Wednesday, September 27, 2006

மரணத்தின் வாசனை - 02

உருகித்தீர்ந்த ஒரு மெகுவர்த்தி


சந்தையில் வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது இரைச்சல் காதைப்பிளந்தது

ஓருவன் தலைதெறிக்க ஒடிவந்தான். நண்பா நண்பா

மற்றவன் என்னடா? என்கிறான்.

நான் இந்த சந்தையில் மரணதேவதையை பார்த்தேன். அவள் என்னைப்பார்த்து நக்கலாக சிரிக்கிறாள் நீ உன் குதிரையைக்கொடு நான் பக்கத்து நகரில் ஓடிஒளிந்து கொள்கிறேன் என்றான்.(குதிரையை அபேஸ் பண்ண பார்க்கிறானோ)

இவன் உடனடியாக குதிரையைக் கொடுத்தான். அவன் அடுத்தநகரை நோக்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் மரணதேவதையை இவன்கண்டான்.

அவளிடம் “என்ன என் நண்பனை பார்த்து நக்கலாக சிரித்தாயாமே” என்றான்.

மரணதேவதை சொன்னாள் “சீ சீ நான் அவனை பக்கத்து நகரில் தானே சந்திக்க வேண்டும் என்ன இங்கே நிற்கிறான் என்று சிரித்தேன்” என்றாள்.

மரணதேவதையை பார்த்து தலைதெறிக்க ஒட எல்லாரும் தயாராக இருக்கிறோம். யாராவது அவளைக்காதலிக்க தயாரா? அல்லது வா வா என்று அவளுக்கு விருந்து வைக்கவும் யார் தயார்.

மரணதேவதையை விருந்துக்கு அழைத்தவனைப்பற்றி அவளை ஒரு சாதாரணப்பெண்ணாகப் பாவித்தவனைப்பற்றிய கதை இது.


ஒரு பொதுக்கூட்டம்

பேச்சாளர் கரகரவென்று அழுகொண்டிருக்கிறார் தனைமறந்து.

“அந்தப் பிள்ளை சொன்னவன் நான் இரண்டு மூன்று நாட்களில் நினைவிழந்து தண்ணீர் தண்ணீர் என்று அரற்றினாலும் தண்ணீர் தராதீர்கள் என்று”

ம்.. அந்தப்பிள்ளை திலீபன்.

அவன் அப்படித்தான் செத்துப்போனான். தண்ணீரும் அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து செத்துப்போனான். அவர் அழுதழுது சொன்னதைப்போல திலீபன் அவனது இறுதி நாட்களில் நினைவிழந்து அரற்றினான்.

தண்ணீர் தண்ணீர் என்று அவன் நினைவிழந்து அரற்றுகையில் யாரும் தரவில்லை அவனது வார்த்தைகள் அவனைச் சுற்றியிருந்தவர்களைக் கட்டுப்படுத்தியது. ஆயிரக்கணக்கானவர்கள் அவனது சாவுக்கு சாட்சியாய் இருந்தர்கள். அவனது சாவு தடுக்கப்பட முடியாததாயிருந்தது.

“ஐயா தீலீபா எங்கய்யா போகின்றாய்”
திலீபன் உண்ணாவிரதமிருந்த மேடைக்கு அருகில். இப்படி ஒரு கவிதை அழுதுகொண்டிருந்தது.

அவன் அதைக் கேட்டானோ கேட்கவில்லையோ தெரியாது. ஆனால் அவன் செத்துவிடக்கூடாதே என்று அத்தனை பேரும் துடித்தர்கள்.

முதல்நாள் திலீபன் மிகுந்த உற்சாகமாகப்பேசுகிறான். எனது மண்விடுதலை பெறவேண்டும். மக்கள் புரட்சி இங்கே வெடிக்க வேண்டும் என்று மிகவும் உற்சாகமாகப்பேசுகிறான்.

பிறகு நாளாக நாளாக அவன் பேசும் சக்தியை இழந்து கொண்டு போகும் நாட்களிலும் அவனது முகத்தின் புன்னனை மாறாதிருந்தது. நம்பிக்கையிழந்துவிட்டன் சாயல் துளியம் இருக்கவில்லை. மரணத்தின் வாசனை தனது நாசிகளில் ஏறுவதை அவன் மறைத்தான் உண்மையில் மக்களிடம் அவன் பிழைத்து விடுவான் என்கிற நம்பிக்கைகள் வீழ்ந்துகொண்டிருந்தது.

திலீபன் தனது நம்பிக்கைகள் சாகும் கணத்தில் அவன் சொல்கிறான்
“உறவுகளே நான் நம் நாடு மலர்வதை எனது தோழர்களொடு வானத்தில் இருந்து பார்ப்பேன்”


அவன் மரணம் நிச்சயமானது என்று அவனுக்கு புரிந்திருந்தது. அது அவனால் தானே நிச்சயிக்கப்பட்டது. அந்த தெளிவுதான் அவன் பலம் அது தெளிவா அல்லது சாகும் துணிவா எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால் அது மரணத்தை அதன் நிரந்தரத்தை அதன் மீதான மனிதர்களின் அச்சத்தை நிச்சயமாக வென்றுவிட்டது.

திலீபனிடம் கடைசியாக ஒரு வைத்தியர் வருகிறார். அவர் திலீபனைப்பார்த்தார். அவன் சாந்தமாக கிடந்தான் நிரந்தரமான அவனது அந்தப்புன்னகை அவரால் எதிர்கொள்ள முடியாததாயிருந்தது. காலம் அவனைக் கொண்டு போய் விட்டது விடுதலையின் மூச்சென்று மேடைகளில் முழங்கியவன் மூச்சடங்கிப்போனான் அவன் மரணத்தை அறிவிக்க வேண்டும். தன் உறவுகளை தன் அன்பான மக்களை துடிக்கவைத்து விட்டு மெழுவாத்தி அணைந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

வைத்தியர் இப்போது என்னசெய்வார். அவரைச்சங்கடத்துக்கும் துக்கத்துக்கும் உள்ளாக்கப்போகும் அந்தக்கணங்கள் வந்துவிட்டன. மரணம் அவனை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது.

மரணம் கொடியைப்போல அவன் மீது படர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கணீர்க்குரல் வலுவிழந்து தொய்து தீனித்து கடைசியில் மௌனித்தது. அந்தப் பெரும் மௌனம் கூடிக்கதறிய மக்கள் வெள்ளத்திடம் கொடுந்தீயெனப்பற்றியெரிகிறது இன்றைக்கும். எப்படி முடிந்தது அவனால். மரணம் அத்தனை இலகுவானதாதா காதலியைக் கட்டிக்ககொண்டதைப்போல மரணத்தை இலகுவில் முத்தமிட்டானே. அது சாத்தியமா மரணம் அத்தனை சாதாரணமா.


அவர் திலீபனை அவனது கால்களை தொட்டு கும்பிட்டார்.வைத்தியரின் உடல் குலுங்கிக்கொண்டிருந்தது (வேறென்ன செய்யமுடியும்) அவனது மரணம் அறிவிக்கப்பட்டது. அந்த திடுக்கிடும் கணங்களில் ஓஓஓஓஓஓ என எழுந்த கூக்குரலும் கதறலும் அடங்க நாளானது. அத்தனை பேரும் அழுதார்கள் மரணத்தை விருந்துக்கு அழைத்த அவனுக்காய் வழிந்த எந்தத்துளிக் கண்ணீரிலும் பொய்யில்லை. அத்தனையும் துயரம். நல்லூரின் தெருக்களில் வாhத்தைகளுக்குச்சிக்காத கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. உறைந்து போன அந்தக்கணங்கள் இன்றைக்கும் நல்லூரின் தெருக்களில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.
ஒரு மிகப்பெரும் மனோபலமிக்க தலைவன் திலீபன். அவன் மனோபலம் இதனை சாத்தியமாக்கியதா? இந்தப்பூமியின் சுகங்களை தவிர்த்து அவன் முன்பு கூடியிருந்து கதறும் குரல்களைத்தவிர்த்து மரணத்தை எதிர்பாhத்து காத்திருப்பதற்கு அது அத்தனை இன்பமானதா? மரணம் சிலருக்கு ஆச்சரியம் சிலருக்கு சாதாரணமா. சாகப்போகிறோம் என்று தெரிந்த பிறகும் நடுங்காமலிருக்க புன்னகைக்க அதற்காககாத்திருக்க எத்தனை மனிதரால் முடியும் என்னால் உங்களால் யாரால்……..? ஒரு சில அதிசயர்களால் மட்டும் தான் முடியும் போலிருக்கிறது.

த.அகிலன்

3 comments:

மஞ்சூர் ராசா said...

கண்கள் குளமாயின

மஞ்சூர் ராசா said...

இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்படியொரு மனபலமிக்க தலைவன் தன்னுயிரை ஈந்து நாட்டுக்காக மரணமடைந்தது காலம் காலமாக எல்லோர் மனதிலும் நிற்கும். அவனது ஆசை நிறைவேறவேண்டும். நிச்சயம் நிறைவேறும்.

தமிழகத்திலிருந்து குகன் said...

எங்க நாட்டுல கூட அரசியலுக்காக உண்ணாவிரதம் இருக்காங்க. ஆனா ஒரு நாள் கூட அதெல்லாம் தாக்கு பிடிச்சதில்லை. எனக்கு தெரிந்து உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த ஒரே ஒருவர் திலேபனே.