Tuesday, June 26, 2007

மரணத்தின் வாசனை - 05

செய்தியாக - துயரமாக - அரசியலாக..


02.11.2006 அன்று கிளிநொச்சியில் நடத்தப்பட்ட
விமானத்தாக்குதலில் ஒரேநாளில் பலியாகிய அந்த ஜவர்.

01.

நானும் அவனும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம். அவன் அதைப்பற்றி பேச்செடுத்து விடக்கூடாதே என்று நான் யோசித்துக் கொண்டிருந்தேன். எதையெதையெல்லாமோ பற்றிப் பேசினேன். தேவையானது தேவையில்லாதது எப்படி இன்னும் இன்னும் தொடர்பற்று உரையாடலை நிகழ்த்திச்செல்வது என்பது பற்றி நான் உள்ளுர யோசித்துக் கொண்டிருந்தேன். அவன் மறுபடியும் மறுபடியும் வாயுன்னிக்கொண்டிருந்தான். நான் கவனிக்காதவனைப்போல தவிர்க்க முயன்றேன். எனக்கே என்மீது ஆத்திரம் வந்தது. அவனது துயரங்களை குமுறலை யாரிடமாவது கொட்டவேண்டும் என்கிற வேட்கையை நான் நிராகரித்துக் கொண்டிருக்கிறேன் என்கிற குற்வுணர்வு என்னை கேள்விகளால் துளைத்தது.

ஆனால் அதை என்னாலும் தாங்கமுடியுமா? அவன் ஆரம்பித்த பின்னால் நான் நிதானமாக அவனை ஆற்றமுடியமா என்ற கேள்விகளுக்கெல்லாம் என் மனம் இல்லை என்ற பதிலையே சொல்லிக் கொண்டிருந்தது. அவன் தேவையற்ற மரணங்களின் பிரநிதியாக இருந்தான்.

மரணம் தன் சார்பாக எதையாவது விட்டுச்செல்லவே விரும்புகிறது. துயரம் அழுகை நினைவுகள் இப்படி எதையாவது மரணத்தின் தொடர்ச்சியாக நம்மிடையே விட்டுச்சென்று விடுகிறது. "சாட்டில்லாமல் சாவுகிடையாது" என்று பழமொழி மாதிரி ஒன்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் வாழ்ந்து விடவே துடிக்கிறோம். இந்த உலகத்தின் அத்தனை சுவைகளையும் நுகர்ந்து முடித்து விட்ட பின்னரும் ஜப்பான் நாட்டுக்காரன் மாதிரி நூறுகளைத்தாண்டிய கனவுகள் நம்மிடையே எழுந்து கொண்டுதானிருக்கின்றன.

மரணமும் அதுகுறித்தான பயமும் அறியப்படாத ஒரு ரகசியச்சுவை போல நம்மிடையே கலந்திருக்கிறது. யாரும் தாண்டிவிடவிரும்பாத சுவரைப்போலவும்….

இயற்கை மரணத்துக்குள்ளும் தற்கொலை மரணத்துக்கும் இடையிலான ஏதோ ஒரு கொலையின் பின்னரான உணர்வு அவன் கண்களில் வழிந்து கொண்டிருந்தது. கடைசியில் பீறிட்டுக்கிளம்பிய அவன் வார்த்தைகள் என்மீது வீழந்து அழுத்தின. நான் கேட்டுக்கொண்டேயிருந்தேன் அமைதியாக..

அவன்
ஒரு மாமியை
இரண்டு தம்பிகளை
ஒரு பெரியப்பாவை
ஒரு சித்தப்பாவை…..
ஒரே கணத்தில் இழந்துபோனான்.

ஒரு போதும் சிறீலங்கா வான்படைக்கும் அவைகள் வீசிய 18 குண்டுகளுக்கும் அவனுக்கும் ஒரு பகையும் இருந்தது கிடையாது. மரணம் அவர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. மரணத்தின் வாசனை 18 குண்டுகளாய் கிளிநொச்சியின் அந்த திருவையாறுக் காணியின் வளவை மீறி எழுந்தபோது.

அவன்
ஒரு மாமியை
இரண்டு தம்பிகளை
ஒரு பெரியப்பாவை
ஒரு சித்தப்பாவை…..
இழந்துபோயிருந்தான்.
18 குண்டுகளும் வீசப்பட்ட சிலமணிநேரங்கிளுக்குள்ளே அந்த மனிதர்களின் மரணத்தின் வாசனை உலகமெங்கும் பரவுகிறது.

செய்தியாக…
தகவலாக….
அரசியலாக….
துயரமாக……

அவனுக்கு
ஒரு மாமியின்
இரண்டு தம்பிகளின்
ஒரு பெரியப்பாவின்
ஒரு சித்தப்பாவின்…

இழப்பு தொலைபேசிகளில் சொல்லப்பட்டது. வழமையான மரண அறிவிப்பு பண்பாட்டின் படி அவனுக்கும் இப்படித்தான் சொல்லப்பட்டது.

உங்கட மாமிக்கு காயம்….
என்ன நடந்தது
கிபிர் அடிச்சதில….
அடிச்சதில..
என்னதான் நடந்தது எண்டு சொல்லுங்கோ?
மாமி செத்துப்போனா
ஐயோ…….

மரணத்தின் வாசனை கிளிநொச்சியின் திருவையாற்றுக் காணியில் இருந்து பிரான்ஸ், யேர்மனி, லண்டன் என்று தொலைபேசியின் வழி கசிந்து கொண்டிருந்தது. திருவையாறுக் காணியில் 18 குண்டுகளும் கிண்டிய கிணறுகள் கிளறப்பட கிளறப்பட காணிமுழுவதும் எழுந்த புகை மூட்டம் அடங்கிப்போகபோக அந்த ஐந்து மரணங்களும் ஒன்றன் பின் ஒன்றாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.

தொலைபேசிகள் உலகமெங்கும் அவர்களது உறவுகளின் வீடுகளில் அலறி அலறி மரணத்தை அறிவித்தன. மரணம் கிரிக்கெட் ஸ்கோரைப்போல அறிவிக்கப்பட்டது.

ஒரு மரணத்துக்காக அழுது கொண்டிருக்கையில் அடுத்தது அறிவிக்கப்பட்டது. அதற்கும் சேர்த்து அழத்தொடங்குகையில் அடுத்த மரணம் அறிவிக்கப்பட்டது. இப்படி வரிசையாக ஜந்து மரணங்கள் அறிவிக்கப்பட்டன. யாருக்காக அழுவது எவரை நினைவுகொள்வது எவனது மரணத்துக்கு சாட்டுச்சொல்வது யார் யாரை ஆறுதல் படுத்துவது என்று திணறிக்கொண்டேயிருந்தார்கள்.

அவன் பேசிக்கொண்டும் அழுதுகொண்டும் இருந்தான். நான் நினைவுகளை வேறுபக்கம் அலையவிட முயற்சிசெய்தேன். அவனது துயரம் என்னில் கவிந்து என்னையும் அழுத்துவது போலிருந்தது. நான் அவனோடு பழகிய இத்தனை வருடங்களிலும் அவன் இத்தனை துயரமாயிருந்து நான் பார்த்ததில்லை. அவன் இதற்கு முன்பு அழுததே இல்லையென்றில்லை என்முன்பாக அழுதிருக்கிறான் ஆனால் அந்த துயரங்கள் இத்தனை அடர்த்தியானதாக இல்லை. இப்போது அவனது துயரம் என்மீது கவிந்து மூடியது.

02.

இறந்து போன மனிதர்கள் எல்லாரையும் எனக்கு தெரிந்திருந்தது. அவனுக்கும் அவர்களுக்குமான உறவுநிலைகள் அதன் ஆழங்கள் பிரச்சினைகள் பாசங்கள் குறித்து எனக்கு நேரடியாகவோ அல்லது அவன் சொல்லுகிற கதைகள் மூலமாகவோ பரிச்சயமாயிருந்தது.

எனக்கு ஞாபகமிருக்கிறது வவுனியாவில் நானும். அவனும் இப்போது இறந்துபோன மாமியின் வீட்டிற்கு ஒரு முறைபோயிருக்கிறோம். ஒரு சிறிய அறை ஞாபகம் வைத்துக்கொள்வது அவ்வளவு கடினமாயிராத பத்துக்கு எட்டு அளவான ஒரு அறை. அதற்குள்ளேயே சமையல் படுக்கை என்று வாழ்ந்து கொண்டிருந்தார். அவரது அறையில் பூசைப்பொருட்களே அதிகமிருந்தன. நாங்கள் போகும்போதும் அவனும் நானும் கட்டிலில் ஏறி இருந்துகொண்டோம் மாமி பூசை செய்து கொண்டிருந்தா அறைமுழுதும் நிரம்பிய சாம்பிராணிப்புகையை நான் கஸ்டப்பட்டு சமாளித்துக் கொண்டிருக்க வேண்டியிருந்தது கொஞ்சநேரம்…. பிறகு மாமி ஊத்தித் தந்த நெஸ்கபே சமாளித்துக் கொண்டிருந்ததற்கான பிரயோசனம் என்று நினைக்குமளவுக்கு அற்புதமாயிருந்தது.

அவன் அவனது அம்மாவைவிடவும் மாமியைப்பற்றி அதிகம் என்னோடு பேசுவான். மாமிமட்டும் தான் ஒரே ஒரு கட்டுப்பாட்டாளராக இருந்தார் அவனுக்கு. நான் மாமியுடனான அந்த வவுனியா சந்திப்பின்போது அவன் ஏற்கனவே அவனது மாமியைப்பற்றி சொன்னவைகளை வைத்தும் இப்போது நான் காண்கிற உருவத்தை வைத்தும் அவாவைக் குறித்த ஒரு தீர்மானத்தை உருவாக்கமுயன்று கொண்டிருந்தேன். இறுதியில் மாமிதான் அவர்கள் பரம்பரைக்கே கட்டுப்பாட்டாளர் என்கிற தீர்மானத்துக்கு வந்தேன். அதற்குப்பிறகு ஒரிரண்டு தடைவை நான் அவாவை நேரிலே கண்டிருக்கிறன்.

இப்போது அந்த மாமி செத்துப்போய்விட்டா. என்ற போது எனக்குள்ளும் ஏதோ நெருடுவது தவிர்க்க முடியாதிருந்தது.

ஆனால் எனக்கு அவனது சித்தியை நினைக்கும் போதுதான் கவலையாக இருந்தது. கிளிநொச்யில் கண்டபடி சுத்தித்திரிந்த கட்டாக்காலிக் காலத்து இரவு நேரத்தில் அவளது கையால் சாப்பிட்ட புட்டும் முட்டைப் பொரியலும் திடீரென என் கைகளில் மணப்பது போலிருந்தது. வெக்கப்படாம சாப்பிர்ராப்பா சித்தப்பாவின் குரல் காதுகளில் இரைந்தது. அவர் செத்துப்போனாரா?

சித்தி ஒரே நேரத்தில் தனது கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்து போனா எப்படி தாங்கிக்கொண்டா இந்த வேதனையை. எனக்கு என் அம்மாவின் நினைப்பு வருகிறது அப்பா செத்தவுடன் அம்மா எப்படி இருந்தா? இந்த சமுதாயம் விதவைகளை எப்படி கையாள்கிறது? அப்பா செத்தவுடன் அம்மாவுக்கு சாவுவீட்டுக்கு வந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள். "உனக்கென்ன பத்துவயது பாலன் பஞ்சம்" பிள்ளையள் வளந்திருவாங்கள் கவலைப்படாத என்று….. நான் யோசித்தேன் அம்மாவுக்கு அவரது பிள்ளைகளாவது இருந்தோம் ஆனால் அவனது சித்தி தனது பிள்ளைகளயும் இழந்து போனாள் அவள் எதை நினைத்து ஆறுவது. தான் விதவையாகிப்போனதை நினைத்தா இரண்டு பிள்ளைகளும் ஒரே குண்டில் பலியாகிப்போனதை நினைத்தா?

அவனது தம்பிகளோடு நான் நட்பாயிருந்தேன் யாழ்ப்பாணத்தில போய்படிச்சாத்தான் பெரிசா படிச்சு கிழிக்க முடியம் என்று பெரியம்மாவிடம் சொல்லி நான் யாழ்ப்பாணத்தில ராஜா தியட்ரிலயும், மனோகரா தியட்டரிலயும், நாதன் தியட்டரிலயும் படிச்சது போக மிச்ச நேரத்தில சயன்ஸ்கோலில போய் இருந்துவிட்டு எழும்பி வந்த காலங்களில் அவர்கள் எனக்கு நட்பானார்கள் அல்லது நெருக்கமானார்கள்.

செத்துப்போன அவனது தம்பிகளை அந்த சித்தியின் மகன்களை நான் நண்பர்களாகப் பார்த்திருக்கிறேன். சசி, விஜி இருவரும் அண்ணன் தம்பிகள் அவர்கள் அண்ணனும் தம்பியும் மாதிரியும் கிடையாது நண்பர்கள் மாதிரியும் கிடையாது இரண்டும் கலந்த கலவையாக இருந்தார்கள். அவர்களோடு யாழ்ப்பாணத்துக்கு கடைகளில் குடித்த ஒரு கோப்பை தேனீரோ ஒருவேளை சாப்பாடோ மறுபடியும்; நினைவுக்கு வந்து புரையேறுகிறது எனக்கு.

பெருமாள் கோயிலடி வீட்டில் ஒரே அறையை நானும் அவர்களும் பங்கிட்டு கொண்ட தருணங்கள் என்னையும் மீறி கண்களை நனைக்கிறது. 18 வயது எங்காவது சாகிற வயதா? எனக்கு ஞாபமிருக்கிறது சசியை நாங்கள் பி.பி.சி என்றழைப்பது. யார் எந்தப்பெட்டையை பார்க்கிறான்? எவள் எவனுக்கு ஓமெண்டவள்? எங்க சந்திக்கிறவங்கள்? எந்தவாத்தி யார் யாருக்கு பேசனல் கிளாஸ் எடுக்கிறது? போன்ற அதிமுக்கியமான தகவல்களை கைவசம் வைத்திருப்பதும் அதை கேட்கும் போது துல்லியமாக தருவதிலும் சசி திறமையானவனாக இருந்தான். அதனால் நாங்கள் அவனை பி.பி.சி என்று கூப்பிடுவது. இதில் இன்னொரு விசயம் இருக்கிறது அவனுக்கு பி.பி.சி என்று பட்டம் வைச்சதே அவனது தம்பி விஜி தான். கடைசியாக அவர்களது மரணம் பி.பி.சி யிலும் அறிவிக்கப்பட்டது. வாழ்க்கை சுற்றிச்சுற்றி வருகிறது என்று தோன்றியது.

நான் எதிரே அமர்ந்திருக்கும் அவனைப்பார்த்தேன். அவன் ஓய்ந்து போயிருந்தான்.

எல்லோருக்கும் கடைசிநேரம் சவக்கோலத்தை பார்த்து விடுவது என்பது ஒரு திருப்தி கரமான விசயமாக இருக்கிறது. கடைசியாக ஒருக்கா முகத்தை பார்த்துவிடுவது என்பதும், அவர்கள் நேசித்த உடலை கண்ணுக்குள் வைப்பதும் யாவருக்கும் பிரியமான ஒருசெயலாயிருக்கிறது. நான் நினைத்தேன் மனிதன் உடலாகவே அறியப்படுகிறான். கறுப்பாய், ஒல்லியாய், குண்டாய் எனஅவனது உடலையே நமது நினைவுககள் முதலில் கொண்டாடுகின்றன. உடல்சார்ந்தே அவனது பிறநினைவுகளும் வாழ்கின்றன அந்த உடலின் பிரநிதியாகவே ஒரு மனிதன் குறித்த நினைவுகள் நமக்குள் தங்கிவிடுகின்றன. அதனால் அந்த உடலை கடைசியாக பார்த்து விடவேண்டும் என்று துடிக்கிறோம்….

அவன் இப்போது அந்த மனநிலையிலே இருந்தான். அவர்களது உடல்களைத் தன்னால் போய்ப்பார்க்க முடியவில்லையெ என்ற குமுறல் அவனிடமிருந்து. அவர்களது இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்ளமுடியாதபடி ஏ-9 சாலை பூட்டப்பட்டிருந்தது. சே என்ன நாடு ஒரு செத்தவீட்டுக்கு உறவுகள் போய் அழுது ஆறுதல் கொள்ளமுடியாத கேவலமான நாடு அவன் எல்லோரையும்போல கடைசியாக அவர்கள் முகத்தை பார்க்கமுடியவில்லையே என்கிற கவலையில் பேசிக்கொண்டிருந்தான். நான் மௌனமாக வெறித்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன் அவனது கவலை மெல்ல மெல்ல கோபமாக மாறிக்கொண்டிருந்தது….

2 comments:

நளாயினி said...

kadavule.

Anonymous said...

Nice, Please try to tell by short stories about foriegn tamil's problems..., presures..., life style... and young generations....

for eg:from sriprashanthan..

Singaththai Punara
Singamai maara
Singaththai pera
Maruththa 'Kavarimaankal'
Pulam peyarnthu
Karadiyai Punarnthu
Karadiyai Pettu
Karadiyai maarum
Nitharsanam..!!