Thursday, September 13, 2007

சொற்களைத் திருடிய வண்ணத்திகள்....



நான்கு சுவர்களும்
மௌனித்திருந்த ஒருநாளில்
எதை எழுதுவது
எனத் தெரியாது விட்டு வைத்த
என் நாட்குறிப்பின்
இப்பக்கங்களில்
இப்போது நான்
உன் மௌனத்தை எழுதுகிறேன்.


உன்மௌனம்….
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது….

உன்
கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு…
தம் சிறகுகளால்
காலத்தை கடந்தன வண்ணத்திகள்…

என்ன சொல்வது
உன்
மௌனங்களைப்பற்றி
எழுத நேர்கையில்
முத்தங்களைப் பற்றியும்
எழுதவேண்டியிருப்பதை….

10 comments:

Anonymous said...

நல்லாயிருக்குது அகிலன்.

ஒரு சிறு திருத்தம். தலைப்பில் வண்ணாத்திகள் என்று இருப்பதை வண்ணத்திகள் என்று திருத்தினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.

தமிழ்நதி said...

திரும்பி வந்து நிறைய எழுதிக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. சொற்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் செறிவு நன்றாக இருக்கிறது அகிலன்.

த.அகிலன் said...

//வெயிலான் said...
நல்லாயிருக்குது அகிலன்.

ஒரு சிறு திருத்தம். தலைப்பில் வண்ணாத்திகள் என்று இருப்பதை வண்ணத்திகள் என்று திருத்தினால் நன்றாக இருக்குமென நினைக்கிறேன்.//

ஓ அதில் ஏதும் சொற்பிழை இருக்கிறதா வெயிலான்... வண்ணாத்திப்பூச்சி என்று சொல்லிப்பழகி அப்படி எழுதிவிட்டேன் ம் உங்களுக்கு பிடிக்காவிட்டால் மாற்றிவிடுகிறேன் :)))

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//உன்மௌனம்….
ஜன்னலின் விளிம்புகளிற்குள் சிக்கிய
குரலோய்ந்த கடலைப்போலிருக்கிறது….//

திளைப்பூட்டும் கவித்துவ வரிகள்...

த.அகிலன் said...

ம் நன்றி வியாபகன் நானே உங்கள் வலைத்தளத்தில் முதலில் வந்து பின்னூட்டமிடவேண்டும் என்று நினைத்திருந்தேன். நீங்கள் முந்திக்கொண்டீர்கள்..

Anonymous said...

அகிலன்
கவிதை நன்றாக இருக்கிறது.
எத்தனை நாட்களாக இந்தப் பக்கம் வந்து... வந்து..வந்து..புற முதுகு காட்டி நிற்பதைப் பார்த்துப் போவதாம்?
புதிய பதிவை விரைவில் இடமாட்டீர்களா?
அன்புடன்
பஹீமாஜஹான்

தாசன் said...

உன்
//கண்களிடமிருந்து
வண்ணத்துப்பூச்சிகளைச் சிறைமீட்ட
அந்த முத்தத்தின் முடிவில்..
நமக்கான சொற்களையும்
திருடிக்கொண்டு…
தம் சிறகுகளால்
காலத்தை கடந்தன வண்ணத்திகள்…//

நல்ல கவி வரிகள்.

cheena (சீனா) said...

வெயிலானின் வேண்டுகோளை ஏற்று தலைப்பில் சிறு மாற்றம் செய்தது நன்று. பழைய தலைப்பு ஏனோ மனதை நெருடியது. நல்ல கவிதைகள் சில தேவையற்ற திசையில் இழுத்துச் செல்லப்படக்கூடிய சூழ்நிலை உருவாவதைத் தடுக்கலாம்.

சிறந்த கவி வரிகள் - சிறிய கவிதையில் அழகாக மெளணம் விளக்கப்பட்டிருக்கிறது

வாழ்த்துகள் - தொடர்க

குழலி / Kuzhali said...

//ஓ அதில் ஏதும் சொற்பிழை இருக்கிறதா வெயிலான்... வண்ணாத்திப்பூச்சி என்று சொல்லிப்பழகி அப்படி எழுதிவிட்டேன் ம் உங்களுக்கு பிடிக்காவிட்டால் மாற்றிவிடுகிறேன் )
//
வண்ணாத்திகள் என்பது கிராமங்களில் துணி வெளுக்கும் சமூகத்தினரின் பெண்களை குறிப்பது, அப்படி சொல்வது மரியாதைக்குறைவாக கருதப்படுவது....

Chandravathanaa said...

நன்றாக இருக்கிறது