருந்தது திடீரென்று மறந்து போகும்… அடுத்த மூன்று நாட்களும் அடுத்த மூன்று நாட்களும் என்று டைப்படிக்க .. ஒரு ஓரமாக மூலையில் இருக்கும் ஒரு வாத்தியார் எடுத்துக்கொடுப்பார் செல்வத்தை செல்வத்தை என்று ரகசியமாக சத்தம் வரும் மூலையில் இருந்து.. உடன பிக்கப்பாகி அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி சரஸ்வதியையும் வேண்டி விரதமிருப்பர் என்று ஒரு வழியாக செல்வத்துக்கு துர்க்கையையும் கல்விக்கு லக்சுமியையும் வீரத்துக்கு சரஸ்வதியையும் அதிபதிகளாக அறிவித்து விட்டு மேடையை விட்டு இறங்க வேர்த்து விறுவிறுத்துப்போகும்.

பிறகு பிறகு நடுக்கமில்லாமல் பத்து வசனத்தையும் அடுத்த வருசம் சொல்லிப்பழகி பள்ளிக் கூடத்தில் புகழ் பெற்ற பேச்சாளராகவிட்டேன்.

ஒரு வழியாக எல்லாரும் தங்கள் கூத்துக்களை நிகழ்த்தி முடிக்க வாணிவிழா முடிவுக்கு வரும். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஆசைஆசையாப் பொங்கும் வீட்டை போக மனமில்லாமல் அப்பிடியே ஒவ்வொரு வகுப்பறையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வருவோம் கொஞ்சம் பெரியவகுப்பு மாணவர்களின் (கானாபிரபாவின்) வகுப்பறைகளில் வாணிவிழாவை ஒட்டிய ஒரு மார்க்கமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு வகுப்பில் வாணி எண்டொரு பிள்ளையிருந்தால்..

“அடி வாணி உன்வீடும் வளவும்
நானறிவேன்
உன் காணியை கொப்பரை எனக்கெழுதச்சொல்லு..”

வேணியெண்டிருந்தால்…

“வாணி விழாவிற்கு வீணி
வடிய வடிய வந்திருந்த
வேணியர்க்கும் வந்தனங்கள்”

கசிந்தா எண்டொருத்தி இருந்தாள்
அவளுக்கு எழுதியிருந்தது…

“கைகசியக் கசிய கற்கண்டு
கொண்டு வந்த கசிந்தாவுக்கு வந்தனங்கள்”

பிறகு இப்பிடியெல்லாம் சந்தோசமா கொண்டாடின வாணிவிழாக்கள் முடிஞ்சு போய் பள்ளிக்கூடக்கட்டிடம் உடைஞ்சுபோய் அல்லது அதைவிட்டிட்டு இடம்பெயர்ந்து போய் வாணிவழாக்கள் கொண்டாடப்பட முடியாமல் போயின அல்லது அடக்கமாக கொண்டாடப்பட்டன….

பிறகு எங்கள் வாணிவிழாக்களில் கவிதைகள் இப்படியிருந்தன
“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கண்ணிவெடியல்லவா”


கானாபிரபாவின் பதிவைப்பார்த்தவுடன் எனக்கும் ஏதோ நவராத்திரி ஞாபகங்கள் தலைகாட்டத்தொடங்கிவிட்டது அதற்காக முதலில் அவருக்கு நன்றி

த.அகிலன்
சரஸ்வதி பூசை மீள்பதிவு....

Friday, September 28, 2007

"எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே" - மலைக்கோட்டை விமர்சனம்.

ஏய்!!!!!!!
சர்புர் என்று பறக்கும் டாடாசுமோக்கள்.. மற்றும் இதர கறுத்தக்கலர் புதியவாகனங்கள் எல்லாம் டயர் கிறீச்சிட நிற்க மூட்டை மூட்டையாய் குண்டர்களோடு வந்து இறங்குகிறார் வில்லன். சோவெனக் கொட்டுகின்ற மழை சட்டென்று ஒரு கொலை. முதல் 2 நிமிடத்திலேயே வெறுத்து விட்டது எனக்கு அடடா தெரியாம நுழைஞ்சுப்புட்டியேடா...

இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை எதிர்பார்த்து போனேன். கொஞ்சநேரமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கலாமேன்னுட்டு. கவுத்துப்புட்டார் பூபதிபாண்டியன்.

ஊரையே கலக்குகிற வழமையான வில்லன் அவருக்கு ஒரு பாசக்காரத் தம்பி. (இப்ப எல்லாம் ஹீரோக்களை விட வில்லன்களிற்குத்தான் தனது உடன்பிறப்புக்களிற்காக துடித்துப்போகிற சான்சைத்தருகிறார்கள் இயக்குனர்கள்.)

“எத்தினை பேர்றா? என்று அடிபட்டுக்கிடக்கும் தம்பியைப்பார்த்து பதறியபடி வில்லன் கேட்க. “ஒருத்தன்தாண்ணே”
என்று பதுங்கியபடி எல்லாப்படங்களிலும் அடியாட்கள் சொல்கிற மாதிரி ஒரு வீரமான கதாநாயகன்.

தனது சொந்த ஊரில் ஒரு சிமோல் வில்லனோடு தனது வீரத்தைகாட்டி அதனால் கைதுசெய்யப்பட்டு தினமும் கையெழுத்திடுவதற்கு திருச்சிக்கு போகிறார் ஹீரோ. அங்கே காக்காய்க்கு சோறு போடுகிற பரியாமணியைப்பார்த்ததும் கட்டினால் இவளைத்தான் கட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொண்டு ஊரிலுள்ள காக்காய்களிற்கெல்லாம் சோறுவைத்துக்கொண்டு திரிகிறார். (காண்பர்களிடமெல்லாம் காக்காய்களிடம் இரக்கம்காட்டுமாறு கருணை மனு வேறு) ஆனால் அப்பாவின் ஆபரேசன் செலவுக்கு சேர்த்த பணத்தையெல்லாம் படிப்புச்செலவுக்காக கட்டி அப்பா இறந்தபிறகும் படித்துக்கொண்டிருக்கிற பிரியாமணிக்கோ இவரது காதலை ஏற்றுக்கொண்டால் எங்கே தன்படிப்பு பாழாகிவிடுமே என்கிற பயம். மறுக்கிறார் நம்ம ஹீரோ கேட்காமல் மறுபடியும் பிரியாமணியைக்காக்காய் பிடிக்க அவரோ இவரிடமிருந்து தப்பிக்க நான் வேறொருத்தரை காதலிக்கிறேன் என்கிறார். உடனே புரட்சித்தளபதி சோகமாகி (அதாங்க நம்ம விசால்) யாரது என்னை ஜெயித்து உங்க மனசில இடம்பிடிச்சவர் அவர் காலைத்தொட்டு கும்பிடணும் என்று தத்துவமெல்லாம் பேச. பிரியாமணி கைகாட்டியதோ வில்லனின் உயிருக்குயிரான தம்பி..!!! நம்ம ஹீரோ அப்பாவியாய் !! அவரிடம் போய் வாழ்த்துச்சொல்ல அவருக்கு பிரியாமணிமேல ஒரு இது வர.. வில்லன்தம்பி பிரியாமணியை விரட்டோ விரட்டென்று விரட்ட..... அவர் விசாலிடம் நான் சும்மாதான் சொன்னேன் நான் யாரையும் காதலிக்கவில்லை என்று அபயம் புக.. பிறகென்ன

“ஏய் உன்னை விடமாட்டன்ரா”
“அடிங்கடா அவனை”
தூக்கிட்டு வாங்கடா அவனை/ளை என்று”
திரை இரைச்சல்களால் நிரம்புகிறது. கடைசியில் என்னவாகிறது இதெல்லாம் நான் சொல்லியா தெரியணும் நம்ம ஹீரோதான் கெலிச்சார்னு.

முதல்பாதியில் காமெடி இருக்கிறது என்று சொல்லலாம். விசாலுக்கு கொஞ்சம் பொருந்தித்தான் இருக்கிறது காமெடி. விசால் இன்னொரு விஜய் ஆகிற முயற்சியில் இருக்கிறார் என்பது தெரிகிறது."புரட்சித்தளபதி" என்கிற அடைமொழி எரிமலைக்குழம்பாய் திரையில் வழிகிறது.(ரொம்ப மினக்கெடுகிறார்) அவரது ஸ்டைலும் கொஞ்சம் போக்கிரி விஜயை ஞாபகப்படுத்துகிறது.

அடடே முத்தழகுவா இவர். பருத்திவீரனில் பார்த்ததுக்கு மொட்டை அடிக்கலாம் போல. அப்படி ஒரு ஆளாக வருகிறார் பரியாமணி. அவரும் ஹீரோவும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகமலே இரண்டு பாட்டுக்களிற்கு ஆடிவிடுகிறார். பிறகு காக்காய்க்கு சோறு வைக்கிறார். இரண்டு மூன்று சீன்களில் அழுகிறார் அவ்ளோதான். (அமீர் பார்த்தா ரூம்போட்டு அழுவார்) பாடல்காட்சிக்களில் ஏகத்துக்கும் ஏறிக்கிடக்கிறது ஆடை அப்டியே மெயின்ரெயின் பண்ணவேண்டும் அம்மணி என்று இறைவனை வேண்டுவோம்.

போக்கிரிக்கு பிறகு மறுபடியும் தாளமிட வைத்திருக்கிறார் மணிசர்மா. “ஆத்தா ஆத்தோரமா வாறியா” இன்னும் கொஞ்சநாளைக்கு சேனல்களில் போட்டு கிழிக்கப்படும். “தேவதையே வா வா” நல்ல கவித்துவமான மெலடி. யுகபாரதியின் பேனா பூபதிபாண்டியனுக்கு கொஞ்சம் ஓவர்ரைம் வேலைதான் செய்கிறது போல.

ஆசிஸ் வித்தியர்த்தியை ஒரு கூச்சலுடன் பார்க்கையில் இருக்கிற வில்லன் போதாதுண்னு இவர் வேறயா என்று தோன்றுகிறது. பிறகு அட இவர் வில்லனில்லையா என்று மனசுக்குள் வருகிற நிம்மதியை காப்பாத்துகிறார் மனுசன். ஆசிசும் ஊர்வசியும் வருகிற சீன்கள் செமகாமெடி அதுதான் படத்தை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறது. இதில் ஏகத்துக்கு இரைச்சல் போட்டுக்கொண்டிருந்த வில்லன்களையெல்லாம் கொண்டு வந்து காமெடி பண்ணவைத்திருக்கிறார் இயக்குனர் அதிலே பொன்னம்பலமும் ஒருவர் அவருல்லாம் ஏன்வாறார் என்ன பண்றார் ஒண்ணுமே விளங்கலே படத்துல .. பூபதி பாண்டியன் காமெடியை கைவிட்டு கொஞ்சம் அடிதடிக்கு முயற்சிக்கிறார் போல சரியா வரல்ல அவருக்கு..வேற எதுனாச்சும் முயற்சிக்கலாம்.


நானும் எனது கருத்துக்களை படத்தின் பின்பாதி மாதிரி குழப்பாம இழுக்காம முடிச்சுக்கிறேன்.
மலைக்கோட்டை வழக்கமான தமிழ்சினிமா மல்லுக்கட்டு. நான்தான் கொஞ்சம் வாய்விட்டு சிரிக்கலாம்னு (காமெடி படமா இருக்கும் எண்டு) பூபதிபாண்டினை நம்பிப் போய் பாத்து ஏமாந்துட்டேன்... பாருங்க மக்களா ஆனா என்ன மலைக்கோட்டை படத்தை திரை அரங்க இருக்கைகளோடு கொஞ்சநேரம் மல்லுகட்டி பொறுமையா இருந்தாத்தான் முழுசா பார்க்கலாம்.....

இனி உங்க இஸ்டம்...

Thursday, September 13, 2007

சொற்களைத் திருடிய வண்ணத்திகள்....



நான்கு சுவர்களும்
மௌனித்திருந்த ஒருநாளில்
எதை எழுதுவது
எனத் தெரியாது விட்டு வைத்த
என் நாட்குறிப்பின்
இப்பக்கங்களில்
இப்போது நான்
உன் மௌனத்தை எழுதுகிறேன்.


உன்மௌனம்….
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது….

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு…
தம் சிறகுகளால்
காலத்தை கடந்தன வண்ணத்திகள்…

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப்பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை….

Friday, September 07, 2007

சாத்தானுடன் போகும் இரவு



சாத்தான்கள்
ஊருக்குள்திரும்பின.
சாத்தான்கள் எப்போதும்
புன்னகைகளை
வெறுப்பவை..

பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம்
என்றாகியது
நாள்.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்தசாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்.

இரவுக்குக் கைகள்
முளைத்தது..,

கேள்விகளற்ற
வெறுங்கணத்தில்
இரவின் கரங்களில்
கோடரிகள் முளைத்தன..,

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


விடியலில்
உருவங்களின் கரங்களில்
இருந்தது
இரவின் கோடரி.

சூரியனைப்போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.

Thursday, September 06, 2007

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை...

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடி
மக்கள் தொலைக்காட்சி.
ஈழம் வன்னியில் இருந்து - கருணாகரன்


தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி.

சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது நம்பமுடியாத ஆச்சரியந்தான். தமிழகத்திலிருந்து சினிமாவையே மையமாகக்கொண்டு பெருந் தொலைக்காட்சிகள் இயங்கிவரும் சூழலில், அதிலிருந்தது மாறி தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில், மக்கள் தொலைக்காட்சி சவாலாக இயங்குகிறது. இது தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத்தரும் ஒரு வேறுபட்ட நிலை.

தமிழ் வாழ்வையும் தமிழ் மண்ணின் அடையாளத்தையும் மீள் உருவாக்கம் செய்யும் முனைப்போடு இயங்குகிறது இந்தத்தொலைக்காட்சி. கவனிக்கப்படாதிருக்கும் தமிழ் அடையாளத்தின்மீது ஒளிபாய்ச்சும் பெரு முயற்சி இது. இது மிகச்சவாலானது. ஒரு பாரம்பரியமாக சினிமாவை மையமாகவே வைத்து சனங்களை அதுக்கேற்றமாதிரி உருவாக்கியிருக்கும் தொலைக்காட்சிகளின் மத்தியில் இவ்வாறு சோதனை முயற்சியைத் தொடங்கி அதில் வெற்றி பெறுவது சிரமமானது. ஆனால் வெற்றி பெற்றிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

இப்படி ஒரு தொலைக்காட்சி தமிழில் ஒளிபரப்பாகிற செய்தியே பலருக்குத்தெரியாது. அதுவும் தமிழ்ச்சினிமா இல்லாமல் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியா என்று அவர்கள் ஆச்சரியப்படவும்கூடும். சினிமா இல்லாத தொலைக்காட்சியைப்பார்க்க முடியுமா என்று அவர்களால் கற்பனைகூடப்பண்ண முடியாது. ஆனால் மக்கள் தொலைக்காட்சி சினிமா இல்லாமலே தொய்ந்து போகாமல் விறுவிறுப்பாக இயஙகுகிறது. தமிழில் ஒரு நல்ல தொலைக்காட்சி வராதா என்று ஏங்கியவர்கள் மகிழக்கூடியமாதிரி இந்தத் தொலைக்காட்சி இருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் அடையாளங்களைக் காப்பாற்றுவதற்கான எத்தனங்கள் தீவிர சவாலுக்குரியவை. உலகமயமாதல் என்ற பெரும் அலைக்குள் அடையாளங்களைக் காப்பாற்றுவதே ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள தீரா நெருக்கடி. இதுவே இன்று சமூகங்களின் இருப்புக்கும் விடுதலைக்குமான பெரும் சவால். இந்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறது மக்கள் தொலைக்காட்சி.

தமிழ்நாட்டின் நிலக்காட்சிகளை மக்கள்தொலைக்காட்சி காண்பிப்பதிலிருந்தே இந்த மாறுதலைக்காணலாம். வெவ்வேறான நிலக்காட்சிகள் சங்க இலக்கியத்தில் திணைகளாக பதியப்பெற்றிருக்கின்றன. இந்தத்திணைகளை நவீன இலக்கியம் இன்றைய வாழ்வினூடாக காண்பிக்கின்றது. வட்டார வழக்கென்றும், பேச்சு மொழியென்றும் அது பலநிலைகளிலும் பல முகங்களோடும் அறிமுகமாகயிருக்கிறது.

குறிப்பாக நாவல்களில் இந்த அடையாளம் தெளிவாகியிருக்கிறது. ஆனால் இலக்கிய வாசகர்களுக்கப்பால் இந்தமாதிரி விசயமெல்லாம் பொதுப்பரப்பில் சனங்கள் அறிந்ததில்லை. இப்போது காட்சியூடகத்தின் வழியாக இது அறிமுகமாகும்போது இதன் ஆழமும் பெறுமதியும் அதிகமாகிவிடுகிறது. இதுவரையிலும் பார்வைப்பரப்பிலிருந்து பெருங்காட்சியூடகங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கவனிக்கப்படாத வெளி அதன் மெய்த்தோற்றத்தோடு அறிய வாய்த்திருக்கிறது.

இந்தத்திணைகளின் மனிதர்களுடைய வாழ்க்கையும் அவர்களின் பண்பாடும் இன்னும் குலையாதிருக்கிறது என்பதை மக்கள் தொலைக்காட்சி சாட்சிபூர்வமாகச் சொல்கிறது. நகர்மயமாதல் என்பது இன்று உலகமயமாதலை எந்தக்கேள்வியும் எதிர்ப்புமின்றி முழுமையாக அங்கீகரித்தல் போலாகிவிட்டது. கல்வி தொடர்பாடல், வசதிவாய்ப்புகள் எனச்சகலதும் இருந்தும் சுய அடையாளத்தைக் காப்பாற்ற முடியாதிருக்கும் நகர்வாசிகளை விடவும் இந்த வாய்ப்புகள், கல்வியறிவு என்பன இல்லாத கிராமவாசிகள் சுய அடையாளத்தோடு இருக்கிறார்கள். இதை மக்கள் தொலைக்காட்சி தெளிவாக்கியிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் மக்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர்களும் பிரதானமாக கிராமவாசிகளாகவே இருக்கிறார்கள். நகர்வாசிகளின் பார்வைப்பரப்பும் ரசனையும் சன் ரி.வி, ஜெயா ரி.வி என்பவற்றால் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டன. அந்தத்தொலைக்காட்சிகளின் சினிமா சார்ந்த அம்சங்களுக்கப்பாலான தெரிவை அவற்றின் பார்வையாளர்களாகிய நகரவாசிகள் அறியமுடிவதில்லை. இங்கே கிராமம், நகரம் என்ற பிரிப்பை நாம் செய்யவில்லை. உள்ள யதார்த்த நிலைமையே சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்கள் தொலைக்காட்சி தமிழ் வாழ்க்கையை மையப்படுத்தும்போது அது தவிர்க்கமுடியாமல் கிராமியத்தன்மையைப்பெற்றுவிடுகிறது. அதற்காக அது முற்றுமுழுதாக கிராமத்துக்குள்தான் சரணடைந்திருப்பதாகவும் கொள்ளமுடியாது. தமிழ் அடையாளம் என்பது கிராமங்களில்தான் இன்னும் குலையாதுள்ளது. அதனால் அந்த வாழ்வைத்தேடிச் செல்லும்போது கிராமங்கள் முதன்மைபெறுகின்றன.

இதுவரையிலும் கிராமங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதோடு மட்டும் நின்ற பெருங்காட்சியூடகங்களுக்கு இதுவொரு பெரும் சவாலே. பெருங்காட்சியூடகங்கள் கிராமங்களை வேடிக்கைப்பொருளாகவும் பயன்படுத்தல் என்ற நிலையிலுமே பயன்படுத்தி வந்தன. அல்லது அவ்வாறுதான் கொண்டு வந்தன.

ஆக பெருங்காட்சியூடகங்களில் அடையாளங்களைப் பேணவேண்டும் என்ற பிரக்ஞை கிடையாது. அவை முற்று முழுதாக வணிக நலனை மட்டுமே நோக்காகக் கொண்டவை. வணிகத்துக்கு எது அதிக சிரமமில்லாது கூடுதலான ஆதாயத்தைத்தருகிறதோ அதையே அவை பின்பற்றும். அடையாளங்களைப் பேணுவதென்பது இன்றைய நிலையில் பெருஞ்சவாலுக்குரியவை. அதேவேளையில் அது அதிகக் கவர்ச்சியும் இல்லாதது.

எனவே பெருங்காட்சியூடகங்களின்; வழங்கல் வணிகத்துக்கிசைவான கவர்ச்சித்தன்னையைக் கொண்டிருப்பதால் அந்த ஊடகங்கள் இலேசாக பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கின்றன. தமிழ்ச்சூழலில் சினிமா என்ற பெருங்கவர்ச்சிப்பண்டம் ஏற்கனவே நன்றாக வேரோடியிருப்பதால் அதை மையமாக வைத்து இந்தப் பெருங்காட்சியூடகங்கள் தம்மை வடிவமைப்பதால் இன்னும் அதிக பலத்தை இவை பெற்றுவிடுக்ன்றன. இநத ஊடகங்கள் எவ்வளவுக்கு கூடுதலாக பலம் பெறுகின்றனவோ அந்தளவுக்கு இவற்றின் பார்வையாளர்களின் பலம் குறைவடைகின்றது.

ஒரு சரியான ஊடகப்பாரம்பரியத்தில் ஊடகமும் அதன் நுகர்ச்சியாளரும் சமநிலையிலும் சம பலத்தோடும் இருப்பது அவசியம். நுகர்ச்சியாளரின் அறிவுத்தரத்தை அந்த ஊடகம் உயர்த்தும்போது இந்தச் சமநிலை உருவாகிறது. ஆனால் தமிழ்க்காட்சியூடகம் என்பது அது சினிமாவாக இருந்தாலும் தொலைக்காட்சியாக இருந்தாலும் அவற்றின் பார்வையாளர்கள் அறிவாலும் பொருளாதாரத்தாலும் சமூகநிலையிலும் சுரண்டப்படுகிறார்கள். ஒரு மாஜ உலகிற்கு மக்கள் அழைத்துச்செல்லப்பட்டு இந்தச்சுரண்டல் நடக்கிறது.

மக்கள் தொலைக்காட்சி இந்தப்பாரம்பரியத்திலிருந்து முற்றாகி விலகி மக்களை அறிவூட்டி, அவர்களைப்பலம் பெற வைக்கும் ஊடகப்பாரம்பரியத்தில் இயங்குகிறது. இதனால் அது பலவற்றிலும் சில அடிப்படைகளை உருவாக்குகிறது. முதலில் அது தமிழ்ச்சினிமாவை, அதன் உழுத்துப்போன தனத்தை நிராகரித்து விட்டது. ஆனால் நல்ல சினிமா பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் வாழ்வு என்று அடையாளம் காணும் விசயங்களை அது நிகழ்ச்சிகளாக்கி தன்னுடைய பார்வையாளருக்குக்கொடுக்கிறது.

தமிழ்ச்சினிமாவில் பொரும்பாலானவை ஏதொவொரு வகையில் கிராமக்காட்சிகளையும் அந்த மக்களின் பேச்சுமொழியையும் தவிர்க்கமுடியாமல் எடுத்தேயாள்கின்றன. பாடல்காட்சிகள், அவற்றுக்கான உடைகள், நகைச்சுவைக்காட்சிகள், அந்த நடிகர்களின் பேச்சு மற்றும் அங்க அசைவுகள் எல்லாமே கிராமத்தை ஆதாரமாகக்கொண்டவை. ஆனால் அந்த வெளிப்பாடு வணிகரீதியானது. அது ஒரு போதும் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற பிரக்ஞையோடு அணுகப்படவில்லை.

மக்கள் தொலைக்காட்சியின் ஆதாரம் தமிழ் வாழ்வின் அடையாளங்களையும் யதார்த்தத்தையும் மையமாகக் கொண்டிருப்பதால்; இதன் தயாரிப்புத்தளம் அந்த அடையாளங்களோடு வாழும் மக்களும், அவர்களின் வாழிடமும் எனவாகிறது. எனவே இதன் பார்வைப்பரப்பும் கிராமம் சார்ந்த மக்கள்தான். ஏனெனில் இந்த மக்கள் தங்கள் வாழ்வையும் தங்களின் நிலத்தையும் அதன் யதார்த்தத்துடன பார்க்க விரும்புகிறார்கள. அவர்கள் தங்களின் வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் முதற்தடவையாகப் பார்க்கிறார்கள். ஆங்கிலம் கலக்காத தமிழ் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள்வேறு இதில் இருப்பதால் மேலும் அவர்களால் நெருக்கம் கொள்ள முடிகிறது. அத்துடன் தாங்களே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாவும் நிகழ்ச்சிப்பங்கேற்பாளர்களாகவும் இருக்கிறார்கள்.

அறிவுபூர்வமாக பார்வையாளர்களை அணுகவேண்டும் என்ற அடிப்படை இங்கே பேணப்படுகிறது. நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களும் சமூகப்பொறுபபுடன் இருக்கவேண்டும். பார்வையாளர்களும் அறிவுபூர்வமாக மாறவேண்டும் என்ற சமநிலைப்பயணம் இங்கே நிகழ்கிறது. மக்களின் வாழ்க்கையை படைப்பாக்கம் செய்வதன்மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் பெறுமானத்தையும் சமூகவியல் பெறுமானத்தையும் இதன்மூலம் வழங்கமுடிகிறது. இங்கே புனைவுக்கு அதிகம் இடம் குறைவு. கிராமிய, நாட்டாரியல் கலை அம்சங்கள்தான் இவற்றின் புனைவுவெளியாகின்றன. அப்படியென்றால் இதில் நவீன புனைவு வெளிக்கு இடமில்லையா? இருக்கு. அறிவுமயமாதலிலான அணுகுமுறையில் அது அதற்குரிய யதார்த்தத்தில் உருவாகும்.

மக்கள் தொலைக்காட்சியில் சாதாரண கிராம மக்களில் இருந்து படித்தவர்களும் துறைசார்ந்தோரும் சமூக அக்கறையுடையோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டுப்பங்கேற்பு தொலைக்காட்சியையும் அதன்பார்வையாளர்களையும் இயல்பாகத் தரமுயர்த்துகிறது.

மக்கள் தொலைக்காட்சி சித்திரைப்புத்தாண்டுக்கு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் இதற்கு ஆதாரம். தமிழ் வாழ்வை அதன் உயிர்ப்போடும் அழகோடும் அது அன்று வழங்கியது. பெருங்காட்சியூடகங்கள் சினிமாவிலும் சினிமாக்காரர்களிலும் மையம் கொண்டிருக்க மக்கள் தொலைக்காட்சிமட்டும் அதிலிருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் வாழ்வில் நிகழ்ந்த பல கலாபூர்வமான நிகழ்ச்சிகளை அன்றைக்கு அது தொகுத்திருந்தது. இந்தத்தொகுப்புக்கு அது செய்திருக்கவேண்டிய கள ஆயவு மிகப்பெரியதாகவே இருக்கும். அதற்கேற்றமாதிரியே அவை ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. இதில் கள ஆய்வு முக்கியமானது. பி.பி.ஸி போன்ற தொலைக்காட்சிகள் இதில் மிகத்தேர்ச்சி பெற்றிருக்கின்றன. அந்தளவுக்கு அவற்றின் நிகழ்ச்சிகளும் தரமாகவே இருக்கின்றன. தமிழில் இந்தமாதிரி ஒரு தொலைக்காட்சி இதுவரையில் இல்லை. அதற்கான சிந்தனையும் உழைப்பும் இல்லையென்பதே இதற்குக்காரணம். சகல நிகழ்ச்சிகளுக்குமான தயாரிப்பு ஒரு பொருளில் சார்ந்திருந்தால் அது எத்தனை இனிமையாக இருந்தாலும் தெவிட்டிவிடும்.

மக்கள் தொலைக்காடசிக்கும் இந்தப்பிரச்சினை உண்டு. தொடர்ந்து விவரணங்களில் தங்கியிருப்பதும் தனியே கிராமங்களுக்குள் மட்டும் சுழன்று வருவதும் அதைச்சுருக்கிவிடும். ஆனால் இதுதொடர்பான மதிப்பீட்டையும் அவதானிப்பையும் மக்கள் தொலைக்காட்சி கவனத்தில் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக இந்தத்தொலைக்காட்சியில் தமிழகத்தின் பெரும்பாலான புத்திஜீவிகளும் சமூகவியலாளர்களும் இணைந்திருக்கிறார்கள். அதற்காக தனியே அறிவுஜீவித்தனத்துடன் அது தனிமைப்பட்டுப்போகவும் இல்லை என்பது இதுவரையான ஆறுதல். ஆனால் இனிவரும் நாட்களில் தமிழ்ச்சனங்களிடம் அவர்களின் ரசனைப்பாரம்பரியத்துக்கூடாக எவ்வாறு மக்கள் தொலைக்காட்சி தன்னைத்தக்கவைக்கப்போகிறது என்பதைப்பொறுத்தே எல்லாமிருக்கிறது.

தமிழ்மக்களைப்பொறுத்தவரை அவர்கள் எதற்கும் மறுப்புச்சொல்லும் பாரம்பரியமுடையவர்களில்லை. நல்லதையும் ஏற்பார்கள், கெட்டதையும் ஏற்பார்கள். அதோடு எந்த நேரத்தில் எதை ஏற்பார்கள், எதைவிடுவார்கள் எனவும் சொல்லமுடியாது.

தமிழகத்தைத் தளமாகக்கொண்டு மககள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகினாலும் அது தமிழ்வாழ்வின் சுவடுகளையும் அது தொடர்பான கம்பீரத்தையும் தருவதையிட்டு நாம் மகிழலாம். அத்துடன், தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடியாகவும் அது இருக்கிறது. தமிழகத் தொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக ஈழத்தமிழரும் இருக்கிறார்கள் என்பதால் நாம் இவற்றையெல்லாம் கவனங்கொண்டேயாக வேண்டியுள்ளது. ஏனெனில் இவற்றின் நன்மை தீமைகள் எங்களையும் நேரடியாகப் பாதிக்கிறதல்லவா.

நம்பிக்கை/காத்திருப்பு


பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்....

தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்....

நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி...

Friday, August 31, 2007

ஏண்டா நீயாடா ஓனரு? (ஒலிப்பதிவு)




இது ஏற்கனவே வரிவடிவில் இடப்பட்டிருந்தாலும் இங்கே. இருந்தாலும் நம்ம கரும்புக்குரலில்(பில்டப்பு)கேட்பது மாதிரி வருமா? ஆனால் நிறைய கேட்கவேண்டும் என்று தோன்றுகிறது இப்போது நிறைய விசயங்களில் உடன்படுவது மாதிரியான மனநிலை உரையாடலில் போது இருந்தாலும் இப்போது மாறிவிட்டிருக்கிறது. அந்த மாற்றங்களிற்கு லிவிங்ஸ்மைலின் இந்தபதிவும் அந்த திரைப்படத்தின் பின்னால் அந்த திரைப்படத்தின் தாக்கம் அரவாணிகளின் சுயவாழ்வில் ஏற்படுத்திய இடர்களும் கூட மாற்றத்திற்கு ஒரு காரணம்.

மற்றபடி தலைப்புக்கு காரணம்(ஹி ஹி ஹி)

Monday, August 27, 2007

மந்திரக்காரன்"டி" அம்மான்"டி"....

அந்த முதலாமாண்டு நீலப்புத்தகப்பையை இன்னமும் நினைவிருக்கிறது. அந்த இலுப்பை மரத்தடியும் முருகுப்பிள்ளை ரீச்சரையும் கூடத்தான் ஞாபகத்தின் சுவர்களில் அழுத்தமான ஓவியங்களாய் வரைந்து வைத்திருக்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் விட அவனது நினைவுகள் அற்புதமானவை தனக்கென ஒரு சுவற்றையே எனது நினைவறையில் அவனுக்கு ஒதுக்கிவைத்திருக்கிறான் அவன். முயல் அவனது பட்டப்பெயர் முயலைப்போன்ற பெரிய காதுகள் அவனுக்கு நான் உண்மையில் எனது பெரியகாதுகளை மறைக்கத்தான் அவனது பெரிய காதுகளை நக்கலடித்துக்கொண்டிருப்பேன்.ஆனால் அவன் அதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. பட்டப்பெயர் சொல்லி கோபப்படுத்த முடியாதவனாக அவன் இருந்தான்.

பள்ளிக்கூடத்தின் முதல் நாட்கள் எல்லோருக்கும் திகிலும் தித்திப்பும் நிறைந்த அனுபவங்களாயிருக்கும். அந்த முதல்நாளில் எல்லோரும் அடுத்தவன் முகத்தை பார்த்து பார்த்து அழுதபடியிருப்பார்கள். நானும் அவர்கள் எல்லோரையும் போலத்தான் அழுதுகொண்டிருந்தேன். ஏன் அழுகிறியள் அழக்கூடாது இந்த வார்த்தையை சொல்லிச்சொல்லி ரீச்சர்மார் அலுத்துப்போய்விடுவார்கள். எதற்கென்று தெரியாமல் அழுகை பிய்த்துக்கொண்டு வரும். ஒருவேளை இனிமேல் இங்கியேதான் இருக்க வேண்டும் என்கிற நினைப்பும், மறுபடியும் வீட்டுக்கு போவதற்கான ஒரு பிரயத்தனமுமாக எல்லோரும் அழுகொண்டிருப்பார்கள். அது பள்ளிக்கூடத்தில் முதல்நாளில் எல்லோருக்குமான எழுதாத விதி. சிலர் கொண்டு வந்து விடும்போதே அழுது ஆர்ப்பாட்டம் செய்து தகப்பன் மாரின் ஒற்றைக்கையில் தொங்கிக்கொண்டுதான் வகுப்பறைக்கள் வருவார்கள்.
பிறகு வளர்ந்தாப்பிறகு பள்ளிக்கூடமே கதி என்று இரவிரவா சரஸ்வதிபூசைக்கு கரும்பு கட்டினதும் மேடையை அலங்கரிச்சதும். ஒளிவிழாவிற்கு கேக்கடிச்சதும் என்று போன உயர்தர வயதுகளில் எப்போதாவது எனக்கு முதல் நாள் அழுகை ஞாபகம் வரும். என்னையுமறியாமல் சிரிப்பு பீறிட்டுக்கிளம்பும்.
நான் முதலமாண்டில் பள்ளிக்கூடம் வந்தவுடனெல்லாம் அழவில்லை வகுப்பில் எல்லாரும் அழ அழ கொஞ்சம் கொஞ்சமாக ஒரு மண்ணெண்ணை மோட்டசைக்கிள் ஸ்டார்ட் ஆகிற மாதிரி என்னையும் அது தொற்றிக்கொண்டது. ஆனாலும் முதல்நாளில் எனக்கு கொஞ்ச நேரத்தில் அழுகை போரடித்து விட்டது. நான் சுற்றி எல்லாரையும் பார்த்தேன். மரத்துக்கு கீழே குண்டிக் காச்சட்டை ஊத்தையாகும் என்கிற எந்தவிதமாக எண்ணங்களும் குறிப்பாக சுரணை அப்போதெல்லாம் இருக்கவில்லை. அல்லது நல்ல சுத்தமாக இருக்கிற கதிரையை ஊவ் உவ் எண்டு நாலுதரம் ஊதி அதில எச்சிலைப்பறக்கவிட்டு பிறகு கைக்குட்டையால அதை துடைச்சுப்போட்டு இருக்கிற நாகரிக அறிவெல்லாம் அந்த வயதில் வந்திருக்க வாய்பே இல்லையல்லவா?

நான் எனது புத்தகப்பையை இறுகப்பற்றியிருந்தேன். இப்போதுஒரு வங்கிக்கு விளம்பரம் செய்கிறார்களே தாத்தா கொடுத்த உண்டியலை பொத்திப்பாதுகாத்து கொண்டு போவானே அதைப்போலத்தான் நானும் எனது புத்தகப்பையை இறுகப்பற்றியிருந்தேன். யாரும் களவாடிவிடலாம் என்கிற எண்ணம் எனக்கு வீட்டில் ஊட்டப்பட்டிருந்தது. கவனம் வரேக்குள்ள கொப்பி,தொப்பி சிலேட் பென்சில் எல்லாம் மறக்காம இருக்கோஎண்டு பார்த்து கொண்டு வரவேணும் என்ன….. வீட்டில் வெளிக்கிடுத்தி விடும்போதே அக்கா சொல்லுவாள். நான் இறுக்கி கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தேன் எனது புத்தகபாக்கை. என்னைமாதிரியே இன்னொருத்தனும் அழுவதை நிறுத்திவிட்டு புத்தகபாக்கை கட்டிப்பிடித்துக்கொண்டு நின்றான். என்னுடையதே மாதிரி புத்தகபாக்.அதே நீலக்கலர் நான் வியப்பாக அவனைப்பார்த்தேன்.அவனும் பார்த்தான் அவனும் நோக்கினான் இந்த அகிலனும் நோக்கினான் அன்றைக்கு பூத்த ஒரு புன்னகையின் கணம்தான் எனது வாழ்வில் நட்பின் முதல் நொடி. ஒரு வெளி நபருடன் நட்பாக எனது புன்னகையை பகிர்ந்து கொண்ட முதல் தருணம் அது. எங்களது ஒழுங்கை முழுவதிலிலுமே சொந்தக்காரர்தான். யாரும் வெளியாட்கள் கிடையாது. அதனால் எல்லோரும் அண்ணா தம்பி மச்சான் மச்சாள். அக்கா தங்கை இந்த வகையறாக்களிற்குள் அடக்கிவிடலாம். அதனால் நட்பு என்பது கிடையாது. தெருக்களில் விளையாடித்திரிவது என்றாலும் இவர்களுடன்தான்.

பள்ளிக்கூடத்தில் இடைவேளை வரைக்கும் நானும் அவனும் மாறி மாறி முகங்களையும் புத்தகபாக்குகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். ரீச்சர் சரி பிள்ளையள் இன்ரேவல் இப்ப சாப்பாட்டு பெட்டியளை எடுங்கோ . புத்தகபாக்கோடு தண்ணீர்ப்போத்திலும் சாப்பாட்டு பெட்டியுக்க ஏதாவதும் இருக்கும். அநேகமா பாணும் ஜாமும். அல்லது புட்டும் முட்டைப்பொரியலும். அம்மா நான் கழுவுவதற்கு சிரமப்படுவன் என்று நினைத்துக்கொண்டு அடிக்கடி பாணும் ஜாமும் தான் அதிகமா வைச்சு விடுவா. இது பிறகுதான். ஆனால் நான் பள்ளிக்கூடம் போன முதல் நாள் சாப்பாடெதுவும் கொண்டு போகவில்லை. ரீச்சர் ஒவ்வொருவரா என்ன சாப்பாடு கொண்டு வந்தவை எண்டு பார்த்துக்கொண்டே வந்தா ரமேஸ் நீங்கள் என்ன சாப்பாடு கொண்டு வந்தனியள். அவனது பெயர் ரமேஸ் என்று தெரிந்து கொண்டேன். எல்லோரும் இடைவேளையின் போது ஓடித்திரிந்தார்கள். நான் எப்படி அவனுக்கருகில் போனேன் எனத்தெரியாமல் போயிருந்தேன். நான் ரீச்சர் சாப்பாடு கொண்டு வராவிட்டால் அடிப்பாவாக்கும் என நினைத்துக்கொண்டிருந்தேன். ஏதோ புத்தகம் கொப்பி கொண்டு வராததைப்போல. எனக்கு ஆழுகை வெடிக்க தயாராக இருந்தது. அவன் ரீச்சரிடம் ஒரு மலிபன் பிஸ்கெட்டுக்கள் போட்ட சாப்பாட்டுப்பெட்டியை காட்டினான். ரீச்சர் என்னை நோக்கி திரும்பவும் நான் திடீரென்று ரீச்சருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க நினைத்து வீரிட்டுக்கத்த தொடங்கினேன். அடியிலிருந்து தப்பும் வழியாக அது ஒன்றுதான் எனக்கு தெரிந்திருந்தது. வீட்டில் மேசையில் பூ வாஸ் உடைந்திருந்தாலோ அல்லது இன்னபிற இத்தியாதி குழப்படிகளிற்காகவோ அடிவிழப்போவது உறுதி எனத்தெரிந்தால் அடிவிழ முன்பாகவே அழுது. ஒரு தற்காப்பை செய்வேன். அதைப்போல இப்போதும் ரீச்சர் சாப்பாடு கொண்டு வராததற்கு சாத்தப்போறா எண்டு நினைச்சு ஒரு தற்காப்பு அழுகை அழுதேன். ரீச்சர் திடுக்கிட்டுப்போய் ஏனப்பன் அழுகுறீங்கள் எண்டு என்ர கண்ணெல்லாம் துடைச்சு விட்டா அப்ப கொஞ்சம் நிறமா கலரா இருந்த என்னை முத்தமிட்டு தான் ஒரு அகிம்சாவதி என்று ரீச்சர் எனக்கு காட்டு மட்டும் நான் அழுதுகொண்டிருந்தேன். ரீ்ச்சர் சீச்சி ஆம்பிளைப்பிள்ளை அழுகுறதே வெட்கக்கேடு. இப்போது புரிகிறது நான் ஆண்என்கிற எண்ணம் எப்படி எனக்குள் கட்டமைக்கப்பட்டது என்பது. (உடன ரீச்சரால மட்டும் தான் எண்டு சொல்றான் எண்டு கிளம்பவேண்டாம்) அவன் தனது சாப்பாட்டுப்பெட்டியில் இருந்து ஒரு பிஸ்கெட்டை எனக்கு நீட்டினான். நான் அம்மா வீட்டில் படித்துப் படித்து சொல்லியனுப்பிய கண்டஆக்களிட்டயும் வாங்கி சாப்பிடக்கூடாது என்கிற போதனைக்கண்டிப்பை முதல் நாளிலேயே மீறினேன்.

அன்றைக்கு பின்னேரம் வீட்டை சண்டையோ பெரிய சண்டை எனக்கு சாப்பாடு கட்டித்தரவேணும் என்று அடம்பிடித்து அடுத்தநாள் கட்டிக்கொண்டு போய் அவனுக்குப்பகத்தில் தேடிப்பிடித்து இருந்து அ,ஆ.இ,ஈ சொல்லி படித்துவிட்டு சாப்பாடுகளைப் பகிர்ந்து கொண்டு நட்பை வளர்த்துக்கொண்டோம். பள்ளிக்கூடத்தில் சேர்ந்த புதுசில் ரீச்சர் மாருக்க குட்மோணிங் சொல்வதில் ஒரு புழுகம் இருக்கும் எல்லோருக்கும். 8.30 ரீச்சர் நாங்கள் இருக்கிற மரத்துக்கு கீழே வரும் போதே குட்மோணிங் ரீச்சர் என்கிற குரல் அந்த இலவ மரத்தையே ஒருக்கா அசைக்கும். மரமும் தனது கிளைகளை அசைத்து ரீச்சருக்கு குட்மோணிங் சொல்லும். நாங்கள் இருவரும் அதிலும் ஒரு புது ரெக்னிக்கை கையாண்டு எங்களை வித்தியாசமாக்காட்ட முயற்சிகள் எடுத்தம்..( ம்.. அப்பயிருந்து றை பண்றம் இன்னும்...) எல்லாரும் குட் சொன்னாப்பிறகு தான் எங்கட குட்டை தொடங்கி கடைசியா பெரிசா எங்கள் குரல்கேட்கும்படி கத்தி குட்மோணிங்சொல்லி எங்கள் ஆழுமையை காட்டிக்கொண்டிருந்தோம். முருகுப்பிள்ளை ரீச்சர் ஒருக்கா இந்த விளையாட்டுக்கு தடைபோட்டு எங்கள் மரியாதையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்போது. ஒளிந்திருந்து முருகுப்பிள்ளையை முறுக்குப்பிள்ளை ரீச்சர் என்று கத்திவிட்டு ஓட்டமெடுத்தபோது அவா அவனைக்கண்டு விட்டு பிடித்து ஒரு சாத்துப்படி கொடுக்க அவன் என்னை காட்டிக்கொடுக்காமல் தான் மட்டும் அடிவாங்கி நட்புக்கு அவன் முதலாமாண்டிலேயே இலக்கணமாகியிருந்தான். (ஹி ஹி ஹி)

இடைவேளைக்கு ரீச்சர் சாப்பிடச்சொன்னால் மட்டும் சாப்பிடுற பழக்கம் அடுத்தடுத்த ஆண்டுகளில் அருகி மூன்றாமாண்டில் ரீச்சருக்குத் தெரியாமல் பாக்குக்குள் தலையை ஓட்டி ஓட்டி இடைவேளைக்கு முதலே சாப்படை காலிபண்ணிவிட்டு இடைவேளையின் போது டெனிஸ்போலை மைதானத்துக்குள் உருட்டித்திரிந்தோம். சம்போல் என்று ஒரு விளையாட்டு இருந்தது. இரண்டு அணியாகப்பிரிந்து கெர்ண்டு பந்தால் ஒருவனுக்கொருவன் எதிரணியை அடித்துக்கொள்வது. பந்துகள் பட்டு முதுகை நெளிக்கும் போது என்ன புளிக்குதா என்று கேட்டு ஹெக்ஹெக்கே என்று சிரிப்போம். இடைக்கிடை எமக்கும் புளிக்கும். ஒருத்தனாக இருந்த நண்பர் வட்டம் இரண்டு பேராகி பல்கிப்பெருகி பிறகு தோழிகளையும் சேர்த்துக்கொண்டோம். என்னதான் சேர்த்துக்கொண்டாலும் அவளுகள் எங்களை டேய் என்றால் என்ன டேய் என்று சொல்கிறாய் என்று அவளுகளிற்கு அடித்துவிட்டு ஓடுகிற வன்மம் அப்போதிருந்தது.அதான் ரீச்சரும் அம்மாக்களும் சொல்லித்தந்த ஆம்பிளைப்பிள்ளை என்கிற வன்மம். மற்றபடி அவள் பெண் நாங்கள் ஆண் என்கிற வித்தியாசம் எல்லாம் அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் கடைசிவரைக்கும் பெண்களுடனான நட்பு நீடிக்கவிலல்லை ஒரு 5ம் ஆண்டோடு தெறிச்சுப்போய் விட்டது.

அப்பா செத்து அந்தரட்டிக்குப்பிறகு மொட்டை அடித்துக்கொண்டு பள்ளிக்கூடம்போன என்னை ஐங்கரன் மொட்டைப்பாப்பா என்று பழிக்க இடைவேளைக்கு அவனைக் கரண்ட்போஸ் தேக்கமரத்தடி வரைக்கும் துரத்தி துரத்தி கீழவிழுத்தி அடிஅடிஎன்று அடித்தபோது உதவி செய்த காரணத்தால் வினோதனையும் நாங்கள் எங்கள் புதிதாக அணியில் சேர்த்துக்கொண்டோம்.. பிறகு மூண்டு பேரும் ஒரு ரீமாகி அப்பவே திறிக்கீஸ் விளையாட்டுகளைக்காட்டிக்கொண்டு திரிந்திருக்கிறோம். வகுப்பிலும் ரிப்போட்டில் பிரச்சினை இல்லாமல் படித்தபடியால் ரீச்சர்மாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் வராமல் தகிடுதத்தங்களைச்செய்வது எளிதாயிருந்தது. ரிப்போட்டுகள் நூறுகளால் நிரம்பியிருந்ததால் எங்கள் குழப்படிகள் ரீச்சரின் காதுகளை எட்ட மறுத்தன. அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டன. ரீச்சர் கம்புமுறிக்க அனுப்புகிற ஆட்களாகத்தான் நாங்கள் இருந்தோமே ஒழிய கம்புகளினனால் நாங்கள் வேட்டையாடப்பட்டதில்லை….

பிறகு அவனது அம்மாவும் திடீரென்று இறந்து போக. அது ஒரு தற்கொலை. அவன் ஒரு மாதிரி சோகமானவனாக திரிந்தான். அவனது தாயின் செத்தவீட்டில் அவன் தெருக்களில் புரண்டு அழுதானாம் என்று இன்னொரு வகுப்புப்பெடியன் அவனிடம் நக்கலாக சொல்ல அவனையும் நையப்புடைத்து கெட்டவார்த்தையால் திட்டினோம் நானும் வினோதனும். வன்முறை எப்படி பிறக்கிறது நாங்கள் அவமானப்படுத்தப்படுகிறபோதுதான் என்று தோன்றுகிறது இப்போது . எங்கள் துன்பங்களைக்காட்டிலும் இன்னொருவன் அதை குத்திக்காட்டுகையில் வன்முறை எங்கள் ஆயுதமாகிறது. ஆனாலும் வகுப்பில் எங்களைவிட சண்டியர்கள் நிறையப்பேர் இருந்தார்கள். தினம் தினம் இடைவேளைக்கு அடுத்தவனின் மண்டையை உடைத்துவிட்டு தினமும் அதிபரிடம் போயக்கொண்டிருப்பவர்கள். ரீச்சர் மார் எங்கள் வன்முறைகளை கண்டுகொள்ளாமல் விட்டதற்கு நாங்கள் ஏதாவது காரணத்தோடு தான் அடித்திருப்போம் என்று நினைப்பதும். அவர்களை விட அதாவது மண்டையை பிளக்கிற அளவுக்கு எங்களிடம் வீரமில்லலாதது காரணமாயிருக்கலாம். மற்றது நாங்களோ எங்களிடம் அடிவாங்கியவர்களோ ரீச்சரிடம் புகார் செய்வதில்லை என்பது வேறு விசயம்.

ஐந்தாமாண்டில் "மந்திரக்காரன்டி அம்மான்டி"என்று தமிழ்த்தினப்போட்டியில் ஆடிய தில்லைநாயகியை நான் "மந்திரக்காரன்டி அம்மாண்டி" என்று பழிப்புக்காட்டி ஆடியபோது. அவன் வேண்டாம் என்று தடுக்கும்போது எனக்குப்புரிந்துபோனது அவள்மீதான அவன் பிரியம். அது என்ன என்று தனியான பெயரெல்லாம் கிடையாது ஏதோ பிரியம் அவ்வளவுதான் முதலாம் பிள்ளையாய் வருகிறவனுக்கும் இரண்டாம்பிள்ளையாய் வருகிறவளுக்கும் மோதல் இருந்தாலும் உள்ளே ஒரு நேசம் ஒடிக்கொண்டிருக்குமே அதுபோன்ற பிரியம்.

அஞ்சாம் ஆண்டுக்கு பிறகு பாலர் வகுப்பு தொகுதியல் இருந்து மாற்றப்பட்டபோது. நாங்கள் மிகவும் கவலைப்பட்டோம் அடிக்கடி நாங்கள் படித்த பாலர்வகுப்பு மரங்களை இடைவேளைகளில் வந்து பார்த்துச்செல்வோம் நானும் அவனும்.

முதல் முதலாகச் சுற்றுலா போனபோது ஜன்னலோர இருக்கையை எனக்கு விட்டுத்தந்தான். இரணைமடுக்கோவில் திருவிழாவில் ஐஸ்பழம் குடித்துக்கொண்டு றோல்துப்பாக்கியில் வெடிவெடித்து திரிந்திருக்கையில் கூடத்திரிந்திருக்கிறான். அவர்களது வைரவர் கோயில் திருவிழாவில் நிறைய வடைகளையும் வாழைப்பழங்களையும் எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டமாக வயல்வெளிக்குள் ஓடியிருக்கிறோம். ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்கும் சுற்றுலாபோகையில் நாங்கள் சேதுபதி சேரோடு எடுத்துக்கொண்ட போட்டோவில் நிற்கிற மூன்றுபேருக்குமே அம்மாவோ அல்லது அப்பாவோ இல்லை என்று ஒரு வேதனையான ஒற்றுமையை கண்டுபிடித்தபோது ஒரு அழுகையற்ற பெருமைபோலத் தோன்றியதே. அதெல்லாம் என்ன ஒரு நட்பு. சல்பூரிக்கமிலத்துக்குள் நாகத்தை போட்டு ஐதரசன் வாயுவை ஒரு பலூனுக்குள் அடைத்து நகுலன் சேர் பள்ளிக்கூடப்பேரைப்போட்டு ஒரு சீட்டெழுதி அதில் கட்டச்சொன்னபோது அவருக்குத் தெரியாமல் எங்கள் பேரையும் எழுதி பலூனில் கட்டி வானத்தில் பறக்க விட்டோம்.

அவனுக்கு ஒரு தங்கையிருந்தாள். சுகன்யா அவளது பெயர். நாங்கள் அவங்கட வீட்டைபோய் பின்னேரங்களில் கிளித்தட்டு விளையாடுவம் சனிஞாயிறுதினங்களில்.அவளும் விளையாடுவாள். பள்ளிக்கூட நாட்களில் பள்ளிக்கூடம் விட்டாப்பிறகு நாலைஞ்சு மணிவரைக்கும் கிரிக்கெட் கதிரையை விக்ககெட் என்று வைச்சுவிட்டு. சிக்சர் பவுண்டரி என்று எங்களிற்கு தகுந்தமாதிரி எல்லைகள் வகுத்துக்கொண்டு. விளையாடினோம். அதற்காக வீ்ட்டில இவ்வளவு நேரமும் எங்க நிட்டிட்டு வாறாய் எண்டு விழுகிற சிக்சர் புவண்டரிகளை கணக்கில சேர்க்கமுடியாது. நாங்கள் அவுட்டாகிற சந்தர்ப்பங்களில் எறிபோல் சேப்பில்லை எண்டு குழப்பினோம். கொழும்பிலிருந்து வந்த லிங்கேஸ் என்கிற பெடியன். எங்களது ரூல்ஸ் எல்லாத்தையும் பிழைஎண்டு சொன்னபோது அவனோடு சண்டைக்குப்போனோம். முயலிற்கு களுவிதாரணவை மிகவும் பிடிக்கும் இலங்கை ரீமில். எனக்கு இந்தியாவின் கபில்தேவைத்தான் பிடித்திருந்தது. அப்போது கபில்தான் 432 விக்கெட் எடுத்திருந்தார் உலக சாதனை. எனக்கு நினைவு தெரிஞ்சாப்பிறகு வந்த சூரியகிரகணத்தை அவர்களின் வீட்டு ரீவியில்தான் நான்பார்த்தேன். ஒரு சில கிரிக்கெட் மட்ச் கூடப்பார்த்திருக்கிறேன்.
ஆனால் எல்லாம் ஒரு நாளில் முடிவுக்கு வந்தது.
ஆமி ஊருக்குள் வந்தபோது நாங்கள் எட்டாம் ஆண்டில் இருந்தோம். இடம்பெயர்ந்தபோது. அவன் புத்துவெட்டுவானில் இருந்த தாத்தாவீட்டிற்கு போயிருப்பான் என்று தோன்றியது. நாங்கள் கனராயன்குளம் போனோம் பிறகு பள்ளிக்கூடத்தைப்பற்றிய நினைவுகளே யற்றுக்கிடந்தேன் நான். அம்மா கனனராயன்குளத்துப் பள்ளிக்கூடத்தில் சேருமாறு சொன்னபோது போய்விட்டு இரண்டுநாள் படித்துவிட்டு மறுபடியும் போகமனமில்லாமல் விட்டுவிட்டேன். அம்மா எப்படி அதை அனுமதித்தா என்பது எனக்கு இன்னமும் ஆச்சரியம்தான்.என்னால் அந்தப்பள்ளிக்கூடத்தோடு இணையமுடியவில்லை மனம் ஏனோ புதிய பள்ளிகளை வெறுத்தது. முதலாமாண்டிலிருந்து ஒரேபள்ளிக்கூடத்தில் படித்தது கூட ஒரு காரணமாயிருக்கலாம்.
ஓமந்தையால் ஆமி வெளிக்கிட்டபிறகு நாங்கள் மல்லாவிக்குப்போனோம். ஒன்றரை வருடத்திற்குள் சுமார் 4 வீடுகளும் 3 இடங்களையும் மாறினோம். ஆனால் அங்கேயும் என்னால் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை பிறகு ஒரு வழியாக ஸ்கந்தபுரம் வந்து சேர்ந்தபோது எனது பள்ளிக்கூடம் அங்கே இயங்கிக்கொண்டிருந்தது ஒரு பாதிசெத்த எலியைப்போல. என்றாலும் எனது பள்ளிக்கூடம் என்கிற திருப்தி இருந்தது.பெயர்ப்பலகையைப் பார்க்கும்போதே ஒரு பரவசம் தொற்றிக்கொண்டது. வினோதனைத்தவிர வேறு நண்பர்கள் யாரும் இருக்கவில்லை முயல் எங்கயடா என்று கேட்போதும் யாருக்கும் விபரம் தெரியவில்லை…. பிறகும் நாங்கள் அவனை மறந்து விட்டோம் என்றில்லை அவ்வப்போது அவனை நினைத்துக்கொண்டோம்.

பத்தாமாண்டில் தில்லைநாயகி யாரோ ஒருத்தனோடு ஓடிப்போனதாக தகவல் வந்தபோது ஏனோ நான் அவனை நினைத்துக்கொண்டேன். பள்ளிக்கூடத்திற்கு சாப்பாடு கட்டிக்கொண்டுவரும் வழக்கத்தை விட்டபிறகு பழகிப்போன இடைவேளை ரீயும் கொம்புபணிசும் பிறகும் தொடர்ந்தது. ஒரு நாள் கொம்புபணிஸ் சாப்பிடுகையில் அவனது ஞாபகம் வந்தது. அவனது அப்பாவின் கடையில் இருந்து திருடிய ஒரு முழு 100 ரூபாயத்தாளை இரண்டு கொம்புபணிசிற்கும் இரண்டு ரீயிற்கும் மாற்றமுயற்சித்தபோது ஒரு முறை கன்ரீன் ஐயாவிடம் மாட்டிக்கொண்டோம். 7ம்ஆண்டு பெடியன்; 5ரூபாய் வைத்திருப்பதே பெரிய விசயம். ஆனால் இவன் 100 ரூபாய் வைத்திருக்கிறான் என்று கன்ரீன் ஐயாவிற்கு வந்த சந்தேகம். நகுலன் வாத்திவரைக்கும் வந்தது. அவனது அப்பாவை கூட்டிக்கொண்டு வரச்சொல்லி நகுலன் வாத்தி சொன்னார். வீட்டுக்கு போனா சாத்து விழப்போகுது மச்சான் என்று பயந்தவனிடம். மச்சான் நாளைக்கு வர்த்தக சங்க கூட்டம் அதால அப்பா வரயில்லை எண்டு சொல்லு. பிறகு சனி ஞாயிறு பள்ளிக்கூடம் இல்லை திங்கள் கிழமை மறந்திருவார் என்று ஐடியா குடுத்து அதில் வெற்றியும் பெற்றது ஒரு பெரிய சாதனையாக கருதப்பட்டது. பிறகு அதன் வெற்றி அருணா ஐஸ்பழக்கொம்பனியில் ஆளுக்கு இரண்டிரண்டு சொக் வாங்கி அடுத்தடுத்து குடித்து கொண்டாடப்பட்டது.

ஸ்கந்தபுரத்தில் இருக்கும்போது வினோதனும் வெளிநாடு போகப்போறன் எண்டு போட்டான். இப்போது தொடர்பில்லை எங்கேயோ சுவிசில் என்று கேள்வி. அவனது அம்மாவை பிறகொருநாள் நான் கண்டன் சும்மா கதைக்கும்போது சுவிசிற்குப்போயிட்டான் என்றார். நான் தொலைபேசி இலக்கம் எதுவும் கேட்கவில்லை. நான் ஏதோ அவனிடம் காசுகேட்பேன் என்கிற எண்ணம் அவாவிற்கு இருக்கும் என்று நான் நினைத்தேன். நிறைய வெளிநாட்டுக்காரர் அப்படித்தான். நம்பர் கேட்டா புது நம்பர் தெரியா எண்டுவினம். இங்க இருக்கிறவையும் சும்மாஇல்லை வெளிநாட்டு காரரை காசுகாய்க்கிற மரம் எண்டு நினைச்சு இழுத்துப் பிடுங்குவினம். அதால நான் அவாவையும் பிழைசொல்ல ஏலாது.

அதன் பிறகு நானும் அலைந்தேன் வடிவாப்படிக்கவில்லை அஞ்சாறு வருசம்; ஓடிப்போச்சு.பிறகு திரும்பவும் நாங்கள் கிளிநொச்சிக்கு போகலாம் என்று ஒரு நிலைமை வந்தது. நானெல்லாம் அப்போது கவிதை எழுதத்தொடங்கியிருந்தேன். இலக்கியம் அது இதெண்டு அது சார்ந்த நண்பர்கள் முளைத்தார்கள். எப்போதாவது வினோதனதும் முயலினதும் நினைவுகள் வந்து போவதுண்டு. இப்போதும் முயல் என்கிற அவனது பட்டப்பெயர் தான் வருகிறது றமேஸ் என்கிற அவனது சொந்தப்பெயர் புழங்குவதில்லை.

நாங்கள் கிளிநொச்சிக்கு மறுபடியும் போனோம். முதலாமாண்டு இலுப்பை மரம் இரண்டு கிளைகளுடன் மட்டும் குற்றுயிராக இருந்தது. பள்ளிக்கூடம் சில்லுச்சில்லாகவும் துளைகளாவும் சிமெந்தின் உடைந்த துண்டுகளாலும் நிறைந்து கிடந்தது. வீடுகள் காணிகள் தங்கள் அடையாளத்தையும் தங்களையும் இழந்து கிடந்தது. கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருந்தன. நான் ஒரு பத்திரிகைக்காரனாக ஆகிப்போனேன் சிதைவின் இயல்புகளை அவை இருந்த இயல்புகளை எனது கவிதைகளில் கொண்டுவரமுயன்று தோற்றேன். பொருட்கள் கிடைத்தும் அவற்றின் அடையாளங்கள் கிடைக்காமல் அலைந்துகொண்டிருந்தார்கள் சனங்கள். உடைபாடுகளை எனது கமராவுக்குள் சேர்த்துக்கொண்டேன்.

பிறகு கிளிநொச்சியின் பல்வேறு மலக்குழிகளில் இருந்தும் கிணறுகளிலிலிருந்தும். நிறைய எலும்புக்கூடுகளை மீட்டபிறகு எல்லாவற்றையும் அடையாளம் காண்பதற்காக வைத்திருந்தார்கள். நான் செய்திசேகரிக்க போயிருந்தேன். நிறைய கண்ணீர் அதிகமான இறுக்கம் இருந்தது. துக்கத்திலும் நாட்பட்ட துக்கம் இருக்கிறது போலும். திடீரென்று என்பின்னே முளைத்த ஒருத்தி கேட்டாள்.
"நீங்கள் அகிலன் அண்ணாதானே"
ஓம்.
நான் சுகன்யா? ரமேசின்ர தங்கச்சி.
எனக்கு அவளை அடையாளம் தெரியமல் போனது குறித்து வெட்கப்பட்டேன்.
"எங்கே யிருக்கிறியள்? யாரோட வந்தனியள் ரமேஸ் எங்க? நான் அவளை அடையாளம் தெரியாமலிருப்பதை மறைக்க படபடவெனக்கேட்டேன்.
அவள் கண்கணில் துளிர்த்த நீரைக்கவனியாது.
அவள் சொன்னாள். "அவனைப் பார்க்கத்தான் வந்திருக்கிறன்" எனக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. வார்த்தைகளை தேடுவதை நிறுத்தியிருந்தது என் சிந்தனை. நான் கமராவை மூடி கமராபாக்கிற்குள் வைத்தேன்.
என்ன நடந்தது? எதேச்சையாய் எனது வாயினின்று உதிர்ந்தன வார்த்தைகள்.

நாங்கள் இடம்பெயர்ந்து புத்துவெட்டுவானில் இருக்கிற தாத்தா வீட்டிற்கு போனாங்கள்.ஒரு நாள் தாத்தா சொல்ல சொல்லச் கேக்காமல் வீட்டைப்போய்ப் பார்க்கபோறன் எண்டு போனவர். வைரகோயிலடிக்கு ஆமி வரயில்லை எண்டு வைரவருக்கு விளக்கும் வைச்சிட்டு வீட்டையும் பாத்திட்டு வாறதெண்டு போனவர். அண்ணாவும் அவரோடு போனவன் போனவன்தான் அவனும் வரயில்லை தாத்தாவும் வரயில்லை.அவள் விசும்பியளுதாள்.

நான் அவளோடு எலும்புக்கூடுகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்த இடத்திற்கு போனேன். அவர்களுடைய எலும்புக்கூடுகள் இருக்ககூடாதென்றும் ஏதேனும் சிறைச்சாலை அறைகளில் அவர்கள் விழித்துக்கொண்டிருக்கலாம் என்றும் மனம் எண்ணிக்கொண்டிருந்தது. அவள் திடீரென்று கத்தினாள் அண்ணா… அவள் அழுத இடத்தில் இருந்தது ஒரு 14 வயதுப்பெடியனின் எலும்புக்கூடு. அதனோடு ஒரு பெரிய எலும்புக்கூடு. எனக்கு ஏனோ அவனது முயல்காதுகள் இரண்டும் ஒரு முறை நினைவுக்கு வந்தன. அவள் அழுதுகொண்டிருந்தாள் எனது கால்களைப்பற்றியிருந்த அவளது கைகளை விடுவித்துக் கொண்டு வேகமாய் வெளியேறினேன். எனக்கு என்ன செய்வதெனத்தெரியவில்லை……
எங்கேயோ மோட்டார் சைக்கிளை விரட்டினேன் அது நிற்கும் போது பாதி உயிருடன் இருந்த நாங்கள் முதலாமாண்டு படித்த இலுப்பை மரத்திற்கு கீழே வந்து நின்றிருந்தது. நான் மரத்தை பார்த்தேன் .. விரிந்து கோறிய அதன் அடியிடமோ உதிந்து கொண்டிருந்த கிளைகளிடமோ எந்த சலனமுமில்லை… எனக்கு அழவேண்டும் போல இருந்தது. என்னைச் சுற்றி சுற்றி யாருமே இல்லை. அதற்கு மேலும் அடக்கமுடியாமல் நான் கத்தி அழத்தொடங்கினேன். சலசலத்து இலுப்பை மரத்தின் இலைகள் சொரிந்து கொண்டிருந்தன என்மீது...