Friday, August 11, 2006

அருவம் மீதான நம்பிக்கை


இவர்கள்
அழிவுகளினின்றும்
சிதைவுகளினின்றும்
எதிர்பார்க்கிறார்கள்
கலையும் மேகங்களிடையே
அவன் வருவதாய்
யாவரும் நம்புகின்றனர்.

ஆயிரம் குளம்படி ஓசைகளுடன்
நிறையப் புரவிகளினிடையில்
ஒளிரும் அருவமாய்
அவனை வருணிப்பர்
சிதைவுகளினின்றும்
குருதியூறிய,
வயல்வெளிகனின்றும்
முகாரியினுடைய
எல்லைகளிற்கு -வெளியே
துயரம் கடந்து
எப்போதோ எரியூட்டப்பட்ட
அவர்களின் கனவுகளை
அவன் தங்களிற்கு
பரிசளிப்பனென்றும்
பேரட்சகனாய்
அவனிருப்பதால்
பேரற்புதங்கள் நிகழ்த்துவனென்றும்
எதிர்பார்க்கின்றார்கள்.

ஒவ்வோர் எதிர்பார்த்தலின் போதும்
அவன் ஏமாற்றினாலும்
ஆச்சரியமாய் - இவர்கள்
மறுபடியும் எதிர்பார்ப்பர்.

அவன் வரவை
முன்னிலும் அதிகமாய்...
அழிவுகளோடும்
காத்திருப்பர் -முன்னிலும்
அதிக அற்புதங்களோடான
அவன் வருகையின் மீதான
நம்பிக்கைகளோடு......

த.அகிலன்

1 comment:

செல்வநாயகி said...

உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்தேன். பிடித்திருக்கின்றன என்று சொல்வதைவிட என்னைப் பாதிக்கின்றன என்று சொல்வதே பொருத்தமென நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் அகிலன்.