Wednesday, October 24, 2007

CHILDREN OF HEAVEN (யாரும் நுழைய முடியாச் சுவர்க்கம்)நல்ல விசயங்கள் எனக்கு தாமதமாகவே நிகழ்கிறது. அல்லது நான் தாமதமாகவே கண்டு கொள்கிறேனோ என்னவோ தெரியாது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக சஞ்சிகைகள் மூலமாகவும் நண்பர்கள் வாயிலாகவும் நிறையத் தெரிந்து கொண்டதாக நான்நினைத்துக்கொண்டிருந்த children of heaven என்கிற திரைப்படத்தை. இன்றைக்கு பார்த்தேன். நிறைய நாட்களுக்கு பிறகு சென்னையில் இன்றைக்கு மழைபெய்து கொண்டிருந்தது. வழக்கமாக மழையைக் கண்டால் நின்று போகிறமின்சாரம் அதிசயமாய் இன்றைக்கு இருந்தது. நண்பர்கள் யாருமில்லை நான் தனியே. தனிமைஒரு விதமான அச்சத்தை தருகிறது இப்போதெல்லாம். தனிமை வேண்டித் தவங்கிடந்தநாட்களெல்லாம் என்னை கேலிசெய்கின்றன எனத் தோன்றும். தனிமை கொல்லும்என்பார்களே அதைப்போல இன்றைக்கு தனிமையை நிரப்பவென்று இந்தப்படத்தை போட்டேன்.

(1)
ஒரு அழுக்குப்படிந்த றோஸ்நிறச்சப்பாத்துக்களைத் தைத்துக்கொண்டிருக்கும் கைகள் திரையை நிறைக்க ஆரம்பிக்கிறது படம். தனது தங்கையின் சப்பாத்துக்களை செருப்பு தைப்பவரிடம்கொடுத்து தைத்துக்கொண்டிருக்கிறான் சிறுவன் அலி. பிறகு வீட்டுக்கு போகிற வழியில்ஒரு கடைவாசலில் வைத்து அதை தொலைத்து விடுகிறான் அவனது கவனக்குறைவால். நோயாளி அம்மா கோபக்கார,வறுமையான அப்பா என்றிருக்கிறது அந்தச்சிறுவனின் வீடு. சப்பாத்துக்களைத் தொலைத்து விட்டு வந்திருக்கிற அண்ணணிடம். "எனது சப்பாத்துக்களின்றி நான் எப்படி நாளைக்குபள்ளிக்கூடம் போவது. நான் அப்பாவிடம் சொல்லப்போகிறேன்" என்கிற தங்கையை. ஐயோ நீ சொன்னால் அப்பா என்னை தண்டிக்கக் கூடும். அதுதவிர அப்பாவிடம் இப்போது பணம் கிடையாது நீ எனது சப்பாத்துக்களை போட்டுக்கொண்டுபள்ளிக்கூடம் போ திரும்பி வந்ததும் நான் மறுபடி மாலையில் அதைப் போட்டுக்கொண்டு போகிறேன் என்று ஒரு புதிய ஏற்பாட்டுக்கு வருகிறார்கள் அண்ணனும் தங்கையும். பெற்றோரின் தண்டனைக்கு பயந்து மட்டுமல்ல அந்தக்குடும்பத்தின் வறுமைக்கும் பயந்து குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் இருந்து சப்பாத்து தொலைந்த விசயத்தை மறைக்கிறார்கள். அவர்களது வறுமையும் அந்த பிஞ்சு மனங்களின் அண்ணன் தங்கை உறவும் அற்புதமாக மனத்தை செலுத்துகிறது அவர்களோடு. என்னதான் தங்கை தனது பள்ளியிலிருந்து வேகமாக ஓடிவந்து அண்ணணிடம் சப்பாத்துகளைக் கொடுத்தாலும். அலி பள்ளிக்கு பிந்தியே செல்லநேர்ந்து விடுகிறது தினமும். படபடக்கும் மனத்துடன் தடதடத்து பள்ளியின் படிகளில் அவன் ஏறிச்செல்லும் ஓசை அவனைக் காட்டிக்கொடுத்து விடுகிறது. அவனது தலைமை ஆசிரியர் அவனைக் கண்டித்து அவனதுபெற்றோருடன் வருமாறு சொல்கிறார். அலி அழுதுகொண்டே பள்ளியை விட்டுவெளியேறுகையில் அவனது வகுப்பாசிரியர் அவன் நல்ல மாணவர் என்று சொல்லி அவனைக் காப்பாற்றுகிறார்.ஒரு முறை சாரா வேகமாக ஓடிவரும்போது அவளதுகால்களுக்கு பெருசான அண்ணனின் காலணிகள் கழன்று ஓடும் தண்ணீரில் விழுந்துவிடுகிறது அவள் அதைத் பெரும்பாடுபட்டு துரத்துகிறாள் விடாமல் மூச்சிரைக்கமூச்சிரைக்க துரத்துகிறாள். எனக்கு எழும்பி அவளுக்கு உதவமாட்டோமா என்று இருந்தது நாக்கு வறண்டு ஏனோ தொண்டை அடைத்தது. கண்கள் திரண்டு நின்றது. அவளது சப்பாத்து ஒரு சிறிய பாலத்துள் தேங்கி நின்றுவிடுகிறது. அவள்அழுகிறாள் அந்தப் பாலத்தினின்றும் எடுக்க முடியாத தனது காலனிகளுக்காக மட்டுமல்ல. ஆற்றாமை மேலெழ இன்னொரு காலனிகளை வாங்கமுடியாத தனது குடும்பத்தின் வறுமையை எண்ணி,பாடசாலைக்கு போவதற்காக தான் அணிந்து வந்த காலணிகளுக்காக காத்திருக்கும் தனது சப்பாத்துக்களைத் தொலைத்து விட்ட அண்ணன் மீது எழுகிற கோபம், அவனுக்கு பள்ளிக்கு தாமதமாகிறதே என்கிற வேதனை எல்லாவற்றையும் நினைத்து அழுகிறாள். உப்பிய அந்தச்சிறுமியின் கன்னங்களில் வழிகிற கண்ணீர் ஒரு கணம் என்னை உலுக்கி எடுத்து விடுகிறது.


யாரோ ஒரு பெரியவர் அழுதுகொண்டிருக்கும் அவள்மீது கருணைகொண்டு காலணிகளைமீட்டுத்தருகிறார். நான் இப்போது அந்தப் பெரியவரிடத்தில் என்னைப் பிரதிசெய்துகொண்டு பெருமைப்பட்டேன். முற்றிலும் நனைந்து போன அந்த ஒருகாலணியுடன் அவள் மூச்சிரைக்க ஓடி அண்ணிடம் வருகிறாள். இப்போது மிகுந்த கோபத்துடன்காலணிகளை அண்ணன் முன் விட்டெறிகிறாள். அவன் காலனிகள் ஏன் நனைந்திருக்கின்ற ஏன் நீ இத்தனை தாமதமாக வருகிறாய் என்று கேட்கிறான். அண்ணின்கேள்விகளிற்கு பதிலளிக்காமல் நான் இன்றைக்கு அம்மாவிடம் சொல்லிவிடப்போகிறேன் நீ எனது காலணிகளைத் தொலைத்துவிட்டாய் என்பதைப்பற்றி என்று மட்டும் கோபமாகக் கூறுகிறாள். அவனோ நீ சொன்னாலும் அப்பாவால் உனக்கு புதிய காலணிகளை வாங்கித்தர முடியாது அவரிடம் பணமில்லை நீ தயவு செய்து சொல்லாதே என்று சொல்கிறான்.Photo Sharing and Video Hosting at Photobucket

அவனது தந்தை அடுத்தநாள் அருகில் இருக்கிற நகரத்துக்கு சென்று நகரவாசிகளின் தோட்டத்தை பராமரிக்கும் வேலை செய்து நானும் அலியும் கொஞ்சம் பணம் பெற்றுக்கொண்டு வருவோம் என்கிறார். அங்கே ஒரு வீட்டில் வேலைசெய்து கொஞ்சம் பணத்துடன் திரும்புகையில் தந்தை சொல்கிறார் நாங்கள் நிறையச் சம்பாதிக்க வேண்டும், கொஞ்சநாள் எங்கோயவது போய் ஓயவெடுக்க வேண்டும், உனக்கும் தங்கைக்கும் நிறைய பொருட்கள் வாங்க வேண்டும்,நாங்கள் இதைவிடப்பெரிய வாடகை வீட்டிற்கு நாங்கள் போகவேண்டும். ஏழ்மையின் கனவுகள் விரிய தகப்பன் மகனிடம் ஆசைகளை விவரித்து கொண்டு சைக்கிளில் வந்துகொண்டிருக்கிறார். அலி அப்போது சப்பாத்துக்கள் வாங்க வேண்டும் என்று அப்பாவிடம் சொல்கிறான். அப்பா ஓம் நிச்சயமாக உனக்கு சப்பாத்துக்ள் வாங்கித் தருவேன் என்று சொல்கிறார். அலி இல்லை முதலில் சாராவுக்கு வாங்கிக்கொடுங்கள் என்று சொல்கிறான். தந்தையும் ஆமோதிக்கிறார்.ஆனால் அவர்களுடைய கனவுகள் சரிவதைப்போலவே அந்த ஏழைக்குடியானவனின் லொக்கடா சைக்கிள் ஒரு இறக்கத்தில் வேகமாக இறங்கிக்கொண்டிருக்கையில் பிறேக் பிடிக்காமல் தகப்பனும் மகனும் மரத்தில் மோதி காயமடைகிறார்கள்.


தானும் தங்கையும் ஒரே சோடிக்காலனிகளை பகிர்ந்து கொள்வதின் சிக்கல்கள் அதிகரித்து வருவதை அலி உணர்கிறான். தங்கையோ அண்ணணிடம் முடியுமானவரை பொறுமையோடும் பாசத்தோடும் நடந்து கொள்கிறாள். அலியின் பள்ளியில் ஓட்டப்போட்டியில் ஓடவிரும்புகிறவர்கள் தமது பெயரைப் பதிவு செய்யுமாறு ஆசிரியர் சொல்கிறார் அலி கண்களில் ஆர்வம் மின்ன அந்த அறிவிப்பைக் கவனித்தாலும் தனது காலணிகளை மற்ற மாணவர்களின் காலணிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து ஒருவகையில் ஒதுங்குகிறான். அந்த காலணிகள் இருவர் பாவிக்கவேண்டியிருப்பதையும் நினைத்து அவன் போட்டியில் கலந்து கொள்ளாமல் விலகி விடுகிறான்.ஆனால் பள்ளியில் ஓட்டப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான மூன்றாம் பரிசாக ஒரு சோடிக்காலணிகள் என்று அறிவித்திருப்பதை பார்த்ததும். அவன் தன்னையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளுமாறு ஆசிரியரிடம் சென்று கெஞ்சிஅழுகிறான். அவர் முதலில் மறுத்தாலும் பின்னர் அவன் நன்றாக ஓடுவான் என்பதைதெரிந்து கொண்டு சேர்த்துக்கொள்கிறார்.


அலி தனது தங்கையிடம் தான்ஓட்டப்போட்டியில் கலந்து கொள்வதாகவும் தனக்கு மூன்றாம் பரிசு கிடைக்கவேண்டும் எனவும் கூறுகிறான். அவள் ஏன் மூன்றாம் பரிசு எனக்கேட்க "அது இரண்டு காலணிகள்" என்கிறான் அவற்றை நான் உனக்கு தருவேன் என்கிறான். அவளோ அது ஆண்களுக்கான சப்பாத்துக்களாக அல்லவா இருக்கும் என்கிறாள். அலி நாங்கள் அதனைக் கடையில் கொடுத்து மாற்றலாம் என்கிறான். சாரா அண்ணணை பாசத்துடன் பார்க்கிறாள் ஆனாலும் முதற்பரிசு என்ன என்றுகேட்கிறாள் அவனோ அதைச் சரியாக பார்க்கவில்லை என்கிறான்.போட்டி நாளன்று போட்டிக்கு வந்திருக்கும் விதவிதமான உயர்ந்த காலணிகளை அணிந்த நிறைய சிறுவர்களுடன் தனது பழைய காலணியை குனிந்து குனிந்து பார்த்துக்கொள்கிறான் அலி. போட்டி தொடங்குகிறது. தனது தங்கைக்கு காலணிகளை பெற்றுத்தருவதற்காக அவன் ஒடுகிறான் ஒருவன் ஒரு போட்டியில் மூன்றாம் பரிசை இலக்குவைத்து ஓடுகிறான். அவனது தங்கையின் குரலும்,தனது பாடசாலையில் இருந்து இவனிடம் காலணிகளை ஒப்படைப்பதற்காக அவள் மூச்சிரைக்க ஓடிவருவதும் இவனதுநினைவில் சுழன்று கொண்டிருக்கிறது. வேகமாக ஒடுகின்றான். இறுதியிடம் நெருங்க நெருங்க முதலிருவரை விட்டு விட்டு மூன்றாவதாக அலி ஓடுகிறான்.நான்காவதாக ஒடிவருபவனும் அலியும் ஒருவரை ஒருவர் போட்டிபோட்டு ஒடுகின்றனர். அலி இடறி விழுகிறான். மறுபடியும் தன் தங்கையை நினைத்து அவன் எழுந்து ஒடுகிறான் முன்னிலும் வேகமாக அவன் மிகவும் களைத்துப்போய்போட்டியின்எல்லைக்கோட்டைத்தொட்டு விழுகிறான். அவனது ஆசிரியர் அவனைத் தூக்குகிறார். அலி சேர் நான் மூன்றாம்பரிசை பெற்று விட்டேனா என்றுகேட்பான் அவரோ எதற்கு மூன்றாம் பரிசு உனக்குத்தான் முதற்பரிசு என்பார்.எல்லாரும் அலியைக் கொண்டாடுவார்கள். அவன் மிகவும் கவலை தோய்ந்தவனாக சோர்ந்து போவான். ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவே மாட்டார்கள். அவனது மனத்தின் தயரங்களை யாரும் பகிர்ந்து கொள்வதாகவும் புரிந்து கொள்வதாகவும் இல்லை. அந்த வெற்றி அவனுக்கு வேண்டியதில்லை அவன் கண்களில் மூன்றாம் பரிசுக்காக வைக்கப்பட்டிருக்கும் காலணிகள் மினுங்கும். அவன்கவலையோடு தனக்கான பதக்கத்தையும் கோப்பையையும் வாங்கிக்கொள்வான்.கேற் திறக்கப்படுவதை முற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்த தங்கை ஆர்வத்துடன் அவளது அழகிய குழந்தமையின் மினுங்கும் கண்களால் பார்ப்பாள். அலி குற்றமிழைத்தவன் போல் தங்கையில் விழிகளை எதிர்கொளவியலாதவனாய் சோர்ந்துபோய் வருவான் அண்ணன் தனக்காக காலணிகளைக் கொண்டு வரவில்லை எனத் தெரிந்துகொண்ட சாரா மௌனமாக வீட்டுக்குள் ஓடிப்போகிறாள்.படம் முடிவடைந்து திரை கறுப்பாக அரபு எழுத்துக்கள் ஓடத்தொடங்கின.

Photo Sharing and Video Hosting at Photobucket

நான் ஆற்றாமல் அழுதேன் வெறும் பிம்பம் தான் என்று புறக்கணிக்க வியலாத அந்த சிறுவர்கள் அலிக்காகவும் சாராவுக்காகவுமா என்று சொல்லமுடியாது.எப்போதோ நான் பள்ளியில் தொலைத்துவிட்ட எல்லாவற்றுக்காகவும் அல்லது எனக்குமறுக்கப்பட்ட கொடுக்கப்பட்ட குழந்தமையின் நினைவுகள் உந்த அவர்கள் மீது என்னைப் பிரதிசெய்து கொண்டு அழுதேன். நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாபார்த்து அழுதேன். அலி பந்தயத்தில் இடறி விழுகையில் காலத்தைச் சபித்தேன் அவனது தங்ககைக்கு காலணிகள் கிடைத்துவிடவேண்டும் என்று எனக்குள் துயரம் பீறிட்டெழுந்தது.இதுவரைக்கும் நான் இந்தப்படத்தை பற்றி கேள்விப்பட்டதெல்லாம் ஏன் நான் இது வரைக்கும் சொன்னதெல்லாம் கூட ஒன்று மேயில்லை. அது குழந்தைகளின் சொர்க்கம் நான் அதைக்கடந்திருக்கிறேன்.கிட்டத்தட்ட அதே வறுமையுடனும் வலிகளுடனும் அந்த குழந்தைமையைக் கடந்திருக்கிறேன். இதே மாதிரி குழந்தைமையைத் திணிப்புடனும் அவர்களின் உணர்வுகளைப் பகிந்து கொள்ளவியலாமல் காலம் எத்தனைநாளைக்கு விரட்டிக்கொண்டேயிருக்கப் போகிறது.

குழந்தைகள் எப்போதும் அவர்களுக்கான உலகத்தை சித்தரித்துக்கொள்கிறார்கள். பெரியவர்களால் எப்போதும் அவர்களுடைய உலகத்திற்குள் நுழைந்துவிடமுடியாது. பெரியவர்களின் கண்களிற்கு எதிரிலேயே பெரியவர்களால் குழந்தைகள் தங்கள் உலகத்துக்குள் அல்லது தங்களதுகட்டுக்கள் இருக்கிறார்கள் என்கிற நினைப்பில் ஆழ்ந்து கிடக்கையில் ஒரு மாயவித்தைபோல அவர்களறியாமல் விரிந்து கிடக்கிறத குழந்தைகளின் உலகம்.குழந்தைகள் இரண்டு உலகங்களில் எப்போதும் வாழ்கிறார்கள். கண்டிப்பும் ஏமாற்றமும் நிரம்பிய தங்கள் பெற்றோருடனான வாழ்க்கை ஒன்று. எந்த வரையறைகளுமற்று சோப்புநுரையைப்போல வானத்தில் வர்ணங்கள் மினுங்க பறக்கும் இன்னொரு வாழ்க்கை. படத்திலும் அப்படித்தான் ஏழ்மையும் கண்டிப்பும் நிறைந்த ஒரு பெற்றோருடன் வாழும் குழந்தைகள் சாராவும் அலியும் தமது பெற்றோர்கள் அறிந்துவிடாத நுழையமுடியாத இன்னுமோரு உலகத்துள் வாழ்கிறார்கள்.எனக்கு படம் பார்த்ததும் எனது குழந்தைப்பருவம் மீழெழுகிறது. யாரும் நுழைந்து விடமுடியாமல் நான் வாழ்ந்த ரகசிய நினைவுகள்.தீப்பெட்டிப் பொன்வண்டுக்கும் என் பூனைக்குட்டிக்கும் மட்டுமே காட்டிய அந்த உலகின் பரவசக் கணங்கணை அந்த சொர்க்கத்தை children of heaven எனக்கு மறுபடியும் கொடுத்தது. என் கைகளைப் பிடித்து அழைத்துப்போய் மறுபடியும் என் குழந்தைமையில் என் கைகளை விடுவித்து விட்டது. திருவிழாவில் குழந்தைகள் தெரிந்தே தொலைந்து போகின்றன தம்மைத்தாமே தொலைத்துக்கொள்ள விரும்புகின்றன. அம்மாவின் கிடுக்கிப்பிடியினின்றும் அவளே அறியாத ஒருகணத்தில் பலூன்காரனின் வண்ணங்களை அழைத்துக்கொண்டு வரையறைகளற்ற வானத்தின் கீழ் விளையாடச் சென்று விடுகின்றன. அப்படி நானும் தொலைந்து போய்விடலாமென்று தோன்றியது எனக்கு.

(2)
எனக்கு நினைவிருக்கிறது இன்னமும் எனது சிறுபராயங்களில் நான் எனது பொருட்களைத் தொலைத்துவிட்டு அழுகொண்டே வீடுதிரும்பிய அனுபவங்கள். சிறுபராயம் ஒரு கனவு போல மீழெழுந்து கொண்டேயிருக்கிறது இன்றைக்கும் அப்படியே இருந்துவிடமுடியாது போன துயரம் என்னை அழுத்துகிறது.மூன்றாம் ஆண்டு வரையிலும் பகல் பன்னிரண்டு மணிவரைதான் பாடசாலை பன்னிரண்டு பன்னிரண்டரைக்கு விட்டுவிடுவார்கள். யாரேனும் வீட்டில் இருந்து பெரியவர்கள் வந்து எங்களை அழைத்துச்செல்வார்கள்.அப்படி ஒரு முறை முதலாம் ஆண்டிலா இரண்டாம் ஆண்டிலா என்று நினைவில்லை. அப்பா தான் ஏதோ வேலையாக செல்வதாகக்கூறிஅவரது நண்பர்களுடன் என்னை ஏற்றி வீட்டில் இறக்கிவிடச்சொல்லி அனுப்பிவைத்தார். அது முதலாமாண்டில்தான் நிச்சயமாக ஏனெனில் இரண்டாம் ஆண்டில் அப்பா இறந்துவிட்டார். நான் இடையில் போய்க்கொண்டிருக்கும் போதுதான் தொப்பியை விளையாடிய இடத்திலேயே விட்டுவிட்டு வந்தது ஞாபகம்வந்தது. உடனே இயன்றவரை அழுதேன். என்னை மறுபடியும் பள்ளிக்கூடத்தில் இறக்கிவிட்டுவிடும்படி அவர்களைக் அழுது குழறிக்கேட்டுக்கொண்டேன். எனக்கு தொலைந்து போன தொப்பியை விடவும் அம்மாவின் அகப்பை காம்பு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும் அப்போதெல்லாம் எனக்கு. அம்மா தொப்பியை துலைத்து விட்டு வீட்டுக்கு போனால் அடிபின்னி எடுப்பார் என்பதில் சந்தேகமேயில்லை அம்மாவுக்கும் எனக்கும் அப்படி ஒரு ராசி. நான் அழுது குழறிப்பார்த்தேன் அவர்கள் மசிவதாக இல்லை என்னை இங்கேயே இறக்கிவிடுங்கள் நான் போகிறேன் என்று சொல்லி அரைவழியிலேயே சைக்கிளில் இருந்து குதித்து விட்டேன். பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வந்தேன். நல்ல வேளையாக தொப்பி நான் விளையாடிய இடத்திலேயே கிடந்தது. அப்போது எனக்கிருந்த பரவசமும் மகிழ்ச்சியும் அதைச் சொல்லவே முடியாது நிச்சயமாய். வானத்தில் பறக்கிற மாதிரி மஞ்சள் நிற வண்ணத்துப்பூச்சியை நட்பாக்கிக்கொண்டது மாதிரி அத்தனை மகிழ்ச்சியாயிருந்தது. தொப்பியில் போட்டிருந்த பூனைக்குட்டிப்படம் என்னைப் பார்த்து ஒருமுறை கண்சிமிட்டியது. தொப்பியை எடுத்த பிறகு மறுபடியும் வீடு செல்லாமல் அந்த மரத்தடியிலேயயே தூங்கிக்கொண்டிருந்தேன் எல்லாரும் என்னைத் தேடி அல்லோல கல்லோலப்பட்டுக்கொண்டிருந்திவிட்டு மறுபடி என் தூக்கத்தை கலைத்து என்னை வீட்டை கூட்டிக்கொண்டு போய் கொஞ்சிக் கூத்தாடி விட்டார்கள். இதுவே நான் தொப்பியில்லாமல் வீட்டை போயிருந்தால் கொஞ்சியாயிருப்பார் அம்மா கெஞ்சினாலும் அடிதான். ஆனால் என்னதான் அடிவிழுந்தாலும் என்னுடைய தொலைத்தல் புராணம் என்பது அழிறப்பர் இல் இருந்து சைக்கிள் வரைக்கும் நீண்டுகொண்டே யிருந்தது. தொலைப்பது அதை அம்மாவுக்கு தெரியாமல் மறைப்பது என்பதெல்லாம் பிறகு கைதேர்ந்த விசயங்களாகிவிட்டன.தொலைப்பதற்கும் பிறகு அதை அம்மாவிடம் இருந்து கேட்டுப்பெறுவதற்குமான இடைப்பட்ட காலம்திக்திக்கென்று நெஞ்சுக்குள் வாட்டர்ப்பம் இறைப்பதைப்போன்றது. ஒரு ஊழிக்குக் காத்திருப்தைப்போன்றது. சில வேளைகளில்நிகழலாம் நிகழாதும் போகலாம் ஒரு வானிலை அறிவிப்பு மாதிரித்தான் சொல்லமுடியும்.

அலியை மாதிரியே தம்பியின் பென்சிலை கட்டரால் சீவித்தருகிறேன் பேர்வழி என்று வாங்கி ஒரு அடியாக இருந்த பென்சிலை கட்டைவிரலளவுக்கு மாற்றியிருக்கிறேன். அவனைச் சமாளிப்பதற்காக என்னுடைய கூர்மாத்திப்பென்சிலை அவனுக்கு கொடுக்கவேண்டியதாகிவிட்டது.இப்படி நிறைய நினைவுகள் மறுபடி மறுபடி எழுந்து கொண்டேயிருக்கின்றன எனக்கு இன்று முழுதும்.

எனக்கு நினைவுதெரிந்து ஒரு முறை நான் அம்மாவைத் திட்டிக்கொண்டே ஒரு முறை பெரிதாக அழுதிருக்கிறேன். இடப்பெயர்வின் பின்னர் நாங்கள் வேறு ஒருவருடைய காணியில் ஒரு சிறிய வீட்டைப் போட்டுக்கொண்டு இருந்தோம். அது ஒரு சிறிய வீடு அம்மாவிடம் பெரிதாகப்பணமில்லை.வீடு மழை வந்தால் ஊறும், ஒழுகும். கிடுகுக் கூரைஇத்துப்போய் நாங்கள் தறப்பாள் போட்டு மூடியிருந்தோம். தறப்பாளும் இத்துவிட்டது மழை அகோர மழை, காட்டு மழை. முற்றத்து நிழல் மரவள்ளி பாறி விழுந்து விட்டது. அம்மாவும் நாங்களும் ஒரு சிறிய இடத்தில் படுத்துக்கிடந்தோம். எனக்கு பதின்மூன்று வயதிருக்கலாம். மூன்று அறைகளும் விறாந்தையும் கொண்ட எங்கட ஊர் வீடு் எனக்கு நினைவுக்கு வந்தது. வீட்டில் 13 வயசு மூத்தவன் என்பதால் எனக்கு திட்டுகளும் கொட்டுகளும் அதிகமாகவே கிடைக்கும். அதைவிட வீட்டுஆம்பிளைகள் செய்யவேண்டிய வேலைகள் என்று வரையறுக்கப்பட்ட எல்லாவற்றையும் வேறு செய்யவேண்டும். **ஒரு முறை கூரையைச் சரிசெய்வதற்காக மேலே ஏறிய நான் அந்த இத்துப்போன தறப்பாளையும் உக்கிப்போன கூரையையும் தாண்டி பொத்தென்று கூரையைப்பிய்த்துக்கொண்டு கீழே விழுந்தேன். அப்போது நான் பெரிதாக அழுதேன். எனக்கு நிச்சயமாகத் தெரியும் கீழே விழுந்த அதற்காக மட்டுமல்ல நான் அழுதது. அது மட்டுமல்ல என்னை அழத்தூண்டியது. கூரை மேய காசில்லாமல் இருக்கும் அம்மாவை நினைத்து, 7 வயதில் செத்துப்போன அப்பாவை நினைத்து, குண்டுகளிற்கும் சப்பாத்துகளிற்கும் பயந்து விட்டுவிட்டு வந்த வீட்டை நினைத்து இப்படி விழுந்த ஒரு கணத்தில் எனக்கு நிறைய நினைவுக்கு வந்தது நான் தேம்பித் தேம்பி அழுதேன். படத்தில் சப்பாத்துக்கள் பாலத்துக்குள் தேங்கி நின்று விட சாரா அழுகிறாளே அதைப்போல தன்னால் மீட்கமுடியாமல் தனது சின்னக்கைகளைத் தாண்டிய தொலைவில் செருகிக் கொண்டு விட்ட சப்பாத்துகளிற்காக மட்டும் அழவில்லை அவள். அந்த நிகழ்விற்கான புறச் சூழ்நிலைகளை நினைத்து அழுகிறாள். சிக்கிக்கொண்ட சப்பாத்துக்களினிடையில் சிக்கிக்கொண்ட இரண்டு பிஞ்சுகளின் பள்ளிக்கூடநாட்களைப் பற்றிய பயத்திலும் ஏக்கத்திலும் அழுகிறாள். அந்த ஒருகணத்தில் அவளுக்குள் மின்னிமறையும் உலகின் பெருமிருட்டு அவளை அழுத்த வெடித்த அழுகை அது.

உலகம் குழந்தைகளை அழுத்திக்கொண்டேயிருக்கிறது.தனக்கு விருப்பமானதைச் செய்ய. குழந்தைகளின் உலகம் இப்போதெல்லாம் அழுத்தங்களால் நிரம்பி வழிகிறது. ஏற்கனவே பெரியவர்களால் வரையறுக்கப்பட்டிருந்த அவர்களுடைய புன்னகைகளை, குழந்தைகளை அச்சுறுத்திக்கொண்டிருந்த பெரியவர்களினுடைய உலகம் அவர்களுக்கு தாங்கமுடியாச் சுமையைத்தலையில் அழுத்துகிறது. உலகின் எல்லா இடஙகளிலும் குழந்தைகள் வயசை மீறவைக்கப்படுகிறார்கள். அவர்களின் உலகத்துக்குள் புத்தக மூட்டைகளும் ஏன்? துப்பாக்கிகளும், பீரங்கிகளும், சப்பாத்துக்களும் நிரம்பி அச்சமூட்டுகின்றன. இப்போது அவர்களது மணல்வீடுகளையும் கனவுகளையும் கூட உலகம் தன் கொடுங்கரங்களால் ஆக்கிரமித்திருக்கிறது. கண்ணெதிரில் பெரியவர்களுக்கு புலப்படாமல் குழந்தைகள் சிருஸ்டிக்கும் மாய உலகத்தில் இப்போதெல்லாம் ராட்சசர்கள் அச்சுறுத்தியபடியிருக்கிறார்கள். குழந்தைகள் பயந்தபடி உலகின் இருண்ட மூலைக்குள் பதுங்குகிறார்கள்.**நான் கூரையிலிருந்து கீழே வீழ்ந்து கிடக்கையில் எதற்கென்றெ தெரியாது என்னோடு கூட அழுத தங்கைக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள் இன்றைக்கு. தன் ஊர்களையும் வேர்களையும் தாண்டி எங்கோ லண்டனின் வைத்தியசாலையில் புன்னகைத்துக்கொண்டிருக்கும் அந்தச் சின்னத் தேவதையின் மலர்ப்புன்னகைக்கு.

த.அகிலன்
22.10.2007

இணைப்புகள்.

children of heaven படத்தின் இணையதளம்.

இந்தப்படம் குறித்த நிவேதாவின் பதிவு.

சித்தார்த் அண்ணாவின் பதிவு

நன்றி.
DVD இரவல் தந்த அருள்எழிலன் அண்ணாவிற்கு.

ஈழத்தின் இன்னொரு பெண் கவிதை முகம்..."இயற்கையுடன் இணைந்த கிராமத்தில் அம்மம்மாவிடம் வளர்ந்தேன்.தனிமையும் சுதந்திரமும் அப்பாவின் அடக்குமுறைகளும் அற்ற இனிய சிறுபருவம். அம்மம்மாவின் நிழலில் கிடைத்தது. அந்தச் சூழல் கற்பனைகளையும் கவிதைகளையும் எனக்கு தந்தது. 90 களின் இறுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்தேன் அங்குப் பெற்ற அனுபவங்கள்தான் பின்னர் நானெழுதிய கவிதைகளுக்கு அடித்தளமாயின"


என்று கூறும் பஹீமாஜகான் இலங்கை மெல்சிரிபுரவைத்ச் சேர்ந்தவர்.கணித ஆசிரியராகப் பணிபுரிகிறார்.குறைந்த எண்ணிக்கையிலான. ஆனால் காத்திரம் நிறைந்த கவிதைகளைப் பல்வேறு இதழ்களிலும் எழுதியுள்ள இவரின் முதல் கவிதைத் தொகுப்பு இது.


தலைப்பு: ஒரு கடல் நீரூற்றி

எழுதியவர்: பஹீமா ஜகான்

வெளியீடு: பனிக்குடம் பதிப்பகம்

விலை: 40.00தொகுதியில் இருந்து எனக்கு நெருக்கமான வரிகள்:


'அவசரப்பட்டு நீ

ஊரைக்காணும் ஆவலிலிங்கு வந்து விடாதே.

வதைத்து எரியூட்டப்பட்டசோலைநிலத்தினூடு

அணிவகுத்து செல்லும் காவல்தேவதைகள்

அமைதியைப்பேணுகின்றன.

அந்த ஏகாந்தம் குடியிருக்கும்

மயானத்தைக் காண உனக்கென்ன ஆவல்?

வந்துவிடாதே'

Tuesday, October 16, 2007

காணிமுழுவதும் கண்ணிவெடியல்லவா...?

"வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கலகலப்பல்லவோ”

இப்படிப்பெரியவர்கள் கவிதைகளை எடுத்துவிட்டுக்கொண்டு இருக்க வாயைப்பிளந்து கொண்டிருந்திருக்கிறேன்.கானாபிரபாவின் பாசையில் சொன்னால் சின்னனுகளாய் இருந்த அனுபவங்கள் இவை. நவராத்திரி என்கிற வார்த்தையை விட அதை அந்த பத்து நாட்களையுமே சரஸ்வதிபூசை என்று சொல்லித்தான் நான் திரிந்திருக்கிறேன். நவராத்திரி என்பது கொஞ்சம் பெரியவர்கள் சொல்லும் சொல்லு. எங்களுக்கென்ன அதைப்பற்றி கவலை மொத்தமாய் சரஸ்வதி பூசை. எங்களுக்கு சரஸ்வதியெல்லாம் அவ்வளவு முக்கியமாக படவில்லை புக்கை அவல் கடலை கௌப்பி போன்றவை சகலகலாவல்லி மாலை படிக்கப்படும்போதே கண்ணுக்குள்ளால் வாயுக்குள் போய்கொண்டிருக்கும். எப்படா முடியும் இந்த தேவாரம் என்னு தவமிருப்போம்.ம்.. அதெல்லாம் ஒரு காலம்.

அந்தக்காலத்தில நான் திடீரென்று பெரிய பேச்சாளரா மாறிப்போனேன்.

சிவனுக்கொரு ராத்திரியாம் சிவராத்திரி சக்திக்கு நவராத்திரி

போன்ற பத்து வசனங்களைப்பாடமாக்கி வெற்றிகரமாக ஒப்பித்தல் அதுதான் என்னைப்பேச்சாளர் ஆக்கியது.

அப்பிடியே பத்து வசனங்களையும் தலைகரணமாகப்பாடமாக்கி தலையை இடமிருந்து வலமாகவும் பிறகு வலமிருந்து இடமாகவும் ஒரோ சீராக ஆட்டுவதற்கும் பழகி(எல்லா பார்வையாளர்களுடைய முகத்தையும் பார்க்க) அப்பாவின் சால்வையை வேட்டியாகச் சுற்றியபடி கடைசியாக விஜயதசமி அன்று மேடையில் ஏறினால்

பிறகென்ன, பெருமதிப்பிற்குரிய அதிபர் அவர்களே,ஆசிரியர்களே,என்சக மாணவ மாணவிகளே அனைவருக்கும் என் இந்நேர வந்தனங்கள் என்று தொடங்கவே குரல் தழுதழுக்கும் மெல்லாமாய் கண் இருட்டி மண்டைக்கள் பட்டாம் பூச்சி பறக்கும். ஒரு மாதிரி சமாளித்து முதலாவது வசனத்தை பேசி முடித்து

நவராத்திரி விழாவில் முதல் மூன்று நாட்களும் வீரம் வேண்டி துர்க்கை தேவியையும் அடுத்த மூன்று நாட்களும்…. அடுத்த மூன்று நாட்களும் தலைகரணமாப் பாடமாயிருந்தது திடீரென்று மறந்து போகும்… அடுத்த மூன்று நாட்களும் அடுத்த மூன்று நாட்களும் என்று டைப்படிக்க .. ஒரு ஓரமாக மூலையில் இருக்கும் ஒரு வாத்தியார் எடுத்துக்கொடுப்பார் செல்வத்தை செல்வத்தை என்று ரகசியமாக சத்தம் வரும் மூலையில் இருந்து.. உடன பிக்கப்பாகி அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி சரஸ்வதியையும் வேண்டி விரதமிருப்பர் என்று ஒரு வழியாக செல்வத்துக்கு துர்க்கையையும் கல்விக்கு லக்சுமியையும் வீரத்துக்கு சரஸ்வதியையும் அதிபதிகளாக அறிவித்து விட்டு மேடையை விட்டு இறங்க வேர்த்து விறுவிறுத்துப்போகும்.

பிறகு பிறகு நடுக்கமில்லாமல் பத்து வசனத்தையும் அடுத்த வருசம் சொல்லிப்பழகி பள்ளிக் கூடத்தில் புகழ் பெற்ற பேச்சாளராகவிட்டேன்.

ஒரு வழியாக எல்லாரும் தங்கள் கூத்துக்களை நிகழ்த்தி முடிக்க வாணிவிழா முடிவுக்கு வரும். அன்றைக்கு பள்ளிக்கூடத்தில் ஆசைஆசையாப் பொங்கும் வீட்டை போக மனமில்லாமல் அப்பிடியே ஒவ்வொரு வகுப்பறையாக ஏறி இறங்கி பார்த்துக்கொண்டே வருவோம் கொஞ்சம் பெரியவகுப்பு மாணவர்களின் (கானாபிரபாவின்) வகுப்பறைகளில் வாணிவிழாவை ஒட்டிய ஒரு மார்க்கமான கவிதைகள் எழுதப்பட்டிருக்கும்.

உதாரணத்துக்கு வகுப்பில் வாணி எண்டொரு பிள்ளையிருந்தால்..

“அடி வாணி உன்வீடும் வளவும்
நானறிவேன்
உன் காணியை கொப்பரை எனக்கெழுதச்சொல்லு..”

வேணியெண்டிருந்தால்…

“வாணி விழாவிற்கு வீணி
வடிய வடிய வந்திருந்த
வேணியர்க்கும் வந்தனங்கள்”

கசிந்தா எண்டொருத்தி இருந்தாள்
அவளுக்கு எழுதியிருந்தது…

“கைகசியக் கசிய கற்கண்டு
கொண்டு வந்த கசிந்தாவுக்கு வந்தனங்கள்”

பிறகு இப்பிடியெல்லாம் சந்தோசமா கொண்டாடின வாணிவிழாக்கள் முடிஞ்சு போய் பள்ளிக்கூடக்கட்டிடம் உடைஞ்சுபோய் அல்லது அதைவிட்டிட்டு இடம்பெயர்ந்து போய் வாணிவழாக்கள் கொண்டாடப்பட முடியாமல் போயின அல்லது அடக்கமாக கொண்டாடப்பட்டன….

பிறகு எங்கள் வாணிவிழாக்களில் கவிதைகள் இப்படியிருந்தன
“வாணி உன் வீடும் வளவும் நானறிவேன்
அக்காணி முழுவதும் கண்ணிவெடியல்லவா”


கானாபிரபாவின் பதிவைப்பார்த்தவுடன் எனக்கும் ஏதோ நவராத்திரி ஞாபகங்கள் தலைகாட்டத்தொடங்கிவிட்டது அதற்காக முதலில் அவருக்கு நன்றி

த.அகிலன்
சரஸ்வதி பூசை மீள்பதிவு....