Sunday, July 30, 2006

மெளனம்...


எல்லாவற்றையும்
உன்னுள்ளே குமைத்து
ஏன்
நீ
மௌனம் சமைக்கிறாய்.

எல்லாவினாவுதல்களின் போதும்
உன்
புன்னகைக்குள்
எதனை நீ
சொல்லநினைக்கிறாய்

ஒலிகள்
எதுவுமற்ற
உனது மொழி
இரைச்சலை ஜெயிக்குமா?

அடுத்தவனையே
பேசுபொருளாக்கி
எப்போதும்
அலைகிறது உலகம்.

அதனாலும்
மௌனம் நிறைவுதான்
ஆனால்
சலசலப்பே
சங்கீதம் என்றாயிற்று.

ஏது சொல்ல

மௌனம்
ஒரு மின்சாரத்தைப்போல
பாதைகளைப்பற்றிய
அக்கறைகளற்றுப் பயணிக்கும்
வேகமாய்.

எப்போதும்
மொட்டுக்களின்
மௌனம் உடைகையில்
தான் அழகு

நீ
பேசு
கண்ணிவெடிகளின்
நிலத்தில் நடப்பதைப்போல்
சற்றே அசந்தாலும்
காத்துக்கிடக்கிறது இரைச்சல்
உனக்கான வார்த்தைகளை
ஓலமிட..

த.அகிலன்

Saturday, July 29, 2006

மீள் நினைவு


ஒரு
பேனாவைப்போல்
எப்போதும்
கொட்டிவிடத்தயாராய்
என்னுள்
நிரம்பிவிட்டிருக்கும்
ஞாபகங்கள்……

சின்னதாய்
ஓர்
எறும்பின் ஊரல்

கொஞ்சம்
நளினமாய் மோதும்
மெல்லியகாற்று

ஏன்?

ஒரு
தேனீர்க்குவளையின்
ஒரம் கூடப்போதுமானதாயிருக்கும்

ஞாபகங்களைக்
கிளறி விடுவதற்கு..

இன்னமும்
என்னுள்
புருவம் சுருக்கி
பார்த்துக்கொண்டேயிருக்கிறாய்
நீ.

மறுபடியும்
மீன்தொட்டி
உடைந்து நொருங்குகிறது
மனசுள்;

நான்
மூடிவைத்துவிடுகிறேன்
பேனாவை
மீண்டும்
ஏகாந்தத்தில் இருந்து
இறங்கும்
மனசு
இயல்பிற்கு….

Friday, July 28, 2006

வீடு அல்லது அக்கராயன்

கொஞ்சமாய்
உள்நுழைந்து பார்க்கும்
மழை..

மேலோடு
தடவிப்போகும்
நிலவு..

உள்ளே புகுந்து
அடிக்கடி
விள்ககை அணைத்துவிடுகிற
காற்று...

ஆசுவாசமாய்
அடுப்பைக் கடந்து
நடக்கும்
பூனை

ஆனாலும்..

விடியலில்
பூக்கத்தான் செய்கிறது
முற்றத்து
நித்திய கல்யாணி.

நண்பர்களே 1995 ல் இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் இருந்து வெகு தொலைவில் இருந்த அக்கராயன் என்னும் கிராமத்தில் நாங்கள் வசிக்க நோர்ந்து அந்த இடப்பெயர்வு அனுபவங்களின் பதிவு இது
த.அகிலன்

Thursday, July 27, 2006

காதல்..


காதல்
ஒரு
நதியின் நடனத்தைப்போல
மேகத்தின் பயணத்தைப்போல
இலக்குத்தேடியலையும்
வேட்டைக்காரனாய்
இதயத்தை நெருங்குகிறது.

சூரியனின்
காதல்
மரங்களின்
பசிய இலைகளில்
வழிகிறது.

நிலவின்
காதல்
முற்றத்தில் பொழிகிறது
கருணையோடு

குழந்தையின்
காதல்
ஒரு புன்னகையில்

இப்படியே

இறுதியில்

துளித்துளியாய்
பிரபஞ்சம்
காதலால்
நிரம்பி வழிகிறது.

பூக்களின்
இரகசிய முத்தங்கள்
காற்றில் கரைந்து
கன்னங்களை வருடுகிறது..

த.அகிலன்

Wednesday, July 26, 2006

தீர்ந்து போகும் வெளிச்சம்...


நிபந்தனைகளுக்குள்
இருக்கிறது உலகம்…

ஒன்றிற்காய்
இன்னொன்று
அதற்காய் மற்றொன்று
இப்படியே
வாழ்வின்
ஒவ்வோர் அசைவும்
நிரம்பியிருக்கிறது
நிபந்தனைகளுள்..


நம்பிக்கையின்
கடைசிப்புன்னகையும்
சலனமற்றிருக்கிறது.

காலம்
திணைகள்
எதுவுமற்ற
மழலையின் மொழியென
நகரும் வாழ்க்கை

நினைவுகளின்
நீட்சியில்
என் நெஞ்சுறுத்திக்கிடக்கிறது
முட்கள்


திரையிடப்பட்டிருக்கிறது
ஒவ்வோர்
புன்னகையும்
பணிதலும் கூட

மின்மினிகளுமற்ற
இந்த இரவின்
துணைவன்
யார்?


இன்னும்
யாரிடமாவது
மிச்சமிருக்கிறதா
வெளிச்சம்.

Tuesday, July 25, 2006

காயங்கள்


வெற்றுக்கண்களுக்குச்
சிக்கிவிடாமல்;
காயங்கள்
நிறைகின்றன
மேனியெங்கும்
உணர முடிகிறது
என்னால்…..

ஒரு புன்னகை
ஒரு முத்தம்
அல்லது
ஒரே ஒரு பார்வையின்
பகிர்தல்கூடப்போதுமானதாயிருக்கும்
அவற்றை ஆற்றிவிட

ஆனால்
நண்பர்களே
நிச்சயமாய்
பலிகள் தேவையில்லை

பூக்களின்
செண்டுகளில் இருந்து
கத்திகளை எடுங்கள்
காயங்கள்
இனியும் வேண்டாம்..

த.அகிலன்

Monday, July 24, 2006

ஒளியின் நடனம்..


காற்றிறல்
நழுவவிட்ட
உன்
வார்த்தைகளை
முட்களாய் மாற்றும் வித்தை
எங்கனம் சாத்தியமாகிறது

என்
எண்ணக்கூட்டிற்குள்
குஞ்சு பொரித்துக்காத்திருக்கும்
நிறையக்கேள்விகள்.

ஆனாலும்
அன்பே
எனக்குள் நிகழ்கிறது
ஒளியின் நடனம்
என் கனவுகளிற்கு
ஒளியூட்டியபடி……


நான்
கைகளை குவித்துக்கொண்டு
காவலிருக்கிறேன்
ஒளியின் நடனம்
நின்றுபோகாதிருக்க
இப்போது
தீர்ந்து போயிருக்கிறது
உள்ளிருந்தேயெழும் கவிதை

ஆச்சரிமாய்
எனக்கே புரியாதிருக்கிற
இக்கவிதையின் பாடுபொருள்

எனினும்
எனக்குள்
நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது
இன்னும் தீராமல்
ஒளியின் நடனம்.

Sunday, July 23, 2006

ஒளியின் குரல்.....


தீபங்கள்
பேசத்தொடங்கின
மனிதர்கள்
குரல்களற்றுத்திணற

ஸ்பரிசங்களற்ற
தீபங்களிற்குக் குரலிருந்தது

மௌனத்தின்
வேர்களை அறுத்துக்கொண்டுஷ
துயரின் பாடல்
தொலையத் தொலைய
தீபங்களின் குரல்
காற்றில் எழுகிறது

அது
புனிதங்களின் மொழி

மனிதங்கடந்தவரின்
மறைமொழி

இப்போது
உயிரின் நுனிவரைக்கும்
இறங்குகிறது
தீபங்களின் குரல்

நிச்சயிக்கப்படாத
ஒரு கணத்தில்
தகர்ந்து போகிறது
தீபங்களின் குரல்

மனிதர் மீண்டும்
குரலுற்றார்

உயிர் எரியும் பாடல்
காற்றில் எழுகிறது

Sunday, July 16, 2006

உரசிப்போகும் பட்டாம்பபூச்சி...


நான்
அவளைக்காண்கிறேன்
தேவதைகள் நிரம்பிய தெருவில்
அவளை மட்டுமாய்
தனியே


அவள்
கண்களில் இருந்து பறந்து போகும்
பட்டாம் பூச்சியைக்குறிவைத்து
நடந்தபடியோ
அல்லது
தேவதைகளோடு
கொக்கான் வெட்டியபடியோ
அல்லது
முந்தையநாள் இரவில்
தன்னோடு உறங்கமறுத்த
பூனைக்குட்டியைப்பற்றிய
ஏக்கம் நிரம்பிய
சொற்களோடோதான்
அவள் எப்போதுமிருக்கிறாள்....

எப்போதாவது
நான்
தேவதைகளின் தெருவில்
நடக்க நேர்கையில்
என்னை உரசிச்செல்கிறது
அவள்
கண்களின் பட்டாம்பூச்சி

Friday, July 14, 2006

புழுக்களைத்தின்னும் பூக்கள்...


பூக்கள் சிதறிய வனத்தின்
விழிகள் எங்கும்
புழுக்களின் ஆக்கிரமிப்பு

வாசம் இழந்து
வாழ்வழியும் நிலையில்
பூக்கள்.

அவற்றில்
மலர்ச்சி மறைந்து
வேதனை வடுக்கள்
விழிகளில் வழிந்தது.

இதழ்களில் எங்கும்
துழைகளின் நிழல்கள்
அந்நிழல்களின்
இருளில் அமிழ்ந்து போயிற்று
பூக்களின் வாழ்தல் பற்றிய நினைப்பு

பூக்கள் இப்போது
புழுக்களைத்தின்றன
தம்
இயல்பு துறந்து.

த.அகிலன்

Monday, July 10, 2006

முழுவதும் உனக்கே..


என் காதலே!

இந்தப் பூமிப்பந்தின்
எல்லா நுனியிலும்
நீதான்
நிறைந்து கிடைக்கிறாய்…..

என் வார்த்தைகள்
திணறும்.

உனை
விபரிக்கச் சொல்லற்றுத்துடிக்கும்
என் கவிதை….

உதிரமுடியாத
ப+க்களை எப்படித்தான்
கைவசம் வைத்திருக்கிறாய்
மாறாச் சிலிர்புடன்
காதலின் தெருக்கள் எங்கும்
விரவிக்கிடக்கிறது பூக்கள்.

குடித்துத் தீர்ந்தபின்பும்
திகட்டித் திகட்டி
மிஞ்சிக்கிடக்கிற
அன்பின் பானமாய்
நிறைந்து வழிகிறாய்..

என்
வாழ்வின்
ஒவ்வொருதுளியிலும்
உனக்குத்தான்பாதி
சீச்சி
முழுவதுமே உனது

த.அகிலன்

Friday, July 07, 2006

இறைவனுக்கு ஒரு சாபம்...


சே!
என் அதிகாலைக்கனவுகளில்
தேவதைநுழைகிற
நேரமாய்ப் பார்த்து
காதுகளில் நுழைந்து
தொலைக்கிறது
காண்டாமணியோசை
இறைவா
நான்
உன்னை சபிக்கிறேன்….

த.அகிலன்

Thursday, July 06, 2006

துயரின் பயணம்....


எப்போதும்
ஏதேனுமொரு
புன்னகையிலிருந்தே
ஆரம்பிக்கிறது துயரம்.

ஓரு
புன்னகையில் இருந்து
மற்றுமோர்
புன்னகைக்கு...

வழிநெடுக
புன்னகைகளை
வாரியணைத்தபடியும்

ஒவ்வொரு
புன்னகையின்
முகத்திலும்
தன்னை
அறைந்தபடியும்
பயணிக்கிறது
துயரம்...

அது தன்
தீராக்காதலோடு
தொடர்ந்தும் இயங்கும்
இன்னொரு
புன்னகையைநோக்கி

த.அகிலன்

Wednesday, July 05, 2006

தோற்றுப்போகும் சேவல்..


சிக்கிக்
கொள்கிறது
வார்த்தைகள்.....

வெறுமனே
இறக்கைகளைவீசி
தோற்றுப்போகிறது
சேவல்.

சூரியன்
அதன்பாட்டுக்கும்
நகர்ந்து போகிறது

உதிரியாய்
உள்ளே நுழைகிற
வார்த்தைகளிடம்
கவிதையில்லை

காற்றுக்குப் படபடத்து
மேசையினின்றும்
உதிர்ந்து விழுகிறது
தாள்கள்….

வெறுமனே
இறக்கைகளைவீசி
தோற்றுப்போகிறது
சேவல்

த.அகிலன்

Tuesday, July 04, 2006

கடனுக்கு வரும் கனவுகள்...என்
இனிய காலமே
எனது கனவுகளை
சுமந்து கொண்டிருக்கிறாய்….

நான்
எப்போதும்
தாகமாயுணர்கிறேன்

ஒரு
பெருநதியின் எதிரிலும்…

பூக்களின் வாசனை
எங்கே ஒளிந்துகொண்டிருக்கிறதோ
அங்கேயே
என் கனவுகளும்;.

புனிதமாயிராத
என் கனவுகள்
எப்போதும்
அலைகின்றன
என்னைச்சுற்றி நச்சரித்தபடி..

ஆனாலும்
கனவுகளைக் கடைசிவரை
சேமிப்பேன்
தூக்கங்களற்ற
ஒரு பெருவெளிக்காய்
அற்றைக் கடன்கேட்டு
யாரேனும் வரலாம்..

த.அகிலன்

Sunday, July 02, 2006

முத்தங்கள்


அன்பே
உனது முத்தங்களைவிடவும்
அழகானவை
அதற்கு
முன்னதும்
பின்னதுமான
வெட்கங்கள்

த.அகிலன்

Saturday, July 01, 2006

உன்புன்னகை குறித்து


பூக்களால் ஆகிறது
ஒரு கவிதை.

என் எதிரில்
பூக்களைத் தவறவிடா
உன் உதடுகள்.

ஆனாலும்
நான்
நிறையப் பூக்கள்
கொண்டு வருகிறேன்
புறந்தள்ளிப்போகிறாய்....

அவை
ஒவ்வொன்றாய்
வாடி வீழ
உன்
ஒவ்வொரு மறுதலிப்பின்
முடிவிலும்
நான்
பூக்களைச் சேமிக்கிறேன்.

ஒரு
பட்டாம்பூச்சியைப்போல்
சட்டென்று ஒட்டிப்
பறந்து போகிறது
உன்
புன்னகை.

த.அகிலன்

சூரியனின் சித்திரம்...


ஒவ்வொரு பூவிடமும்
இருக்கிறது சூரியன்
குறித்த சித்திரம்.

பூக்களைத்தமக்குள்
பதுக்கிக்கிடக்கும்
மொட்டுக்களின்
முதுகுகளில்
எழுதப்படுகிறது
சூரியனின் தோல்வி.

பூக்களின் முகங்களில்
ஒட்டிக்கிடக்கிறது
சூரியனின் புன்னகை.

ஆனாலும்
இரவில்
நிலவுக்குப்பயந்து
அவற்றை
உதிர்த்துக்கொண்டு
தம்மை உரிக்கின்றன
மரங்கள்.

த.அகிலன்