Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Tuesday, April 22, 2008

துப்பாக்கிகளும் சில தேவதைக்கதைகளும்/01



துப்பாக்கியின் கண்கள்
வாசிக்கத் தொடங்கிய பிறகு
சொற்கள்
ஒழிக்கத் தொடங்கிவிட்டன/சபிக்கப்பட்டு விட்டன

பீரங்கியின் வாய்களால்
அச்சமூட்டப்பட்ட
சொற்கள் கொண்டு
செய்யப்படுகிறது
ஒரு நாள்….

முடமான சொற்கள் கொண்டு
கவிதைகள்
செய்வது எங்ஙனம்?

கால்களற்ற சொற்களைக்
காணச் சகியாதொருவன்
துப்பாக்கிகளறியாதொருகணத்தில்
மொழியைப் புணர்ந்து
புதிதாய்
கால்முளைத்த சொற்களைப்
பிரசவிக்கலானான்…

பின்
ஓர் இரவில்…

துப்பாக்கியின் கண்கள்
அவன் முதுகினில்
நிழலெனப் படிந்து
அவன் குரலுருவிப்
பின்
ஒரு பறவையைப்போல
விரைந்து மறைந்ததாய்..
அவன் குழந்தைகள் சொல்லின.

Wednesday, March 12, 2008

பிரியம் /01



அவள் அழைத்துப்போன
கனவின் பசிய நிலத்தில்
வானவில்லின்
வர்ணங்களைக்கொண்ட
பறவையின் பாடல்
வழிந்து கொண்டிருந்தது திசையெங்கும்.

பாடலின்
திசைகளில்
நான் கிறங்கிய கணத்தில்
சடுதியாய் நீங்கிப்போனாள்
கூடவே போயிற்று
அவளது நிலமும்
வானவில் பறவையும்

நான் அலைந்து
கொண்டிருக்கிறேன்.
அந்த கனவுக்குள்
மறுபடியும் நுழையும்
திசைகளைத் தேடி.

Saturday, January 19, 2008

நிலவு


இரண்டு
சிவப்பு வெளிச்சங்களிற்கு
மேலாலெழும் நிலவு
அன்றைக்கு மிருந்தது.

ஒரு
விதவைத்தாயின்
இளைய மகனை
அவர்கள் களவாடிப்போன
இரவில்…

பைத்தியக்காரியைப்போல்
தலைவிரி கோலமாய்
தெருவில் ஓடிய
அவளைச் சகியாமல்
மேகங்களினடியில்
முகம் புதைத்துக்கொண்டது.

பின்பொரு மழைநாளில்
அலைகளின் மேல்
ஒருவன் ஏறித்தப்புகையில்…
இராமுழுதும் துணையிருந்தது…

யாரும்
விசாரணைகளை நிகழ்தும் வரை
எல்லாவற்றினதும்
மௌனச் சாட்சியாய்
அலைந்து கொண்டேயிருக்கும்
அது.

Thursday, September 13, 2007

சொற்களைத் திருடிய வண்ணத்திகள்....



நான்கு சுவர்களும்
மௌனித்திருந்த ஒருநாளில்
எதை எழுதுவது
எனத் தெரியாது விட்டு வைத்த
என் நாட்குறிப்பின்
இப்பக்கங்களில்
இப்போது நான்
உன் மௌனத்தை எழுதுகிறேன்.


உன்மௌனம்….
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது….

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு…
தம் சிறகுகளால்
காலத்தை கடந்தன வண்ணத்திகள்…

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப்பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை….

Friday, September 07, 2007

சாத்தானுடன் போகும் இரவு



சாத்தான்கள்
ஊருக்குள்திரும்பின.
சாத்தான்கள் எப்போதும்
புன்னகைகளை
வெறுப்பவை..

பகலின் நிறம் மரணம்
இரவின் நிறம் பயம்
என்றாகியது
நாள்.

ஊர்
பகலில் இறந்தவனை
அடக்கம் பண்ணிவிட்டு
இரவில் அடுத்தசாவிற்கு
காத்திருக்கலாயிற்று.

பாதித்தூக்கத்தில்
அடித்து எழுப்பப்பட்ட
வெறியில்
அலைந்தன சாத்தான்கள்.

இரவுக்குக் கைகள்
முளைத்தது..,

கேள்விகளற்ற
வெறுங்கணத்தில்
இரவின் கரங்களில்
கோடரிகள் முளைத்தன..,

மனிதர்களைத்
தறித்து விழுத்தியபடி
தனது நிறத்தை
ஊரெங்கும் பூசிச்செல்கிறது
இரவு


விடியலில்
உருவங்களின் கரங்களில்
இருந்தது
இரவின் கோடரி.

சூரியனைப்போர்த்தபடி
கேள்விகளற்று
நடந்துபோகிறது
இரவு சாத்தானுடன்.

Thursday, September 06, 2007

நம்பிக்கை/காத்திருப்பு


பெருமரத்தை
பூதமெனப் படியவிட்டு
உறுமிக்கடக்கிறது
வெளிச்சம்....

தனித்து நடக்கும்
இரண்டு பாதங்களைக்
கவனியாத
சகபயணியாய்
நீள நடக்கிறது தெரு
மெளனியாய்....

நான்
ஒரு நேரந்தப்பிய
பயணியைப்போல்
காத்திருக்கிறேன்
தூரத்தெரியும்
ஒளிப்புள்ளிகளை நம்பியபடி...

Friday, August 24, 2007

இரண்டாம் காதல்....



காற்றுக்கலைத்துப்போன
மேகச்சிற்பத்தின்
மீந்த பாதியைப்போலிருக்கின்றன
உன் நினைவுகள்

நம்
பிரிவின் முதற்கணங்களின்
துளிர்த்த கண்ணீரின்
ஈரம்
உலர்ந்து போய்விட்டிருக்கிறது.

எனக்கு
குழப்பமாயிருக்கிறது..

நேற்றுக்கடந்துபோன
ஒருத்தியிடம்.
எப்படி வந்தன?
உன்
புன்னகையின் ரகசியங்கள்..

Monday, August 13, 2007

கோடையைப் பற்றி இரண்டு குறிப்புக்கள்..



01.
உன்
உப்புக்கரித்த முத்தத்தின்
ஞாபகங்களை
தனது இறகுகளால்
வருடிக்கொண்டேயிருக்கிறது கோடை.

வாசல் வரை வந்தும்
உள்ளே வராத
தோழியைப்போல்..
முற்றத்தில் படர்ந்து
பின்
வெளியேறிப்போகிறது வெயில்

அறை முழுதும்
தன் தகிப்பை நிரவியபடி.


02.
கோடை
தீர்ந்து விட்டது…

தகிப்பின்
வாடையை

குடித்தபடி அலைந்து
நிழலொடுங்கிக் கிடக்கிறது
கோடையின் குழந்தை….

மழைக்குத் தாளமிடும்
சிறுமியின் புன்னகை
கூரை
கடந்து விழும்
முதல் துளியில்
கரைந்தவிழ

அவள்
காலடியில் உடைந்து
அழத்தொடங்குகிறது
கோடை..

Wednesday, August 08, 2007

நிகழாக் கவிதை...


என் கவிதையின்
கரங்கள்நீண்டபடியிருக்கின்றன
சொற்களைத்தேடி….

தாயின் இறகுகளை
நீங்கித் தப்பும்
ஒர் தனியன் குஞ்சைப்போல
சிக்கிக்கொள்ளாது
தப்பியலைகின்றன சொற்கள்…

ஊழியோய்ந்த நிலத்தில்
எஞ்சிய
ஒற்றைக்குழந்தையின்
திணறலென
அழுதபடியிருக்கிறது
என் கவிதையும்
அதன் மனமும்….

Thursday, August 02, 2007

சுயவிசாரணை....



என் அடையாளம்
குறித்த கேள்விகள்
கிளம்புகின்றன
பூதாகாரமாய்...

அப்பனுக்கும்
அம்மைக்கும்
ஆயிற்று
உயிரும் உடலும்.

எனது
புன்னகைகையை
காலம் கொண்டேகிற்று.

என்னிடம் எனக்கென்று
ஏதுமில்லை.

உனது
முத்தங்களையும்
நினைவுகளையும் கூட
நீயே
சொந்தங் கொண்டாடுகிறாய்.

யாரோடும் பகிர முடியாது போன
புன்னகையும்
முத்தங்களும்
துயரங்களும்
என்னுடையவைதானென்று
யாருக்குத்தெரியும்?

என் வார்த்தைகளின்
அர்த்தம் கூட
எனதாயில்லை.

மறுக்கமுடியாத்துயருள்
மூழ்கிய
எனது கவிதைகள்
என்னின்று அகன்றன.

இப்போது
எனக்குள்
கேள்விகளை நிரப்புகிறது
தனிமை.

புன்னகைக்கும்
வேதனைக்கும்
இடையிலான தூரங்கள்
நீண்டபடியிருக்கின்றன....

ஆங்காங்கே
விரிந்தபடியிருக்கும்
காலத்தின் கண்ணிகளில்..
வீழ்ந்தபடியிருக்கும்
எனது பாதங்கள்....

ஏதேனும் ஒருபொழுதில்
முளைக்கும்
அழத்தோன்றாவொரு
மனக்காந்தல்
உனது
முத்தங்களிற்காய் ஏங்கும்.


ஒரு பொழுதின்
துயருள் தோன்றி
எழுதவியலாது போன
கவிதை வெறுமையை
நிரப்புகிறது மனசுள்.

நினைவறையின் மடிப்புகளினின்றும்
பறப்படுகின்றன
இன்னும்
பகிரப்படாத்துயரங்கள்
அழுவதற்கான
வெட்கங்கள் ஏதுமற்று...

இரண்டு வருடங்களிற்கு முன்பு ஒரு தூக்கமற்ற இரவில்...


Tuesday, July 31, 2007

எழுதப்படாத சொற்களும் தாள்களும்...


நான்
வெற்றுத்தாள்களை
வாசிக்கிறேன்….

குருதியும்
ரணங்களும் வழியும்
துயரத்தின் மிகு சொற்கள்
அத்தாள்களின் மீது
உறைந்துள்ளன….

தாள்களின்
ரகசிய இடுக்குகளில்
ஒழிந்திருக்கிறது..
வேட்டைக்காரனின்
அம்புகள் தீட்டிய
அழுகையின் வரைபடம்..

எழுதப்படாதிருக்கிற
எந்தச்சேதியிடமும்
புன்னகையில்லை….

தன் பின்னலைத்தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது…

பின்பொருநாள்…
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும்
கோடரியின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்….

தடுக்கமுயலும்
கிழவியிடமிருந்து எழும்
இயலாமையின் சொற்கள்
தேய்ந்து போயிற்று
ஊடுபத்திய
கைவிளக்கைப்போல.....

Thursday, July 05, 2007

அம்மம்மாவின் சுருக்குப்பை.....

ஒரு கவிதை
எனை அழைத்துப்போகிறது
ஊருக்கு…..

தும்புமிட்டாஸ் காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற
அம்மம்மாவின்
சுருக்குப்பையைப்போல..
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்….

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏது மில்லை….

தடங்கள்
இறுகிக் கொண்டன…

Monday, July 02, 2007

நின்று போன கவிதை...


உதிர்ந்து விழுகிற
இலையின்
நடனம்போல
நிகழ்ந்து போகிறது உன் பிரிவு...

அங்கேயே..
அப்போதே..
நின்று போன
என் வார்த்தைகள்
காத்திருக்கும்
மறுபடியும்
கவிதையின் சாலைக்கு
அழைத்துப் போகும்
உன் புன்னகையின் வருகைக்காய்..

Wednesday, June 20, 2007

பலூன்காரன்....


தலைகளாலான
தெருவில்….

குழந்தைகளின்
புன்னகைள் நிரம்பிய
வண்ணங்களை
விற்கிற
பலூன்காரன்….

தன்புன்னகையைக் கேட்டு
வீரிட்டழும்
ஒரு குழந்தை
விக்கித்து ஓய்கையில்…

ஏனோ
எச்சில் ஒழுக
என்பெயர் சொல்லிச்சிரிக்கும்…
ஒரு முகம்
கடந்து போகிறது என்னை….

Thursday, June 14, 2007

நிகழ்தல்....


நீ
என்ன சொல்கிறாய்….

னௌனம் கீறிய
என் வார்த்தைகளை
விழுங்கிப்போகும்
உன்பார்வைகளில்…
மிதந்து வருகின்றனவா
ஏதேனும்
எனக்கான சேதிகள்….

அலைகள் ஓய்ந்தபின்
ஆழ ஊடுருவும்
பார்வைகளுக்குச்சிக்காது…
ஏகாந்தத்தில்
நுழைந்துவிடுகிறது…
நீ எறிந்த கல்….

அர்த்தமற்று உளறும்
என்பேச்சு…
சில பொழுதுகளில்
விக்கித்து நிற்கும்
என் மௌனம்…
போதுமானதாயிருக்கிறதா?
நான்
உனக்குள் நிகழந்துவிட….

Monday, June 11, 2007

வேட்டை.......



விளக்கை மேயும்
பூச்சி….

வேட்டைக்குத்
தயாராகிறது பல்லி
பூனையின்
நிழற்கரங்கள்
தன்மீது படிவதை
அறியாது….

Thursday, May 24, 2007

சலிப்பு...


யாரும் புரிந்து கொள்ளவியலா?
ஜடமாகவே இருந்துவிடுகிறேன்
நான்……

காலம்
என் கைகளில்
திணித்துப்போன…
நிறமற்ற கனவுகள்…
எனக்குள்ளே மூழ்கிவிடட்டும்…

தேவதைகள்
யாருமற்ற எனது நிலத்தில்
சருகுற்று…
பேய்கள் வசிக்கட்டும்….

எப்போதேனும்…
கொலுசுகளோடு
வரும்
யாரோ ஒருத்தி
கண்டெடுக்கக் கூடும்…
சருகுகளினடியில்….
சிக்குண்டு போன…
யாரும்படிக்காத…
எனது புத்தகத்தின்…
இறுதிப் பக்கங்களை…..

Monday, May 21, 2007

மழை நின்ற பிறகு...


மழை நின்ற பின்னால்
நீ வந்துபோன
தடங்களை…
மறுபடியும்….
கலைத்துவிட்டு போகிறது
மழை…..

மறுபடியும்
மழை நின்ற பிறகு…
குதித்துக்கொண்டோடுகிறது…
உன் கொலுசு…
மனசிருந்து நழுவி….

Tuesday, December 26, 2006

ஒரு கவிதையின் பிறப்பு..



என் எதிரேயிருக்கும்
தேனீர்க் குவளையுள்
வீழ்ந்து ஓய்கிறது
மின் விசிறி.....

நான்
மூடப் படாத
கவிதைப் புத்தகத்தை
மறுபடியும் பிரிக்கிறேன்....

தாள்களிடையில்
தட்டுப் படுகின்ற
உன்
ஞாபக ஸ்பரிசங்கள்
என்
விரல்களில் வழிய

இந்தக் கவிதையை
எழுதத்
தொடங்கினேன் ....

Tuesday, December 12, 2006

கடந்து விடமுடியா நினைவுகள்


நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்

மரணத்தின்
வாசனை மிகும்
ஊரின் தெருக்களைக்
கடந்தாகி விட்டதென்றும்......

நகரத்தின்
இடுக்குகளில்
எனக்கான பூஞ்செடிகள்
காத்துக் கிடக்குமெனவும்.....


தடைகளும் எல்லைகளுமற்று
விரியும்
புதிய வானத்தில்
என்சிறகுகள் கொண்டே
எனக்கான வானவில்லை
வரைந்து விட முடியுமென்றும்.....

நான்
நம்பிக் கொண்டிருந்தேன்
இது நாள் வரையும்.....

மரணத்தின்
வாசனைமிகும்
அத்தெருக்கள் தான்
என்
உள்ளங்கையின் ரேகைகள்
என அறியாது...

த.அகிலன்