Sunday, December 03, 2006

கார்த்திகை தீபமும் கணேசலிங்கம் வாத்தியும்..


"பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒருபாட்டு"

இந்த பாடல்காட்சிதான் எனக்கு நான் இதுவரை பார்த்த தமிழ்சினிமாவில் தீபங்களை வைத்து எடுக்கப்பட்டவற்றில் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்.

எங்கள் சின்னவயதில் விளக்கீடு என்றால் ஒரே கொண்டாடடம் தான் .தீப்பந்தங்களை கொழுத்தி வளவுக்குள் ஆங்காங்கே குத்திவைத்து திரையயைப்போல விரிந்திருக்கும் இருளுக்குள் அது அணையும் வரை பார்த்துக்கொண்டே நிற்போம். சின்னக்கா அண்டைக்கு ஒரு மூண்டு மணிபோல சொல்லுவா தம்பி ஒரே அளவான தடி வெட்டிக்கொண்டுவாங்கோ என்று. எனக்கு ஒரே புழுகமாக இருக்கும். ஒரு பெரிய மனுசனைப்போல கத்தியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன். எல்லாவீடுகளிலும் அப்பான்ர கத்தி என்று ஒர கத்தி இருக்கும். அது தான் வீட்டிலேயே பெரிசு அநேகமாக அப்பாவைத்தவிர அதை எடுப்பதற்கு யாருக்கும் அனுமதிகிடையாது. அதற்கு ஒரு வரலாறு கூட இருக்கும்(கத்திக்கு வரலாறா எண்டு நினைக்கிறியளோ) அப்பா அதை எங்கேயாவது வெளியூர் போய் வரும் போது வாங்கியிருப்பார். அல்லது ரொம்பபிரபலமான கத்தி அடிக்கும் கொல்லரிடம் இருந்து சொல்லி அடித்திருப்பார். அல்லது அப்பப்பா அதை அப்பாவுக்கு கொடுத்திருப்பார். இப்படி கத்தியின் முக்கியத்துவம் வீட்டிலுள்ளவர்களால் சொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்.

அதனால் சிறப்பு அனுமதிகளோடு மட்டும் அதை எடுக்கலாம்.யாராவது எதையாவது வெட்டிக்கொண்டு வா எண்டு என்னிடம் சொன்னால் நான் உடனே அப்பாவின் கத்தியைக்கொண்டு போகட்டா என்றுதான் கேட்பேன். டேய் சும்மா இரு சின்னக் கத்தியை கொண்டுபோ அப்பா அடிப்பார் என்று சின்னக்கா வெருட்டுவா? நானா மசிவன் அப்ப நீங்களே போய் வெட்டுங்கோ என்று சொல்லுவன். கடைசயில் செயம் எனக்குத்தான்.

என்ன ஒன்று அப்பாவின் கத்தியை தூக்கி வெட்டும் போதெல்லாம் ஒரு பெரியமனுசத்தனம் வந்து ஒட்டிக்கொள்வது போல இருக்கும். ம் உள்ளே ஒரு குரல் கர்ஜிக்கும். ஆனா அப்பிடி பட்ட சந்தர்ப்பங்கள் வருவது குறைவு. வீட்டில நண்டுக்கறிகாய்ச்சும் போது முருக்கம்பட்டை வெட்டுதல். அதை விட்டா இப்பிடி கார்த்திகை விளக்கீடு இப்படித்தான் சந்தர்ப்பங்கள் அமையும். நான் அதை மிஸ் பண்ணாம உள்ளே கர்ஜிக்கிற பெரிய மனுசனை யாருக்கும் தெரியாம கூட்டிக்கொண்டு வெட்டுவதற்கு போனேன். (ம் அப்பிடி ஒரு நாள் முருக்கம் பட்டை வெட்ட போகும் போது தான் என்னை பேய் வெருட்டினது அதை பிறகு ஒரு பதிவா போடுறன்)


அப்பாவின் கத்தியை எடுத்துக்கொண்டு ஒரே அளவா தடியை வெட்டி சின்னக்காவிடம் கொடுத்தால் அதில அவா வெள்ளைத்துணியை வடிவாசுத்தி எண்ணைநிரப்பப்பட்ட கிண்ணத்துக்குள் வைப்பா ஒரு ஆறுமணிவரைக்கும் அது எண்ணைக்குள்ள ஊறும். எப்படா ஆறு மணியாகும் எண்டிருக்கும் எங்களுக்கு. அண்டைக்கெண்டு சூரியன் மெதுவாப்போகும். ஒரு மாதிரி ஆறுமணி ஆகினோன்ன அம்மா படவிளக்கை கொழுத்திப்போட்டு வந்து பந்தங்களை கொழுத்துவா. ஆ நான் ஒண்டு சொல்ல மறந்து போட்டன் இந்த பந்தம் கொழுத்துறது வளவுக்குள்ள தான் கேற்றடிக்கு ஸ்பெசலாக வாழைத்தண்டை வடிவாக வெட்டி அதை கிடங்கு வெட்டி கேற்றுக்கு சரியா நடுவில நட்டிருக்கும் அதுக்கு மேல ஒரு சிட்டியை வைச்சு அதைத்தான் கொழுத்துறது. அம்மா எல்லா பந்தங்களையும் கொழுத்துவா கிணத்தடிக்கு ஒண்டு வீட்டு வாசலுக்கு ஒண்டு வீட்டுகோடிக்கை ஒண்டு கழிவறைக்கு ஒண்டு. பிறகு தோட்டத்துக்க ஒண்டு என்று எல்லா இடத்துக்கும் எண்ணி பந்தங்களைக்கொழுத்துவா நாங்கள் பந்தங்களை யார் கொண்டு போய் நடுகிறது என்று சண்டை பிடிப்பம் தங்கச்சி ரொம்ப சின்னப்பிள்ளை அதால அவளுக்கு இதில போட்டியிடும் தகுதியே கிடையாது. இதில மட்டும் தான் சாப்பாட்டு சாமானுகள் எண்டால் எல்லாரும் அவளுக்குத்தான் கூட குடுப்பினம். நாங்கள் அந்த ஆத்திரத்தை தீர்க்கிற மாதிரி அம்மா அவளிட்ட குடுக்காம இருக்கேக்க நக்கலா சிரிப்பம். சின்னக்கா போட்டியே போடமாட்டா. போட்டி நானும் தம்பியும்தான் கடைசியா அம்மா இரண்டு பேருக்கும் சரியா பிரிச்சு தருவா? நாங்கள் ஒவ்வொரு இடமா ஓடி ஓடி குத்துவம் ஆனா தோட்டத்துக்க குத்தேக்க மட்டும் சின்னக்காவை கூப்பிடுவம் தோட்டத்தக்க ஏதாவது இருந்தா எண்ட பயம்தான். சின்னக்காவோட போய் குத்தினாப்பிறகு யார் குத்தின பந்தம் கனநேரம் எரியது எண்டு பார்ப்பம்.சிலவேளை என்ரை எரியும் சிலவேளை தம்பியின்ர எரியும்(அதெல்லாம் சகஜமப்பா) அப்பிடியே அணையும் வரைக்கும் பார்த்தக்கொண்டு நிப்பம்.

ஒழுங்கையில் எல்லாருமே கேற்றடிக்கு வாழைத்தண்டில தான் விளக்கு கொழுத்தியிருப்பினம் அது பார்க்க வடிவாஇருக்கும். நாங்கள் கேற்றடிக்கு வந்து பார்த்துக்கொண்டு நிப்பம். இப்ப நான் சொன்னது ஒரு பத்து பன்னிரண்டு வயது அனுபவங்கள்.

நான் அப்பிடியே வளர்ந்து ஒரு 18வயதான உடனே வீட்ட கேப்பா அம்மா எங்கடா போறய்? வெளியில போறன் எண்டு மட்டும் சொல்லுவன். அவ்வளவுதான் எங்கே? ஏது? ஏன்? என்ற கேள்விகள் வராது வந்தாலும் பதில் சொல்ல நான் அங்க நிற்கமாட்டன். பிறகு பந்தத்துக்கு தடி வெட்ட எங்களுக்கு எங்க நேரம் பந்தா பண்ணவே நேரம் பத்தாம கிடக்கு அதுக்குள்ள பந்தமாம் பந்தம் விளக்கீடும் மண்ணாங்கட்டியும் எண்டு மனம் மாறியிருந்தது. அப்பிடியே சைக்கிளை எடுத்துக்கொண்டு விளக்கீடு அண்டைக்கு வீதிகளால் வலம் வருவோம். அப்பிடியே வகுப்பு பெட்டையளின்ர வீட்டு ஒழுங்கையளுக்குள்ளால சும்மா தெயியாதே ஆ ம் பெல்லை அடித்தபடி போவோம் அவளுகளும் கேற்றடியில் வந்து நிப்பாளவை. அப்பிடி யாரும் கேற்றடியில் நிண்டா காணுமே அப்பிடியே சைக்கிளை ஒரு பஜீரோவா நினைச்சு சும்மா ஸ்ரைலா ஆ அப்பிடியே ஒரு மன்மதகுஞ்செண்ட நினைப்பில ஆ(வெக்கமாக்கிடக்கு) அப்பிடி அவளுகளின்ற கேற்டியில் யாரும் கிடையாது எண்டு தெரிஞ்சா பிறகென்ன அப்பிடியே சைக்கிளை ஓடீயபடியே காலால வாழைமரத்தீபத்தை ஒரு தட்டு.பொத்தெண்டு விழும் கொல் என்று சிரிப்பு. பெரும்பாலும் எதிர்ப்புக்கள் வராது சிலவேளை டேய் யார்ரா எண்டு சவுண்டு கிவுண்டு வரும். அப்ப உழக்குவம் பாருங்க ஒரு உழக்கு அதான் உழக்கு.சைக்கிள் சும்மா பறக்கும்.

எல்லாவற்றையும் விட விளக்கீடு அன்று மிகமுக்கியமான ஒரு பணியிருக்கும் எங்களுக்கு அது கணக்குவாத்தி கணேசலிங்கத்தின் கேற்றடி வாழையைத்தட்டுறது. எங்களை வகுப்பில படுத்துற பாட்டுக்கு நேரடியாக காட்ட முடியாத கோபத்தை அவர் வீட்டு வாழையில் காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிடுவமா என்ன? அப்பியே அவற்றவீட்டு பக்கமாப்போய் வாழையைத்தட்டி விட்டு அதோட நிக்காம குரலை மாத்தி டேய் மொட்டை கணேசலிங்கம் எண்டு ஹோ எண்டு கத்திவிட்டு ஓடிவருவம். அதெல்லாம் ஒரு சூப்பர் அனுபவங்கள் இப்படி வயது ஏற ஏற கார்த்திகை விளக்கீட்டில் கலந்துகொள்கிற அனுபவங்கள கலகலப்பாய் மாறினாலும் மனம் நெகிழ கலந்து கொள்கிற இன்னனொரு விளக்கீடு ஈழத்தழிழர்களுக்கு உண்டு அது கார்த்திகை இருபத்தியேழு அதில் எல்லா குறும்புகளையும் விட்டு விட்டு வீரச்சாவடைந்த கணேசலிங்கம் வாத்தியின் மூத்த பெடியனின் கல்லறையில் எரிகிற தீபம் அணையாமல் காவல்நிற்போம் நாங்கள்.

த.அகிலன்

8 comments:

கானா பிரபா said...

விளக்கீட்டைப்பற்றி அந்தமாதிரிச் சொல்லீட்டிங்கள், நல்ல நினைவு மீட்டல்

சோமி said...

வணக்கம்,
தொடர்பு கொள்ளுவதாக கூறியிருந்தீர்கள் பின்னர் எந்த தொடர்பும் இல்லை.

இன்னும் நிறைய எழுத வேண்டும் நேற்றுவரை போர்ப் பூமியில் இருந்தவரின் வார்த்தைகளின் உண்மையை அப்போதுதான் பலர் புரிந்து கொள்ள முடியும்.

theevu said...

நல்லதோர் பதிவு.காலங்கள் மாறினாலும் இன்னும் விளக்கீடு கலாச்சாரம் அப்படியே இருப்பதில் மகிழ்ச்சியே..

✪சிந்தாநதி said...

அகிலன்
நல்ல அனுபவங்கள்.
இங்கேயும் கார்த்திகை தீபம் தான்.
என்னுடைய அனுபவ குறிப்பை இங்கே
http://valai.blogspirit.com/archive/2006/12/03/கார்த்திகை-தீபம்.html

✪சிந்தாநதி said...

அகிலன்
நல்லநினைவுகளின் பதிவு
இங்கேயும் கார்த்திகை தீபம் தான்.
என் அனுபவங்கள் சில
http://valai.blogspirit.com/archive/2006/12/03/கார்த்திகை-தீபம்.html

Anonymous said...

இதப்பார்த்தீரா அகிலன்?
http://jataayu.blogspot.com/2006/12/blog-post.html
தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பகுதிகள் போலவே, இலங்கை ஈழத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளைப்பற்றி சகோதரர் அகிலன் சுவையாக எழுதியுள்ளார்.http://agiilankanavu.blogspot.com/2006/12/blog-post.html. இதிலே இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்."இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்."

தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான், அதனாலேயே இந்தப் பதிவுக்கு அப்படியே தலைப்பிட்டேன். சென்னை திருமயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் வந்தபோது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன்வைத்துசிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –

“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”

இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.

ஜடாயு said...

நல்ல பதிவு அகிலன் அவர்களே.

// இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் காhத்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லi ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர். //

தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான். இது பற்றி என் பதிவில் எழுதியிருக்கிறேன் :
http://jataayu.blogspot.com/2006/12/blog-post.html

உங்கள் பதிவில் இழையோடும் நகைச்சுவையை ரசிக்கையில், கடைசியில் எழுதிருப்பதைப் பார்க்கும்போது நெஞ்சு கனக்கிறது. அசுர சக்திகள் ஒழிந்து அமைதி நிலவ கார்த்திகைத் திருநாளில் பிரார்த்திக்கிறேன்.

த.அகிலன் said...

இதில் பின்னூட்ட மிட்ட அனைவருக்கும் எனது நன்றிகள்.
கானாபிரபா அண்ணா கனநாளைக்கு பிறகு வந்திருக்கிறியள்.

//சோமி said...
வணக்கம்,
தொடர்பு கொள்ளுவதாக கூறியிருந்தீர்கள் பின்னர் எந்த தொடர்பும் இல்லை//
நீங்கள் இருக்கும் இடத்திற்கு என்னால் வரமுடியவில்லை சோமி கட்டாயம் இன்னும் ஒரு வாரத்துக்குள் வருவேன் உங்கள் உதவி எனக்கு தேவை.

அனானி சார் நல்ல அருமையான பின்னூட்டம் நன்றி.

அன்புடன்
த.அகிலன்