Tuesday, July 10, 2007

ஆவிகளும் விமானங்களும்.....

நான் எனது சின்னவயது ஞாபகங்களில் இருந்து விமானங்களைப்பற்றிய செய்திகளை நினைவுபடுத்த முயன்றேன். அப்போதிலிருந்தே அவை ஒரு விதமான அச்சமூட்டும் பொருட்களாகவே இருந்தன. கோகுலம் புத்தகத்தில் விமானத்தை கண்டு பிடித்தது ரைட் சகோதரர்கள் என்று படித்த ஞாபகம் இருக்கிறது. எதற்கு அவர்கள் இதனைக் கண்டு பிடித்தார்கள். எங்கள் மீது குண்டுபோடவா? எத்தனை விதம்விதமான விமானங்களின் குண்டுவீசும் திறன்களை சமாளித்து வந்திருக்கிறோம். அவ்ரோ, புக்காரா, சுப்பர்சொனிக், கிபிர் இப்படி விமானங்களை பறக்கும் ஒரு அதிசய கொடுரமிருகம் போலவே அறிந்திருக்கிறோம். எனது பிள்ளைப்பருவங்களிலே நான் மிகமுக்கியமாக பயப்படுகிற இரண்டு விசயங்கள் ஒன்று ஆவிகள் மற்றது கிபிர்.

ஆவிகள் நாவல் மரத்தமடியில் மத்தியானம் 12மணிக்குப்போனாலோ அல்லது இரவு 6மணிக்கு மேல் எந்தக்கணத்திலுமோ தாக்ககூடியவையாயிருந்தன எனது எண்ணங்களில். ஆனால் விமானங்கள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். அவைதான் ஆவிகளைவிடவும் கொடுமையானவையாக இருந்தன. கற்பனைப்பரப்பிற்கு வெளியிலும் துன்பம் விளைவிப்பவையாக இருந்தன.

எந்த நேரத்திலும். விமானத்தின் ஓசை மரணத்தின் குரல் போல கிராமத்தினூடே பரவும், தொற்றிக்கொள்ளும் பரபரப்பினிடையயே பதுங்கித் தொலைப்போம். உயரின் துடிப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்ட கணங்கள் அவை. முன்பெல்லாம் விமானங்கள் வருகின்ற ஒரு இரைச்சல் முன்னதாகவே வந்து விடும் அதாவது ஒலியைவிட வேகம் குறைந்த விமானங்கள் அவை. எமக்கு அவகாசம் நிறைய இருக்கும் பதுங்கிக்கொள்வதற்கு.
பிறகு மிகை ஒலி விமானங்கள் வந்தன. அவை எந்தவிதமான அவகாசத்தையும் எமக்கு தருவதேயில்லை. மரணபயம் அறிவிக்கப்படாமல் வந்தது. சாவுக்குத் தயாராவதற்கான அவகாசத்தைக்கூட அவை எங்களிற்கு வழங்கவில்லை.

எனக்கு நல்ல ஞாபமிருக்கிறது. சுப்பசொனிக் விமானங்கள் கிளிநொச்சியில் முதல் முதல் தாக்குதல் நடத்திய நாள். எங்கள் வீட்டுக்கு மேல்தானே குண்டு விழுந்தது. முதல் குண்டு எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த தேவாலயத்தில் விழுந்தது. வெடித்தபிறகுதான் சத்தமே கேட்டது. வித்தியாசமான உறுமலாக இருந்தது.

நானும் தங்கச்சியும் கொண்டல் மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தோம். வீரிட்டலறியபடி எழுந்தோடிய திடுக்கிடும் கணங்கள் இப்போது வரைக்கும் திகிலூட்டும். வாழ்வின் முக்கியமான சில உணர்ச்சிகள் அப்படியே உறைந்து மனதின் மீட்கக்கூடிய தடங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். பிறகு ஏதேதோ திடுக்கிடும் தருணங்களில் ஒரு மௌன இடைவெளியை மனதில் உருவாக்கி தம்மை பிரதியீடு செய்து கொள்ளும்.

அப்படித்தான் இந்த விமானத்தாக்குதல் பற்றிய திடுக்கிடும் கணங்களும் என்னுள் பதிவு செய்யப்பட்டு அவ்வப்போது மீட்டப்படுகிறது. அதற்கு இன்னுமொரு காரணமும் இருக்கிறது. அன்றைக்கு நானும் எனது முழங்காலில் காயப்பட்டேன். தங்கச்சியையும் இழுத்துக்கொண்டு மாமாவீட்டு பங்கருக்கு ஓடினாப்பிறகுதான் என் கால்களின் சூடான இரத்தம் வழிவதை உணர்ந்தேன். பிறது 3 நாள் கழித்து ஆஸ்பத்திரியில் இருந்து திரும்பிய பிறகு வீடிருந்த இடத்தில் சுப்பசொனிக் தோண்டியிருந்த பெருங்கிடங்கில் அல்ல கிணறில் தண்ணீர் ஊறிக்கிடந்தது.
போரின் கொடும் கணங்களில் தாகித்தலையும் போர் வெறியர்களின் தாகம் தீர்த்திருக்குமா அது. எனது காலில் தையல் போட்டபோது அய்யோ என்னை வெட்டுறாங்கள் வெட்டுறாங்கள் என்று நான் அழுத கண்ணீர்தான் நிரம்பியிருப்பதாய் பட்டது எனக்கு. அல்லது உழைத்துக் கட்டிய வீடு கண்முன்னே தகர்ந்து போய்க்கிடப்பதன் தாளாமையினால் அம்மாவின் மனம் அழுத அழுகையா? எது வென்று யோசித்துக்கொண்டிருக்கிறேன் இப்போதும்….

3 comments:

த.அகிலன் said...

நான் அப்பால் தமிழில் எழுதிய மரணத்தின் வாசனை- 05 கட்டுரையின் ஒரு பகுதி இது

Anonymous said...

valikkindrathu padikkumpothu

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு பகுதியா..இதை வாசித்ததற்கே கொடுமையா இருக்கே...:(