Thursday, November 30, 2006

காத்திருத்தல்


மொட்டை மாடியில்
காத்திருக்கிறேன்
நிலவாவது
வரட்டும் என்று...

கறுத்தக்கட்டிடங்களின்
மேலாக மிதந்து
கொண்டிருக்கிறது
தனிமை
ஒரு பறவையைப்போல..

கொடியில்
காயப்போட்ட
துணிகளில்
தொங்கிக் கிடக்கிறது
நினைவுகள்

தொலைவில்
தெரியும்
தொலைபேசிக் கோபுரததின்
சிவப்பு வெளிச்சங்கள்
ஒரு
அசரீரியைப்போல
திகிலூட்டும்

அறைமுழுதும்
நிரம்பிய புத்தகங்கள்
சிடீக்களில்
நிரப்பப்பட்ட இசை
எதுவுமே போதுவதில்லை
எரிந்து கொண்டிருக்கும்
தனிமையை
அணைக்க...

த.அகிலன்

Wednesday, November 29, 2006

மயானங்களை புனிதமாக்கும் மாவீரர்நாள்

தமிழீழ மாவீரர் நாள் ஒரு அனுபவம்

நேரம் நெருங்கிவிட்டது.டாங் டாங் டாங். மணி ஒலித்துக்கொண்டிருக்கிறது. நான் அமைதியாக நின்று கொண்டிருந்தேன். ஏதேதோ எண்ணங்கள் சிதறடித்துக்கொண்டிருந்தன நினைவுகளை. எல்லோரும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள் தீபமேற்றுவதற்கு. நேரம் வந்ததும் பிரதான சுடரை ஏற்றினார்கள் எல்லோரும் ஏற்றினார்கள் ஒரே நேரத்தில். தீபங்கள் பிரகாசித்தன விடுதலையை நோக்கி தீயின் நாவுகள் நீள்வது போலிருந்தது. அங்கே எந்தக்கல்லறையிலும் தீபம் ஏற்றப்படாமல் இருக்காது ஒரு வேளை கல்லறையுள் உறங்கும் ஒருவனது உறவினர்கள் யாவரும் செல்லடியில் செத்துப்போனாலோ அல்லது அகதியாகி உலகில் எங்கேனும் அவலப்பட்டாலோ அவன் கல்லறையை சீச்சி அவனை தத்தெடுத்துக்கொள்ள ஒவ்வொரு தமிழ்மகனும் தயார். அவன் என்பிள்ளை அவனுக்கு நான் சுடரேற்றுகிறேன் என்று எல்லாரும் முன்வருவார்கள்.(இதைத்தான் அல்லது இதனால்தான் புலிகள் தான் மக்கள் மக்கள் தான் புலிகள் என்கிறார்கள்) மாவீரர் நாள் அன்று துயிலுமில்லம் கல்லறைகளாலும் கண்ணீராலும் நிரம்பியிருக்கும் எல்லாரும் ஒரே நேரத்தில் சுடரேற்ற ஒரு பாடல் ஒலிக்கத் தொடங்கும். உயிர் உருக்கும் பாடல்அது.

மொழியாக எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி
வழிகாட்டி எம்மை வரலாறாய் ஆக்கும் தலைவனின் மீதிலும் உறுதி
இழிவாக வாழோம் தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி

தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே
இங்கு கூவிடும் எங்களின் அழுங்குரல் கேட்குதா
குழியினுள் வாழ்பவரே

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

உங்களை பெற்றவர்.உறவினர் வந்துள்ளோம்
அன்று செங்களம் மீதினில் உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்

எங்கே எங்கே விழிகளை ஒரு கணம் இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்இந்தப்பாடல் விடுதலைப்புலிகளின் வீரச்சாவுகளில் மட்டுமே ஒலிக்கும் பாடல் விடுதலைப்புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதியது.வர்ணராமேஸ்வரன் பாடியது. உயிர் உருக்கும் வரிகள் மாவீரர் தினத்தன்று அவர்களுக்காக சுடரேற்றும் போது மட்டுமே இது ஒலிக்கும். இதில் வரும்

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்


என்ற வரிகள் வரும்போது கோரசாக நிறைய பாடகர்கள் பாடுவார்கள்


எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்

என்று
அப்படி பாடிய பாடகர்களில் ஒருவரான பாடகர் சிட்டுவும் களத்தில் வீரச்சாவடைந்தபோது அவருக்காகவும் இந்தப்பாடல் ஒரு முறை ஒலித்தது. அப்போது சிட்டுவின் வீரச்சாவு அஞ்சலி நிகழ்வை தொகுத்து வழங்கியவர் சொன்னார் இதோ சிட்டுவுக்காக இறுதியாக ஒருமுறை சிட்டுவே பாடிய பாடல் .. கூடியிருந்த சனங்கள் ஹோ என்று கதறின. சிட்டுவின் ஞாபகங்கள் உணர்வூட்டும் பாடல்களாக இன்றைக்கும் வாழ்கிறது அங்கே.

எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள்
ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்


இந்த வரிகளைக் கேட்டு விட்டும் யாரும் அழாமல் துயிலுமில்லத்தில் இருந்து திரும்பி வர முடியாது. கனவுகள் விழித்துக்கொள்ளும். எல்லாரும் அழுவார்கள் அங்கே கல்லறைக்குள் சொந்தக்காரர்கள் இருக்கிறார்களோ இல்லையோ. யாரும் அண்ணன் தம்பீ வீரச்சாவோ இல்லையோ துயிலுமில்ல வளாகத்தில் இருக்கிற அத்தனை பேரும் வெட்கத்தைவிட்டு கதறுவார்கள். அது கவலையா கோபமா என்று தெரியாத அழுகை. தீபங்களின் ஒளியில் கண்ணீர்த்துளிகள் மட்டும் மினுங்கிக்கொண்டிருக்கும். மௌனம் ஒரு பெரிய பாசையைப்போல எல்லாவற்றையும் ஆட் கொண்டிருக்கும். தீபங்கள் குரலெடுத்து அழுவது எல்லோருக்கும் கேட்கும். கல்லறைகள் மெல்லப்பிழப்பது போல இருக்கும். எதுவுமே பேச முடியாது நின்றிருப்போம். மொழியை மறந்து விட்டது போல இருப்போம் அங்கே அப்படித்தான் இருக்கமுடியும்.


துயிலுமில்லம் தான் இன்றைக்கு தமிழர்களின் புனிதப்பொருளாகிவிட்டது. விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரை நீத்த போராளிகளின் வித்துடல்களை (உடல்களை) அங்கே விதைத்து வைத்திருக்கிறார்கள் தங்கள் அபிலாசை மீட்க தங்கள் மக்களின் துயரங்களைக் களைய அவர்கள் மறுபடியும் முளைப்பார்கள் என்று உணர்வு பொங்கச் சொல்வார்கள் தமிழ் மக்கள். அது தான் உண்மையும் கூட.அதனால் தான் அவர்களை புதைப்தில்லை விதைக்கிறார்கள்.

வரலாற்றில் நாங்கள் சுடலை என்பதை ஒரு தீட்டுப்பொருளாக துக்கிக்கும் இடமாக அல்லது எல்லாவற்றினதும் முடிவாக கருதி வந்த வழமையை மாற்றி புதிதாக அதை புனிதத்திற்கு இட்டுச்சென்றிருக்கிறார்கள் ஈழத்தமிழர்கள். அது புனிதம் மட்டுமல்ல எல்லாவற்றினதும் தொடக்கமும் கூட. அது மாவீரர் மயானம் அல்ல மாவீரர் துயிலும் இல்லம். அது நிச்சயமாக தீட்டுப்பொருள் அல்ல அங்கிருப்பவை வெறும் கல்லறைகளும் இல்லை இரத்தமும் சதையுமான வீரர்கள் இளமையும் குறும்புமாக ஓடித்திரிய வேண்டிய பிஞ்சுகள். கல்லறைகளின் அருகே போனால் காதை வைத்துக் கேட்டால் நிச்சயம் ஒரு குரல் ஒலித்துக்கொண்டிருக்கும். அந்தக்குரல் தன் அம்மாவை அறுதல் படுத்தும் தங்கைக்கு உத்வேகம் அளிக்கும். சிலசமயம் துணைவியின் தலைகோதும்.தான் பார்த்தேயிராத தன் குழந்தையை முத்தமிடும்.தோழர்களை உற்சாகப்படுத்தும்.

உள்ளேயிருப்பவர்களின் புன்னகை கல்லறைகளின் முகங்களில் ஒட்டியிருக்கும். கல்லறை ஒரு வேர்விட்ட மரம்போல உறுதியாய் இருக்கும். அங்கிருந்துதான் வேதனைகளையும் சோதனைகளையும் தாங்குவதற்கான சக்தியை தமிழர்கள் பெறுகிறார்கள். போராளிகளிற்கும் தமக்குமான சின்னச்சின்ன முரண்பாடுகளை மக்கள் மாவீரர்களின் தியாகத்தின் மூலம் தான் கடக்கிறார்கள். எத்தனை தடவைகள் குண்டு வீசினாலும் என்னதான் பொருளாதாரத்தடை போட்டாலும் உயிர்வாழ்கிற எங்கள் சனங்களின் உறுதியின் ரகசியம் இவர்களின் தியாகங்கள் தான்.

இந்த தமிழர்களின் புனித இடத்தைத்தான் சிங்களஅரசுபடைகள் யாழ்ப்பாணத்தை கைப்பற்றியபோது புல்டோசர் போட்டு தோண்டியது.ராணுவ டாங்க்கினை ஏற்றி கல்லறைகளை மிதித்தது.எங்கள் மயானங்களுக்கே மதிப்பளிக்காத அவர்களா எங்கள் மனங்களுக்கு மதிப்பளிப்பார்கள். அவர்களிடமா நாங்கள் மனிதாபிமானம் பேசுவது.சொல்லுங்கள் உறவுகளே?

(மன்னிக்கவும் நண்பர்களே முதலில் போட்ட பதிவை புளொக்கர் விழுங்கி விட்டதால் மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது)
த.அகிலன்

Saturday, November 25, 2006

மழை என்னும் பிராணி


திடீரென
முழித்த தூக்கத்தில்

உள்ளே வரத்துடிக்கும்
ஒரு
பிராணியைப்போல
கதவுகளைப்
பிறாண்டிக்கொண்டிருந்தது
மழை

என்
தலையணைக்டியிலிருந்த
கனவுகளையும்
அழைத்துக்கொண்டு
நனையப்போயிருக்கிறது
தூக்கம்

த.அகிலன்

Wednesday, November 22, 2006

தனிமனித தாக்குதல்களும் செ.வலைப்பதிவர் சந்திப்பும்

சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டாலும் கொண்டேன்.அப்பா ரொம்ப்பிரபலமாயிட்டேனோ என்று தோன்றுகிறது.ஈழப்பிரச்சினையை சார்ந்த வாதப்பிரதி வாதங்கள் அதில் நான் தெரிவித்த கருத்துக்கள் அதை ஏற்றுகொண்டவர்கள்,கொள்ளாதவர்கள் அவர்களின் கருத்துக்கள் இப்படி சென்னை வலைப்பதிவர் சந்திப்புக்கு சென்ற காரணத்தால்
எனக்கும் நிறைய நன்மைகள் கிடைத்துள்ளன. சென்னை வலைப்பதிவர் சந்திப்பு குறித்து சந்திப்பில் கலந்து கொண்டவர்கள் கலந்து கொள்ளாதவர்கள் என்று நிறையப்பேர் எழுதித்தள்ளிவிட்டார்கள் (நானும் ஜோதியில் கலந்து கொள்ளவேண்டாமா)அது மட்டுமல்ல சூடான விவாதங்களும் தனிமனித தாக்குதல்களும் அதனை தொடர்ந்தான மனத்தாக்கங்களும் ஏற்பட்டுளன.அது குறித்து கட்டுரைகள் குறிப்புகள் எழுதியவர்களில் அரைவாசிக்கும் மேலே என்பெயரைக்குறிபிட்டு எழுதியிருக்கிறார்கள். முடிந்தவரை லிங்க் வேறு கொடுத்திருப்பதால் என் கிட்கவுண்டரும் பரவாயில்லாமல் போயிருக்கிறது.இதை எப்படி எடுத்துக்கொள்வதுஎன்பது எனக்கு தெரியவில்லை ஆனால் சென்னை வலைப்பதிவர் சந்திப்பிற்கு என்னை முதலில் அழைத்த லக்கிலூக் மற்றும் பாலபாரதி பிரியன் ஆகியவர்களுக்கு எனது நன்றிகள் என்றைக்கும்.

சென்னைப்பபட்டண வீதிகளும் விதிகளும் தெரியாத என்னை சந்திப்பு நடக்குமிடம் வரை அழைத்துச்சென்று மறுபடியும் என்வீட்டுவாசல்வரை கொண்டு வந்து விட்ட விக்கி(பிரியன்) அண்ணாவுக்கு என் விசேட நன்றிகள்.

நான் ஒரு பதட்டத்துடனும் மகிழ்ச்சியுடனும் தான் பிரியன் அண்ணாவுடன் சென்றேன். அரங்கினுள் ஒரு ஓரமாக உட்கார்ந்திரநத என்னை திடீரென்று பாலபாரதி அண்ணா முன்னுக்கு வா என்று அழைக்கவும் இவன் சொல்றதை கொஞ்சம் கேளுங்க என்று அங்கிருந்தவர்களை கேட்டுக்கொள்வும் மிகச் சிறப்பான அந்த அனுபவம் எனக்கு வாய்த்ததது. ஈழம் குறித்து அத்தனை ஆர்வத்துடன் அவர்கள் கேட்டார்கள் ஆர்வத்துடன் என்னைக் கவனித்தார்கள் ஆச்சரியப்பட்டார்கள் கவலைப்பட்டார்கள். எனக்கு நம்பிக்கையாக இருந்தது ஈழமக்கள் தனித்தில்லை ஆதரவோடு இருக்கிறோம் எங்கள் இந்திய உறவுகள் எங்களை கடைசி வரை கைவிட மாட்டார்கள் என்று இந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பு எனக்கு உணர்த்தியது. அதற்காக அந்த சந்திப்பினை ஏற்பாடுசெய்த சென்னைப்பட்டினம் நண்பர்களுக்கும் பாலபாரதி அண்ணாவிற்கும் என் நன்றிகள்.

லக்கிலூக் அவரது பதிவில் அகிலன் அருமையாகப்பேபசினார் என்றிருக்கிறார். நான் சொல்கிறேன்.நான் அருமையாகவெல்லாம் பேசவில்லை கொஞ்சம் உண்மைகள் சொன்னேன். அவ்வளவுதான் ஈழம் இவற்றையெல்லாம்இழந்திருக்கிறது இவற்றையெலல்லாம் தனக்குள் வைத்திருக்கிறது.என்று என் அனுபவங்களைப்பகிர்ந்து கொண்டேன். அவ்வளவுதான். அதிலும் நான் உங்களோடு பகிர்ந்து கொண்டது கொஞ்ச உண்மைகள்தான் இன்னும் புண்கள் என்னிடமுண்டு
நாங்கள் மனிதர்கள் மாதிரி நடத்தப்படாத சந்தர்ப்பங்ககள் சொல்லலாமா வேண்டாமா என்று சொல்லக்கூசுகிற அவமானங்கள். எல்லாம் என்னிடம் இருக்கிறது.

விக்கி(பிரியன்) அண்ணா என்னை அழைத்துப்போகும் போது சொன்னார் வந்து விட்டீர்கள் அல்லவா போகப்போகத்தெரியும் இந்த வலைப்பதிவர்களின் சண்டைகள் குறித்து என்று . எனக்கு இப்போது பார்க்க பயமாகத்தான் இருக்கிறது.இத்தனை காழ்ப்புணர்வா இத்தனை ஓட்டுமாட்டடா என்று ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் இலக்கிய உலகில் சிறபத்திரிகைச்சூழலில் எப்படி வெட்டுக்குத்து தனிமனித தாக்குதல் என்று கிளுகிளுப்பாகவும் சூடாகவும் போகிறதோ அதைவிடப்படுகேவலம் இங்கே ஒரு சில ஆறுதல்களைத் தவிர தனிமனித தாக்குதல்கள் மலிந்துவிட்டதா வலைப்பதிவுலகில். இதற்கு மேலும் இது குறித்து பேசினால் என்னையும் போட்டு குமுறி கும்மி அடித்து விடுவார்கள் எனவே நான் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.கட்டாயம் இது குறித்து ஒரு தனிப்பதிவு விரைவில் போடுவேன்.

இந்நதச்சந்திப்புக்கு என்னை அழைத்து பேசுவதற்கும் சந்தர்ப்பம் கொடுத்த சென்னைப்பட்டினம் நண்பர்கள் மற்றும் பாலபாரதி அண்ணா, இந்தச்சந்திப்பு தொடர்பாக வும் அதன்பின்னால் ஏற்பட்ட ஈழமக்கள் மீதான அக்கறை குறித்தும் பதிவுகள் போட்ட வலைப்பதிவர்களிற்கும் என் சார்பாக அல்லது தமிழ்ஈழ மக்கள் சார்பாக பின்னூட்டங்களில் நன்றி சொன்ன அனைவருக்கும் என் நன்றிகள்.

த.அகிலன்

Tuesday, November 07, 2006

கடைசிக் கவிதை....என் கடைசி வரிகளை
கடல் மடியில் எழுதி வருகிறேன்
யாரிடமும் பகிர்ந்து கொளமுடியாத படிக்கு

பேசாமல் இருக்கும்
அலைகளிடம்
தொலைந்து போகும்
கண்ணீர்த்துளியைப் போல
போய் விடட்டும்
என் கவிதை

எல்லாம்
முடிந்து போய் விட்டது

எப்போது கேட்டாலும்
யோசிக்காமல்
பணம் தரும் பெரியம்மாவின்
கண்ணீர் நிறைந்த முகம்
கடந்து வந்தாகி விட்டது

இனி
மறுபடியும் வீட்டு முற்றத்துக்குப்
போய்விட முடியாது

இனி
அண்ணியிடம் சோற்றைப்
பிசைந்து தருமாறு சண்டையிட முடியாது

இனி
குட்டிப் பையனின் எச்சில் முத்தங்கள்
கிடையவே கிடையாது

இனி
என் தேவதையை
உயிர் கொல்லும்
அவள் கண்களை மறுபடியும்
சந்திக்கவே முடியாது

இனி எப்போதும்
உயிருள்ள ஒரு கவிதை
என்னால்
எழுதவே முடியாது.

த.அகிலன்