Friday, September 07, 2007

சாத்தானுடன் போகும் இரவு



சாத்தான்கள்
ஊருக்குள்திரும்பின.
சாத்தான்கள் எப்போதும்
புன்னகைகளை
வெறுப்பவை..

பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம்
என்றாகியது
நாள்.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்தசாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்.

இரவுக்குக் கைகள்
முளைத்தது..,

கேள்விகளற்ற
வெறுங்கணத்தில்
இரவின் கரங்களில்
கோடரிகள் முளைத்தன..,

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


விடியலில்
உருவங்களின் கரங்களில்
இருந்தது
இரவின் கோடரி.

சூரியனைப்போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.

1 comment:

தாசன் said...

(ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்தசாவிற்கு
காத்திருக்கலாயிற்று.)

அகிலன் நல்ல கவிதை. முன்பு
எங்கையோ வாசித்த நினைவு சரியாக தெரியவில்லை.