Wednesday, May 16, 2007

2006ன் கடைசி லஞ்சமும் 2007ன் முதல் பதிவும்…..

எங்கேயோ இருந்து மெலிதாக சுப்ரபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது. தமிழர்கள் எல்லோரும் இந்தப்புத்தாண்டை இத்தனை ஆரவாரத்துடன் வரவேற்பார்களா என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை.


சென்னை ரொம்ப சூப்பரா இருக்கும் நீங்க பார்க்கணும் அகிலன் என்று சோமி மிகுந்த அக்கறையுடன் வரச்சொன்னார். வெடிவெடிப்பாங்க பசங்களும் பொண்ணுகளும் சும்மா அப்பிடியே ஜாலியா ஒரு ரவுண்டு போவாங்க அங்கங்க கிளப் விருந்து அப்பிடி இப்படி என்று பின்னிரவு வரையும் நிகழ்ச்சிகள் இருக்கும் மெரினாவில் செம கூட்டம் இருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ம் பார்க்கலாம் என்று அவரது மோட்டார் வண்டியின் பின்னால் ஏறினேன்.

எனக்கு தெருக்கள் அதன் பெயர்கள் வளைவுகள் திருப்பங்கள் எதுவுமே தெரிவதில்லை ஞாபகம் இருப்பதுமில்லை சோமி இங்க 3 வருசமா இருக்கிறார் அதால தான் பாதைகள் ஞாபகமிருக்கு என்று சமாதானம் செய்து கொள்வதுண்டு. எனக்கு பாதைகளை விடவும் விளம்பரத்தட்டிகளில் மொய்க்கும் கண்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. விளம்பரங்களில் அதிலும் அழகழகான பெண்களை அவர்களின் கண்களை காதுகளை என்று பார்ட் பார்ட்டாக வளைவுகள் திருப்பங்கள் எல்லாவற்றையுமே பாலித்தீன் தாள்களில் அச்சடித்திருக்கிறார்கள் எப்படி பார்க்காமல் போகமுடியும் அதுவும் செம்மண் புழுதிபடிந்த தெருக்களில் ஒன்று இரண்டு ஏசி வாகனங்கள் சர்….. என்று புழுதியை இறைத்தபடி போக நுரையீரல்களில் தூசியை நிறைக்கும் ஊரில் இருந்து வந்தவனுக்கு போர்மணக்கும் சாலையின் சிதிலமடைந்து அல்லது இப்போதுதான் பிறக்க ஆரம்பித்திருக்கும் கட்டிடங்களையே கண்டு பழகிப்போனவனுக்கு தெளிந்த கண்ணாடிபோன்ற மினுங்கும் (நான் ஊரைச்சொல்லவில்லை) விளம்பரத்தட்டிகள் ஆச்சரியம்தான் நிச்சயமாய்….. திருவிழாக் கூட்டத்தை வேடிக்கை பார்க்கும் சிறுவனாட்டம் சோமியின் பின்னால் அமர்ந்திருந்தேன்.

அடடா என்றார் சோமி திடீரென்று என்ன என்கிறென் பெற்றோல் போட மற்நதிட்டனே என்றார். 1லீஇற்கு 100கி.மி கனவுகள் சிதறிப்போக அந்த பெரிய வண்டிக்கம்பனியை கொஞ்சமும் இரக்கமின்றி எவ்வளவு திட்டினாலும் ஆத்திரம் தீராது என்கிற மாதிரி சிக்னலில் கரெக்டாக நின்றது வண்டி. எதிரே போலீஸ் ஒரு கதையும் கிடையாது டபார் என்று வணடிச்சாவியை கையில் எடுத்தார் என்னபண்றா ட்ராபிக்கில நின்னுட்டு லைசன்ஸ் எடு… லைசன்சா அப்படி எண்டா…. என்கிறமாதிரி சோமி முழிக்க… போலீஸ் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் ஓரங்கட்டு ஓரங்கட்டு என்றார் போலீஸ்காரர் நான் நேரத்தை பார்த்தேன் 11.45 என்றது அலைபேசி. சார் பெட்ரோல் தீர்ந்து போய்ச்சு சார் அப்படி என்று சோமி சமாளிக்க பார்க்க அவரது பேச்சுத்திறமைக்கு மதிப்புக்கொடுத்தும் ஓடுவதற்கும் வசதியாகவும் நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன் (உங்களிற்கு நண்பனும் கரடியும் கதை ஞாபகம் வரேல்ல தானே) என்ன இங்கன்னா 50 இல்லைன்னா 550 என்று பகிரங்கமாக வியாபாரத்தில் இறங்கினார் பொலிஸ்காரர். அங்கபோறியா அப்படி என்று கைகாட்டிய திசையில் ஜீப்பில் இன்ஸ்பெக்கடர் ஆக இருக்கலாம் இன்னொரு போலீஸ்காரர் இருந்தார். சோமி 50 பதிற்கே விசயத்தை முடித்துகொள்ளலாம் எனத்தீர்மானித்த போது நான் பேசைத்திறந்து பார்த்தேன் சனியன் வருசத்தின் கடைசிக்கணங்களிலும் கூட வருவது மாதிரி ஆகக்குறைந்த பெறுமதி தாளே 100 ரூபாய் தாள்தான் இருந்தது.(ஆகக்கூடிய பெறுமதியும் அதுதான் சும்மா பில்டப்தெரியம்தானே) சரி கதைமுடிஞ்சுது 100 ரூபாய்க்கு ஆப்புத்தான் எண்டு நினைச்சுக்கொண்டு எடுத்து நீட்டினேன். எனக்கு அப்பதான் புரிஞ்சுது தமிழ்நாட்டு போலீசின் சிறப்பு அவர் மிகவும் நேர்மையாக(?) 50 ரூபாய் மிச்சக்காசை சோமியின் கையில் கொடுக்கவும் நான் அப்பபடியே உறைந்து போய்விட்டேன் அட இவ்வளவு நேர்மையான போலீஸ்காரரா? லஞ்சத்துக்கே மிச்சக்காசு கொடுக்கிறாரே என்று. அவரது நேர்மையை வியந்தபடி வண்டியை உருட்டிக்கொண்டு பெட்ரோல் போட்டுக்கொண்டு சோமியின் பின்னால் ஏறிஇருந்தால் அவர் சொன்னார் இண்டைக்கு மட்டும் சென்னை மாநகர காவலுக்காக 7000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று. உங்களிடம் பத்துஇருபது ரூபாயாக சில்லறைகள் இருந்தால் பத்துரூபாய்க்கே பேரத்தை முடிக்கலாம் என்றார் எங்கே அவர் தமிழ்நாடு போலீசின் மரியாதையை மேலும் உயர்த்தி விடுவாரோ என்கிற பயத்தில் போகலாம் என்றேன்.

(நான் உடனடியாக உத்தியோகப்பற்றற்ற வேலை ஒன்றைச்செய்தேன் என் அலைபேசியை எடுத்து அதில இருக்கிற கல்குலேற்றரில 7000தர 50 எண்டு அடிச்சன் நீங்களும் அடிச்சு பாருங்கோ வாற விடை நேற்று இரவு கைமாறியருக்கக் கூடிய ஆகக் குறைந்து லஞ்சத்தொகை)

சோமி கேட்டுது என்னமாதிரி வீட்ட போவமோ இல்லாட்டி சென்னை மாநகரின் லஞ்ச லாவண்யங்களை சீச்சி ரம்மியமான அழகை காணப்போறியளோ எண்டு நான் சொன்னன் போவம் வீட்டை எண்டு. சோமி மனம் மாறி நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்;டும் போவம் மெரினாவுக்கு எண்டு சொன்னார் வண்டி மெரினாவை நோக்கி போகத் தொடங்க….


எனக்கு தீடீரென்று குமார் வாத்தியின்ர ஞாபகம் வந்தது. குமார் வாத்தி கணிதம் தான் படிப்பிக்கிறது ஆனாலும் ஒரு மார்க்கமாக கணித்ததை படிப்பிக்கும் சினிமா பொது அறிவு அப்படி கணிதம் மட்டுமில்லாம எல்லாத்தையும் வகுப்பில சொல்லும் நான் அஞ்சாம் ஆண்டு படிக்கேக்க எனக்கு தெரிஞ்சு ஜனவரி முதல்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிற சைவக்காரர் அவர்தான். அங்க இந்த விழா மதத்தின் பிண்ணணியில் தான் கொண்டாடப்பட்டது பெரும்பாலும். கிறிஸ்தவவர்கள் தான் இந்தப்புத்தாண்டை கொண்டாடுவார்கள் பொதுவாக கிறிஸ்தவமதத்தை சேராத தமிழர்கள் சித்திரைப்புத்தாணடத்தான் புத்தாண்டாகக் கொண்டாடுவார்கள். குமார் வாத்தியின்ர அக்கா ஒரு வேதக்காராரை கலியாணம் முடிச்சதாலதான் அவர் அப்படி கொண்டாடுகிறார் எண்டு நினைப்பன். சித்திரை மாதம் தமிழர்களுக்கு ஏன் புது வருசம் தமிழர்களிற்கு தை முதல் தேதி எது தைப்பொங்கல் பண்டிகைதானே அதையெல்லோ தமிழ் வருசப்பிறப்பு எண்டு கொண்டாட வேணும் எண்டு நான் நினைத்திருக்கிறேன்.

அப்ப வகுப்பில ஒருநாள் குமார் வாத்தி மெரினா எண்டா என்ன இடம் அப்படி எண்டு ஒரு பொது அறிவுக்கேள்வியை தூக்கி போட்டிச்சு வகுப்பில எல்லோரும் முழுசுகினம். அப்பவே தமிழக நண்பர்களான கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா,ராணிகாமிக்ஸ்,போன்றவர்களோடு எனது பரிச்சயம் இருந்தததால் நான் சொன்னன் பீச் எண்டு. குமார் வாத்திக்கு குண்டியில் அடிச்ச புழுகம் அப்பிடியே எனக்கு கைதந்து நீஒரு உலக அறிவு படைச்ச சிங்கம் அப்படி இப்படி எண்டு பாராட்டிச்சு….



ஹோ என்கிற பெரிய சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது. இளைஞர்கள் அப்படி கத்திக்கொண்டே மிகவேகமாக போனார்கள் எனக்கு மெரினா கடற்கரைக்கு போகிறோம் என்பது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. வழியெல்லாம் போறவர்கள் வாறவர்கள் எல்லாரும் புத்தாண்டு வாழத்துக்கள் சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தார்கள். எனக்கு இது ஒரு புதிய அனுபவம் தான் இரவு பன்னிரண்டு மணிக்கு வெடிகொழுத்தி ஹோ..... ஹாப்பி நியூஇயர் அப்படி என்று கத்துகிற வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவேயில்லை. அநேகமாக யுத்த காலங்களில் இரண்டு தரப்பும் புத்தாண்டு பிறக்கும் போது துவக்குகளை வெடித்தோ அல்லது ஆட்லெறிகளை வீசியோ கொண்டாடுவார்கள். எனக்கு நன்றாக ஞாபமிருக்கிறது ஆனையிறவிலிருந்து 98 99 களில் டிசம்பர் 31 இரவு பன்னிரண்டு அடிக்க ஆட்டிலெறிகள் தமிழர் பிரதேசங்களை நோக்கி வீசப்படும். புத்தாண்டு பிறக்கும் போதே யுத்தத்தின் கறைகளோடு பிறக்கும். அது தவிரவும் மிக முக்கியமானது என்னவென்றால் அங்கே மதரீதியாக இது புத்தாண்டல்ல எனவே இதை அங்கே இருக்கிற கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். அவர்களது பக்கத்து வீடுகளாக இருக்கும் சைவக்காரர்களிற்கு கேக்கொடுத்திருப்பார்கள் அவ்வளவுதான். ஆனால் இங்கே சகலரும் இந்த புத்தாண்டை வரவேற்கிறார்கள் வீட்டின் முன்பாக கோலம் போட்டு happy new year என்று எழுதுகிறார்கள். உலகமயமாதலின் ஒழுங்கிற்குள் நாங்கள் நுழைந்து கொண்டிருப்பதை இது காட்டுகிறதா? அல்லது எங்கள் மத ஒற்றுமையை இது காட்டுகிறதா. அந்நிய முதலீடுகள் பெருகியிருக்கும் சூழலில் தாங்கள் வேலைசெய்கிற பல்தேசிய கம்பனிகளின் முதலாளிகளால் கொண்டாடப்படுகிறதால் இதை நாங்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டோமா? முதலாளிகளைத் திருப்தி படுத்துவதற்காக அல்லது நாங்களும் இந்த கலண்டரை தானெ பயன்படுத்துகிறோம் அதனால் பொதுவாக இதனைக்கொண்டாடுகிறோமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

அலைகள் தெறித்துக்கொண்டிருந்த மெரினாவில் கூட்;டம் குறைந்த ஒரு ஓரத்தில் திருவிழாவை வேடிக்கை பார்க்கும் ஒரு மனநிலையோடு நின்று கொண்டிருந்தேன்.முகம் தெரியாதவர்கள் வாழ்த்துக்களோடு கைகுலுக்க ஏற்றுக்கொண்டேன பதிலுக்கு வாழ்தினேன். ஆட்டம் பாட்டு வெடி என்று அமர்களங்களுக்குள் மூழ்கிப்போனது அலைகளின் சத்தம். வெறித்த படி கொஞ்ச நேரம் நின்றோம்…. போன் வேலைசெய்யவில்லை அத்தனை பிசி எல்லா சேவைகளும் பயங்கர பிசி. அகிலன் தண்ணி அடிப்பீங்களா?

என்று சோமி கேட்க……
…………………………………..
.
.
.
.
மறுபடியும் கட்டுரையின் தொடக்கத்துக்கு போனால் நான் இந்தக்க கட்டுரையை எழுதத் தொடங்குகையில் நேரம் 5.30 நண்பர்கள் ரோட்டில் நின்று உற்சாகமாக வருபவர் போவவர்களை எல்லாம் வாழ்த்திக்கொண்டிருந்தார் கள்… happy new year என்று சொல்லி………

8 comments:

Anonymous said...

நீங்கள் குமார் சேர் என றோயல் கல்வி நிலைய ஆசிரியரையா குறிப்பிடுகிறீர்கள்?

த.அகிலன் said...

ஆமாம் அனானி சார் நீங்க யார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாயுள்ளதே றோயல்ல படிச்சீங்களா?நான் படிச்சன்
அன்புடன்
த.அகிலன்

திருவடியான் said...

அகிலன்... நல்லா கதைச்சிருக்கியள் உங்கட பதிவில்..

1980 வரை தமிழர் திருநாளாம் பொங்கலைத்தான் நாங்களெல்லாம் கொண்டாடிக்கொண்டிருந்தோம். பிற்பாடு வடக்கத்தியசேட்டுமார்கள் தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்தபின் அதெல்லாம் தீபாவளி மட்டுமே பண்டிகை என்று மாறிப்போனது. வந்தாரை வாழவைக்கும் தமிழர்கள் வந்தார் கொண்டுவந்த கலாச்சாரத்தையும் வாழவைத்தனர். அதனால் தீபாவளி மட்டுமே பண்டிகை என்றாகிப் போனது.

ஆங்கிலப் புத்தாண்டுக் கதையும் அதே கதை தான். ஆனால் இதில் குற்றவாளிகள் திராவிடக் கட்சிகள் ஆகும். அவர்கள் ஆரம்பித்து வைத்த ஆங்கிலப் புத்தாண்டுக் கலாச்சாரம் பிற்பாடு புத்தாண்டு அன்றைக்கு கோவில் நடை திறப்பது வரைக்கும் போய் நிற்கிறது.

ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருநாளாம் தமிழ்ப்புத்தாண்டு அன்றைக்கு 24 வகை மரக்கறி பதார்த்தங்களுடன் தலை வாழை இலையில் குடும்பமாக எல்லோரும் உட்கார்ந்து மதியச் சாப்பாடு சாப்பிடுவது ஏனோ நினைவுக்கு வருகிறது.

ஃபஹீமாஜஹான் said...

பதிவு நன்றாகத்தான் உள்ளது.

"அகிலன் தண்ணி அடிப்பீங்களா?

என்று சோமி கேட்க……
………………………………….."
தம்பி ராசா,
இந்த இடைவெளி பயங்கரமானது.எமக்கு விரும்பிய சொற்களை இட்டு நிரப்பி வாசிக்கலாம்.
"அகிலன் நல்ல பிள்ளை" என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்க அவர் ...................(என்ன சொல்ல வந்தேன் என்பதற்கான சொற்களை நீங்களும் இட்டுவாசியுங்கள்)

த.அகிலன் said...

//பஹீமா ஜகான் said...
தம்பி ராசா,
இந்த இடைவெளி பயங்கரமானது.எமக்கு விரும்பிய சொற்களை இட்டு நிரப்பி வாசிக்கலாம்.
"அகிலன் நல்ல பிள்ளை" என்று சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்க அவர் ...................(என்ன சொல்ல வந்தேன் என்பதற்கான சொற்களை நீங்களும் இட்டுவாசியுங்கள்) //

அக்கா நீங்களே இப்படி தம்பியை கைவிடலாமா நீங்கள் தொடாச்சியாக நல்ல பையன் என்று சொல்லக்கூடிய சொற்களை அதில் இட்டு நிரப்பவும்...

ஃபஹீமாஜஹான் said...

அகிலன்,
இந்தப் பதிவையே எத்தனை நாளைக்கு மீண்டும் மீண்டும் பார்ப்பது?புதிய பதிவு எப்போது?

சினேகிதி said...

வணக்கம் அகிலன! இப்போதைக்கு இந்தப்பதிவு மட்டும்தான் வாசிச்சன்.எழுத்து நடை மற்றைய பதிவுகளையும் வாசிக்கச் சொல்லுது.அலைபேசி , சிதிலமடைந்து என்றால் என்ன அகிலன்?

ஜகான் அக்கா புதிய பதிவு மப்பு இறங்கினதும் போடுவார். திருவடியான்ர பின்னோட்டத்தை இரண்டு தரம் போட்டிருக்கிறார் பாருங்கோ.நான் சொன்னது உண்மைதானே. :-)

Anonymous said...

Nalla pathivukal. Ennathu kananiyil thamil unicode illai, athanal angilathil eluthukiren: were you with Kamban Kazhakam in Jaffna? did you use to teach at tutories??? just want to make sure.