Friday, June 30, 2006

புன்னகை விற்பவள்


நதி
அதன் புன்னகையை
ஒழிக்கிறது
கடல்மடியில்

அவள்
அனாசயமாய்
அதை எடுத்துச்சூடுகிறாள்
தன் கழுத்தில்

நிலவு
வானில் வரையும்
அவள்
கைகளிற்குச் சிக்காத
ஒளியின் புன்னகையை

அவள் என் புன்னகையை
விற்றுக் கொண்டிருக்கிறாள்...

தான்
நட்சத்திரங்களை
உதிர்ப்பதறியாது

ஒரு
பூவின் புன்னகை
செத்துக் கொண்டிருக்கிறது
அவள் கூந்தலில்

த.அகிலன்

Thursday, June 29, 2006

வன்முறை..


அன்பே
காற்றில் நழுவவிடும்
உன்
வார்த்தைகளில் கத்திகள்
வைத்தல்
எங்கனம் சாத்தியமாகிறது...

த.அகிலன்

மழை.....


ஒருநீண்ட தார்ச்சாலையில்
சோவெனத்துரத்தும்
மழையென விரட்டுகிறது
உன்பிரிவு.

ஒரு
கொடுமிருகத்தைப்போல்.

எதிரே விரியும்
பெருவெளியின் நீளத்தை
என் கால்கள்
விழுங்க விழுங்க.

மறுபடியும்
முடிவற்று விரிகிறதுவெளி
உனை அழைக்கும்குரல்
தொண்டைக்குள் தேங்க
எனை விழுங்கிப்போகிறது மழை.

த.அகிலன்

Tuesday, June 27, 2006

மெளனத்தின் சங்கீதம்...


கண்களில்
கேள்விகளோடு அலைகிறார் மனிதர்
மௌனம் காதுகளில்
இரைகிறது…..

தொடர்ச்சியாய்
உதைக்கும் கடிகாரம்
நின்று போகையில்…..

மரங்கள்
ப+க்களைப்பிரசவிக்கும் போதான அலறல்
நிச்சயமாய்
கேட்கிறது எனக்கு…

வானெங்கும் விரியும்
நிலவின் ஓவியத்தையும்
ரகுமானை வென்று வருடுகிற
மௌனத்தின் சங்கீதத்தையும்
ரசிக்க முடிகிறது…

அன்பே
நிசப்தத்தில்
என்
காதுகளை மூடுகிறேன்
மனங்களின் இரைச்சல் தாளாமல்

உன் பிரிவின்பின்
இப்படித்தான்
ஒன்றோடொன்று ஒட்டாமல்
உதிர்கிறது
எனக்கான வார்த்தைகள்

த.அகிலன்

Monday, June 26, 2006

என்னுள் இருக்கும் நீ


என் கவிதைகளில்
பேசமுடியாத
வேதனை
உன்னிடமேயிருந்திருக்கிறது

சில பொழுதுகளில்
வாளின் கூர்முனைகளை
வென்று
வலிக்கிறது
உன் மௌனம்...

ஒரு மின்விசிறியின்
முதுகைப்போல்
நீ
உதிரவிடும்
வார்த்தைகளில்
பின்னப்பட்டிருக்கும்
வெறுமை
என்
கனவுகளை சிறையெடுக்கும்.

எனக்காய்
நீ
உதிரவிடும்
புன்னகையின் போதாயிருக்கலாம்
சிறைமீட்பு

த.அகிலன்

நிஜம்....என்
மரணத்தின்போது
நீ ஒரு உருக்கமான
இரங்கல் கவிதையளிக்கலாம்
ஏன்
ஒரு துளி
கண்ணீர்கூட
உதிர்க்கலாம்

என்
கல்லறையின் வாசகம்
உன்னுடைதாயிருக்கலாம்
அதை
ப+க்களால் நீ
நிறைக்கலாம்

நீ
என்னோடு அருந்தவிருக்கும்
ஒரு கோப்பை தேனீரோ
வரும்
பௌர்ணமியில்
நாம் போவதாய்ச் சொன்ன
கடற்கரை குறித்தோ
என்னிடம்
எண்ணங்கள் கிடையாது

இப்போது
என் எதிரில் இருக்கும்
இக்கணத்தில்
உன் புன்னகை
உண்மையானதாயிருக்கிறதா?

த.அகிலன்

Sunday, June 25, 2006

தேவதைகளின் தேவதைக்கு


அன்பே
உன் நினைவுகளில்
நொருங்கும் என்னிதயத்தை
நீயே வைத்துக்ககொள்…..

என்
தேவதையே
பாசாங்குகள்
எதுவுமற்ற
மெல்லிய மலர்
என் இதயம்
நீ
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…
சர்வநிச்சயமாய்
வாழ்வின் நீளத்துக்கும்
நீ மட்டும் தான்
வேண்டும் அதற்கு…

என்
புன்னகையின்
ஒரத்தில் இருக்கின்ற
அன்பின் பெரும்வலியை
எப்படிச்சொல்லுவது…..

தேவதைகள்
யாரும் புகமுடியா என்னிதயம்
தேவதைகளின் தேவதையே
உன்னால் தான்
நொருங்கிற்று
கொஞ்சம் இரங்கிவா
என் இதயத்துள் இறங்கு

த.அகிலன்

கனவுகளில் நுழையும் பூனை


அழுதுவடியும்
விளக்கு
தோற்றுப்போகிறது
இருளிடம்

எங்கும்
நிரப்பிக்கொண்டேயிருக்கிறது
இருள்
தன்னை.

ஒளியற்றவெளியில்
பதுங்கிக்கிடக்கும்
உன்
புன்னகை
ஒரு திருட்டுப்பூனையைப்போல்
நுழைகிறது
கனவுகளில்..

அதன்
கால்களில்
இடறி
கறிச்சட்டியைப்போல்
நொறுங்கும்
என் தூக்கம்

த.அகிலன்

தவறி வீழ்ந்த முடிச்சு


பிரபஞ்சத்தின்
எங்கோ ஒரு தொலைவில்
சிக்கிக்கொண்டது
திருப்தியும் அன்பும்

பின்னமுடியாத
இழைகளில்
தவறி வீழ்ந்திருக்கிறது
முடிச்சு

எப்போதும்
எனது சொற்களிற்கான
இன்னோர் அர்த்தம்
எதிராளியின்
மனதில் ஒளிந்திருக்கிறது

அமைதியின்
அழகிய நடனத்தில்
திருப்தியுறாது
தீர்ந்து விடுகிறது
இக்கவிதையும்....

த.அகிலன்

Saturday, June 24, 2006

மலர்களின் மெளனமும் நீயும்.....


மலர்களின்

மெளனம் உன்னைப்போல்

அழகானது

ஆனால்

உனது மெளனங்களோ

முட்களைப்போல……..

த.அகிலன்

பள்ளிக்கூடக் கனவு


எனது வெள்ளைச் சட்டையில்
இரத்தம் படிந்து பிசுபிசுப்பாய் ஒட்டியது
நாற்றம் மூக்கைக் குமட்டிற்று
எனது பள்ளியோ
கூரை கொட்டிப்போய்
கரும்பலகை நிறமிழந்து
வெண்கட்டி சிவந்து கசிந்து
கதிரையோ
வெறும் பலகைத்துண்டங்களாய்
சுவர்களில்
சன்னங்களால் யன்னல்கள் முளைத்தது


நசிந்து போனது வாழ்வு
என் பள்ளிக்கூடம் பற்றிய கனவுகளும்
சாவின் அலறல்களுக்கிடையில்
அடையாளமற்றனவாய்…

த.அகிலன்

அடுத்து வரும் கணம்......என்னுடைய
காலடிச்சுவடுகள்
கண்காணிக்கப் படுபவை
புன்னகைகள்
விசாரணைக்கானவை
உயிர் குலையும்
ஓர் ஊரின்
பெரும்பயணி நான்

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பிக் கிடக்கிறது
வழிமுழுதும்

துயரெழுதும் கவிதை
வழிமுழுதும்
வருகிறது துணைக்கு
தொலைவிலெழும் வேட்டோசைக்குச்
செத்துப்போகிறான்
என்சகபயணி

துப்பாக்கிகளிற்குக்
கால்கள் முளைத்த இரவில்
அவை வெறிகொண்டெழுந்தன

ஒரு கலையாடியின் கோபம்போல
இரவு முழுதும் பெய்த மழையில்
கரைந்து போயிருந்தது
பலியாடுகளின் இரத்தம்

அடுத்த கணங்கள்
பற்றிய
அச்சங்களும்
துயரங்களும்
நிரம்பிக்கிடக்கிறது
வழிமுழுதும்

த.அகிலன்

Friday, June 23, 2006

ஒரு பிரகடனத்தின் எதிர்வினைநண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல் தெரியாத அப்பவிச்சனங்களின் பிரதிநிதியாய் வன்னியில் இருந்து வருகிறது இந்தக்கவிதை ஒரு இனத்தின் வாழ்வு இப்படித்தான் இருந்தது.இருக்கிறது...
- த.அகிலன்எங்களுடைய
புன்னகையை சந்தேகிக்கும்
எல்லோருக்கும் சொல்கிறோம்…….

எங்கள் கடல்
அழகாயிருந்தது
எங்கள் நதியிடம்
சங்கீதமிருந்தது
எங்கள் பறவைகளிடம் கூட
விடுதலையின் பாடல்
இருந்தது…..
எங்கள் நிலத்தில்தான்
எங்கள் வேர்கள் இருந்தன…
நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்
எம்மூரில்…

அவர்கள்
எங்கள் கடலைத்தின்றார்கள்…
அவர்கள்தான்
எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…
அவர்கள்தான்
எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்……..
எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத்துரத்தினார்கள்
அவர்கள்தான்
எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை
தெருவில் போட்டு நசித்தார்கள்…..நாங்கள் என்ன
சொல்வது
நீங்களே தீர்மானித்து
விட்டீர்கள்
நாங்கள் மனிதர்கள் அல்ல என்று……

எங்கள்வயல்கள்
பற்றி எரிகையில்
எங்கள் நதிகளில்
எம் தலைகளைக்கொய்த
வாட்கள்
கழுவப்படுகையில்நீங்கள்
எங்கிருந்தீர்….

எப்போதுமிருக்கும்
பச்சை வயல்வெளியை
ஒற்றைப்பனை மரத்தை
தெருப்புழுதிக் கிளித்தட்டை
ஊர்க்கோயிலை
என்
பாட்டியின்
ப+ர்வீகக் கிராமத்தையும்
அதன் கதைகளையும்
இழந்து நாங்கள்
காடுகளில்
அலைகையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்

சப்பாத்துக் கால்கள்
எங்கள்
குரல்வளையில் இருக்கையில்
எம் பிள்ளைகள்
வீதியில
துடிதுடித்து அடங்குகையில்
துப்பாக்கிகளின்சடசடப்பு
ஊருக்குள் வருகையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்


நாங்கள்
ஊர்பிரிந்து வருகையில்
உயிர் தெறித்து விழுகையில்
கண்ணீர் பிரியாத துயரம்
எம்மைத் தொடர்கையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்

நாங்கள் பசித்திருந்தோம்
நாங்கள் பயமாயிருந்தோம்
நாங்கள் விழித்திருந்தோம்
நாங்கள் விக்கித்து
வேறு வழியின்றி
மூர்ச்சித்துச் செத்தோம்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

எப்போதும்
எங்கள் கனவுகளைத்
துப்பாக்கிகள் கலைத்தன
குண்டுகள் விழுந்தமுற்றத்தில்
பேரச்சம் நிறைய
நாம் தனித்தோம்
நாம் தவித்தோம்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

ஊரோடு கிளம்பி
நாவற் குழியில்
நசுங்கிச் செத்தோமே
நவாலியில் கூண்டோடு
நாய்களைப்போல்
குமிந்த எம் உடல்களின் மேல்
நாம் கதறி அழுகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்நாம்
வேர்களை இழந்து
ஊர் ஊராய்
அலைகையில்
துர்க்கனவுகளில்
துப்பாக்கிகளைக்கண்டு
எங்கள் பிள்ளைகள்
திடுக்கிட்டு அலறுகையில்
எங்கள்
பள்ளிக்கூடத்தில்
குண்டுகள் வீழ்கையில்
ஒழுகும் கூரையில்
எம் குழந்தையின்
கொப்பி எழுத்துக்கள் கரைகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்


நாங்கள் எங்கள்
பனைமரங்களைவிட்டு துரத்தப்படுகையில
தெருப்புழுதி
எங்கள் பாதங்களில்
ஏறிவர
பாதங்களின்
சுவடுகளேயறியாக்
காடுகளிற்குள்
நாம்
துரத்தப்படுகையில்
காடுகளில்
எங்கள் குழந்தைகளின்
புன்னகை
மழையில் நனைகையில்
மலேரியாவில் சாகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

சப்பாத்துக்கள்
எங்கள் முற்றத்தை மிதிக்கையில்
உறுமும் வண்டிகள்
எங்கள் வேலிகளைப்பிரிக்கையில்
துப்பாக்கிகளின் குறி
எம்மீது பதிகையில்
உயிர் ஒழித்து
நாங்கள்
ஊர்விட்டோடுகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்

எங்கள்
நதியின் சங்கீதம்
துப்பாக்கி வாய்களில்
சிக்கித் திணறுகையில்
கடலின் பாடலை
அவர்கள் கைது செய்தபோது
எங்கள் குழந்தைகளை
அவர்களின் வாட்கள்
இரண்டாகப்பிளக்கையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்


ஊரில்
கந்தகம் மணக்கையில்
வானில்
மரணம் வருகையில்
வயலில் அவர்கள்
மரணத்தை விதைக்கiயில்
வரம்புகளில் உடல்களைக்கிடத்தையில்
ஊரைப்போர் விழுங்கையில்
ஊர் ஊராய்
நாம் அலைகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

எங்களுடைய
தெருக்களில் சருகுகள்
நிறைகையில்
குருவிகளின் குரல் சப்பாத்துக்கால்களில்
நொருங்கித்தேய்கையில்
மனிதர்களின்
சுவடுகளேயறியா
இடங்களிற்கு நாம்
துரத்தப்படுகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

உறைந்துபோய்க்கிடக்கும்
எங்கள் குழந்தைகளின்
புன்னகையை
குரல்களற்று அலையும்
ஊர்க்குருவியின் பாடலை
பச்சையற்றெரியும்
எங்கள் வயல்களின் பசியை
பேனாக்களை இழந்த
எங்கள் குழந்தைகளிடம்
இருந்து துப்பாக்கிகளை
மீட்கமுடியாமல்
நாங்கள் தத்தளிக்கையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்எங்களுடைய
புன்னகையை சந்தேகிக்கும்
எல்லோருக்கும் சொல்கிறோம்…….முகவரிகளற்றுத்
தேசங்களில் அலையும்
உறவுகளின் முகங்களை
மாற்றங்கள் அற்றுப்போன வாழ்வின் சுவையை
மறுபடியும்
தரமுடியுமா உம்மால்?

அப்போதெல்லாம்
நாங்கள் ஏன் தனித்தோம்
உலகே
எங்கள் உணர்வுகளி;ன் வலி
எட்டவில்லையா உனக்கு
எம்மூரின் நதியின் சலசலப்பில்
வருடும் தென்றலின் தழுவலில்
ஒவ்வொரு ப+வின் முகத்திலும்
விடுதலையின் விருப்பு மிளிர்கிறதே
தெரிகிறதா உனக்கு

நாங்கள் கனவுகள் சுமக்pறோம்
எங்களிடம்
மிச்சமிருக்கும்
சுதந்திர உணர்வுகளின் மீது
எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்
நிறங்களற்றுப்போன
இவ்வாழ்வின் நிறம்தருவார் யார்?

- சஹானா

Thursday, June 22, 2006

காலடிகளைத்தின்கிற காற்று...


நீ என்னிடம் தந்துபோன
சிலமுத்தங்களும்
புன்னகைகளும்
மட்டும் எனக்குப்
போதுமானதென்று
உனக்கு யார் சொன்னது...?

என் ஆயுளைத் தின்கிற
உன்
நினைவுகளின் காலடி
ஓசையற்று நகர்கிறது
தொலைவிற்கு...

உனக்கான கடிதங்கள்
எழுதப்படாமலேயே
எனக்குள் இறந்தன
கவிதைகளும்...

நீளும் தொலைவுகளை
நெருக்கத் திராணியற்று
நெளியும் என் வாழ்வு..

இப்போது
உன் காலடிகளையும்
தொலைவிற்கு
செலுத்துகிறது காற்று

மழையைப்போல
நிரந்தரமற்றிருக்கும்
நமது பிரிவு
அதைப்போலவே
அழுத்தமானதும்
கவனிக்கச்செய்வதும் கூட

த.அகிலன்

Wednesday, June 21, 2006

சிந்திப்பது குறித்து........


நான்
சிந்திப்பதை நிறுத்திவிடுகிறேன்
எதைப்பற்றியும்..
அது என்னைக்
கேள்விகளால் குடைந்து கொண்டேயிருக்கிறது.

அது
எப்போதும் மகிழ்ச்சியின்
எதிரியாயும்
துயரத்தின்
தொடர்ச்சியாயுமே நீள்கிறது.

எல்லோருடைய
புன்னகைகளின் பின்hனால் உள்ள
வேட்டைப்பற்கள் குறித்தும்
ஒளிரும் ஓவ்வொரு வார்த்தைகளினதும்
குரூரநிறத்தையும்
சிந்தனைதான்
எனக்குச் சொலலித்தருகிறது..

புன்னகைகளை
வெறுமனே புன்னகைகளாயும்
வார்த்தைகளை
வெறுமனே வார்த்தைகளாயும்
மனிதர்களின்
கண்களின் பின்னால் உள்ள
இருள் நிறைந்த காடுகளை
பசும் வயல்களெனவும்
நான்
நம்பவேண்டுமெனில்
நிச்சயமாக
நான்
சிந்திப்பதை நிறுத்தியேயாகவேண்டும்

த.அகிலன்

Saturday, June 10, 2006

இப்போதுஎன்னிடம் நிறைவேறாத
இக்கவிதையின்
பின்னரும்
தேங்கிக்கிடக்கும்
வார்த்தைகள்
உனக்காய்….

மின்சாரமற்ற
ஒரு நாளின் இரவை
குண்டுச்சத்தங்கள்
நிறைத்தன.
அமைதியும் தூக்கமுமற்ற
அப்பொழுதுகளை
நீ மீளவும் தருகிறாய்….

காற்றில் தொலைந்துபோன
கைவிளக்கின் ஒளியோடு
போயின உனது பாடல்கள்.

உனது பாடல்களை
மீட்கவும்…….
காற்றில் தொலைந்து போன
கைவிளக்கின் ஒளியைக்காணவுமாய்
நீள்கிறது என்காத்திருப்பு…

எனக்கு அப்போது
தெரிந்திருந்தது
தூங்காதிருக்கவும்
காத்திருக்கவும்
விளக்கின் ஒளியையும்
உனது பாடல்கள் குறித்தும்

த.அகிலன்

நிமிர்ந்து நடக்கும் நதி


ஒரு
புன்னகை
கடந்துபோகிறது

நிமிர்ந்து நடக்கும்
நதியைப்போல…..

சட்டென்று
பின்தொடர்ந்து
முழிக்கிறது மனசு
வாகனங்களின்
தெருவில் மாட்டிக்கொண்ட
ஒரு
குழந்தையைப்போல,

யாரும்
கண்டுகொள்ளாத
குழந்தையின் கண்ணீர்
எனக்குள் நுழையும்
ஒரு
நதியின் கவிதையென

வாகனங்களின்
இரைச்சலையும்; மீறி
என்
காதுகளை அடைகிறது.
புல்லாங்குழலின்
சங்கீதம்

த.அகிலன்

Friday, June 09, 2006

காத்திருப்பின் வலி


காத்திருப்பின் வலி
மரமொன்றின்
கிளையிருந்து உதிர்கிறது

நம்பிரிவின்
முதற்கணத்தில்
நீ
சிந்திப்போன
புன்னகையும்
பார்வைகளும்
ஓர்
ஓவியமாய்
உறைந்துபோனது,

கிழிபடாத
நாட்காட்டியின்
துயரம்போலத்
தொலைகிறது
என் காதல்.

ஆனாலும்
பெண்ணே
நம்
சிலிர்த்துப்போன
நினைவுகளின் கணங்கள் மட்டுமே
போதுமானவை
என் காத்திருப்புக்கு..

த.அகிலன்

பழைய வீடு


கூரையின்
முகத்தில் அறையும்
மழையைப்பற்றிய
எந்தக்கவலையும் அற்றது
புது வீடு

இலைகளை உதிர்த்தும்
காற்றைப்பற்றியும்
இரவில் எங்கோ
காடுகளில் அலறும்
துர்ப்பறவையின் பாடலைப்பற்றியும்
எது விதமான துயரமும் கிடையாது
புது வீட்டில்

ஆனாலும் என்ன
அதன்
பெரியயன்னல்களினூடேநுழையும்
நிலவிடம்
துளியும் அழகில்லை......

த.அகிலன்

Thursday, June 08, 2006

புன்னகையின் பயணம்சூரியன்தன் ரகசியங்களோடு
நுழைகின்றான் எங்கும்
விசாரணைகள் ஏதுமின்றி
எங்கும் நிரம்பிவழிகிறது
சூரியனின் ரகசியங்கள்
காற்றுக்குக்கேள்விகளுமில்லை
வேலிகளுமில்லை

என்னுடையதும்
உன்னுடையதும்
கனவுகளுக்கும் கூடரகசியம் கிடையா

எனதுமுற்றத்தில் விழுகிறது
பச்சை வேட்டைக்காரர்களின்நிழல்…..

துப்பாக்கியின்கண்களிடம்
காதல் இல்லை
கோபமும் கிடையாது

ஒருபெருநதியின்ஆழத்தில்
தொலைக்கப்பட்டு விட்ட சாவி

என்னிடம்நம்பிக்கைகள் இல்லை
முதலைகளால்
அதை மீட்டுவிட முடியுமென்று…..

சூரியனின்தடங்களற்ற தொலைவிற்கும்
காற்றால்காவுகொள்ளப்பட
முடியாதசுவடுகளைக் கைவிட்ட படியும்
குயிலின் குரல்வழியேபயணிக்கும்
என்புன்னகையாரும் அறியாதபடிக்கு….

த.அகிலன்