Thursday, September 06, 2007

மக்கள் தொலைக்காட்சி வன்னியில் இருந்து ஓர் பார்வை...

தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடி
மக்கள் தொலைக்காட்சி.
ஈழம் வன்னியில் இருந்து - கருணாகரன்


தமிழ்ச்சினிமா இல்லாமலே தமிழில் ஒரு தொலைக்கட்சி வந்திருக்கு. தமிழிலேயே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அறிவிப்பாளர்களும். அத்துடன் தமிழ் நிகழ்ச்சிகள். தமிழ் நிலப்பரப்பின் காட்சிகள். தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பிரந்தியப் பேச்சு மொழிகள். இப்படி தமிழ்க்காட்சியூடகங்களில் மாறுதலான ஒரு புதிய தொலைக்காட்சியாக இப்போது அறிமுகமாகியிருக்கிறது மக்கள் தொலைக்கட்சி.

சினிமா இல்லாமல், சினிமாக்காரரே இல்லாமல் இந்தத்தொலைக்காட்சி வெற்றிகரமாக இயங்கிவருகிறது. இது நம்பமுடியாத ஆச்சரியந்தான். தமிழகத்திலிருந்து சினிமாவையே மையமாகக்கொண்டு பெருந் தொலைக்காட்சிகள் இயங்கிவரும் சூழலில், அதிலிருந்தது மாறி தமிழ் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில், மக்கள் தொலைக்காட்சி சவாலாக இயங்குகிறது. இது தொலைக்காட்சிப் பார்வையாளர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தைத்தரும் ஒரு வேறுபட்ட நிலை.

தமிழ் வாழ்வையும் தமிழ் மண்ணின் அடையாளத்தையும் மீள் உருவாக்கம் செய்யும் முனைப்போடு இயங்குகிறது இந்தத்தொலைக்காட்சி. கவனிக்கப்படாதிருக்கும் தமிழ் அடையாளத்தின்மீது ஒளிபாய்ச்சும் பெரு முயற்சி இது. இது மிகச்சவாலானது. ஒரு பாரம்பரியமாக சினிமாவை மையமாகவே வைத்து சனங்களை அதுக்கேற்றமாதிரி உருவாக்கியிருக்கும் தொலைக்காட்சிகளின் மத்தியில் இவ்வாறு சோதனை முயற்சியைத் தொடங்கி அதில் வெற்றி பெறுவது சிரமமானது. ஆனால் வெற்றி பெற்றிருக்கிறது மக்கள் தொலைக்காட்சி.

இப்படி ஒரு தொலைக்காட்சி தமிழில் ஒளிபரப்பாகிற செய்தியே பலருக்குத்தெரியாது. அதுவும் தமிழ்ச்சினிமா இல்லாமல் ஒரு தமிழ்த்தொலைக்காட்சியா என்று அவர்கள் ஆச்சரியப்படவும்கூடும். சினிமா இல்லாத தொலைக்காட்சியைப்பார்க்க முடியுமா என்று அவர்களால் கற்பனைகூடப்பண்ண முடியாது. ஆனால் மக்கள் தொலைக்காட்சி சினிமா இல்லாமலே தொய்ந்து போகாமல் விறுவிறுப்பாக இயஙகுகிறது. தமிழில் ஒரு நல்ல தொலைக்காட்சி வராதா என்று ஏங்கியவர்கள் மகிழக்கூடியமாதிரி இந்தத் தொலைக்காட்சி இருக்கிறது.

மூன்றாம் உலக நாடுகளில் அடையாளங்களைக் காப்பாற்றுவதற்கான எத்தனங்கள் தீவிர சவாலுக்குரியவை. உலகமயமாதல் என்ற பெரும் அலைக்குள் அடையாளங்களைக் காப்பாற்றுவதே ஒவ்வொரு மனிதனுக்குமுள்ள தீரா நெருக்கடி. இதுவே இன்று சமூகங்களின் இருப்புக்கும் விடுதலைக்குமான பெரும் சவால். இந்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறது மக்கள் தொலைக்காட்சி.

தமிழ்நாட்டின் நிலக்காட்சிகளை மக்கள்தொலைக்காட்சி காண்பிப்பதிலிருந்தே இந்த மாறுதலைக்காணலாம். வெவ்வேறான நிலக்காட்சிகள் சங்க இலக்கியத்தில் திணைகளாக பதியப்பெற்றிருக்கின்றன. இந்தத்திணைகளை நவீன இலக்கியம் இன்றைய வாழ்வினூடாக காண்பிக்கின்றது. வட்டார வழக்கென்றும், பேச்சு மொழியென்றும் அது பலநிலைகளிலும் பல முகங்களோடும் அறிமுகமாகயிருக்கிறது.

குறிப்பாக நாவல்களில் இந்த அடையாளம் தெளிவாகியிருக்கிறது. ஆனால் இலக்கிய வாசகர்களுக்கப்பால் இந்தமாதிரி விசயமெல்லாம் பொதுப்பரப்பில் சனங்கள் அறிந்ததில்லை. இப்போது காட்சியூடகத்தின் வழியாக இது அறிமுகமாகும்போது இதன் ஆழமும் பெறுமதியும் அதிகமாகிவிடுகிறது. இதுவரையிலும் பார்வைப்பரப்பிலிருந்து பெருங்காட்சியூடகங்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கவனிக்கப்படாத வெளி அதன் மெய்த்தோற்றத்தோடு அறிய வாய்த்திருக்கிறது.

இந்தத்திணைகளின் மனிதர்களுடைய வாழ்க்கையும் அவர்களின் பண்பாடும் இன்னும் குலையாதிருக்கிறது என்பதை மக்கள் தொலைக்காட்சி சாட்சிபூர்வமாகச் சொல்கிறது. நகர்மயமாதல் என்பது இன்று உலகமயமாதலை எந்தக்கேள்வியும் எதிர்ப்புமின்றி முழுமையாக அங்கீகரித்தல் போலாகிவிட்டது. கல்வி தொடர்பாடல், வசதிவாய்ப்புகள் எனச்சகலதும் இருந்தும் சுய அடையாளத்தைக் காப்பாற்ற முடியாதிருக்கும் நகர்வாசிகளை விடவும் இந்த வாய்ப்புகள், கல்வியறிவு என்பன இல்லாத கிராமவாசிகள் சுய அடையாளத்தோடு இருக்கிறார்கள். இதை மக்கள் தொலைக்காட்சி தெளிவாக்கியிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால் மக்கள் தொலைக்காட்சியின் பார்வையாளர்களும் பிரதானமாக கிராமவாசிகளாகவே இருக்கிறார்கள். நகர்வாசிகளின் பார்வைப்பரப்பும் ரசனையும் சன் ரி.வி, ஜெயா ரி.வி என்பவற்றால் இறுக்கமாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டன. அந்தத்தொலைக்காட்சிகளின் சினிமா சார்ந்த அம்சங்களுக்கப்பாலான தெரிவை அவற்றின் பார்வையாளர்களாகிய நகரவாசிகள் அறியமுடிவதில்லை. இங்கே கிராமம், நகரம் என்ற பிரிப்பை நாம் செய்யவில்லை. உள்ள யதார்த்த நிலைமையே சுட்டிக்காட்டப்படுகிறது.

மக்கள் தொலைக்காட்சி தமிழ் வாழ்க்கையை மையப்படுத்தும்போது அது தவிர்க்கமுடியாமல் கிராமியத்தன்மையைப்பெற்றுவிடுகிறது. அதற்காக அது முற்றுமுழுதாக கிராமத்துக்குள்தான் சரணடைந்திருப்பதாகவும் கொள்ளமுடியாது. தமிழ் அடையாளம் என்பது கிராமங்களில்தான் இன்னும் குலையாதுள்ளது. அதனால் அந்த வாழ்வைத்தேடிச் செல்லும்போது கிராமங்கள் முதன்மைபெறுகின்றன.

இதுவரையிலும் கிராமங்களைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதோடு மட்டும் நின்ற பெருங்காட்சியூடகங்களுக்கு இதுவொரு பெரும் சவாலே. பெருங்காட்சியூடகங்கள் கிராமங்களை வேடிக்கைப்பொருளாகவும் பயன்படுத்தல் என்ற நிலையிலுமே பயன்படுத்தி வந்தன. அல்லது அவ்வாறுதான் கொண்டு வந்தன.

ஆக பெருங்காட்சியூடகங்களில் அடையாளங்களைப் பேணவேண்டும் என்ற பிரக்ஞை கிடையாது. அவை முற்று முழுதாக வணிக நலனை மட்டுமே நோக்காகக் கொண்டவை. வணிகத்துக்கு எது அதிக சிரமமில்லாது கூடுதலான ஆதாயத்தைத்தருகிறதோ அதையே அவை பின்பற்றும். அடையாளங்களைப் பேணுவதென்பது இன்றைய நிலையில் பெருஞ்சவாலுக்குரியவை. அதேவேளையில் அது அதிகக் கவர்ச்சியும் இல்லாதது.

எனவே பெருங்காட்சியூடகங்களின்; வழங்கல் வணிகத்துக்கிசைவான கவர்ச்சித்தன்னையைக் கொண்டிருப்பதால் அந்த ஊடகங்கள் இலேசாக பார்வையாளர்களைத் தொற்றிக்கொள்கின்றன. தமிழ்ச்சூழலில் சினிமா என்ற பெருங்கவர்ச்சிப்பண்டம் ஏற்கனவே நன்றாக வேரோடியிருப்பதால் அதை மையமாக வைத்து இந்தப் பெருங்காட்சியூடகங்கள் தம்மை வடிவமைப்பதால் இன்னும் அதிக பலத்தை இவை பெற்றுவிடுக்ன்றன. இநத ஊடகங்கள் எவ்வளவுக்கு கூடுதலாக பலம் பெறுகின்றனவோ அந்தளவுக்கு இவற்றின் பார்வையாளர்களின் பலம் குறைவடைகின்றது.

ஒரு சரியான ஊடகப்பாரம்பரியத்தில் ஊடகமும் அதன் நுகர்ச்சியாளரும் சமநிலையிலும் சம பலத்தோடும் இருப்பது அவசியம். நுகர்ச்சியாளரின் அறிவுத்தரத்தை அந்த ஊடகம் உயர்த்தும்போது இந்தச் சமநிலை உருவாகிறது. ஆனால் தமிழ்க்காட்சியூடகம் என்பது அது சினிமாவாக இருந்தாலும் தொலைக்காட்சியாக இருந்தாலும் அவற்றின் பார்வையாளர்கள் அறிவாலும் பொருளாதாரத்தாலும் சமூகநிலையிலும் சுரண்டப்படுகிறார்கள். ஒரு மாஜ உலகிற்கு மக்கள் அழைத்துச்செல்லப்பட்டு இந்தச்சுரண்டல் நடக்கிறது.

மக்கள் தொலைக்காட்சி இந்தப்பாரம்பரியத்திலிருந்து முற்றாகி விலகி மக்களை அறிவூட்டி, அவர்களைப்பலம் பெற வைக்கும் ஊடகப்பாரம்பரியத்தில் இயங்குகிறது. இதனால் அது பலவற்றிலும் சில அடிப்படைகளை உருவாக்குகிறது. முதலில் அது தமிழ்ச்சினிமாவை, அதன் உழுத்துப்போன தனத்தை நிராகரித்து விட்டது. ஆனால் நல்ல சினிமா பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. தவிர, தமிழ் வாழ்வு என்று அடையாளம் காணும் விசயங்களை அது நிகழ்ச்சிகளாக்கி தன்னுடைய பார்வையாளருக்குக்கொடுக்கிறது.

தமிழ்ச்சினிமாவில் பொரும்பாலானவை ஏதொவொரு வகையில் கிராமக்காட்சிகளையும் அந்த மக்களின் பேச்சுமொழியையும் தவிர்க்கமுடியாமல் எடுத்தேயாள்கின்றன. பாடல்காட்சிகள், அவற்றுக்கான உடைகள், நகைச்சுவைக்காட்சிகள், அந்த நடிகர்களின் பேச்சு மற்றும் அங்க அசைவுகள் எல்லாமே கிராமத்தை ஆதாரமாகக்கொண்டவை. ஆனால் அந்த வெளிப்பாடு வணிகரீதியானது. அது ஒரு போதும் அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற பிரக்ஞையோடு அணுகப்படவில்லை.

மக்கள் தொலைக்காட்சியின் ஆதாரம் தமிழ் வாழ்வின் அடையாளங்களையும் யதார்த்தத்தையும் மையமாகக் கொண்டிருப்பதால்; இதன் தயாரிப்புத்தளம் அந்த அடையாளங்களோடு வாழும் மக்களும், அவர்களின் வாழிடமும் எனவாகிறது. எனவே இதன் பார்வைப்பரப்பும் கிராமம் சார்ந்த மக்கள்தான். ஏனெனில் இந்த மக்கள் தங்கள் வாழ்வையும் தங்களின் நிலத்தையும் அதன் யதார்த்தத்துடன பார்க்க விரும்புகிறார்கள. அவர்கள் தங்களின் வாழ்க்கையையும் நிலப்பரப்பையும் முதற்தடவையாகப் பார்க்கிறார்கள். ஆங்கிலம் கலக்காத தமிழ் நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள்வேறு இதில் இருப்பதால் மேலும் அவர்களால் நெருக்கம் கொள்ள முடிகிறது. அத்துடன் தாங்களே நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாவும் நிகழ்ச்சிப்பங்கேற்பாளர்களாகவும் இருக்கிறார்கள்.

அறிவுபூர்வமாக பார்வையாளர்களை அணுகவேண்டும் என்ற அடிப்படை இங்கே பேணப்படுகிறது. நிகழ்ச்சித்தயாரிப்பாளர்களும் சமூகப்பொறுபபுடன் இருக்கவேண்டும். பார்வையாளர்களும் அறிவுபூர்வமாக மாறவேண்டும் என்ற சமநிலைப்பயணம் இங்கே நிகழ்கிறது. மக்களின் வாழ்க்கையை படைப்பாக்கம் செய்வதன்மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் பெறுமானத்தையும் சமூகவியல் பெறுமானத்தையும் இதன்மூலம் வழங்கமுடிகிறது. இங்கே புனைவுக்கு அதிகம் இடம் குறைவு. கிராமிய, நாட்டாரியல் கலை அம்சங்கள்தான் இவற்றின் புனைவுவெளியாகின்றன. அப்படியென்றால் இதில் நவீன புனைவு வெளிக்கு இடமில்லையா? இருக்கு. அறிவுமயமாதலிலான அணுகுமுறையில் அது அதற்குரிய யதார்த்தத்தில் உருவாகும்.

மக்கள் தொலைக்காட்சியில் சாதாரண கிராம மக்களில் இருந்து படித்தவர்களும் துறைசார்ந்தோரும் சமூக அக்கறையுடையோரும் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டுப்பங்கேற்பு தொலைக்காட்சியையும் அதன்பார்வையாளர்களையும் இயல்பாகத் தரமுயர்த்துகிறது.

மக்கள் தொலைக்காட்சி சித்திரைப்புத்தாண்டுக்கு ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் இதற்கு ஆதாரம். தமிழ் வாழ்வை அதன் உயிர்ப்போடும் அழகோடும் அது அன்று வழங்கியது. பெருங்காட்சியூடகங்கள் சினிமாவிலும் சினிமாக்காரர்களிலும் மையம் கொண்டிருக்க மக்கள் தொலைக்காட்சிமட்டும் அதிலிருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் வாழ்வில் நிகழ்ந்த பல கலாபூர்வமான நிகழ்ச்சிகளை அன்றைக்கு அது தொகுத்திருந்தது. இந்தத்தொகுப்புக்கு அது செய்திருக்கவேண்டிய கள ஆயவு மிகப்பெரியதாகவே இருக்கும். அதற்கேற்றமாதிரியே அவை ஒவ்வொரு நிகழ்ச்சிகளுக்கும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கின்றது. இதில் கள ஆய்வு முக்கியமானது. பி.பி.ஸி போன்ற தொலைக்காட்சிகள் இதில் மிகத்தேர்ச்சி பெற்றிருக்கின்றன. அந்தளவுக்கு அவற்றின் நிகழ்ச்சிகளும் தரமாகவே இருக்கின்றன. தமிழில் இந்தமாதிரி ஒரு தொலைக்காட்சி இதுவரையில் இல்லை. அதற்கான சிந்தனையும் உழைப்பும் இல்லையென்பதே இதற்குக்காரணம். சகல நிகழ்ச்சிகளுக்குமான தயாரிப்பு ஒரு பொருளில் சார்ந்திருந்தால் அது எத்தனை இனிமையாக இருந்தாலும் தெவிட்டிவிடும்.

மக்கள் தொலைக்காடசிக்கும் இந்தப்பிரச்சினை உண்டு. தொடர்ந்து விவரணங்களில் தங்கியிருப்பதும் தனியே கிராமங்களுக்குள் மட்டும் சுழன்று வருவதும் அதைச்சுருக்கிவிடும். ஆனால் இதுதொடர்பான மதிப்பீட்டையும் அவதானிப்பையும் மக்கள் தொலைக்காட்சி கவனத்தில் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது. குறிப்பாக இந்தத்தொலைக்காட்சியில் தமிழகத்தின் பெரும்பாலான புத்திஜீவிகளும் சமூகவியலாளர்களும் இணைந்திருக்கிறார்கள். அதற்காக தனியே அறிவுஜீவித்தனத்துடன் அது தனிமைப்பட்டுப்போகவும் இல்லை என்பது இதுவரையான ஆறுதல். ஆனால் இனிவரும் நாட்களில் தமிழ்ச்சனங்களிடம் அவர்களின் ரசனைப்பாரம்பரியத்துக்கூடாக எவ்வாறு மக்கள் தொலைக்காட்சி தன்னைத்தக்கவைக்கப்போகிறது என்பதைப்பொறுத்தே எல்லாமிருக்கிறது.

தமிழ்மக்களைப்பொறுத்தவரை அவர்கள் எதற்கும் மறுப்புச்சொல்லும் பாரம்பரியமுடையவர்களில்லை. நல்லதையும் ஏற்பார்கள், கெட்டதையும் ஏற்பார்கள். அதோடு எந்த நேரத்தில் எதை ஏற்பார்கள், எதைவிடுவார்கள் எனவும் சொல்லமுடியாது.

தமிழகத்தைத் தளமாகக்கொண்டு மககள் தொலைக்காட்சி ஒளிபரப்பாகினாலும் அது தமிழ்வாழ்வின் சுவடுகளையும் அது தொடர்பான கம்பீரத்தையும் தருவதையிட்டு நாம் மகிழலாம். அத்துடன், தமிழிலான தொலைக்காட்சிகளுக்கான முன்னோடியாகவும் அது இருக்கிறது. தமிழகத் தொலைக்காட்சிகளின் பார்வையாளர்களாக ஈழத்தமிழரும் இருக்கிறார்கள் என்பதால் நாம் இவற்றையெல்லாம் கவனங்கொண்டேயாக வேண்டியுள்ளது. ஏனெனில் இவற்றின் நன்மை தீமைகள் எங்களையும் நேரடியாகப் பாதிக்கிறதல்லவா.

12 comments:

Anonymous said...

Is there a online link to this Makkal TV?

Anonymous said...

மக்கள் தொலைக்காட்சியா? இன்று தான் அறிகின்றேன். வன்னி மக்களும் தொலைக்காட்சி பார்க்க முடியுமா? அப்படியானால் எமக்கெல்லாம் மகிழ்ச்சி

Yogi said...

Amaanga naanum makkal tholaikkaatchiyin rasikanthaan .. athilum thooya thamizil pesuvathu innum siRappu ..


kOvichukkaathInga .. e-kalappai illai .. :))

Mugundan | முகுந்தன் said...

உண்மைதான் சகோதரரே,

ம‌க்க‌ள் தொலைக்காட்சி,தமிழனின் புதிய‌
ம‌றும‌ல‌ர்ச்சிக்கான‌ ஊட‌க‌மாக‌ கூட‌
பார்க்க‌லாம்.

வாழ்த்துவோம்.வெற்றிக‌ர‌மான‌ இர‌ண்டாண்டை
முடித்த‌த‌ற்கு.

முகு

மலைநாடான் said...

மிக நல்ல திறனாய்வு.

ஐரோப்பாவிலும் இப்போது மக்கள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் பார்க்கக் கூடியதாகவிருப்பது மகிழ்ச்சி தருகிறது.

த.அகிலன் said...

பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. குறிப்பாக மலைநாடன் அண்ணா நீங்க எங்க பக்மெல்லாம் கூட வருவீங்களா?:)

பொன்வண்டு,முகு நம்ப கடைக்கு முதல் வாட்டி வந்திருக்கீக வாங்க வாங்க.

Sundararajan said...

மக்கள் தொலைக்காட்சி ஒரு மாற்று முயற்சிதான் என்பதை மறுக்க முடியாது. அதன் நோக்கங்களும் உயர்ந்தவைதான். ஆனால் இது போன்ற ஊடக நிர்வாகிகளின் ஆர்வக்கோளாறினால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன.

உதாரணமாக, "நீதியின் குரல்" நிகழ்ச்சியை சொல்லலாம்.(இந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் நவரச நடிப்பு குறித்த விமரினம் தனி) தகவல் உரிமைச்சட்டத்தின் அடிப்படையில் அமைந்த நிகழ்ச்சி என்ற முன்னுரையுடன் வரும் இந்த நிகழ்ச்சி அந்த சட்டத்தை பற்றிய தவறான தகவலையே வழங்குகிறது.

தொலைபேசி மூலம் தகவல் கேட்பது எந்த சட்டத்திலும் வராது. கத்தி முனையில் கேட்பதுபோல தொலைபேசி மூலம் ஒரு live நிகழ்ச்சியில் தகவல் கேட்டால் பலருக்கும் பதற்றத்தில் மனைவி பெயரே மறந்து விடலாம்.

இந்த பிரசினை பார்வையாளர்களையும் உளவியல் ரீதியாக பாதிக்கும். இந்த நிகழ்ச்சியில் இதுவரை உருப்படியாக எந்த தகவலும் பெற்றதாக தெரியவில்லை. இது தகவல் உரிமைச் சட்டம் பற்றிய தவறான புரிதலை ஏற்படுத்துவதோடு, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கே தகவல் தரமறுக்கும் அதிகாரிகள் தங்களுக்கா தகவல் தருவார்கள் என்ற சலிப்பு மனப்பான்மையை மக்களிடம் ஏற்படுத்தும். எனவே நியாயமான காரணம் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொதுமக்கள் தகவல் உரிமை சட்டத்தை பயன்படுத்த மாட்டார்கள்.

சுற்றுச்சூழல் குறித்தும் மக்கள் தொலைக்காட்சியும், பசுமைத்தாயகம் அமைப்பும் கவலைப்படுவதாக தெரிகிறது.

தங்கம் தயாரிக்கும் போது ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு மற்றும் தொழிலாளர்களை சுரண்டுதல் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தங்கத்தின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் (Dirty Gold) என்று பசுமைத்தாயகம் வலியுறுத்துகிறது. ஆனால் மக்கள் தொலைக்காட்சியோ "தமிழில் பேசு- தங்கக்காசு" என்று சவால் விடுகிறது.

செய்திகளிலும் ஏராளமான தவறான தகவல்கள் வருகின்றன. இவற்றையும் களைந்தால் மக்கள் தொலைக்காட்சி முழுமையான மாற்று ஊடகமாக மிளிரும்.

த.அகிலன் said...

சுந்தர ராஜன் சார் சொக்கத்தங்கத்தில் ஆபரணம் செய்வது மிகவும் கடினம் எனவே அதிலே கொஞ்சம் செப்பு கலப்படம் செய்கிறார்களாம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

மக்கள் தொலைக்காட்சி குறைகளே அற்றது என்று சொல்லவில்லை விமர்சனங்களிற்கு அப்பால்பட்டது என்று சொல்லவில்லை. அது ஒரு நல்ல முன்மாதிரி யாரும் செய்யத்துணியாத விசயத்தை செய்கிற அதன் முயற்சிக்கான வாழ்த்துக்களே நாங்கள் சொல்வது.

லக்கிலுக் said...

மக்கள் தொலைக்காட்சியின் இரண்டாம் ஆண்டுவிழா தொடக்கநிகழ்ச்சியினை இங்கே படியுங்கள்!

Sundararajan said...

நன்றி அகிலன்,

மக்கள் தொலைக்காட்சியை குறை சொல்வது என் நோக்கமல்ல. நானும் ஊடகத்தில் பணியாற்றியவன்தான்.

ஆனால் ஊடகத்தில் அனைத்தையும் விமர்சனம் இன்றி ஏற்கும் மக்கள் வசிக்கும் தமிழ்நாட்டில் மக்கள் தொலைக்காட்சியின் சில குறைபாடுகள், மக்கள் தொலைக்காட்சியின் நோக்கத்திற்கே எதிராக செயல்பட்டுவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வோடுதான் என் கருத்தை பதிவு செய்துள்ளேன்.

Anonymous said...

மக்கள் தொலைக்காட்சி

த.அகிலன் said...

இணைப்பிற்கு நன்றி விக்கி அண்ணா. திருப்தியா அனானி.