Tuesday, October 17, 2006

அபிராமியின் அட்டிகை என்னாச்சு?

நண்பாகளே அபிராமியின் அட்டிகைக்கு என்னாச்சு விடுவாரா மாயாவி?கும் கும் என்று ஒரு கும்மாங்குத்து தலைப்பைத்தான் இந்த பதிவுக்க முதல் இட்டிருந்தேன் ஆனால் புளொக்கர் அந்த பதிவை தின்று தீர்த்துவிட இப்போது மறுபடியும் பதிய வேண்டியதாகிவிட்டது.மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அன்புடன்
த.அகிலன்


நிலாவுல ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்கிறாள் என்று நம்பிக்கொண்டிருந்தேன். எவ்வளவு தான் வடிவாக பார்த்தாலும் தடியுடன் ஒரு பாட்டியின் முகம் எனக்கு நிலவில் தெரிந்து கொண்டேதான் இருந்தது. அம்மா என்னை மடியில் இருத்தி பாட்டி வடை சுட்ட கதைதான் சொல்லுவாள் நீங்கள் எல்லாரும் உங்கள் வாழ்வில் முதல் கேட்ட கதை என்ன அநேகமாக பாட்டி வடை சுட்ட கதையாகத்தான் இருக்கும். பாட்டி வடை சுட்டுக்கொண்டிருக்க காகம் தூக்கிக்கொண்டு போக….நரி அதை கேட்க காக்கா பாட்டுப்பாட என்று காகம் இழந்து பொன வடைக்காக கவலைப்படுவதில் தான் கதைகளுடனான எனது பரிச்சயம் தொடங்குகிறது.

கதைகள் எப்போதுமே மனதை வசீகரிப்பவை என்னை வேறு ஓர் உலகத்துக்குள் புதிய மாயாஜால வித்தைகளுக்குள்.பிரமாண்ட மான ஏழு லோகங்களுக்குள் நகர்ந்து கொண்டேயிருக்கும். அரக்கர்கள் அரசர்கள் கடவுள்கள் எல்லாரும் எட்டுக்கைகளுடனும் 10 தலைகளுடனும் விதவிதமாக உலாவினார்கள். எப்போதும் எனக்கு கதை சொன்னவர்கள் பெரிய ஒலி களை எழுபப்பிய படி சொல்வார்கள். கதைகள் ஒலிவடிவில் இருந்த காலம் அது. நான் அது வெல்லாம் நிஜமென்று நம்பிக்கிடந்தேன். நானே அரசன் நானே மந்திரி என்று இறுமாந்த கனவுகள் அதிகமாயிருந்த காலம் அது.

கதைகள் என்னை கவரத்தொடங்கியது அப்போது முதல்தான்.பிறகு புத்தகங்கள் வாசிக்கத்தொடங்கிய பிறகு கதைகளின் உலகம் முற்றிலும் வரிவடிவமாகியது. அம்புலிமாமா, பாலமித்ரா,பூந்தளிர்,ரத்னபாலா,பார்வதி சித்திரக்கதைகள்,ஆ.. முக்கியமாக ராணிகாமிக்ஸ் இப்படி அம்மா எனக்கு எல்லாப்புத்தகத்தையும் வாங்கித்தருவார்.


அம்புலிமாமா எப்போதும் ஒரு புராண இதிகாச தொடரைக்கொண்டிருக்கும். நான் முதல் முதலாகப் படித்த அம்புலிமாமா புத்கத்தில் சீதை அசோக வனத்தில் மிகவும் வருந்திக்கொண்டிருந்தாள் . அப்போது ராவணன் அசோகவனத்தில் இருக்கும் சீதையிடம் வந்துபேசுவான்.அதை அனுமன் மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பான். அப்போதெல்லாம் நான் அனுமன் கட்சி சாத்தியம் அசாத்தியம் என்பதை பற்றியெல்லாம் நான் சிந்தித்ததே இல்லை இராவணன் சபையிலே அனுமன் வாலை ஆசனமாக்கி அமர்ந்த போது குதூகலித்தேன். அம்புலிமாமாவில் இன்னொன்று தொடர்ச்சியாக வரும் விக்கிரமாதித்தன் கதை வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டுவிட அடுத்த தடவையாவது அது அவன் தோளிலே போய்விடும் என்று நம்பினேன். இன்றைவரைக்கும் அது அவனோடு போகவில்லை.

பாலமித்ரா அம்புலிமாமாவைப்போல ஒரு பத்திரிகை தான் ஆனால் தொடராக ஒரு மாயாஜால தொடர் இருக்கும்.இளவரசர்கள் மந்திரவாதிகளின் சதிகளை முறியடித்து கிளிகளாக மாறிய இளவரசிகளை சுயஉருவம் பெறச்செய்து கல்யாணம் கட்டிக்கொள்வார்கள் எனக்கு ஒரு கேள்வி இருந்தது ஏன் இளவரசிகளின் அண்ணன் தம்பிகள் வந்து மீட்கக் கூடாது என்று யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்.

எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் ராணி காமிக்ஸ் தான். அது குறித்த ஆவல் எப்போதும் தீராததாகவே இருக்கிறது.ஒரு வேளை அதில் கீறப்பட்ட சித்திரங்களும் கதாநாயகர்களின் சாகசங்களும் காரணமாக இருக்கலாம். அப்போதெல்லாம் அடுத்த காமிக்ஸ்சுகாகக் காத்திருந்திருக்கிறேன் புத்தகக் கடைக்காரரிடம் ராணிகாமிக்ஸ் என்று கேட்காமல் அடுத்த புத்தகத்தின் பெயரைச்சொல்லியே கேட்பேன்.


(உதாரணமாக கப்பல் வேட்டை, மாயக்காரி,தங்கக்கடற்கரை இப்படி இதற்கும் அவற்றின் பெயர்கள்) கடைசிப் பக்கத்தில் அடுத்த காமிக்ஸ் பற்றிய ஒரு விளம்பரம் இருக்கும் இப்படி
படிக்கத்தவறாதீர்கள்
அடுத்தகாமிக்ஸ்
காட்டுக்குள் புகுந்தது கொள்ளையர் கும்பல்
விடுவாரா மாயாவி கும் கும் ..




இப்படித்தான் இருக்கும் அந்த விளம்பரம். மாயாவி மட்டுமல்ல பிளாஸ்கார்டன் ,ஜேம்ஸ்பாண்ட, போன்றவர்களின் சாகசங்களிற்கும் குறைவில்லைத்தான் ஆனாலும் முகமூடி வீரர் மாயாவிதான் எப்போதும் விரும்பப்பட்டார். காட்டுக்குள் இருந்து கொண்டே டயானா என்கிற வெள்ளைக்காரியை கட்டியதற்காக அவருக்கு ஒரு பாராட்டு.

(முடிந்தால் மாயாவியைப்பற்றி ஒரு தனிப்பதிவு போடுகிறேன்)

கோகுலம் பிற்காலத்தில் தான் வந்து இந்தப்பட்டியலில் சேர்ந்து கொண்டது.ஆனாலும் கோகுலத்துக்குள் இலவச இணைப்பா வரும் லேபிள்கள். கலண்டர்கள், போன்றவை எம்மை வெகுவாக கவர்ந்தன. கோகுலத்தில் வரும் தொடர்கதைககள் சிறுவர்களின் சாகசங்களைப்பற்றியிருக்கும். நூறு ரூபாய் ரகசியம் என்;று ஒரு தொடர்கதை வந்தது.நான் மிகவும் ரசித்த கதை அது. பிறகு ஒரு கதை வந்தது அபிராமியின் அட்டிகை என்ற ஆனால் அந்தக்கதை யை நான் படித்து முடிக்குமன்பே ஈழத்தின் போர்சூழல் மெலும் விரிவடைந்து பாதைகள் மூடப்பட்டு அந்தப்புத்தகங்கள் வருவதே நின்று விட்டது.எனக்கு மிகவும் வருத்தம்தான் என்ன செய்ய எனக்கு அரசியல் புரியாத காலத்திலேயே அதன் கொடும் கரங்கள் என் ஆசைகளைத் தின்னத் தொடங்கிவிட்டன.


இப்போது எனது வாசிப்பின் தளங்கள் காலச்சுவடு உயிர்மை , ஆனந்தவிகடன், குமுதம், குங்குமம் என்று பெஸ்டு கண்ணா பெஸ்ட ரேஞ்சுக்கு மாறிவிட்டாலும்.இன்னமும் என்க்கு அபிராமியின் அட்டிகை தொடர்கதை முடியும் வரை வாசிக்க முடியவில்லை என்கிற பால்யகால ஏக்கம் உண்டு. யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் அபிராமியின் அட்டிகைக்கு என்ன நடந்தது?

ரொம்ப சின்னபுள்ள தனமா இருக்கோ
அன்புடன்
த.அகிலன்

12 comments:

த.அகிலன் said...

மன்னிக்கவும் நண்பர்களே முதலில் நீளமான தலைப்பு காரணமாக பின்னூட்ட மிட முடியாதிருந்ததாக நண்பர் செந்தில் குமரன் சொன்னதை அடுத்து தலைப்பு சிறிதாக்கப்பட்டிருக்கிறது அதற்காக அவருக்கு என் நன்றிகள்
அன்புடன்
த.அகிலன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

உங்களைப் போலவே நானும் நானும் புத்தகம் வாசிப்பதை காமிக்ஸ் புத்தகங்களில் இருந்தே தான் ஆரம்பித்தேன். ராணி காமிக்ஸ், கோகுலம், பாலமித்ரா, அம்புலிமாமா என்று தான் ஆரம்பித்தது. அதில் இருந்து அப்படியே க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று வந்து இன்று எதை எதையோ படித்தாகி விட்டது.

பழைய நினைவுகளை அசை போட வைத்து விட்டது உங்கள் பதிவு.

த.அகிலன் said...

எனக்கு அறிவித்து பிறகும் முயற்சித்து பின்னூட்டமும் இட்ட நண்பர் செந்தில் குமரனுக்கும் தனிமடலில் அபிராமியின் அட்டிகை என்னாச்சு என்று சொல்லிய ரேகுப்தி நிவேதாவுக்கும் என் நன்றிகள்

பொன்ஸ்~~Poorna said...

நல்ல பதிவு அகிலன்..

சிறுவர் மலர், கோகுலம், மாயாவி, மாடஸ்டி ப்ளேசி எல்லாம் நானும் படித்திருக்கிறேன்..

நூறு ரூபாய் ரகசியம் படித்த நினைவிருக்கிறது.. இந்த அபிராமியின் அட்டிகை கூட படித்திருக்கிறேன் என்று நினைவு.. ஆனால், இப்போ மறந்து போச்சு! என்ன ஆச்சுன்னு எழுதக் கூடாதா? :)

ரொம்ப பெரிய தலைப்பிட்டால் ப்ளாக்கர் மாயாவிக்குப் பிடிக்காது ;)

த.அகிலன் said...

பொன்ஸ் said...
//என்ன ஆச்சுன்னு எழுதக் கூடாதா? :)//

தெரிஞ்சா எழுதியிருப்பமுல்...


//ரொம்ப பெரிய தலைப்பிட்டால் ப்ளாக்கர் மாயாவிக்குப் பிடிக்காது ;) //
அது இப்ப தானே தெரியுது சொன்னதற்கு நன்றி பொன்ஸ் சார்

அன்புடன்
த.அகிலன்

கானா பிரபா said...

வணக்கம் அகிலன்

அம்புலிமாமா, சித்திரக்கதைகள் படித்த காலங்களைப் பற்றிப் பேசப்போனால் பக்கம் பக்கமாகஎழுதவேண்டும், இன்னொரு சந்தர்ப்பத்தில் வைத்துக்கொள்கின்றேன்:-)
உங்கள் பதிவு வழக்கம் போல் நன்றி, நீளமான தலைப்பு வைச்சு நான் பட்டது போதாதா?

பொன்ஸ்~~Poorna said...

சார் எல்லாம் வேண்டாம் அகிலன் :) பொன்ஸுன்னே சொல்லுங்க.. (வேணும்னா மேடம் போட்டுக்கலாம், சார் கண்டிப்பா வராது ;) )

Anonymous said...

//ஒரு கதை வந்தது அபிராமியின் அட்டிகை என்ற ஆனால் அந்தக்கதை யை நான் படித்து முடிக்குமன்பே ஈழத்தின் போர்சூழல் மெலும் விரிவடைந்து பாதைகள் மூடப்பட்டு அந்தப்புத்தகங்கள் வருவதே நின்று விட்டது.எனக்கு மிகவும் வருத்தம்தான் என்ன செய்ய எனக்கு அரசியல் புரியாத காலத்திலேயே அதன் கொடும் கரங்கள் என் ஆசைகளைத் தின்னத் தொடங்கிவிட்டன.//

என் உணர்வு.!!!!!

நானும் அறிய ஆவலாய்யுள்ளென்

லங்காபுரி
அனாமி
திலகன்

த.அகிலன் said...

//பொன்ஸ் said...
சார் எல்லாம் வேண்டாம் அகிலன் :) பொன்ஸுன்னே சொல்லுங்க.. (வேணும்னா மேடம் போட்டுக்கலாம், சார் கண்டிப்பா வராது ;) )//

ரொம்ப ரொம்ப சாரி பொன்ஸ்.

நன்றி கானா பிரபா அண்ணா
அன்புடன்
த.அகிலன்

Anonymous said...

நல்ல பதிவு அகிலன்

Rasikai said...

சின்னனில உங்களைப்போலவே ராணி காமிக்ஸ், கோகுலம், பாலமித்ரா, அம்புலிமாமா என்று தான் புத்தகம் வாசிக்க ஆரம்பித்தது. அதுலயும் விரும்பிப்படித்தது முகமூடி வீரர் மாயாவியின் கதைகள் தான். அதைப்பற்றி எழுத வெளிக்கிட்டால் விடிஞ்சு போம் பிறகு பார்ப்பம். உங்கட பதிவு நல்லா இருக்கு.

சினேகிதி said...

தங்கக்கடற்கரை நானும் வாசிச்சிருக்கிறன்.டயானா அவைன்ர பிள்ளைகள் அந்த மரவீடு மற்றது அந்த காட்டில இருக்கிற ஒரு பெடியன்(பெயர் மறந்திட்டன்) மற்றது கோகுலத்தில வாசிச்சதில ஞாபகம் இருக்கிறது "மரகதச்சிலை" ஆதித்தன்!

அபிராமின்ர அட்டிகைக்கு என்ன ஆச்சு என்று கண்டுபிடிச்சாச்சா அகிலனண்ணா:-)