Tuesday, October 10, 2006

வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு….(தேன்கூடு போட்டிக்காக)


“வண்ணத்தப்பூச்சி வயசென்ன ஆச்சி
உள்ளுரு முழுக்க உன்னைப்பத்தி பேச்சு”
இந்தப்பாடல் பிரபலமாயிருந்த காலம் அப்போதெல்லாம் சின்னக்கா இந்தப்பாட்டையே முணுமுணுத்துக்கொண்டிருப்பா இல்லாட்டி
“நானொரு சிந்து காவடிச்சிந்து”
இது இரண்டும் தான் அவாவுக்குப்பிடிச்ச பாட்டு இதைப்பாடிக்கொண்டே திரிவா நாங்களும் பின்னால திரிவோம்.

அப்பல்லாம் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை சின்னக்கா எப்பவும் ஒரு கை விளக்குமாறு கையில வைச்சுக்கொள்ளுவா. நாங்கள் எல்லாரும் சந்தோசமா அவவுக்கு பின்னாலதிரிவோம். புல்லு பத்தை எண்டு ஒரு வண்ணாத்திப்பூச்சியையும் விடாமல் அடிப்பம் அடிச்சு அடிச்சு மஞ்சள்கலர், வெள்ளைப்புள்ளிபோட்ட கறுத்தக்கலர், தாச்சிச்சட்டிக்கலர், கோப்பிக்கலர், எண்டு விதவிதமா கலர்கலரா வண்ணத்திகளைச் சேர்ப்பம் சின்னக்கா அடிச்சு அடிச்சு எங்களிட்ட தருவா. அடிச்சு எண்டா உயிரைக்கொல்லுற இல்ல அவ வண்ணத்துப்பூச்சி அடிக்கிற ஸ்ரைலே தனி வண்ணத்துப்பூச்சிக்கு தெரியாம நைஸ் நைஸ்சா அதுக்குப்பின்னால போய் சட் என்ற ஒரே அடி. வண்ணத்துப் ப+ச்சி புல்லுகளுக்கிடையில் விழும் நாங்கள் பாய்ஞ்சு எடுப்பம்.



எப்பவும் எனக்கு மஞ்சள் கலர் வண்ணத்துப்பூச்சி தான் விருப்பம் அதால மஞ்சள் வண்ணத்துப்பூச்சியை சின்னக்கா அடிக்குமட்டும் நான் பாத்துக்கொண்டிருப்பன். ஆனா வண்ணத்துப்ப+ச்சி அடிக்கிறது அவ்வளவு சுகமில்லை சின்னக்கா நைஸ் நைஸா கிட்டப் போய் அடிக்;க விளக்குமாறு ஓங்க அது திடீரென்று பறந்து போய் மற்றப்புல்லில இருக்கும். புல்லுகள் எல்லாம் மஞ்சள் கலரில பூப்பூத்து வடிவா இருக்கும் அதில வண்ணத்தப்பூச்சி இருந்தா இன்னும் வடிவா இருக்கும்.

நாங்கள் வண்ணத்துப்பூச்சிகளை அதுகளின்ர காலில பிடிப்பம் அதுகள் துடிக்குங்கள் எங்களுக்குச்சிரிப்பு வரும். எங்கட கையில வண்ணத்துப்பூச்சிகளின்ர நிறம் பிரளும் நாங்கள் அதுகளை கொஞ்ச நேரம் வைச்சு பாப்பம் பிறகு விடுவம் ஆனா அப்பவே வண்ணத்துப்பூச்சி அரைவாசி செத்திருக்கும்.

ஒருநாள் வண்ணத்துப்பூச்சிகள் திடீரென்று அலையலையா கிளம்பி பின்வளவுல இருந்து கேற்றடிப்பக்கமா போகும். நாங்க அப்பிடியே உறைஞ்சு போய் பாத்துக்கொண்டு நிப்பம் பாக்க ஆசையா கிடக்கும் (அவ்வளவு வண்ணத்திகளையும் பிடிச்சா என்ணண்டு) அப்ப பெரியம்மாட்ட கேட்டன் “வண்ணத்துப்பூச்சியெல்லாம் எங்க போகுது” பெரியம்மா தான் சொன்னவா அதெல்லாம் காசிக்குப்போகுது எண்டு. வண்ணத்துப்பூச்சியெல்லாம் காசிக்குப்போனாப்பிறகு எங்களுக்குப் பிடிக்க வண்ணத்தி இருக்கேல்ல.

நாங்க விடுவமா பிறகு தும்பி பிடிச்சம் வண்ணத்துப்பூச்சியை விட தும்பி பிடிக்கிறது பயங்கர கஸ்டம் ஆனா பிடிச்சா சந்தோசம்தான். தும்பி ஹெலிஹொப்பரர் மாதிரி இருக்கும்.


அப்போதெல்லாம் ஹெலி எங்களின்ர வீட்டுக்கு மேலால எல்லாம் பறந்து போகும் நாங்கள் முத்தத்தில் நிண்டு பாப்பம் உள்ளுக்கு ஆக்கள் இருக்கிறது தெரியுதா எண்டு. சில நாட்கள் உள்ளுக்குள்ள இருக்கிற ஆட்களை கண்டுமிருக்கிறம்.

நாங்கள் ஹெலி மாதிரி இருக்கிற தம்பியின்ர கால்ல நூலைக்கட்டுவம் அது மேலே பறக்கும் எங்கட கையில இருக்கிற நூல் முடியுமட்டும் பறப்பார் பிறகு அப்பிடியே வட்டமடிப்பார். நாங்கள் சிரித்து சிரித்து விளையாடுவம். எங்களுக்கு திருப்தி யான பிறகுதான் தும்பிக்கு விடுதலை. தும்பி அப்பாடா என்று பறந்து போகும்.

மெல்லிய நூலால் தும்பியைக்கட்டி விளையாடிய அந்தப்பொழுதில் எனக்கு புரிந்ததே இல்லை. தும்பியின் வேதனை விடுதலைக்காக தும்பி எவ்வளவு தவித்திருக்கும் என்று புரியவேயில்லை.

பிறகொரு நாள் திடீரென்று எல்லாம் புரிந்தது. தும்பியைப்போல் இருந்த ஹெலி ஊருக்கு மேலால வந்தது அம்மா எங்களை இழுததுக்கொண்டு வீட்டுக்குள் ஓடினா. அம்மா ஏன் இப்படி செய்யிறா எண்டு விளங்காமலிருந்தம். நாங்கள் மேசைக்கு கீழை பதுங்கி இருக்கிறம் ஹெலி திடீரென்று சுடத்தொடங்கியது விட்டு பிளாற்றுக்கு மேல சட்சடவென்று சத்தம் கேட்டது இரண்டு மூண்டு ஓடுகளும் உடைஞ்சு விழுந்தது. நாங்கள் மேசைக்கு அடியில் ஒடுங்கிப்போயிருந்தம். நான் அப்ப சரியா நம்பினன் தும்பியைப்பிடிச்ச கோபத்திலதான் எங்கட வீட்டுக்கு ஹெலி சுடுகுதெண்டு. பிறகு வளர வளர அதுவும் புரிஞ்சுது.

தும்பியைக்கட்டி விளையாடேக்க எனக்குப்புரியாத விடுதலையின் ருசி எனக்கு இப்ப புரிஞ்சுது. விடுதலை எப்போதும் ஒரு அவாவாகவே இருந்தது. பிறகு நாங்கள் தும்பிகளைப்போல் நடத்தப்பட்டோம். ஊருக்குள் திரியவே வரையறைகள் இருந்தன. எத்தனை மணிக்குத்தான் வீட்டுக்கு வெளியால வரலாம் எண்டு இருந்தது. திடீர் திடீரென்று ராணுவம் எங்கட வீடுகளுக்குள்ள வரும் துவக்குகளோட. (அப்போதெல்லாம் எனக்கு விளக்குமாறோட நிக்கிற)
எங்கட பழைய ஞாபகம் வருவது தவிர்க்கமுடிhயமலிருந்தது.

விடுதலை வாழ்வின் தேவை மிக அவசியமான சாமான் என எனக்குப்பட்டது . சின்ன வயதில் என்னிடம் சிறைப்பட்ட தும்பிக்காய் மிகவும் வருத்தமெல்லாம் பட்டேன் (நம்புங்கள்). வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் விடுதலை தேவை விடுதலைதான் வாழ்வை பூரணமாக்குகிறது. பூக்களுக்கு மொட்டுகளிடமிருந்து,மழைக்கு மேகங்களிடமிருந்து இப்படி எல்லாவற்றிற்கும் விடுதலைதான் மூச்சாயிருக்கிறது ஒரு குழந்தையின் புன்னகையைப்போல விடுதலை மிக அழகானது.

நாம் தும்பியை நூலால் கட்டி விளையாடுகையில் புரியாத அது எனக்கு பிறகு புரிந்தது. நானும் தும்பியைப்போலான போது புரிந்தது. யார் யாரோ கயிறு கட்டி விளையாடும் பொம்மைகளாய் எம்மை உணர்ந்த போது விடுதலையின் ருசி உணர்ந்தேன்.

ஊர்நதியின் மூலங்களை விட்டு, ஊர்க்குருவியின் பாடலை விட்டு, ஊர் முழுதும் நிறைந்து கிடக்கும் எங்கள் வியர்வைகளை விட்டு, சுவடுகள் தொலையத்தொலைய துரத்தப்பட்போது விடுதலை ஒரு புன்னகையைப்போல இயல்பாய் இருக்க முடியாது என நம்பினேன். ஊர் நிலம் நிச்சயமாக மறுபடி பாhக்கும் போது அம்மாவின மடியைப்போலிருக்காது என்றும் நம்பத்தொடங்கினேன். காலம் எனக்கு கனவுகளைத் தந்தது. கனவுகள் கவிதைகளைத் தந்தன. கவிதைகள் விடுதலையைப்பாடின. விடுதலையை ஊர் கேட்டது. ஒர் நதியைப்போல ஒரு புன்னகையைப்போல , ஓர்பூவின் மலர்தலைப்போல , நான் இழந்துபோன ஊரின் விடுதலையும் கனவுகளும் மறுபடியும் வரக்காத்திருக்கிறேன்.

த.அகிலன்

10 comments:

murali said...

பட்டாம் பூச்சியை அடித்து புதைத்து வைத்தால், மறு நாள் பணமாக மாறிவிடும் என்று சக நண்பர்கள் கூறியதை நம்பி, அதேபோல் செய்து, மறு நாள் அவை எறும்பால் இழுத்துச் செல்லப் படுவதைப் பார்த்து மிக வருந்திய ஞாபகம் வருகிறது.சிறு வயது நிகழ்வுகளை ஞாபகப் படுத்தியதற்கு நன்றி.

நிச்சயமாய் விடுதலையை வென்றெடுப்பீர்கள் அகிலன். வாழ்த்துக்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

த.அகிலன் said...

//நிச்சயமாய் விடுதலையை வென்றெடுப்பீர்கள் அகிலன். வாழ்த்துக்கள்.//
நன்றி முரளி தங்கள வருகைக்கும் வாழ்த்துக்கும்
அன்புடன்
த.அகிலன்

கானா பிரபா said...

வணக்கம் அகிலன்

நம் தாயக மணம் கமழ, சுதந்திரத்தை ஒப்புவமையோடு நீங்கள் தந்த விதமே தனியழகு, வாழ்த்துக்கள்.

த.அகிலன் said...

நன்றி கானாபிரபா அண்ணா தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.ஊர்மணம்தான் உங்களுக்கு பிடித்திருக்கிறது போல
அன்புடன்
த.அகிலன்

Kumari said...

அருமையான பதிவு. உங்கள் ஏக்கமும் வலியும், ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்குது.
வெற்றி பெற(போட்டியில் மட்டுமல்ல) வாழ்த்துக்கள்.

Anonymous said...

நன்றாக உள்ளது.
தும்பிகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் பற்றி என்னிடமும் இதுபோன்ற கதை உள்ளது.

தலை தடுமாறிய வாழ்வு மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.மீண்டு வருவதற்கான முயற்சியில்
இழந்தவைகள் தான் அதிகம்.பெற்றவையோ ஆறாத்துயரமும் அவலமும் வாழ்வின் எல்லை வரையிலான வலிகளும்

த.அகிலன் said...

Kumari said...
வெற்றி பெற(போட்டியில் மட்டுமல்ல) வாழ்த்துக்கள்

நன்றி குமாரி வாழ்த்துக்கும் தங்கள் வருகைக்கும் சகபோட்டியாளராயிருந்தும் வாழ்த்திய தங்கள் பெருந்தன்மைக்கும்
அன்புடன்
த.அகிலன்

த.அகிலன் said...

//தும்பிகளையும் வண்ணத்துப் பூச்சிகளையும் பற்றி என்னிடமும் இதுபோன்ற கதை உள்ளது.//

நன்றி பஹீமா அக்கா எழுதலாமே அவற்றை

BadNewsIndia said...

//காலம் எனக்கு கனவுகளைத் தந்தது. கனவுகள் கவிதைகளைத் தந்தன. கவிதைகள் விடுதலையைப்பாடின//

அழகான கோர்வை.
விடுதலை இல்லாமல் இருப்பது எவ்வளவு கடினம் என்பது உங்கள் பதிவை படிக்கும்பொழுது தெரிந்தது.

எல்லாம் வல்ல இறைவன், உங்கள் துயரங்களை சீக்கிரமே துடைக்கட்டும்.

த.அகிலன் said...

Bad News India said...
//எல்லாம் வல்ல இறைவன், உங்கள் துயரங்களை சீக்கிரமே துடைக்கட்டும்//

நன்றி அன்பரே