Tuesday, July 31, 2007

எழுதப்படாத சொற்களும் தாள்களும்...


நான்
வெற்றுத்தாள்களை
வாசிக்கிறேன்….

குருதியும்
ரணங்களும் வழியும்
துயரத்தின் மிகு சொற்கள்
அத்தாள்களின் மீது
உறைந்துள்ளன….

தாள்களின்
ரகசிய இடுக்குகளில்
ஒழிந்திருக்கிறது..
வேட்டைக்காரனின்
அம்புகள் தீட்டிய
அழுகையின் வரைபடம்..

எழுதப்படாதிருக்கிற
எந்தச்சேதியிடமும்
புன்னகையில்லை….

தன் பின்னலைத்தளர்த்திய
ஒரு கிழவியின்
சாபத்தின் சொற்கள்
ஊரை நிறைத்தது…

பின்பொருநாள்…
பூவரசம் வேலிகளைத்
தறித்தபடியெழும்
கோடரியின் கரங்கள்
ஒரு குழந்தையிடமிருக்கக்
கண்டேன்….

தடுக்கமுயலும்
கிழவியிடமிருந்து எழும்
இயலாமையின் சொற்கள்
தேய்ந்து போயிற்று
ஊடுபத்திய
கைவிளக்கைப்போல.....

Friday, July 27, 2007

வைரமுத்துவின் மறுபக்கம் ஒரு திடுக்.....!?

என்னதான் புகழ் மிக்கவராக இருந்தாலும்.பாடலாசிரியர் வைரமுத்துவின் இலக்கிய முகம் என்பது சர்ச்சைகள் நிறைந்ததாகவே யிருக்கிறது. அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளின் பின்னால் நிகழ்ந்து விட்டிருக்கின்ற அரசியல் பற்றி நிறைய விவாதங்களும் கேள்விகளும் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

அண்மையில் கீற்று இணைய இதழுக்கு பேட்டி அளித்திருக்கிற திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி வைரமுத்துவின் இன்னொரு முகத்தை சத்தமில்லாமல் நாகரிகமாக தோலுரித்திருக்கிறார் இங்கே அந்த கேள்வியம் சுவாரஸ்யமான பதிலும் இங்கே.

இப்ப இருக்கிற இளம் பாடலாசிரியர்களுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கு? மூத்த கவிஞரான வைரமுத்துவுக்கும், உங்களை மாதிரி இளைஞர்களுக்கும் தொடர்ந்து மோதல் வந்துக்கிட்டே இருக்கே?

சினிமா ஒரு பெரிய துறை. அதில் ஒவ்வொருத்தரும் தனக்குத் தெரிஞ்சதை சொல்லிட்டும் பண்ணிட்டும் போறாங்க. அவ்வளவு தான். இதில அவங்களோட உறவு எப்படி இருந்தால் என்ன? ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. அது அவங்களோட மன இயல்பை பொறுத்தது அவ்வளவுதான்.

வைரமுத்துவை நான் ஒரே ஒரு தடவைதான் நேரில் சந்திச்சேன். கணையாழியில் வேலை பார்த்தபோது நடந்தது அது. அப்ப என்னோட கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருந்தது. ஒரு பத்திரிகைக்காக இரண்டு பேரும் சந்திச்சோம். இலக்கியம் தொடர்பா கடுமையான விவாதங்கள் நடந்தது. அவர் சொல்ற எல்லாத்தையும் நான் கடுமையா மறுத்தேன். விவாதத்தை முடிஞ்சு, பத்திரிகைக்காரங்க போன பின்னாடி, வைரமுத்து எங்கிட்ட சொன்னார். ‘நிறையப் படிக்கறீங்கன்னு தெரியுது, உங்களோட எழுத்தும் நல்லா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க’ அப்படின்னு சொன்னார். நல்ல விஷயம் தான். அந்தச் சின்னப் பாராட்டைக்கூட மத்தவங்க முன்னாடி சொல்லாம தனியாச் சொன்னார். அதுதான் வைரமுத்து.

முழுமையான பேட்டிக்கு

Tuesday, July 10, 2007

ஆவிகளும் விமானங்களும்.....

நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம் புத்தகத்தில் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது. எதற்கு அவர்கள் இதனைக் கண்டு பிடித்தார்கள். எங்கள் மீது குண்டுபோடவா? எத்தனை விதம்விதமான விமானங்களின் குண்டுவீசும் திறன்களை சமாளித்து வந்திருக்கிறோம். அவ்ரோ, புக்காரா, சுப்பர்சொனிக், கிபிர் இப்படி விமானங்களை பறக்கும் ஒரு அதிசய கொடுரமிருகம் போலவே அறிந்திருக்கிறோம். எனது பிள்ளைப்பருவங்களிலே நான் மிகமுக்கியமாக பயப்படுகிற இரண்டு விசயங்கள் ஒன்று ஆவிகள் மற்றது கிபிர்.

ஆவிகள் நாவல் மரத்தமடியில் மத்தியானம் 12மணிக்குப்போனாலோ அல்லது இரவு 6மணிக்கு மேல் எந்தக்கணத்திலுமோ தாக்ககூடியவையாயிருந்தன எனது எண்ணங்களில். ஆனால் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவைதான் ஆவிகளைவிடவும் கொடுமையானவையாக இருந்தன. கற்பனைப்பரப்பிற்கு வெளியிலும் துன்பம் விளைவிப்பவையாக இருந்தன.

எந்த நேரத்திலும். விமானத்தின் ஓசை மரணத்தின் குரல் போல கிராமத்தினூடே பரவும், தொற்றிக்கொள்ளும் பரபரப்பினிடையயே பதுங்கித் தொலைப்போம். உயரின் துடிப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்ட கணங்கள் அவை. முன்பெல்லாம் விமானங்கள் வருகின்ற ஒரு இரைச்சல் முன்னதாகவே வந்து விடும் அதாவது ஒலியைவிட வேகம் குறைந்த விமானங்கள் அவை. எமக்கு அவகாசம் நிறைய இருக்கும் பதுங்கிக்கொள்வதற்கு.
பிறகு மிகை ஒலி விமானங்கள் வந்தன. அவை எந்தவிதமான அவகாசத்தையும் எமக்கு தருவதேயில்லை. மரணபயம் அறிவிக்கப்படாமல் வந்தது. சாவுக்குத் தயாராவதற்கான அவகாசத்தைக்கூட அவை எங்களிற்கு வழங்கவில்லை.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. சுப்பசொனிக் விமானங்கள் கிளிநொச்சியில் முதல் முதல் தாக்குதல் நடத்திய நாள். எங்கள் வீட்டுக்கு மேல்தானே குண்டு விழுந்தது. முதல் குண்டு எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் விழுந்தது. வெடித்தபிறகுதான் சத்தமே கேட்டது. வித்தியாசமான உறுமலாக இருந்தது.

நானும் தங்கச்சியும் கொண்டல் மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தோம். வீரிட்டலறியபடி எழுந்தோடிய திடுக்கிடும் கணங்கள் இப்போது வரைக்கும் திகிலூட்டும். வாழ்வின் முக்கியமான சில உணர்ச்சிகள் அப்படியே உறைந்து மனதின் மீட்கக்கூடிய தடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். பிறகு ஏதேதோ திடுக்கிடும் தருணங்களில் ஒரு மௌன இடைவெளியை மனதில் உருவாக்கி தம்மை பிரதியீடு செய்து கொள்ளும்.

அப்படித்தான் இந்த விமானத்தாக்குதல் பற்றிய திடுக்கிடும் கணங்களும் என்னுள் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மீட்டப்படுகிறது. அதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அன்றைக்கு நானும் எனது முழங்காலில் காயப்பட்டேன். தங்கச்சியையும் இழுத்துக்கொண்டு மாமாவீட்டு பங்கருக்கு ஓடினாப்பிறகுதான் என் கால்களின் சூடான இரத்தம் வழிவதை உணர்ந்தேன். பிறது 3 நாள் கழித்து ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய பிறகு வீடிருந்த இடத்தில் சுப்பசொனிக் தோண்டியிருந்த பெருங்கிடங்கில் அல்ல கிணறில் தண்ணீர் ஊறிக்கிடந்தது.
போரின் கொடும் கணங்களில் தாகித்தலையும் போர் வெறியர்களின் தாகம் தீர்த்திருக்குமா அது. எனது காலில் தையல் போட்டபோது அய்யோ என்னை வெட்டுறாங்கள் வெட்டுறாங்கள் என்று நான் அழுத கண்ணீர்தான் நிரம்பியிருப்பதாய் பட்டது எனக்கு. அல்லது உழைத்துக் கட்டிய வீடு கண்முன்னே தகர்ந்து போய்க்கிடப்பதன் தாளாமையினால் அம்மாவின் மனம் அழுத அழுகையா? எது வென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் இப்போதும்….

Monday, July 09, 2007

ஒருத்தீ……..


1.
மரணம் எப்படி அறிவிக்கப்படுகிறது. திடீரென்று ஒரு அதிகாலைத் தொலைபேசி அழைப்பில் வெகு நிதானமாகத் தொடங்கும் உரையாடலின் இரண்டாவது மூன்றாவது இழையில் மரணம் குறித்தான சேதி சொல்லப்படும். அது சொல்லப்படும் உறவுகளின் நெருக்கம் குறித்து இருக்கிறது. கேட்பவருக்கு செத்துப்போனவர் யார்? என்பதில் அந்த உரையாடலின் தொனி இருக்கும். அல்லது கேட்பவரின் உடல்நிலை மனநிலை இரண்டையும் கவனத்தில் வைத்தும் அது அறிவிக்கப்படுகிற தொனி இருக்கும்.

எனக்கு ஒரு மரணம் அறிவிக்கப்பட்டது? மின்னஞ்சல் வழியாக? ஏதோ ஒரு இணையதளத்தின் செய்தியில் இருந்து எடுத்த இரண்டு வரிகள் ஒட்டப்பட்டட மின்னஞ்சலில் மீந்திருந்த கேள்வி இது அவளா?.. அவள்தாள் ஊர் பேர் எல்லாம் அவளுடையதாயிருக்கும் போது அவளில்லாமல் எப்படியிருக்க முடியும்? அவள் இல்லாமல் போய்விட்டாள் ஆனாலும் இது அவள்தான். இப்போதெல்லாம் செய்திகளில் எந்தவிதமான அதிர்ச்சிகளிற்கும் தயாரான மனநிலையில் படிக்கவேண்டியிருக்கிறது. செய்தியின் எந்த இழையில் வேண்டுமானாலும் மிகச்சாதாரணமாக ரணங்கள் விநியோகிக்கப்படலாம். செய்திகளைப் படிக்காமலிருக்கலாம் என்றும் தோன்றுவதுண்டு. ஆனால் நினைவுகளையும் என்னையும் இணைத்துக்கொண்டிருப்பவை செய்திகள் செய்திகள் மட்டுமே. இந்த மரணம் எனக்குள் அதிர்ச்சிகளை கிளப்பி விட்டது என்றெல்லாம் இல்லை. ஆனாலும் ஒரு செய்தியாய் அதைக்கடந்து போய்விடமுடியவில்லை… ஓரத்தில் துளிர்க்கிற ஒரு துளிக்கண்ணீரை … கைக்குட்டைக்கு கொடுத்து விட்டு நிமிரவேண்டியிருக்கிறது.. மரணங்கள் வெறும் எண்ணிக்கைகளாய் செய்திகளாய் மட்டும் கடந்து போய்விடுகிற மரத்துப்போன ஒரு சூழலுக்கு நாங்கள் வந்துவிட்டோம் என்று தோன்றுகிறது.

அவள் செத்துப்போன அம்மம்மாவின் பிரியத்துக்குரிய பேத்தி. ஐந்து சகோதரிகளில் மூத்தவள். ஒரு கோபக்கார அப்பாவிற்கும் அவருக்கு அடங்குவதைத் தவிரவேறெதையும் அறியாத அம்மாவிற்கும் பிறந்த அப்பாவி இரட்டைக்குழந்தைகளில் மூத்தவள். அவள் ஆம்பிளையைப்போல அவளது அப்பா அடிக்கடிசொல்லிக் கொள்ளுவார். அவள் அப்படித் தான் மாடு மாதிரி வேலை செய்வாள். அவளிடம் ரகசியமாக எல்லோரின் இதயத்தையும் வென்றுவிடுகிற அன்பு இருந்தது. அவள் எப்போதும் ஏதாவது செய்து கொண்டேயிருப்பாள். "வேலை" வேலை செய்வது மட்டும் தான் அவளுக்குப் பொழுது போக்கு. மற்றபடி படிப்பு ஏறாத ஒரு மொக்குப்பெட்டை அவள்…

இறந்தபிறகு எல்லோரும் ஒருவரைக் கொண்டாடுவது என்பது வழமையானது. ஆனால் இது இறந்த பிறகான ஒரு கொண்டாட்டமாக அல்லது புகழ்ச்சியாக இல்லை. இறந்தபிறகு எல்லோரும் புகழப்படுகிறார்கள் சகமனிதர்களிடம் இல்லாத ஒரு நற்குணம் அவர்களிடம் இருந்ததாய்ப் படும் எங்களுக்கு அவர்களது இறப்பின் பின்னால். இறப்பின் பின்னால் ஒருவரைப் புகழ்வதற்கான வார்த்தைகள் எங்கிருந்தாவது முளைத்துவிடுகின்றன.

எனக்கு ஞாபகம் இருக்கிறது ஒருக்கா முத்தவெளி விளையாட்டுப் போட்டிகளை வேடிக்கை பார்க்க போன போது அவள் வாங்கித் தந்த கோன் ஜஸ் கிரீம். இப்போதும் றோஸ் நிறத்தோடு கோண் குழியினையும மீறி என்கைகளில் வழிந்து குளிர்ந்து கொண்டிருப்பது போல இருக்கிறது. ஈரம் உதிர்ந்த கைகளைத் துடைத்துக்கொண்டேன். அப்போதெல்லாம் வீடுகளில் திருவிழாக்களுக்கோ விளையாட்டுப்போட்டிக்கோ போகும் போதுதான் தான் கையில காசு தருவாங்கள் அதுவும் ஏதோ கத்தையா இல்லை குத்தியா ஒரு 5 ரூபா தருவாங்கள் ஒரு ஐஸ்பழம் 5 ரூபா அதோடு எங்கள் கனவுகளை முடித்துக் கொண்டு விடவேண்டும். அப்படி எல்லாரும் ஐஸ்பழத்தை வாங்கி அவசரப்பட்டு குடிச்சிட்டு மற்றாக்களை வாய்பார்த்துக்கொண்டிருப்போம். அப்போது யாரேனும் இன்னொரு ஜஸ்பழத்துக்கு பதிலாக கோன் வாங்கித்தந்தா எப்படி இருக்கும். ஆனால் அப்படியான இன்ப அதிர்ச்சி தரும் வேலைகளை அடிக்கடி செய்வாள் இவள். ஒரு பொறுப்பான ஆளைப்போல அக்கறையுடன் என்னைப் பார்த்த உடன் தனக்கிருக்கிற அஞ்சு ரூபாயையும் எனக்கு தந்து நீ கோன் வாங்கிக் குடி என்று சொல்லியிருக்கிறாள். நான் ஒரு போதும் உனக்கு.....? என்ற கேள்வியை கேட்தேயில்லை. பேசாமல் என்ரை அலுவல் முடிஞ்சா சரி என்பது மாதிரி காசை வாங்கிக்கொண்டு போய்க்கொண்டேயிருப்பேன். கேட்டிருக்கலாமோ என்ற தோன்றுகிறது இப்போது..
அந்தக் கூட்டத்திற்குள் விளையாட்டை வேடிக்கை பார்க்கிறோமோ இல்லையோ திருவிழாவில் தேரிழுக்கிறதைப் பார்க்கிறமோ இல்லையோ இவள் வந்திருக்கிறாளா எண்டு பார்ப்போம் அடுத்த கட்ட கோன் ஜஸ் இற்காக.

சின்ன வயதுகளில் கனகாம்பிகைக் குளத்து வயல்வெளிகளிற்கு மாடுமேய்க்க போவாள். எல்லாரும் தான் போவோம். எங்கட வீட்டை மாடுகள் கிடையாது. ஆனாலும் அவளது வீட்டில் நிறைய மாடுகள் நிண்டன லச்சுமி எண்டொரு மாடு அவளுக்கு மிகவும் நெருக்கமாயிருந்தது. அதனோடு பேசிக்கொண்டேயிருப்பாள் அவள். அது அவள் பக்கத்தில நிண்டா மட்டும் தான் பால்கறக்க விடும். பெரியம்மா வீட்டையும் மாடுகள் நிண்டன சனி ஞாயிறுகளில் நானும் சின்னக்காவும் பெரியண்ணாவும் அவளும் மாடு மேய்க்கபோவதுண்டு. அம்மா என்னை படிக்கவில்லை என்று பேசும் போது மட்டும் உன்னை மாடு மேய்க்கத்தான் அனுப்போணும் எண்டு ஆனா பிறகு சனிக்கிழமை இவேளோடு நானும் போகட்டா எண்டு கேட்டா அனுப்பமாட்டா அப்ப இவள்தான் எனக்கு அம்மாவிடம் சிபாரிசு பண்ணி கூட்டிக்கொண்டு போவாள். எப்பவாச்சும் என்னுடைய சக்கை குழப்படிகள் அம்மாவின் கைகளில் பூவரசம் குச்சிகளாய் மாறுகிறபோது காப்பாற்றியது இரண்டு பேர் ஒன்று இவள் மற்றது பெரியக்கா… மாடுமேய்க்கப்போவது எனக்கு ஒரு விளையாட்டு மாடுகளைப் பற்றி எனக்கொரு கவலையும் இருந்ததில்லை எனக்கு. மாடுகள் மேயுற வயல், ஓடுகிற கன்றுக்குட்டிகள் ,தண்ணி ஓடுகிற வாய்க்கால், படுக்க முடிகிற புல்வெளி, வண்ணாத்தப்பூச்சி, தத்துவெட்டி,அதைவிட மேலாகவும் பள்ளிக்கூடத்திற்கு லீவென்று மகிழ்ச்சி இவ்வளவுக்காகவும் தான் நான் அவேளோடு போகப்போகிறன எண்டு அடம்பிடித்து போவன்.

சின்னக்கா நல்லா வண்ணாத்தி பிடிப்பா ஆனா சின்னக்காவை விட வயல்களின் ரகசியம் அறிந்தவளாய் இருந்தாள் இவள். எங்கே வீரப்பழம் இருக்கு? எங்கே நாவல் பழம் இருக்கு? பூனைப்புடுக்குப்பழம் எங்கே படர்ந்திருக்கு எல்லாம் அவளுக்குத்தான் தெரியும். வயலின் ரகசியங்கள் அவளுக்குத் தெரிந்திருந்தது வரம்புகளில் இருந்து குதிக்கிற தவளைகளோடு பேசியபடி வயலின் ரகசியங்கள் தேடி விரைவாள். எல்லாவற்றையம் கடந்து ஓடுகிற என்னை எங்கெங்கே பாம்புகள் இருக்கும் எனத் தெரிந்து இழுத்து நிறுத்துகிற சாகசக் காரி அவள். ரகசியங்களை விரித்து வைத்து நாவில் சுவைக்கிறபோது இருக்கிற மகிழ்ச்சி சொல்லமுடியாதது.
மரங்கள் அவளுக்கு தோழிகள் போல மிகச் சாதாரணமாக ஏறுவாள். மாடுமேய்த்து விட்டு வரும் வழியில் முருகுப்பிள்ளைச் ரீச்சரின் வளவுக்குள் இருக்கும் ஜம்பு மரத்தில் ஏறி ரீச்சர் துரத்திக்கொண்டு வருவதற்கிடையில் படபடவென காய்கள் சொரிய குலைநிறையக் காய்களோடு ஒடிவரும் தைரியம் வேறு யாருக்கும் கிடையாது. (அதில எனக்கு பெரிய காய் வேணுமெண்டு அடம்பிடிக்கிற தைரியம் என்னை விடயாருக்கும் கிடையாது.) நிறைய தடைவைகளில் அவள் ஆம்பிளை மாதிரி என்று எல்லாரும் சொல்வதற்கு பொம்புளைப்பிள்ளையான அவள் மரத்தில் ஏறுவதுதான் காரணம் என்றாகிற்று. அம்மம்மா அவளை இதற்காகவே நிறையப் பேசுவா. பார் பொடியள் மாதிரி கொப்புத்தாவித் திரியுறாள் என்று. ஆனால் அவள் அநாசயமாக ஏறுவாள் வீரைப்பழங்களின் உருசி நாவில் உந்தித்தள்ள அவள் கொப்புகளை முறித்துக் கீழே போட்டபடியிருப்பாள். பற்கள் மஞ்சளடித்துப்போகும் வரை தின்றபடியிருப்போம். அவள் அப்படித்தான் மற்றவர்களுக்காக அல்லது மற்வர்களின் புன்னகையில் அவள் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு முறை நாங்கள் மாடுகளை மேயவிட்டு வயல்களில் அலைகையில் இரண்டு மாடுகள் அப்படியே கொம்புகளைப் பிணைத்துக்கொண்டு மூர்க்கமாக மோதிக்கொண்டன. ஒரு மாட்டின் தலையில் நிறைய ரத்தம் வந்துகொண்டேயிருந்தது. நான் முதல்முதலாக அந்த மாட்டுச் சண்டையைப் பார்த்தேன். மூர்க்கமான ஒரு மோதல். மாடுமேய்க்கும் கதைகளில் மாடுகள் இப்படி கொம்புகளைக் கொழுவிக்கொண்டபின் ஒரு மாடு சாகும் வரைக்கும் மற்ற மாடு விடாது என்கிற மாதிரியான திகிலூட்டும் கதைகள் மலிந்திருந்தன அவள் தான் அதையும் எனக்குச் சொல்லியிருந்தாள். அதையும் மீறி யாரேனும் பிரிக்க முயற்சித்தால் அவர்களின் கதி அதோகதிதான். ஆனால் அன்றைக்கு அவள் அய்யோ பாவம் இந்த மாடுகள் என்றபடி அந்தமாடுகளை பிரித்துவிட்டுத்தான் வருவேன் என்று தடியெடுத்து அந்த மாடுகளை அடித்து கொம்புகளினிடையில் தடியை ஓட்டி என்னென்னவோ செய்து பிரித்து விட்டுத்தான் வந்தாள். நாங்கள் எல்லோரும் ஓடிப்போய் ஒரு மரத்துக்குப்பின்னால ஒளிஞ்சிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம். மாடுகள் கொம்புகளால் அவளைக்கிளிக்க போகின்றன என நினைத்துக்கொண்டு.. அவள் ஒரு ஜான்சிராணியைப்போல வந்து கொண்டிருந்தாள் எதுவுமே ஆகாமல். பிறகு எல்லோரும் வீட்டை போனாப்பிறகு நான் நடந்ததைப் போட்டுக்கொடுக்கிறேன் எனத் தெரியாமல் பெரிய புழுகமாகப் போட்டுக் கொடுக்க நடந்தது அவாக்கு அகப்பைக்காம்புப் பூசை.

அடுத்த நாளில் இருந்து அவள் வெளியில் வருவதேயில்லை. நான் நினைச்சன் ஏதோ கோபம் போல நான் வீட்டை வந்து சொல்லிப்போட்டன் எண்டு… நான் அவேன்ர வீட்டை போகேக்க அவள் ஒரு அறைக்குள் இருந்தாள். எனக்குப்புதினமாக்கிடந்தது. என்னடா இவள் ஒரு இடத்தில இருக்கிறாளே எண்டு . பிறகு தான் மாமி சொன்னா அவள் சாமத்தியப்பட்டிட்டாள் எண்டு. அவளுக்கு என்னில கொஞ்சமும் கோபமில்லை என்னைப்பார்த்து சிரிச்சாள். அவள் தன்ர சாமத்திய வீட்டுக்குச் சுட்ட பலகாரத்தை அதற்கு முதல் நாளே ரகசியமா எடுத்து எனக்குத் தந்தவள். சாமத்திய வீடுகள் எனக்கு எப்போதுமே வேடிக்கையானவை பெரியக்காவின் சாமத்திய வீடுதான் முதல் நடந்த சாமத்திய வீடு அதில எடுத்த போட்டோக்களும் குதியன் குத்தும் எல்லாமுமே போதும் போதும் எண்டாகீட்டுது. அதுக்குப்பிறகு எத்தினை சாமத்தியவீடு வந்தாலும் எங்களுக்கு அதெல்லாம் பலகாரம் தின்பதற்கானதும் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதற்குமான ஒரு நாள் அவ்வளவுதான். இவளுடையதும் அப்படித்தான் கழிந்து போனது………

பிறகு நிறையத் தடைவைகளில் நான் அவளோடு "கண்ணைக்கட்டி கோவம் பாம்பு வந்து கொத்தும் செத்தாலும் வரமாட்டன் செத்தவீட்டுக்கும் வராத" என்று கோபித்துக்கொண்டு விட்டு வந்திருக்கிறேன். ஆனால் அவள் ஒருபோதும் அப்படிச்சொன்னதே கிடையாது. உண்மையாகவே இனி அவள் என் செத்தவீட்டிற்கு வரமுடியாது நானும் அவள் செத்தவீட்டிற்கு போக முடியாத்தொலைவில்.அவளே வலிய வந்து நேசம் போடுவள் அப்போதெல்லாம் நான் இறுமாந்திருப்பதுண்டு அவாவாத்தானே வந்து கதைச்சவா எண்டு…. ஆனால் அவள் எல்லோருடனும் நேசத்துடனே இருக்க விரும்புகிறவளாயிருந்தாள். அவள் நேசத்திற்கு வட்டங்கள் எதுவும் கிடையாது. எங்கள் எல்லோருடைய நேசத்துக்கும் வட்டங்கள் உண்டு பிடித்தவை பிடிக்காதவை வரையறைகள் உண்டு. அவளிடம் கிடையாது. அவள் கோபத்தை இலகுவில் யாரும் சம்பாதிக்க முடியாது. வெகுளித்தனமானதும் வெளிப்படையானதமாயிருந்த அன்பு அது.



2.


பிறகு கொஞ்சநாள் கழித்து நான் கவிதையெல்லாம் எழுத ஆரம்பித்த பிறகு நான் அவளைக்குறித்து இப்படி எழுதினேன்.

பூப்பறித்தாலே
மனசு நோகிற உனக்கு
மரம் தறிக்கிற தெளிவு
யார் கொடுத்தது…..


இப்போது அவள் முந்தினமாதிரியில்லை எல்லாம் மாறிவிட்டது அவளது பேச்சில் ஒரு விதமான தெளிவு இருந்தது. முன்னிலும் நிதானமாக எல்லாவற்றையும் அணுகினாள். துப்பாக்கிகளைக் காதலித்தாலும் பூக்களை மறக்காதவளாயிருந்தாள். லீவில வீட்டை வரும்போதெல்லாம் அம்மம்மாவிற்கு மாலை கட்டிக்கொடுப்பாள்.

பிறகெல்லாம் அதிகம் பேசிக்ககொள்வதேயில்லை எங்களிற்கும் அதற்குப்பிறகு நிறைய வேலைகள் இருந்தன. திடீரென்று ஒரு நாள் சொன்னாள் "வளந்திட்டியள் நல்லா" சைக்கிளிலேயே விழுந்து எழும்பி ஓடினநான் பிறகு மோட்சைக்கிள்ள அப்பிடியே காலுக்கவைச்ச சுத்தப்பழகியிருந்தன். எனக்குச் சைக்கிள் பழகிய ஞாபகங்கள் இருந்தன முதலில் உருட்டி பிறகு கீழால காலோட்டி ஓடி யாரேனும் பிடிக்க ஓடி. எனக்கு சைக்கிள் பழக்கினது இவள்தான்.

பிடியுங்கோ பிடியுங்கோ நான் கத்திக்கொண்டேயிருப்பேன்..
நான் பிடிக்கிறன் நீ முன்னால பாத்து ஒடு
சைக்கிள் கொஞ்ச தூரம் போகும். ஆகா நல்லா ஓடுறனே என்று திரும் பார்த்தாள் அவள் இருக்கமாட்டாள் உடன விழுந்திருவன். சிரிச்சுக்கொண்டே ஓடிவருவாள். எனக்கு கோபம்கோபமாய் வரும். போடி என்று திட்டி தலைமயிரைப் பிடிச்சு உலுப்புவன் அவள் சிரித்துக்கோண்டேயிருப்பாள் நான் சைக்கிளையும் விட்டுட்டு வந்திருவன். சைக்கிளைக் கொண்டு வந்து வீட்டை விட்டுட்டு அம்மாவிடம் விளக்கங்கள் சொல்லிவிட்டு போவாள். பிறகு எத்தனை தடைவைகள் ஆக்களை வைச்சு ஓடிப்பழகோணும் என்று அவளை ஏத்தி விழுத்தி தள்ளியிருக்கிறன். அப்போதெல்லாம் கோபித்துக்கொண்டதேயில்லை.


ஆனால் இப்ப அவளைக்காணும் போதெல்லாம் ஆ வாங்கோ எப்பவந்தனியள் அவ்வளவுதான் போய்விடுவேன். பிறகொருநாள் நான் அவளைச் சந்திப்பதற்காக போயிருந்தபோது ஒரு கொட்டிலுக்குள் இருந்து பேசிக்கொண்டிருந்தோம். திடிரென்று மணிச்சத்தம் கேட்டு என்ன நினைத்தேனோ ஜஸ்பழக்காரனை மறித்து ஜஸ்பழம் வாங்கிக் கொடுத்தேன் அவளுக்கும் அவளது தோழிகளிற்கும். அண்ணை கோண் இல்லையே நான் ஜஸ்பழக்காரரைக் கேட்டேன் அப்போது திடீரென்று அவள் சிரித்தாள். என்ணண்டு கேட்டன்? ஒண்டுமில்லை எண்டாள். ஆனால் சிரிப்பினுள்ளே நிறைய அர்த்தங்கள் இருக்கிறதோ? என்று தோன்றியது. நான் வளந்திட்டன் உழைக்கிறன் அதால அவளுக்கு ஜஸ்பழம் வாங்கிக்கொடுக்கிறேன். இதன் பணப்பெறுமதிகளை விடவும் மனப்பெறுமதி முக்கியமானது. என்னதான் ஜஸ்பழம் குடிப்பதையெல்லாம் விட்டு பெரிய பெரிய கடைகளில் விரும்பின ஜஸ்கிரீம்களை விரும்பின நேரம் சாப்பிடுற மாதிரி இருந்தாலும். அண்டைக்கு அவள் வாங்கித் தந்த 5 ரூபாயில் சாப்பிட்ட கோண் ஜசின் ருசியிடம் எல்லாம் தோற்றக்கொண்டேயிருப்பதாய் பட்டது எனக்கு…..

எனக்கு ஞாபமிருக்கிறது. அவளிடம் ஒரு நாள் திடீரென்று எல்லா மச்சான்களிலும் உங்களுக்கு யாரை மிகவும் பிடிக்கும் என்று நான் கேட்டது. விஜி அண்ணா கேக்ககச் சொல்லித்தான் கேட்டதாக ஞாபகம். யாரென்று சரியாக நினைவில் இல்லை. அவள் சிரித்படியே ஏன் கேக்கிறாய் என்று கேட்டாள்? அதற்குப்பிறகு நான் அங்கே நிற்க வில்லை ஓடிவந்துவிட்டேன். அது முந்தி பிறகு இப்ப கொஞ்சநாள் முதல் திடீரென்று எனக்கு கல்யாணம் என்றாள். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்னதான் துப்பாக்கி ஏந்திய பெண்ணாக இருந்தாலும் அவளால் இன்னமும் கடக்க முடியாமல் இருந்த ஒரு இடம் அல்லது நபர் அவளது அப்பா. நிதானமாய் இருக்கிறாரா கோபமாய் இருக்கிறாரா என்று தெரியாத அப்பா. கண்டுபிடிக்க முடியாத அப்பா? கண்டிப்பு மட்டுமே அவருக்கு தெரிந்தது. ஆனால் அவள் அந்த கண்டிப்பினிடையில் பாசம் ஒளிந்து கொண்டிருப்பதாய் நம்பினாள். எப்போதும் அவர்களது வீட்டில் ஒரு விதமான மௌனம் குடியிருந்து கொண்டேயிருக்கும். எனக்கு தோன்றியிருக்கிறது எல்லாம் பொம்புளைப்பிள்ளையள் எண்டதாலைதான் இவ்வளவு அமைதி நிலவுகிறதோ என்று. பிறகுதான் புரிந்தது அவளது அப்பாவின் கோபம் தாண்டமுடியாத படியாக கடைசிவரைக்கும் இருந்தது அந்த வீட்டில். எங்கேயிருந்தாலும்கயிறுகளை அவரே வைத்திருந்தார். இப்போது அவள் தனக்கு கல்யாணம் என்கிறாள் அதுவம் தகப்பனிடம் கேட்காமலே தான் கல்யாணம் கட்டிக்கொள்வதாக முடிவெடுத்திருக்கிறாள்.

நான் ஆச்சரியமாய்க் கேட்டேன் காதலா?.... ஒரு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு அவள் சொன்னாள்.
ஓம்….
நல்லது… நீங்கள் எடுத்தது சரியான முடிவு….
எப்ப கல்யாணம்
இல்ல சோபாக்கு நடக்கட்டும் பிறகு செய்வம் .
ஏன்?
நாங்க ரெண்டு பேரும் இரணைப்பிள்ளையள் இரண்டு பேருக்கும் ஒண்டா நடக்காட்டியும் அவளுக்கு நடந்தாப்பிறகு எனக்கு நடக்கட்டும்…

எனக்கு இப்போதும் இவள் தன்னைவிட மற்றவர்களை நேசிக்கிறாள் என்று தோன்றியது.

பிறகு சோபாக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை பார்த்து வெளிநாட்டில் கல்யாணம் முடிஞ்சு அவள் வெளிநாட்டுக்கும் போயிட்டாள். நானும்……

பிறகொரு தொலைபேசி விசாரிப்பில் பெரியம்மாவிடம் கேட்டேன் எப்ப அவளுக்கு கல்யாணம்….
வாற ஆவணி…

ஆனால் எனக்கு ஒரு ஆனி மாத மழைநாளில். நண்பனிடமிருந்து வந்த மின்னஞ்சல் இப்படியிருந்தது.
who is this?
கப்டன் ஈழவேணி என்று அழைக்கப்படும் தொண்டமான் நகர் கிளிநொச்சியை சொந்த முகவரியாகக் கொண்ட சபாரத்தினம் பாரதி…


நான் பதில் எழுதாமல் இங்கே தொடக்கத்தில் இருக்கும் வரிகளை எழுதத் தொடங்கியிருந்தேன்…… வெளியே அடித்துப்பெய்து கொண்டிருந்தது மழை…..

Thursday, July 05, 2007

இன்று கரும்புலிகள் நாள்...

இன்று உயிராயுதங்கள் என்று வர்ணிக்கப்படுகின்ற கரும்புலிகளினுடைய நாள் அதை முன்னிட்டு கவிஞர் பஹீமாஜஹான் எழுதிய ஒரு கடல் நீருற்றி என்கிற கவிதை இங்கே மறுபடியும் இடப்படுகிறது.


படம் மூனா
ஒரு கடல் நீருற்றி
நட்சத்திரங்கள் பூத்த வானம் விரிந்திருந்தது!
எமக்குப் பின்னால்
பாதியாய் ஒளிர்ந்த நிலவு தொடர்ந்து வந்தது!
தூரத்து வயல் வெளியை மூடியிருந்தது
வெண்பனி
தென்னைகளில் மோதி குடியிருப்புகளை ஊடுருவி
எம் செவி வழி நுழைந்தது
வங்கக் கடலில் எழுகின்ற அலையோசை !
சந்தடி ஓய்ந்த தெரு வழியே
நீயும் நானும் விடுதிவரை நடந்தோம் !

இப்படியே
எத்தனையோ இரவுகளில்
விவாதிப்போம் நெடு நேரம்
முடிவில் ,எதிர்காலம் குறித்த அவநம்பிக்கைகளுடன்
பிரிந்து செல்வோம் !

பின் வந்த, பதற்றமான பொழுதொன்றில்
உன் விடுதலை வேட்கைக்குத் தடையாயிருந்த
அனைத்தையும் உதறி அடவி புகுந்தாய் !

பரணி...
உன் நினைவுகள் தேய்ந்து கொண்டிருந்த வேளை
மாரி கால அந்திப் பொழுதொன்றில்
நனைந்த சீருடைகளில் இருந்து நீர் சொட்டச் சொட்ட
மீளவும் நீ வந்தாய் !

அலையெழும்பும் கடல் பரப்பினில்
உனக்கான பணி முடிக்கவென விடைபெற்றுப் போனாய்:
வாழ்த்துச் சொல்ல வாயெழவுமில்லை!
ஆரத்தழுவிட நீ விரும்பவுமில்லை !
வெளியே பெய்த மழை என் கன்னங்களில் வழிந்தோட...
மழைப் புகாரினூடே மறைந்து போனாய் !

திரைகடல் சென்ற திரவியமானாய் !
ஆழிப்பரப்பெங்கும் ஊழித்தீ எழுந்து தணிந்தது-நீ
திரும்பி வரவே இல்லை !

இன்று வீரர்கள் துயிலும் சமாதிகள் மீது
காலத்துயரின் பெரு மௌனம் கவிழ்ந்துள்ளது !
சமுத்திரத்தையே சமாதியாகக் கொண்டவனே !
இங்கு ஏதுமற்ற உன் கல்லறையில்
ஒரு கடல் நீரூற்றி நிரப்பிடவோ?

- பஹீமாஜஹான்

அம்மம்மாவின் சுருக்குப்பை.....

ஒரு கவிதை
எனை அழைத்துப்போகிறது
ஊருக்கு…..

தும்புமிட்டாஸ் காரனின்
கிணுகிணுப்பிற்கு
அவிழ்கிற
அம்மம்மாவின்
சுருக்குப்பையைப்போல..
அவிழ்ந்து கிளம்புகின்றன
ஞாபகங்கள்….

சிட்டுக்குருவியின்
இறகுகளில்
பின்னப்பட்டிருந்தது வாழ்க்கை..

ஒரு
வேட்டைக்காரனின்
குறிக்குள் வீழ்ந்தபின்
வரையறுக்கப்பட்ட
வானத்திடம்
அதிசயங்கள் ஏது மில்லை….

தடங்கள்
இறுகிக் கொண்டன…

Wednesday, July 04, 2007

ரஜினிக்கு அறையவேண்டும்.......

01.
அறையில் பத்து மணிக்கு மின்சாரம் போய் மறுபடியும் தீடிரென்று முளைத்தது. அணைக்கப்படாதிருந்த தொலைக்காட்சி முழித்து ஓடத்தொடங்கியிருந்தது. திடுக்கிட்டு முழிக்கையில் ஏதோ ஒரு படத்தின் எழுத்தோட்டம் போய்க்கொண்டிருந்தது. (எழுத்தோட்டம் எண்டா படத்தில் நடித்தவர்களின் பெயர்ப்பட்டியல் வருகின்ற படத்துண்டைத்தான் எழுத்தோட்டம் என்போம். அதிலே நடிகை மீனாவின் பெயர் அறிமுகம் என்ற போட்டு எழுத்து சீர்திருத்தம் வருவதற்குமுன்பாக இருந்த “னா” போட்:டு இருந்தது. அட அந்தக்காலத்திலயே மீனா நடிச்சிருக்கிறாவா என்று தோன்றியது. திடீரென ஒரு நண்பர் கேட்டார் நாங்க எல்லாம் முந்தி சின்ன வயசில படம் பார்க்க எப்படி அலைந்திருக்கிறம். கொஞ்ச நேரம் எல்லோரும் சிரித்தோம் எதற்காக சிரிக்கிறோம் என்று தெரியாமல் சிரி சிரி என்று சிரித்தோம்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது. லியோனி தனது பட்டிமன்றம் ஒன்றில் சொல்லுவார் திரையில் என்னத்தை போட்டாலும் பார்க்கிறதுக்கு இண்டைக்கு மக்கள் தயாரா இருக்கிறாங்க அப்படியென்று…நாங்களும் ஒரு காலத்தில் அப்படித்தான் படம் பார்க்கிறதெண்டால் காணும் அதுவும் திரையில் கிடையாது தொலைக்காட்சிப்பெட்டியில். அது பிளைக்கன் வைற்றா கலறா எண்டதைப்பற்றியெல்லாம் பிரச்சினை இருக்கிறதில்லை படம் அவ்வளவுதான். சாப்பாட்டுச்சாமானுக்கு மூக்கு வேர்க்கிறமாதிரி ஊரில எந்த வீட்டில படம் இண்டைக்கு என்பது பற்றி தகவல்கள் கசிய ஆரம்பிக்கும் உடனே அந்த வீட்டை நோக்கி படையெடுப்போம். அதுவும் ரீவிக்கு கிட்ட இருந்துதான் படம் பார்க்கோணும் அப்பிடி பார்த்தாத்தான் வடிவாத்தெரியும் என்பதுமாதிரி. படம் எண்டா சும்மா கிடையாது அது ஒரு பெரிய நடவடிக்கை சுத்தி இருக்கிற ஒரு நாலுவீட்டுக்காரர் சேர்ந்து எல்லாரும் காசு போட்டு ஒரு வீட்டு முத்தத்தில இருந்து பார்க்கிறது. ஒரு நாளைக்கு சும்மா நாலு படம் 5படம் எண்டு போகும். விடிய விடிய படம் விடிஞ்சாப்பிறகு ரஜினி சிறீதேவிக்கு என்னமுறை எண்டு கேப்பாங்கள்…. அப்படி ஓரே அடியா மண்டை கலங்கிப்போய் 5 படத்தின்ர கதையும் குழம்பியிரும்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை படம் என்று தீர்மானம் போட்டுவிடுவார்கள். என்னெ;ன படம் பார்க்கலாம் அண்ணாக்கள் அக்காக்கள் மச்சாள்மார் எல்லோரும் சேர்ந்து என்ன என்ன படம் போடலாம் என்று மாமரத்தடி மாநாடு போட்டு கடைசியில் தீர்மானிப்பார்கள் எங்களிற்கென்ன கவலை எந்தப்படத்தைப் போட்டா என்ன படம் போட்டா சரி. ஒரு மாதிரி எல்லாருமாச்சேர்ந்து கலைச்சுக் கலைச்சு ஞாயிற்றுக்கிழமையும் வரும். அட ஞாயிற்றுக்கிழமை எதோ வேகமாக வந்தமாதிரியும் பின்னேரம் மெதுவா வாறமாதிரியும் இருக்கும். அண்டைக்ககெண்டு மணிக்கூடு அடம்பிடிச்சு மெதுவா ஓடற மாதிரி இருக்கும். பின்னேரம் ஒரு நாலுமணிக்கு பெரிய ஒரு பாண்பெட்டி மாதிரி ஒண்டைக்கட்டிக்கொண்டு ஒரு சைக்கிள் ஓழுங்கைக்குள்ள வரும் ஹோ எண்டு கத்திக்கொண்டு சிறுசுகள் எல்லாமா சேர்ந்து பூரண சினிமா மரியாதையை கொடுத்து ரீ.வி கொண்டு வருகிற அண்ணயை விழிவிரிய வரவேற்பம் அவர் எவ்வளவுதான் டேய் தள்ளுங்கோடா எண்டு பேசினாலும் அதைத் தொட்டுப்பார்ப்பதற்கான வீரம் எங்களிடம் இருக்கும். ஒரு மாதிரி சைக்கிள் நிண்டு அவர் ரீவியை எங்க வைக்கிற தெண்டு கேப்பார் அப்ப யாரே ஒரு பெரியாள் சொல்லும் இதில வையுங்கோ அப்ப தொடங்கும் பாருங்கோ இந்த படம்போடுறவங்களின்ர அழிச்சாட்டியம்.. உந்த மேசை சரியில்லை.. உந்த துணி டஸ்ற் எண்டு முத்தம் வரைக்கும் கொண்டு வந்த ரீவியை இற்க்கிவைப்பதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதித்துக்கொண்டு நிற்பார் ரீவிக்காரர். மாமா அதுக்குள்ள முறுகுவார் என்ன சும்மாவோ வாறாங்கள் வாடகைதானே குடுக்கிறம் என்ன தடிப்பு நினைச்சா திருப்பி அனுப்பிவிட்டிருவன் படமும் மண்ணாங்கட்டியும் எண்டு. எங்களுக்கு கவலையா இருக்கும் என்னடா வந்த படம் திரும்ப போகுதே எண்டு…. ஒரு மாதிரி எல்லாத்தையும் எல்லாரையும் சமாளிச்சு (ஒரு முறை நான் என்ர புது பெட்சீட்டை கூட இதுக்காக தியாகம் செய்திருக்கிறன் எண்டா பாருங்கோவன்)ரீவியை மேசையில வைச்சா அதுக்கு பக்கத்தில நிக்கிறதுக்கு அதாவது அதுக்குப் பக்கத்தில யாரையும் அதான் என் தரவழிப்பெடியளை நெருங்க விடமால் பார்த்துக்கொள்ளுறதுக்கு ஒருத்தனை எங்களில் இருந்தே தேர்ந்தெடுப்பார் அப்போது அவருக்கு மனசுக்கு யாரைப்பிடிக்குதோ அவனைத்தான் ரீவிக்காரர் தேர்நதெடுப்பார் அவன் ரீவிக்கு பக்கத்தில நிண்டு கொண்டு எங்களை நெருங்க விடவே மாட்டான். நாங்களும் அவனை மனசுக்குள் கறுவிக்கொண்டு பொறுத்துக்கிடப்போம் படம் தொடங்கு மட்டும்.

அடுத்ததா இன்ஜின் வரும் ஒரு வாட்டர் பம்மை ஜெனரேற்றராக்கிஅது ஒரு வித்தியாசமான கெற்றப்பா இருக்கும். கரியலை விட்டு இரண்டடி நீட்டடிக்கொண்டிருக்கும் அது. சைக்கிளில் அதையும் கொண்டு வந்து சாக்கெல்லாம் விரிச்சு ஏதோ வருத்தமாக்கிடக்கிற நாய்க்குட்டியை பராமரிக்கிறது மாதிரி வைப்பாங்கள் நாங்கள் அதையும் சத்திச்சுத்தி நிண்டு பாhப்பம். இதெல்லாம் படம்போடுறன அண்டு வெள்ளனவே வந்து சேர்ந்து விடும் ஆனா டெக்மட்டும் வராது எல்லாரும் நேரத்தைக் கலைச்சுக்கொண்டு நிப்பம் அம்மாக்கள் பெரியம்மாக்கள் எல்லாரும் சமையல் வேலைகளில் மும்முரமா இருப்பினம் என்னதான் படம்மெண்டாலும் நாங்கள் சாப்பாடு கேப்பம் தானே. அதனால நேரத்தோடய எங்களை வில்லகங்கப்படுத்தி சாப்பாடு தந்து முடிய ஓரு 7மணிக்கு ராஜா வாறார் பராக் பராக் எண்டுறமாதிரி இந்தா வருது அந்தா வருது எண்டுவாங்கள் டெக்காரர் வரவே மாட்டார். ஒழுங்கைக்குள்ளால சும்மா சைக்கிள் வந்தாலே வகுப்பில அதிபர் வாறார் அதிபர் வாறார் எண்டு தகவல்வர பெடியலௌ;ளாம் ஒருக்கா கலகலத்து அடங்குவாங்களே அது மாதிரி ஒரு நிலமை தோன்றும் வந்தவர் வேறு யாராகவோ இருப்பார். பிறகு கொஞ்சநேரத்தால ஒரு புதுசாப்பிறந்த பிள்ளையை கொண்டு வாறமாதிரி டெக்கை கொண்டு வருவார் அதோடு தான் கொப்பியளும் அப்ப உந்த திருட்டு விசிடி எல்லாம் கிடையாது திருட்டு வி.எச்.எஸ்.தான். அதைக் கொப்பி எண்டுவாங்கள் படக்கொப்பி. அதையும் அவர் கொண்டு வந்து மேசையில அடுக்கி வைச்சுப்போட்டு தொடங்கும் அடுத்தபடலம்……


02.

அதுதான் கொஞ்சம் முக்கியமான படலம். ஜெனரேற்றரை ஸ்டாhட் பண்ணுகிற படலம். நான் படம் பார்த்த தருணங்களில் எல்லாம் ஜெனரேற்றர் உடன ஸ்டார்ட் ஆனதே கிடையாது. ஜெனரேற்றரை எல்லாரும் கயித்தைச்சுத்தி இழுத்தோண்ண ஸ்டார்ட் ஆகிராது. அதுக்கு முன்பாக சில வேலைகள் செய்யவேணும் சைக்கில் பெல் இருக்கெல்லோ அதுன்ர ஒருபக்கத்தை தனிய எடுத்து ஒரு கம்பியை ஒட்டி வைச்சிருப்பாங்கள். அதை அவங்கள் ஸ்டார்ட பண்ணுறதை ஏதோ வித்தை காட்டுமாதிரி பார்த்துக்கொண்டிருக்கிற என்னைமாதிரி ஒரு சேவகனிடம் கொடுத்து வீட்டில தணல் வாங்கியாங்கோ எண்டு சொல்லுவினம். எங்களுக்கு ஏதோ அவையள் டாக்குத்தர் பட்டம் கொடுத்தது மாதிரி அதை வாங்கிக் கொண்டோடுவம் மிகவும் பெருமையாய் இருக்கும். அவங்கள் என்னிடம் வேலை சொல்லீற்றினம் எண்டு… தணலை வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தா ஏதோ வாழைப்பழம் பழுக்க வைக்கிறமாதிரி கயித்தை வாட்டர் பம்மில சுத்திப்போட்டு தணல்கரண்டிக்குள்ள கொஞ்ச எண்ணை ஊத்தி புகையை வரப்பண்ணி அதைக் காபரேற்றர் மூடியைக்கழற்றிப் பிடிச்சு புகையை அதுக்கு காட்டுவினம். அதெல்லாம் அந்த வயசில பார்க்கும்போது ஏதோ சாகசம் மாதிரி இருககும். இப்படி புகையடிச்சாலும் அது உடன ஸ்டார்ட் ஆகாது முக்கி முனகி ஒரு மாதிரி ஸ்டாhட் ஆகும். வாட்டர்பம்மை ஸ்டார்;ட் பண்ணினோன்ன விசயம் முடியாது. பிறகு டைனமோக்கு பெல்றைக் கொழுவவேணும் அது ஒரு சாகசம் எனக்கு மிகவும் வியப்பேற்படுத்துவது இதுதான். வாட்டர்பம் இயங்கும்போதே அதிலயிருந்து வெகு அநாசயமாக பெல்டை டைனமோவிற்கு கொழுவுவார்கள் பார்க்க ஆசையாயிருக்கும். இப்படி ஒரு மாதிரி கரண்டை வரவைச்சு ரீவியை எல்லாம் போட்டாப்பிறகு ஒரு சண்டைவரும் எந்தப்படத்தை முதலில் போடவேண்டும் என்று. அவரவர் தனக்கு பிடித்த படங்களை முதலில் போடவேண்டும் என்று நினைப்பார்கள் நாங்கள் ஒரு பக்கமாக இதிலெல்லாம் தலையிடாமல் அடிபாடு நிறைய வருகிறபடமாக அது இருக்கவேண்டும் என்று மட்டும் நினைத்துக்கொள்வோம்.

எங்கட ஆசைப் பெரியம்மாடை மகன் ராஜன்அண்ணா கடும் வெடியன். அவர் எங்களைவிட வயது கூட எண்டதால் எல்லாரையும் இருத்தி வைச்சு ரீவிக்குள்ள ஆக்கள் இருக்கிறாங்கள் அவங்கள் தான் தெரியுறாங்கள் அடிபடுறாங்கள் எண்டெல்லாம் சும்மா கதைவிட்டுக்கொண்டிருந்தார். உவர் உப்பிடித்தான் முந்தி ஒருக்கா றேடியோக்குள்ள ஆக்கள் இருந்துதான் பாட்டுப்படிக்கிறாங்கள் எண்டு சொல்லப்போய் நானும் தம்பியும் வீட்டை கிடந்த றேடியோவை கத்தியைவைச்சுக்கழற்றி உள்ளுக்குள்ள ஆக்கள் இருக்கினமோ எண்டு தேடினதில அம்மாட்டை அகப்பைக்காம்பு ப+சை வாங்கிளதூன் மிச்சம். இப்ப உவர் ரீவிக்குள்ள ஆக்கள் இருக்கினம் எண்டு சும்மா வெடிக்கிறார் அப்ப நான் டக்கெண்டு கேட்டன் ஆக்கள் இருந்தா நாய் பூனை யானை எல்லாம் இருக்குதோ அதெல்லாம் படத்தில வருகுதே எண்டு. உடன அவர் உன்னோட கோவம் நாளைக்கு கள்ளன் பொலிஸ் விளையாட்டுக்கு உன்னைச் சேக்கமாட்டன் எண்டு சொல்லீற்றார் நான் உடன ஆக்கள் இரந்தா என்னா இல்லாட்டி என்ன நாளையான் விளையாட்டுத்தான் முக்கியம் என்கிற தூரநோக்குப்பார்வையுள்ள முடிவை எடுத்தேன் என்பதை உங்களிற்கு சொல்லவா வேணும்.

என்தான் படம்போடுறதுக்கு படம்போடுற ஆக்களுக்கு சதுரஉதவி சில்லறை உதவி எண்டு செய்தாலும். அது என்னவோ தெரியாது முதல் படத்தில முக்காவாசி போறதுக்கிடையில நித்திரை வந்துவிடும். அப்பிடி ஒருக்கா “பதினாறு வயதினிலே” படம் பார்க்கும் போது கமலை சப்பாணி சப்பாணி எண்டு ரஜினி கூப்பிடும் போது எல்லாம் சப்பாணியை விட எனக்குத்தான் ரஜினிக்கு அறையவேண்டும் போல இருக்கும் அந்தப்படத்தை நாங்கள் பார்க்கிற காலத்தில் ரஜினி கதாநாயகனாகிவிட்டிருந்தார். அப்ப எல்லாருக்கும் அவரது பேர் தெரிந்திருந்தது. நான் அந்தப்படத்தின் அரைவாசி பார்க்கக் கிடையில படுத்து விட்டேன் படுக்கும்போது எங்கள் வாயிலிருந்து கடைசி டயலாக் வரும் அக்காக்களை நோக்கி. அடிபாட்டுக்கட்டம் வரும் போது எழுப்பிவிடுங்கோ என்னதான் இருந்தாலும் சண்டைக்காட்சிகளை தவறவிடக்கூடாது என்கிற கொள்கை வைத்திருந்தோம் அப்படி ஒரு வெறி அடிபாட்டுக்கட்டங்களின். உண்மையா இருக்காதே பின்ன சும்மா வெடிக்கிற காருக்குள்ள இருந்து உயிரோட மியூசிக் கடுமையா இருக்க எழும்பி வாற கதாநாயகனை பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்ன. நான் அதெல்லாம் உண்மையெண்டுதான் நம்பினான் அந்தவயதில. (சில பேர் மாடுமாதிரி வளந்தாப்பிறகே நம்புதுகள் நான் நம்பினது பிழையோ என்ன) என்னதான் எழுப்பச்சொன்னாலும் அக்காக்கள் எழுப்புவது குறைவு அப்படியே அவர்கள் எழுப்பினாலும் நாங்கள் சிணுங்கிக்கொண்டே திரும்பவும் படுத்து விடுவோம். அப்படி பதினாறு வயதினிலேபடத்தில் பெரியக்கா என்னை எழுப்பும் போது நான் ரஜினிக்கு அடிக்கோணும் எண்டு புசத்தினானாம் எண்டு அவையள் பிறகு என்னை நக்கல் அடிக்கிறவை. என்னதான் நித்திரை கொண்டாலும் அடுத்தநாள் பள்ளிக்கூடத்திலை பார்க்காத அடிபாட்டுக்கட்டங்களையெல்லாம் அட நாங்கள் இதையெல்லாம் கட்டாயம் பார்க்கோணும் எண்டு நினைக்கிற அளவிற்கு நண்பர்களின் விழிவிரியச் சொல்வதில் நான் விண்ணன். இதெல்லாம் ஒரு பன்னிரண்டு வயதுக்கு முதல் நடந்தவை பிறகு வயதேற வயதேற வந்த அனுபவங்கள் வித்தியாசமானவை. அவையெல்லாத்தையம் அடுத்தமுறை சொல்லுறன்….

Monday, July 02, 2007

நின்று போன கவிதை...


உதிர்ந்து விழுகிற
இலையின்
நடனம்போல
நிகழ்ந்து போகிறது உன் பிரிவு...

அங்கேயே..
அப்போதே..
நின்று போன
என் வார்த்தைகள்
காத்திருக்கும்
மறுபடியும்
கவிதையின் சாலைக்கு
அழைத்துப் போகும்
உன் புன்னகையின் வருகைக்காய்..