Friday, October 06, 2006

மரணத்தின் வாசனை - 03

அழுது கொண்டிருக்கும் பள்ளிக்கூடச் சுவர்கள்

அவனது வெறித்த விழிகள் நிலைகுத்தி இருந்தது.கண்களை இமைக்கவேயில்லை அவனது அருகில் வேகமாய் இயங்கிக் கொண்டிருந்த வைத்திய சாலையின் வேகமும் பயமும். தொற்றாமல் அவன் சிலைபோல் நின்றான். பதட்டமும் அவலமும். பாதிக்கவேயில்லை இந்த மனிதனை…..

நான் அவனருகே கீழே பார்த்தேன்.ஓ……… என்து வார்த்தைகள் தட்டையானது. குடல் வெளியில தள்ளியபடி ஒரு பிள்ளை அவனது தங்கச்சியாயிருக்கலாம். தலை புரண்டு கிடந்தது நான் அருகே போனேன். குருதி வழிந்த வெறும் தரையில் கிடத்தப்பட்டிருந்தாள். கடைசிக் கணங்களின் புன்னகை அவளது முகத்தில் உறைந்து போய்க்கிடந்தது. என்னை யாரோ நெரிப்பது போலிருந்தது…

நான் அவளுக்கு யாருமில்லை… அண்ணனா தம்பியா மாமனா மச்சானா யாருமில்லை…எனக்கே நெஞ்சடைத்தது. வைத்திசாலையில் மரணத்தின் வாசனை விரவியிருந்தது வார்த்தைகள் தொண்டைக்குள் இருந்தன. நான் அவனை அண்ணை அண்ணை... என்று கூப்பிட நினைத்தேன்.. வாயை பலம் கொண்டசைத்தேன் வெறும் காத்துதான் வந்தது. திடீரென்ற ஒரு முடிவற்ற கிணறொன்றுக்குள் விழுந்து கொண்டே இருப்பது போன்ற அவஸ்தை தரை தட்டாமல் கூகூகூகூகூகூகூகூகூகூகூ என்று விழுந்து கொண்டேயிருந்தேன் அந்தரமாய் இருந்தது. வைத்தியசாலையின் மனிதர்கள் உறைந்து போனார்கள். என்னால் நிற்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு ஒட வேண்டும் போல இருந்தது ஒடினேன். கால்கள் தரையில் பாடவேயில்லை……


எங்கும் ஒரே கூக்குரலாய் இருந்தது. யாரையும் பொருட்படுத்தாது வாகனங்கள் வந்து கொண்டேயிருந்தன… முடிவில்லாமல் போனது.. குவியல் குவியலாக பிணங்கள் கிடத்தப்பட்டிருந்தன சில மணிநேரங்களுக்கு முன்னர் நிறைய நம்பிக்கைகளோடு இருந்தவர்கள் மரணத்தை நினைத்திருக்கவே மாட்டார்கள். ஏன் நினைக்கிறார்கள் யாராவது விடிய எழும்பினவுடன் மரணத்தையா நினைக்கிறார்கள். அவர்களில் யாருக்காவது அன்றைக்கு பிற்நதநாளாய் இருக்கலாம். துயர் நினைவுகளைத் தாங்கியபடி எழுந்திருக்கிற வயதா? எல்லாம் விடலைகள் கனவுகள் கொழுந்து விட்டெரியும் வயசுதானே அவர்களுக்கு...


அவர்கள் ஏன் மரணத்தை நினைக்கப்போகிறார்கள். இப்போது உயிரற்ற உடல்களின் குவியல்களுள் கனவுகளற்று கிடக்கிறார்கள். அவர்களது கனவுகளையும் உயிர்களையும் கிபிர்க்குண்டுகள் கொண்டு போயின…


யார்யாருடைய அம்மாவோ அப்பாவோ அண்ணனோ தம்பியோ இலக்கற்று அந்தப்பிணக்குவியல்களிற்குள் அலைந்தார்கள்.எல்லா உடல்களையும் புரட்டிப்புரட்டிப் பார்த்தார்கள் என்னுடைய பிள்ளையாய் இருக்ககூடாது என்ற நப்பாசையில் ஓடினார்கள் அழுகையும் கூக்குரலும் நிரம்பியிருந்தது அந்த ஆஸ்பத்திரியின் மைதானம்….

இதுவா அதுவா மற்றதாயிருக்குமோ என்று ஒவ்வொரு உடலும் புரட்டிப்பார்க்கப்பட்டது. சிதறிப்போன உடல்களை எங்கிருந்து கண்டு பிடிப்பது. உடல்களே இல்லாத மரணமும் நிகழ்ந்தது. அத்தனையும் பள்ளிக் கூடப்பிள்ளைகள் விடலைகள் எந்தவிதமான அரசியல் விருப்புவெறுப்பும் அற்வர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். தமிழ் பேசினார்கள் என்பதற்காக கொல்லப்பட்டார்கள். வேறென்ன பாவம் செய்தார்கள் மரணம் சுவடுகளற்று நிகழ்த்திப்போயிருந்த கொடுரம் அது.

அதன் பிறகு முல்லைத்தீவில் சில பள்ளிக்கூடங்களில் உயர்தர வகுப்பில் படிக்க ஆட்களே இல்லாமல் போனது. அவர்களது வகுப்பறைச்சுவர்களில் அவர்களது சிரிப்புகள் இன்றைக்கும் எதிரொலிப்பதாய் ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.


மரணத்தின் வாசனை நுகர்ந்த காயப்பட்ட பெண்பிள்ளைகள் விறைத்துப்போயிருந்தார்கள். ஒரு அப்பா கத்தி அழுகிறார் நான் என்ன செய்யப்போறேன் என்ர பிள்ளைக்கு கையில்லாமப்போச்சே.. இன்னொருத்திக்கு இரண்டு கால்களும் இல்லை வயது பதினேழு செத்துப்போயிருக்கலாம்.. என்கிறாள்.... உலகமே இவள் செத்துப்போகத்தான் வேண்டுமா?...........

கீறீச்ச்ச்ச்;…… என்று ஸ்ரெச்சர் தள்ளும் ஒலி வைத்தியசாலையின் சுவர்களில் தெறிக்க. ஐயோ கிபிர் கிபிர் கட்டிலில் இருந்து குதித்து விட முனைகிறாள் ஒருத்தி. வீரிட்லறியபடி கட்டிலில் இருந்து தவறி விழுகிற ஒருத்தியின் காயம் மறுபடியும் இரத்தமாய்ப்போனது. மறுபடியும் சத்திரசிகிச்சை கூடத்துக்கு அழைத்துப்போகிறார்கள்.

மறுபடியும் வேதனை மறுபடியும் அவலம்.. அவர்கள் எப்போது அந்த நினைவுகளைக்கடப்பார்கள். அவர்களது அழுகை இன்றை வரைக்கும் நிற்கவேயில்லை என்றைக்கு நிற்கும்.

த.அகிலன்

3 comments:

ஃபஹீமாஜஹான் said...

//அவர்கள் எப்போது அந்த நினைவுகளைக்கடப்பார்கள். அவர்களது அழுகை இன்றை வரைக்கும் நிற்கவேயில்லை என்றைக்கு நிற்கும்.//

தம்பி அகிலன்,
என்றைக்கும் நிற்காதுதான்.

இத்தனை அவலச் சாவுகளைச் சுமந்தும்
இரத்தத்தால் நனைந்தும்
பூமாதேவி மாத்திரம் நிரந்தர மெளனத்தில்.
அழுகை ஓலங்களையும் துயரப் பெருமூச்சுகளையும் வாங்கிக் கொண்ட நீல விசும்பில் அனைத்தையும் பார்த்தவாறு அந்தச் சூரிய சந்திரரும் நிரந்தர மெளனத்தில்.
சுமக்க முடியாத் துயரங்களைச் சுமந்த மக்களோ..... மண்ணிலே பதுங்கிப் பிசாசுகளை அழைத்துவரும் ஆகாயத்துக்கு அஞ்சியவர்களாக.......

கானா பிரபா said...

இவ்வளவு கொடுமைகளையும் ஒளித்தொகுப்பாக காட்டியும் உலகம் பேசமடந்தையாக இருந்தது. இலங்கை அரசு ஒரு சிலரை மிரட்டி பொய் வாக்குமூலம் பெற்றுக்கொண்டது. இது தான் எம் நிலை.

த.அகிலன் said...

நன்றி கானாபிரபா அண்ணா மற்றம் பஹீமா அக்கா. கொடுமைகள்தான் தமிழர்வாழ்வென்றாகிப்போனது எப்படி அதைகடப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி
அன்புடன்
த.அகிலன்