Tuesday, August 29, 2006

அழகுதிர்ந்த கவிதை


என்னிடம்
மகிழ்ச்சியின்
சுவடு தானுமில்லை

என்னால்.....
உலர்ந்து போன
இரத்தத்தின் அடியில்
ரோஜாவின் இதழ்களைக்
கற்பனை செய்ய முடிகிறது

நேற்றுப் பிடுங்கியெறியப்பட்ட
பெருமரத்தின்
மொட்டுக்களையும்
பிஞ்சுகளையும் குறித்த
துயர்மிகும் சொற்கள் மட்டுமே
இப்போது
என்னிடமுண்டு

அழகுதிர்ந்த கவிதை
துயரமும்
பிணமும் நாறிக்கிடக்கும்
தெருவழியே
அழுதலைகிறது

கேள்விகளற்ற
நிலத்தில்
துயர்மிகும்
சொற்களைத் தவிரவும்
வேறென்னதான் இருக்கமுடியும்?

த.அகிலன்

Saturday, August 26, 2006

தாயாய்; ,சகோதரியாய், தோழியாய்....

நான் அண்மையில் இலங்கை வன்னியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்குப் போயிருந்தேன் அந்த
அனுபவங்களை ஒரு குறிப்பாக எழுதியிருக்கிறேன்

- த அகிலன்"குழந்தைகள் நாம் குழந்தைகள் நாம்
அண்ணனின் அன்பு குழந்தைகள் நாம்"
என்று

ஆடிப்பாடுகிற சிறுவர்கள் எல்லோரும் 3-12வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் மழலைமுகம்
மாறாது இன்னமும் இருக்கின்ற தமிழ்மண்ணின் புன்னகைகள்.ஆனாலும் அவர்கள் வயது களையும்
முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிற புன்னகைகளையும் மீறி துருத்திக்கொண்டிருக்கிற ஏக்கமும்
துயரமும். மனசின் ஆழங்களை ஊடுருவி நெருமாமலில்லை.

ஏதோ ஒரு விதத்தில் போர் இவர்களைப்பாதித்திருக்pறது.இவர்கள் கடந்து வந்து வாழ்வின்
சிறிய தூரத்துக்கிடையில் துயரம் அவர்களைத் தடுத்துத் திசைமாற்றியிருக்கிறது. அந்தக்
கசப்பான அனுபவங்களின் வலி அவர்களின் புன்னகைகளின் வளி எம் முகத்தில் அறைகிறது.


எல்லாரும் போரின் பிரசவிப்புக்கள்போர் அவர்கள் பெற்றோரைத்தின்றுவிட இப்போது செஞ்சோலை
என்கிற அவர்களின் வீட்டில் ம் அப்படிதான் அழைக்கிறார்கள் 250 பேர் இருக்கும் வீடு ஆச்சரியமான
250பேர்கொண்ட குடும்பம். எனக்கு ஆச்சரியம் நிறைந்து போன வார்த்தையாயிருந்தது வீடு என்பது.

செஞ்சோலை ஏதோ ஆச்சிரமமோ னொதை இல்லமோ என்றநினைப்புடன் நுழைகிற எமக்கு
ஆச்சரியமாயிருக்கிறது அவர்களின் நிறைவும் அன்பும் மகிழ்ச்சியும். அனாதை இல்லம்,ஒரு
ஆச்சிரமம்,ஆதரவற்றோர் இல்லம், இப்படியான இடங்களில் இருக்கிற குழந்தைகள் யாராவது தங்கள்
இடத்தை வீடு என்று சொல்கிறதா? ஆனால் இவர்கள் அழுத்தம் திருத்தமாக உச்சரிக்கிறார்கள் வீடு…


அந்தக் குழந்தைகளைப்படம் பிடிப்பதற்கான முன்னனுமதியுடன் நானும் நண்பர் பகியும்
போயிருந்தோம். வாங்கோ கணீராய் கரிசனையாய் ஒலிக்கிற செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனியின்
குரல்.கட்டடாயம் எங்களுக்கு ஒரு பிரதி தந்திரவேணும் என்கிறாhம் செஞ்சோலையின் பெரியம்மா.
குழந்தைகள் ஜனனி அக்காவை பெரியம்மா என்றே அழைக்கிறார்கள். எப்போதும் இவரைச் சுற்றி
குழந்தைகள். அவரின் கைகளையும் கால்களையும் பிடித்துத் தொங்குகின்றன குழந்தைகள்.

உள்ளே நுழைந்ததும் இருக்கிற பூங்கா குழந்தைகளாலும் மகிழ்ச்சியாலும் நிறைந்திருக்கிறது.
அங்கே யாரும் துயரமாயில்லை யாரும் தனித்தில்லை எல்லோரும் வித்pயாசமின்றி இருந்தார்கள்.
கோபம், சின்னதாய் பொறாமை, செல்லப்போட் என்று குறும்பும் கும்மாளமும்
தலைவிரித்தாடின.அவர்களின் உலகம் இயல்பாயிருந்தது. போரின் துயர் களைந்த அவர்களின் அந்தக்
கணங்களை படமாக்கத் தொடங்கினோம் நானும் பகியும்.

குழந்தைகள் எங்களைச் சூழ்ந்து கொண்டு மாமா என்னை எடுங்கோ மாமா என்னை எடுங்கோ என்று
கத்தின. எல்லாக் குழந்தைகளும் சேர்ந்தாற்போல கேட்க திணறிப்பேனொம் நானும் பகியும்.ஏதோ ஒரு
குழந்தையைப் படமெடுத்துத் திரும்புவதற்கிடையில் அடுத்தது கோபித்துக்கொண்டு விழிகளை
உருட்டும் அந்த விழிஉருட்டலைப் படமெடுத்து திரும்ப அடுத்தது என்னை மாமா என்று
வெகுளியாய் சிரிக்கும்.

மாமா மாமா என்ற அவர்களின் அழைப்பில் துளியும் களவில்லை வேசமில்லை தூய்மையான
அவர்களின் அந்த அழைப்பு அதுதான் எனக்குள் அவர்களை நிறைத்தது.
எனக்கு என் சின்னவயசு ஞாபகங்கள் நிறைத்தன என்னைப் படமெடுத்தவர்களையும் நான் மாமா
என்றுதான் அழைத்திருக்கிறேன். ஆனால் அது அம்மா எனக்குச் சொல்லித்தந்தது. அதில் அன்பில்லை
உறவில்லை எந்த உரிமையும் கிடையாது. ஆனால் இவர்கள் நெருககமாக சூழ்ந்து கொண்டு
சொல்கிறார்கள் மாமா மனசை பிசைகிற குரல் அதில் ஏதோ இருக்கிறது.


எப்படி எப்படியெல்லாம் அந்தக் குழந்தைகளைப் படமெடுக்க வேண்டுமென்று நான் விரும்பினேனோ
அப்படியெல்லாம் எடுக்க என்னால் முடியவில்லை.குழந்தைகள் என்னைக் கொமாண்ட் பண்ணின தங்களை நான்
எப்படிப்படமெடுக்க வேண்டு மென்று அவர்கள்தான் தீர்மானித்தார்கள்.மாமா இந்தக் குட்டியை
ஒருக்கா படமெடுங்கொ ஒரு ஓன்றரைவயதுப் பாப்பாவை இடுப்பில் செருகியபடி கேட்டாள் 7 வயத
அக்கா சீ 7 வயது தாய்.மாமா படமெடுக்கப்போறார் சிரியுங்கோ நான் திணறிப்போனேன் ஏனோ
தொண்டை வற்றியது.


மாமா நான் இந்த ரோசாப் பூவுக்குப் பக்கததில நிக்கட்டா சீ இது சரியில்லை
திருப்தியில்லாது சிலபேர் ஓடிக்கொண்டிருந்தார்கள்.அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடீனேன்.

மாமா எங்கட வீட்டுக்கு வாங்கோ அவர்கள் அழைப்புக்குப் பணிந்தபோது பூங்காவை விட்டு கொஞ்சம்
தள்ளியிருந்தது வீடு. ஒரு அளவான கட்டடங்கள் கொண்ட பல தொகுதிகள் 14 பேர் வசிக்கும் பல
வீடுகள் அவர்களது வேலையை அவர்கயே செய்தார்கள் வீடு கூட்டினார்கள்,முத்தம் கூட்டினார்கள்
பூஞ்செடிக்குத் தண்ணீர் ஊற்றினார்கள். செஞ்சோலையின் ஒவ்வொரு துளியும் அந்தக் குழந்தைகளின்
அன்பையும் திருப்தியையும் சேர்த்துக்கொண்டு செழித்திருந்தது.

மாலை தேனீர் குடித்து வெளியேறுகையில் எதையோ விட்டு விட்டு வருவது
மாதிரியிருந்தது.திரும்பிப்பார்த்தேன் எம்மைப்பார்த்து கையசைத்த குழந்தைகளின் புன்னகைகளைப்
பத்திரப்படுத்திக்கொண்டேன். வரும் போதுதான் கவனித்தேன் பூங்காவின் ஒரு கரையோரமாக பங்கர்
புதிதாக வெட்டப்பட்டிருக்கிறது.மறுபடியும் யுத்தம் விழுங்கப்போகிறதா?மனம் அலை பாய்கிறது.


திரும்புகின்ற வழிமுழுதும் நெடுநேரமாய் காதுகளில் வழிந்து மனசை நிறைத்தது துளியும்
கலப்படமில்லாத மாமா மாமா என்கிற அன்பின் குரல்.

இந்தக்கட்டுரை அவள்விகடனின் செப்ரெம்பர் மாத இதழில் வெளிவந்துள்ளது இது அவள் விகடனில் வெளிவரக்காரணமாக இருந்த பிரியன் மற்றும் பாலபாரதி இருவருக்கும் நன்றி

Friday, August 11, 2006

அருவம் மீதான நம்பிக்கை


இவர்கள்
அழிவுகளினின்றும்
சிதைவுகளினின்றும்
எதிர்பார்க்கிறார்கள்
கலையும் மேகங்களிடையே
அவன் வருவதாய்
யாவரும் நம்புகின்றனர்.

ஆயிரம் குளம்படி ஓசைகளுடன்
நிறையப் புரவிகளினிடையில்
ஒளிரும் அருவமாய்
அவனை வருணிப்பர்
சிதைவுகளினின்றும்
குருதியூறிய,
வயல்வெளிகனின்றும்
முகாரியினுடைய
எல்லைகளிற்கு -வெளியே
துயரம் கடந்து
எப்போதோ எரியூட்டப்பட்ட
அவர்களின் கனவுகளை
அவன் தங்களிற்கு
பரிசளிப்பனென்றும்
பேரட்சகனாய்
அவனிருப்பதால்
பேரற்புதங்கள் நிகழ்த்துவனென்றும்
எதிர்பார்க்கின்றார்கள்.

ஒவ்வோர் எதிர்பார்த்தலின் போதும்
அவன் ஏமாற்றினாலும்
ஆச்சரியமாய் - இவர்கள்
மறுபடியும் எதிர்பார்ப்பர்.

அவன் வரவை
முன்னிலும் அதிகமாய்...
அழிவுகளோடும்
காத்திருப்பர் -முன்னிலும்
அதிக அற்புதங்களோடான
அவன் வருகையின் மீதான
நம்பிக்கைகளோடு......

த.அகிலன்

Wednesday, August 02, 2006

கனவு வெளி


ஜதார்த்தங்களை
சிலவேளைகளில்
ஜீரணிக்க முடிவதில்லை

மனசின்
வடிவமைப்புக்களிற்கு
வெளியே
தீர்மானிக்கப்படும்
முடிவுகளினால்
நொருங்கும் கனவுகள்

எண்ணங்களிலானது
கனவு வெளி
அவ்வெளியின் மீது
ஏற்றப்பட்டிருக்கிறது
வாழ்வு

சிதைகிற அதற்காய்
அழுகிறது என் மனசு
ஆளறுந்த தெருவின்
ஒற்றைநாயென
பிரக்ஞை அற்று...

வடுக்களின் மீதமர்ந்தும்
மனசு
மிச்சம் வைக்கிறது வாழ்வை
கனவுகளைக் கோர்ப்பதற்காய்

எனினும்

என்
கனவுகளை
கோர்ப்பதற்காய்
எனினும்
என்
கனவுகளை ஓரம் கட்டுகிற
ஜதார்த்தங்களிற்கு
தெரிவதில்லை
கனவுகளின் மீதான
என் மனசின் அக்கறை

த.அகிலன்