Wednesday, October 04, 2006

இது கவிதையில்லை...

ஒரு கடிதம்


அக்கா!
பிளாஸ்ரிக் பின்னணியில்
நீ முகம் காட்டும்
புகைப்படங்களில்
உன்
புன்னகை இயல்பற்று
தொங்கிக் கொண்டிருப்பதாய்
படுகிறது எனக்கு.

எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்-
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்து விட்டார்கள்
என்பது

அவர்களை
மன்னித்து விடு
அவர்கள் அறியாதவர்கள்.

அந்த அதிகாரிக்கு
உனது பிரார்த்தனைகளின்
பின்னணியில்
ஒரு தாயின்
இருமல் சத்தம்
நிச்சயமாய் கேட்டிருக்காது

உன்தங்கையின்
கல்யாணம் பற்றி

தம்பியின் வேலைபற்றி

உறவுகளின் தேவைபற்றி

எல்லாவற்றையும் விட
உறவுகளற்று தனிக்கும்
மகளின் முகவரி பற்றி ஏக்கம்
அதுவும்கூட
அவரிற்குத் தெரிந்திருக்காது….

அவர் மறுப்பது
உனது இருப்பை மட்டுமல்ல
அவர்களின் கண்களிற்கு
தெரியாத இச்சிறுதீவில்
உன் மனிதர்களின்
இருப்பையும் மறுக்கிறார்
என்பது
அவருக்கு
தெரியாதிருக்கலாம்….

அக்கா! - இப்போது
நீ- மேல்முறையீட்டாரிடம்
எம் புன்னகைக்காய்
பிரேரிக்கலாம்…..

நான்!
ஏது சொல்ல- அந்த
மனிதர்களிற்கு
புரிய வேண்டுமே!
வேறென்ன
ஓ!
சுஹானா அந்த
சின்ன தேவதைக்கும்
அத்தானுக்கும்- என்
வாழ்த்துக்களைச் சொல்
இப்படிக்குத்
தம்பி.

த.அகிலன்.

ஐரோப்பிய நாடொன்றில் அகதியாகிப்போன ஒரு அக்காவுக்கு எழுதியது இது

3 comments:

Anonymous said...

தம்பி அகிலன்,

//எனக்குத் தெரியும்
உன்
எல்லாப் பிரார்த்தனைகளையும் மீறி
எம்-
எல்லோருடைய
புன்னகைகளையும்
அவர்கள்
சிலுவையில் அறைந்து விட்டார்கள்
என்பது//

வலுவற்ற மனிதராக நாம் இருந்து கொண்டு யாரிடம் போய் முறையிடுவது?

இன்று பேச்சுவார்த்தை தொடங்கப் போகிறது என்ற செய்தி தந்த நிம்மதியை
இனவாதிகளின் ஊர்வலம். ..தவிடுபொடியாக்கிவிட்டது.

கானா பிரபா said...

வலியைக் கோர்த்த வார்த்தைகள். அநாதையாகிப் போனது நம் உரிமைகள்.

த.அகிலன் said...

//வலுவற்ற மனிதராக நாம் இருந்து கொண்டு யாரிடம் போய் முறையிடுவது?//
முறையிட யாருமற்றவர்களாகவும் புகலிடமற்றவர்களாகவும் நாங்கள் மாற்றப்படுகிறோம் அக்கா

//வலியைக் கோர்த்த வார்த்தைகள். அநாதையாகிப் போனது நம் உரிமைகள்.//

அகதியின் வார்த்தைகள் வலிறிறைந்தவைதானே கானாபிரபா அண்ணா

அன்புடன்
த.அகிலன்