Wednesday, December 12, 2007

இராஜாங்கத்தின் முடிவு (சுயவாழ்வின் நிலைக்கண்ணாடி.)

01.

எதைப்பற்றியும் கவலைப்படாத ஒருவன். உலகின் எந்த நியதிகளிற்குள்ளும் சிக்கிக்கொள்ள விரும்பாதவன் இது வரையும் சிக்கிக்கொள்ளாதவன் ரவி. அவனது உலகம் பரந்துவிரிந்தது. எந்த எல்லைகளும் அதற்குக்கிடையா, கால்கள் தீர்மானிக்கும் வரை நடக்கிறவன் வயிறு இவன் சொன்னால்தான் பசிக்கும். பசிக்கும் பணத்துக்கும் இடையில் எவ்வளவு இடைவெளியிருக்கிறது என்பதை இவனைக்கேட்டால் சரியாகச் சொல்வான். அவனது இந்த திகைப்பூட்டும் இந்த உலகம் அவனது நண்பர்களாலும், அவர்களின் உதவியாலும்,கொஞ்சம் புத்தகங்களாலும் நிரம்பியிருக்கிறது. சென்னையின் நடைபாதை வாசி. வானத்தைக் கூரையாகக் கொண்டு நட்சத்திரங்களின் வண்ணங்களை ரசித்தபடி இரவுகளைக் கரைப்பவன். உலகின் அழகான விசயங்களை ஆராதிக்கவேண்டும் எல்லாவற்றையும் தன் கமராக்கண்களால் புகைப்படத்தின் சட்டகங்களிற்கள் இறுக்கிவிடவேண்டும் என்று நினைப்பவன். ஆனால் அவனுக்கு இதுவரை வாய்த்தேயிராதது காதல். காதல் மட்டுமே. பெண்களை அறியாத அழகின் ஆராதகன். இது வரைக்கும் அவன் யாரையும் காதலிக்கவும் இல்லை காதலிக்கப்பட்டதும் இல்லை. ஆனால் உள்ளுக்குள்ளே யாராலாவது தான் காதலிக்கப்பட மாட்டோமா என்று ஏங்கிக்கொண்டும் இருக்கிறான்.

வெளியூர் போகிற நண்பனின் அலுவலக அறையைப் பார்த்துக்கொள்கிற வேலை இந்த வேலைகளை வெறுப்பவனுக்கு வருகிறது. இந்த நடைபாதை வாசிக்கு கொஞ்சநாளைக்கு மின்விசிறியின் கீழ் தூங்க ஒரும் இடம் கிடைக்கிறது. தலைக்கு மேல் ஓயாமல் சுழன்று கொண்டிருக்கும் மின்விசிறியின் கீழ் அவன் மறுபடி மறுபடி கடைசி நான்கு பக்கங்களும் இல்லாத ஓரே புத்தகத்தை வாசித்துக்கிடக்கிறான். அவனையும் அவன் படுத்துக்கொண்டிருக்கும் மேசையையும் கதிரையையும் தவிர ஒரு தொலைபேசி கிடக்கிறது வெறுமனே. படம் தொடங்குகையில் அது ஒரு ஆர்ப்பாட்டமில்லாத குழந்தையைப்போல் தூங்கிக்கிடக்கும்.


இப்போது தொலைபேசியினால் அந்த ஊமை அறையின் அமைதி குலைகிறது. ஒரு அழைப்பு அது அங்கே வந்திருக்க வேண்டிய அழைப்பே அல்ல. பிறகு கொஞ்ச நேர மௌனத்துக்குப்பிறகு மறுபடியும் அழைக்கிறது. இப்போது எதிர்முனையில் ஒருத்தி. எதிர்க்குரல் யாராயிருக்கிறது என்பது குறித்த கவலைகளற்று உரையாடும் ஒருத்தி. ஆக அவள் இப்போது அழைத்திருப்பது வெறுமனே எதிர்முனையில் ஒரு குரலுக்காகத்தான். இப்படித்தான் நகரத்தின் அநேக அநாமதேய அழைப்புக்கள் நிகழ்கின்றன. யாரெனத் தெரியாத ஒருமுகத்துடன் ரகசியங்கள் திறக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களை நன்கறிந்தவர்களிடத்தில் மாய்ந்து மாய்ந்து எங்கள் வழமையான இயல்புகளை ஒழித்துக்கொண்டே அலைகிற நாங்கள் யாரேனும் நமக்கு அறிமுகமில்லா மனிதர்களெதிரில் எம் சுயம் திறக்க தயங்குவதேயில்லை. அது தான் இங்கேயும் நடக்கிறது எதிர்முனையில் குரல்தவிர்த்து வேறதுவும் அறியா அவளும் இவனும் பேசத்தொடங்குகின்றனர் விதவிதமான தொலைபேசி உரையாடல்கள் அவர்களை பிணைத்துக்கொண்டேயிருக்கிறது. அவள் அழகாககச் சிரிப்பதாக அவன் ஒரு நாள் அவளிடம் சொல்கிறாள். அவளோ அப்படி என்னிடம் சொல்லாதே என்கிறாள். இவன் அப்படி மனசில் பட்டதை சொல்லாமல் தன்னால் இருக்க முடியாது என்கிறான். அவள் தனக்கு நீ இப்படி எனக்கு விருப்பமில்லாததை பேசுகிற போது மனசுக்கு வருத்தமாயிருக்கிறது என்கிறாள். அவனோ யாருடைய மனசும் வருந்துவதைப்பற்றிய கவலைகள் எதுவும் எனக்கு கிடையாது என்னால் மனசில் பட்டதைச்சொல்லாமல் இருக்கமுடியாது என்கிறான் தீர்மானமாக. இப்போது அவள் அவனது இந்த முரண்நிலையை ரசிக்கதொடங்குகிறாள். எதிர்முனை பெண்ணாயிருத்தலே போதுமென்றிருக்கிற ஆண்களிடத்தில் இவன் வித்தியாசமானவன்தான் என்று சொல்கிறாள் அவள். அவன் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்குமென்றும் தன்னிடம் ஒரு கமரா இல்லையென்றும் இவளிடம் சொல்கிறான். தன்னிடம் பணம் வருகிறபோது தான் ஒரு மினோல்ட்டா கமரா வாங்க வேண்டும் என்கிற ஆசையையும் சொல்கிறான்.

அவனும் மின்விசிறியும் இதர பொருட்களாலும் ஆன அந்த அறை. இப்போது அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. எப்போதாவது இவன் வெளியே அலைந்துவிட்டு திரும்புகையில் தொலைபேசி குழந்தையைப்போல் வீரிட்டுக்கொண்டேயிருக்கிறது. இவன் நமட்டுச்சிரிப்புடன் மேலும் மேலும் அதனை அழவிட்டு பிறகு தூக்குவான். அந்த அழைப்பு அவளுடையதுதான் என்பதை அவன் அறிவான். அது ஒரு வகையான ஊடல். அவளது குரலில் கொஞ்சம் கோபிக்கமுடியாத பதட்டம் இருக்கும். இப்போது அவன் ஏதாவது சாட்டுச்சொல்லுவான், அவளது அழைப்புகளுக்காக தான் காத்திருக்கவில்லை என்பது போன்ற பாவனையில் பேசுவான். அதற்கு அடுத்த நாள் தொலைபேசி அழைக்காது. அந்த அறை வெறுமையால் நிரம்பும். அவன் தாங்க முடியாமல் பொறுமையின்றி இருக்கையில் நெளிவான். அவளது அழைப்புகளிற்குப்பதிலாக சிகரட் புகையினால் அந்த அறையை நிரப்புவான். கடைசி சிகரட்டின் நுனி புகைந்து கொண்டிருக்கையில் தனது மௌனத்தை கலைக்கிறது தொலைபேசி இவன் வேட்டையைத்தாக்கும் மிருகம்போலப் பாய்ந்து எடுக்கிறான் தொலைபேசியை.அவள்தான் காத்திருப்பின் வெறுமையும், தான் ஒருத்தியின் அழைப்புக்காக ஏங்குகிறோமே என்கிற அவனது வெட்கமும் கோபமாக மாற அவளிடம் சீறுவான். “என்னால் உனக்காக காத்திருக்க முடியாது. அது மிகவும் தொந்தரவாகவும் என்னைச் சிதைப்பதாகவும் இருக்கிறது” என்கிறான் அவன். அவள் தான் இனிமேல் தினமும் அழைப்பதாகச் சமாதானம் சொல்லுவாள்.


பிறிதொரு அழைப்பில் அவள் தான் ஒரு பாடல் பாடட்டுமா என்று இவனிடம் கேட்கிறாள். சம்மதிக்க பாடுகிறாள்… இவன் அந்தப்பாடலில் கரைந்து போகிறான். இவனுக்குள் உறங்கிக்கிடந்த ஏக்கங்கள் இவனைப்பிசையத்தொடங்குகின்றன. இவன் தாளமாட்டாமல் அழைப்பைத் துண்டித்து விடுகிறான். பிறகொரு அழைப்பில் இவனே மறுபடியும் அந்தப்பாடலைப்பாடச்சொல்லி கரைந்து அழுவான். ஒரு குழந்தையைப்போலவும், அவனது துயரங்களையெல்லாம் கண்ணீராய் அந்தப்பாடல் கரைப்பதைப்போலவும் அவன் அழுவான் அவளிடம் பேசமுடியாமல் தான் பிறகு பேசுவதாக இணைப்பைத்துண்டிப்பான்.

இவன் இப்போது ஒரு புதிய உலகத்துக்குள் தன்னை இழந்து விட்டவன். விட்டேத்தியாய் பற்றுகள் எதுவும் அற்று அலைந்து கொண்டிருக்கிற ஒருவன் இப்போது அவளது அழைப்புகளைப் பற்றிக்கொண்டுவிட்டான். அவற்றை நேசிக்கவும் செய்கிறான். அவளது அழைப்புகள் இல்லாத நாட்கள் இருக்கும் என்பதை அவன் இப்போது ஏற்கவும் சகித்துக்கொள்ளவும் மாட்டான். அந்த நண்பனின் இரவல் அறையில் அவனது கனவுலகம் மின்விசிறியோடு சேர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறது. வெளியூருக்கு போன நண்பன் மறுபடியும் நான்கு நாட்களில் வந்து விடுவதாக இவனிடம் சொல்கிறான். இவனுக்குள் இருக்கிற கனவுலகம் விரிசல் காண்பதை இவன் உணர்கிறான். அந்த உலகம் இரவல், அதன் நிரந்தரமின்மை இப்போது அவனுக்கு உறுத்துகிறது. அவனது இந்த ராஜாங்கத்தில் குரலால் மட்டுமே அவளைக்கொண்டுள்ளான் அவன். அவளது குரல் தவிர்ந்த வேறெதையும் அவன் அறியான். அவள் "ஏன் என் பெயரைக் கேட்க மாட்டீர்களா" என்றதற்கு "உனது குரல்தான் உன் பெயர்" என்கிறான். இப்போது அந்த குரல் ராஜாங்கம் மூழ்கப்போவதை அவன் அறிகிறான். இந்த இரவல் ராஜாங்கத்தின் காலம் முடிவடைந்து கொண்டிருப்பதை அவன் அவளிடம் சொல்கிறான். அவளோ உங்களின் இந்த ராஜாங்கம் முடிகிற அன்றைக்கு எனது தொலைபேசி இலக்கத்தை தருவேன் என்கிறாள். இவனோ இன்னும் ஒரு படிமேலே போய் நான் உன்னை நேரில் பார்க்கவேண்டும் என்கிறான். அவள் சம்மதிக்கிறாள். அவன் தன்னைப்பார்க்கிறபோது தான் அவனுக்கு ஒரு மினோல்டா கமராவைப்பரிசளிப்பதாக கூறுகிறாள். அவனுக்குள் அவனது ராஜாங்கம் காப்பாற்றப்படும் என்பதான நம்பிக்கைகள் வருகிறது. அப்போது அவள் தான் இரண்டு நாட்கள் அழைக்கமாட்டேன் குடும்பத்தோடு வெளியூர் போகிறேன் என்கிறாள். அவன் மௌனிக்கிறான், அந்த அறையும் மௌனிக்கிறது. அவளது அழைப்புகளில்லாத இரண்டு நாட்களின் மௌனத்தை அவனால் ஒருபோதும் தாங்கிக்கொள்ளமுடியாது. அவன் அறையின் சூன்யம் முகத்திலறைய அவளது குரலுக்கும் அழைப்புக்கும் ஏங்கி உழல்கிறான்.தொலைபேசி அழைக்கவேயில்லை ஒரு சவத்தைப்போல, கொடும்பிராணியைப்போல அவனது துயரங்களை விழுங்கிக்கொண்டு ஆனந்தித்துக்கிடக்கிறது.

அவன் மனசு அவளது அழைப்புகளைப் பிரார்த்தித்துக் கிடக்கிறது. மனசு முழுவதையும் அவளது அழைப்புக்களின் சங்கீதம் நிறைக்கிறது. அவன் அந்த அழைப்புக்களின் போதையில் மூழ்கிவிடவிரும்புகிறான். அவளது அழைப்புகளற்ற இந்த சூன்யத்தில் இருந்து தப்பிஓடிவிட முயற்சித்து முயற்சித்து இறுதியில் இயலாதவனாய் இயக்கமற்று அவளது அழைப்புகளைத் தவிர வேறnதையும் அறியாதவனாய் ஏங்கிக்கிடந்தான். மனசுக்குள் அவளது அழைப்புக்களின் மணி இப்போது கர்ணகடுரமாய் கொடும்இம்சையயாய் காலத்தின் கெக்கட்டமாய் ஒலிக்கத்தொடங்குகிறது. அவன் அந்த நினைவுகளைப் புறந்தள்ளப்பார்க்கிறான். மனம் அந்தப்புள்ளியில் அவனை அறைந்து இம்சிக்கிறது. தொலைபேசியின் அழைப்பின் ஒலி அவனது மனசை உலுக்கி இம்சித்து இம்சித்து உடலெங்கும் வியாபித்து உடலெங்கும் துயரத்தை நிரப்புகிறது. மனசே உடலாக அவன் தாங்கவொண்ணாமல் புரள்கிறான். அந்த அழைப்புகளின் இம்சை ஒலியினின்றும் தப்பிக்கும் முயற்சிகளில் தோற்று உருக்குலைந்து போகிறான். அந்த அறையின் தொலைபேசி எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு இருந்தது. எதையும் அவனுக்குச்சொல்லும் வழிகளெதுவும் அதனிடம் இருக்கவில்லை. அவன் தளர்ந்தான். இயலாமல் எழுந்து தீர்ந்து போய்விட்டிருக்கும் நீர்க்குவளையில் இருந்து துளிநீரைப்பருகுகிறான். இப்போது அவன் போரில் தோற்றுப்போன ஒரு ராஜாவைப் போலாகிவிட்டான்.

இப்போது மேஜைத்தொலைபேசி தன் மௌனத்தை உடைக்கிறது. அது அவள்தான். ஆனால் ஏற்கனவே குற்றுயிராய்க் கிடக்கும் அந்த அறையை உயிர்ப்பிக்க அவளது அந்த அழைப்பால் முடியவில்லை. எங்கோ குரல்களற்றவெளியில் பதுங்கிக்கொண்டு விட்ட பாடலைப்போல ஆகிவிட்டன அந்த அறையின் ஓசைகள். அவளது அழைப்பால் எதனையும் உயிர்ப்பூட்டமுடியவில்லை. அவன் அழைப்பை எடுக்கிறான் அவள் பதட்டமாய் ஏன் குரல் ஒரு மாதிரியாய் இருக்கிறது என்கிறாள் அவன் துயரச்சிரிப்பொன்றை உதிர்க்கிறான் ஏனெனில் குரல்தான் அவன் அதுதான்; அவனது உயிர். அவன் தனது ராஜாங்கம் முடிவடைந்து விட்டதாக அவளிடம் சொல்கிறான் தேய்ந்து உடைகிறது குரல். அவள் தனது தொலைபேசி இலக்கத்தை குறித்துக்கொள்சசொல்கிறாள். அவனது குரல் செத்துவிட்டது. அவளது குரல் தொலைபேசி இலக்கங்களை வெறுமனே காற்றில் இறைத்தது. அவன் தொலைபேசியை வைக்கிறான் உடல் மேசையில் சரிகிறது… அவனது குரல்ராஜாங்கம் முடிகிறது. அறை அவளது தொலைபேசி அழைப்புகளால் நிரம்புகிறது. வெளியேறிவிட்ட எதையோ நிரப்பும் முயற்சியாய்…….


02.
இது வெறுமனே தொலைபேசிக்கலாச்சாரத்தைப்பற்றிய படம் கிடையாது. இங்கே தொலைபேசி ஒருபாத்திரம். அது ஒரு நாகரீக நகர்சார்ந்த வளர்ச்சியின் அடையாளம். நகரம் எப்படி தனியன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. உறவுகளின் பிணைப்புகளினின்றும் உதிர்ந்த ஒருவனை விழுங்கிக்கொண்டு நகரம் அவனிடம் எவற்றை நிரப்புகிறது. நகரில் அலைந்து கொண்டிருக்கும் நபர்களிடத்தில். ஏழ்மையின் துயர்விழுங்க அலையும் இளைஞர்களைப் பற்றி நிச்சயமாய் இந்தப்படம் பேசுகிறது. இதன் கதாநாயகன் நிச்சயமாய் ஒரு விதிவிலக்கல்ல என்று எனக்கு தோன்றியது. வெறுமை அறையும் தனியறையில் கடத்திய எனது நாட்களை நான் அவனது நாட்களோடு பிரதியீடு செய்து கொள்ள முடிகிறது. அவன் வேலைகளெதையும் செய்யவிரும்பவில்லை என்பதும் சமூகத்தின் மீதான கோபமே. வாழ்வின் இல்லாமைகள் அழுத்தும் வாழக்கையை நகரத்தில் எதிர்கொள்கிற ஒருவன். எல்லாவற்றையும் புறக்கணிக்கிறான். காதல், கோபம் ,வேலை இப்படி தனது இயல்பின் கைகளை முறித்து அதனைவீசியெறிந்து நடக்கிறான். அவனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிற நகரத்தின் அல்லது சமூகத்திடமிருந்து இவன் எதிர்பார்ப்பதையே புறக்கணிக்கிறான். அவனது உலகமும் கனவுகளால் ஆனது அவை தூங்கிக்கிடக்கும் கனவுகள் ஒரு வறட்டுத்தனத்தில் நேசத்துக்காககவும் கவனிப்பிற்காகவும் ஏங்குகிற ஒரு தனியனின் கனவுகள். அப்படி அலைகிற ஒரு தனியனின் சிறுகனவின் வலிசொல்கிறது இராஜாங்கத்தின் முடிவு என்கிற இந்தக்குறும்படம்.

எப்போதும் மனித மனம் அன்புசெய்யப்படுவதற்காக காத்திருக்கிறது. யாரையும் நேசிக்காத அல்லது அவ்வாறு காட்டிக்கொள்கிற மனிதனின் ஆழ்மனசில் யாரலாவது தான் நேசிக்கப்படமாட்டோமா! என்கிற நினைப்பு சதா உருண்டுகொண்டேயிருக்கிறது. ரவியும் அப்படிப்பட்ட ஒருவன்தான். இந்த நகரங்களில் அலைந்து கொண்டிருக்கும் இளைஞர்களின் ஒருபிம்பம் ரவி. தனிமை ஒருவனை செதுக்குகிறது. யாரோடும் பகிர்ந்துகொள்ளமுடியாத துயரங்களை மனசுக்கள் இறுக்கியபடியே இருக்கிறது. துயரங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நேரமில்லாததாய் ஆகிவிட்டிருக்கிறது வாழ்க்கை.

ரவிக்குத்தெரியும் இந்த உலகம் துயரங்களால் நிரம்பியதென்று. அது ஏதிலிகளிற்கு எதையும் தருவதுமில்லை அவர்களை ஏற்றுக்கொள்வதமில்லை. அவன் போட்டுக்கொண்டிருப்பது வேசம். எதனையும் புறக்கணிக்கிறவேசம். சாதிக்கவேண்டும் என்று எல்லாவற்றின் மீதும் இருக்கிற ஆசையை புறக்கணிப்பு என்கிற போர்வையால் போர்த்திக்கொண்டிருக்கிற வேசம். எதனைப்பற்றியும் எனக்கு கவலைகள் கிடையாதெனச்சொல்வது தப்பிக்கும் அவனது வழிகளில் ஒன்று. உண்மையில் ரவி பற்றிக்கொள்ள எதையாவது தேடுகிறான் அவன் மனம்விரும்பியபடி ஆனால் கிடைப்பதென்னவோ வெறுமைதான். எதிர்பார்ப்புகளும் கனவுகளும் நிறைந்ததுதான் அவனது வாழ்க்கையும் எல்லாரையும் போலவே நமக்குள்ளும் நிறையரவிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நகரச்சூழலில் தனித்துவசிக்கிற மனங்களின் கண்ணாடி அருள்எழிலன் இயக்கிஇருக்கிற இந்தப்படம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு முந்தைய இந்தியாவில் பிறந்தமிகச்சிறந்த உருது மொழி கலைஞன் சதத் ஹசன் மண்டோவின் சிறுகதையை தழுவிஎடுக்கப்பட்டிருக்கிறது.

தனது கனவுகளை அடையும் வழிகள் ஏற்கனவே இந்த நியாயமற்ற மனசற்ற சமூகத்தின் கரங்களால் அறைந்து சாத்தப்பட்டிருபதை தாங்கமுடியாமல் உங்ளுக்குள் புழுங்கிக்கிடக்கிற ஒருவனது வலிமிகஅற்புதமாக வெளிப்படுகிறது. அந்த புழுக்கம்தான் அவனது புறக்கணிப்பு. அவன் தனக்கு ஒரு காதலிகிடைத்தால் தனதுவாழ்க்கையே மாறிவிடும் என்கிறான்.இந்த சமூகத்தின் எல்லாவற்றையும் ஜீரணித்துக்கொண்டு ஐக்கியமாகிவிட அவன் தயாராகத்தான் இருக்கிறான். ஆனால் காதலைக்கூட அவளிடம் தான் சொல்ல மாட்டேன் அவளாகவே வந்து சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அவனுக்கு பயம் தொடர்ச்சியான புறக்கணிப்புகளால் ஏற்பட்ட பயம். மேலும் மேலும் தொடர்ச்சியாக புறக்கணிப்புகளை சம்பாதித்து விட அவனுக்கு விருப்பம் கிடையாது அதனால் அவன் எதையும் நெருங்குவதுமில்லை. எல்லாவற்றினின்றும் ஒதுங்கியிருக்கிறாள். இப்படித்தான் நிறையப்பேர் துவண்டு போயிருக்கிறார்கள். நகரத்தின் அன்பற்ற பெரும்சிக்கி தூக்கிஎறியப்பட்டவனின் மனோநிலை இது. புறவாழ்வு சுயங்களைச்சாப்பிட்டுவிட வெறும் கூடாகிய நிலை. அப்படிப்பட்ட பாத்திரம் தான் ரவி அவனுக்கு பற்றிக்கொள்ள கிடைக்கிற ஒரு வாய்ப்பில் அவன் உடைந்து போய்விடுகிறான் அவன் ஏங்கியது அவனுக்கு கிடைக்கிறபோது அவன் அதை இறுகப்பற்றிக்கொள்கிற மனோநிலைக்கு வருகிறான். சிறு பரிவும் அவனை உருக்குலைத்து சிதைத்து அவனைத் தின்றுவிடுகிறது. இது ரவிக்கு மட்டுமல்ல நிறையப்பேருக்கு நிகழ்கிறது. அன்றாடம் புறவிழிகளுக்கு புலப்படாத நிறைய ரவிகளின் ராஜாங்கம் முடிவடைந்துகொண்டேயிருக்கிறது.


குறைந்த வசனங்களாலும். அளவான நடிப்பாலும் (ஒருசில இடங்களைத்தவிர) இந்த குறும்படத்தை நடித்து இயக்கி செதுக்கியிருக்கிறார் இயக்குனர் டி.அருள்எழிலன். ஒரு பத்ததிரிகையாளரான அருள்எழிலன் ஒரு தேர்ந்த இயக்குனராகவும் நடிகராகவும் நிச்சயமாக ஒரு அற்புதமான படைப்பை கொடுத்திருக்கிறார். சுயவாழ்வின் கண்ணாடியாய் நம்பிம்பங்கள் தெரியும் தமிழின் சிறந்த குறும்படங்களில் ஒன்று, அருள்எழிலன் இயக்கிய இராஜாங்கத்தின் முடிவு.
இயக்குனர் பற்றி
அடிப்படையில் ஒரு பத்திரிகைக்காரரான இக்குறும்படத்தின் இயக்குனர் அருள்எழிலன். ஆனந்தவிகடன் வார இதழில் பணியாற்றுகிறார். அவர் தனது படைப்பு குறித்து இப்படிச்சொல்கிறார்.
"ம‌னித‌னின் பிற‌ப்பிற்கு எவ்வித‌ கார‌ண‌ங்க‌ளும் எப்ப‌டி இல்லையோ அப்ப‌டித்தான் ம‌ர‌ண‌மும் அதுவும் கார‌ண‌ங்க‌ள‌ற்ற‌து. நக‌ர‌ம் எப்போதும் இசைக்கும் மாய‌ப்புல்லாங்குழ‌லின் இசையில் க‌ன‌வுக்கும் வாழ்வுக்கும் இடையில் ந‌ட‌க்கும் போராட்ட‌ம‌ல்ல‌ அனுப‌வ‌மே இந்த‌ ப‌டைப்பு.."


குறும்படத்தின் இயக்குனர் டி.அருள்எழிலன்

குறும்படத்தை இணையத்தில் பார்க்க

6 comments:

ரூபன் தேவேந்திரன் said...

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் அகிலன். குறும்படத்தை நான் பார்க்காவிட்டாலும் ஒரு சித்திரத்தை வரையக்கூடியதாய் இருக்கிறது அது பற்றிய உங்கள் பார்வை. வாழ்த்துக்கள் உங்களுக்கும் இயக்குனர் டி.அருள்எழிலனுக்கும்..

Anonymous said...

அகிலன்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வந்து சிறப்பான விமர்சனமொன்றைப் பதிவுசெய்துள்ளீர்கள்.

பஹீமாஜஹான்

Anonymous said...

விரிவான பதிவு. நன்றி.

சினேகிதி said...

படங்களைப் பார்த்துவிட்டு இன்னொரு மரணம் என்று நினைத்துவிட்டேன்...சாரத்தில் படும் வெளிச்சத்தை மின்னொழுக்கால் ஏற்பட்ட தீ என்று நினைத்து வாசிக்கலாமா வேண்டாமா என்று யோசிச்சன்...இணையத்தில் இந்தக்குறும்படம் இருந்தால் இணைப்புக்கொடுக்கவும்.

த.அகிலன் said...

மேலே இணைப்பு கொடுத்திருக்கிறேன் சினேகிதி முழுமையாக பார்க்கமுடியுமா என்று தெரியவில்லை.

து.மது said...

/* யாரெனத் தெரியாத ஒருமுகத்துடன் ரகசியங்கள் திறக்கவே நாங்கள் விரும்புகிறோம். எங்களை நன்கறிந்தவர்களிடத்தில் மாய்ந்து மாய்ந்து எங்கள் வழமையான இயல்புகளை ஒழித்துக்கொண்டே அலைகிற நாங்கள் யாரேனும் நமக்கு அறிமுகமில்லா மனிதர்களெதிரில் எம் சுயம் திறக்க தயங்குவதேயில்லை. * /

ம்ம்ம்ம்ம்ம்.........

உண்மைதான்....அருமையான பதிவு