Friday, June 23, 2006

ஒரு பிரகடனத்தின் எதிர்வினை



நண்பர்களே அடிக்கடி அரசபடைகளின் கிபிர் விமானங்கள் குண்டு போட்டும் போடுவதாய் மிரட்டியும் கொண்டிருக்கும் போர் தொடங்குமா தொடங்காதா என்றெல்லாம் கணக்குப் போடுகிற அரசியல் தெரியாத அப்பவிச்சனங்களின் பிரதிநிதியாய் வன்னியில் இருந்து வருகிறது இந்தக்கவிதை ஒரு இனத்தின் வாழ்வு இப்படித்தான் இருந்தது.இருக்கிறது...
- த.அகிலன்



எங்களுடைய
புன்னகையை சந்தேகிக்கும்
எல்லோருக்கும் சொல்கிறோம்…….

எங்கள் கடல்
அழகாயிருந்தது
எங்கள் நதியிடம்
சங்கீதமிருந்தது
எங்கள் பறவைகளிடம் கூட
விடுதலையின் பாடல்
இருந்தது…..
எங்கள் நிலத்தில்தான்
எங்கள் வேர்கள் இருந்தன…
நாங்கள் நாங்கள் மட்டும்தான் இருந்தோம்
எம்மூரில்…

அவர்கள்
எங்கள் கடலைத்தின்றார்கள்…
அவர்கள்தான்
எங்கள் நதியின் குரல்வளையைநசித்தார்கள்…
அவர்கள்தான்
எங்கள் பறவைகளை வேட்டையாடினார்கள்……..
எங்கள் நிலங்களைவிட்டு எம்மைத்துரத்தினார்கள்
அவர்கள்தான்
எங்கள் குழந்தைகளின் புன்னகைகளை
தெருவில் போட்டு நசித்தார்கள்…..



நாங்கள் என்ன
சொல்வது
நீங்களே தீர்மானித்து
விட்டீர்கள்
நாங்கள் மனிதர்கள் அல்ல என்று……

எங்கள்வயல்கள்
பற்றி எரிகையில்
எங்கள் நதிகளில்
எம் தலைகளைக்கொய்த
வாட்கள்
கழுவப்படுகையில்நீங்கள்
எங்கிருந்தீர்….

எப்போதுமிருக்கும்
பச்சை வயல்வெளியை
ஒற்றைப்பனை மரத்தை
தெருப்புழுதிக் கிளித்தட்டை
ஊர்க்கோயிலை
என்
பாட்டியின்
ப+ர்வீகக் கிராமத்தையும்
அதன் கதைகளையும்
இழந்து நாங்கள்
காடுகளில்
அலைகையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்

சப்பாத்துக் கால்கள்
எங்கள்
குரல்வளையில் இருக்கையில்
எம் பிள்ளைகள்
வீதியில
துடிதுடித்து அடங்குகையில்
துப்பாக்கிகளின்சடசடப்பு
ஊருக்குள் வருகையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்






நாங்கள்
ஊர்பிரிந்து வருகையில்
உயிர் தெறித்து விழுகையில்
கண்ணீர் பிரியாத துயரம்
எம்மைத் தொடர்கையில்
நீங்கள் எங்கிருந்தீர்கள்

நாங்கள் பசித்திருந்தோம்
நாங்கள் பயமாயிருந்தோம்
நாங்கள் விழித்திருந்தோம்
நாங்கள் விக்கித்து
வேறு வழியின்றி
மூர்ச்சித்துச் செத்தோம்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

எப்போதும்
எங்கள் கனவுகளைத்
துப்பாக்கிகள் கலைத்தன
குண்டுகள் விழுந்தமுற்றத்தில்
பேரச்சம் நிறைய
நாம் தனித்தோம்
நாம் தவித்தோம்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

ஊரோடு கிளம்பி
நாவற் குழியில்
நசுங்கிச் செத்தோமே
நவாலியில் கூண்டோடு
நாய்களைப்போல்
குமிந்த எம் உடல்களின் மேல்
நாம் கதறி அழுகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்







நாம்
வேர்களை இழந்து
ஊர் ஊராய்
அலைகையில்
துர்க்கனவுகளில்
துப்பாக்கிகளைக்கண்டு
எங்கள் பிள்ளைகள்
திடுக்கிட்டு அலறுகையில்
எங்கள்
பள்ளிக்கூடத்தில்
குண்டுகள் வீழ்கையில்
ஒழுகும் கூரையில்
எம் குழந்தையின்
கொப்பி எழுத்துக்கள் கரைகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்


நாங்கள் எங்கள்
பனைமரங்களைவிட்டு துரத்தப்படுகையில
தெருப்புழுதி
எங்கள் பாதங்களில்
ஏறிவர
பாதங்களின்
சுவடுகளேயறியாக்
காடுகளிற்குள்
நாம்
துரத்தப்படுகையில்
காடுகளில்
எங்கள் குழந்தைகளின்
புன்னகை
மழையில் நனைகையில்
மலேரியாவில் சாகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

சப்பாத்துக்கள்
எங்கள் முற்றத்தை மிதிக்கையில்
உறுமும் வண்டிகள்
எங்கள் வேலிகளைப்பிரிக்கையில்
துப்பாக்கிகளின் குறி
எம்மீது பதிகையில்
உயிர் ஒழித்து
நாங்கள்
ஊர்விட்டோடுகையில்
அப்போது நீங்கள் எங்கிருந்தீர்

எங்கள்
நதியின் சங்கீதம்
துப்பாக்கி வாய்களில்
சிக்கித் திணறுகையில்
கடலின் பாடலை
அவர்கள் கைது செய்தபோது
எங்கள் குழந்தைகளை
அவர்களின் வாட்கள்
இரண்டாகப்பிளக்கையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்


ஊரில்
கந்தகம் மணக்கையில்
வானில்
மரணம் வருகையில்
வயலில் அவர்கள்
மரணத்தை விதைக்கiயில்
வரம்புகளில் உடல்களைக்கிடத்தையில்
ஊரைப்போர் விழுங்கையில்
ஊர் ஊராய்
நாம் அலைகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

எங்களுடைய
தெருக்களில் சருகுகள்
நிறைகையில்
குருவிகளின் குரல் சப்பாத்துக்கால்களில்
நொருங்கித்தேய்கையில்
மனிதர்களின்
சுவடுகளேயறியா
இடங்களிற்கு நாம்
துரத்தப்படுகையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்

உறைந்துபோய்க்கிடக்கும்
எங்கள் குழந்தைகளின்
புன்னகையை
குரல்களற்று அலையும்
ஊர்க்குருவியின் பாடலை
பச்சையற்றெரியும்
எங்கள் வயல்களின் பசியை
பேனாக்களை இழந்த
எங்கள் குழந்தைகளிடம்
இருந்து துப்பாக்கிகளை
மீட்கமுடியாமல்
நாங்கள் தத்தளிக்கையில்
அப்போது
நீங்கள் எங்கிருந்தீர்



எங்களுடைய
புன்னகையை சந்தேகிக்கும்
எல்லோருக்கும் சொல்கிறோம்…….



முகவரிகளற்றுத்
தேசங்களில் அலையும்
உறவுகளின் முகங்களை
மாற்றங்கள் அற்றுப்போன வாழ்வின் சுவையை
மறுபடியும்
தரமுடியுமா உம்மால்?

அப்போதெல்லாம்
நாங்கள் ஏன் தனித்தோம்
உலகே
எங்கள் உணர்வுகளி;ன் வலி
எட்டவில்லையா உனக்கு
எம்மூரின் நதியின் சலசலப்பில்
வருடும் தென்றலின் தழுவலில்
ஒவ்வொரு ப+வின் முகத்திலும்
விடுதலையின் விருப்பு மிளிர்கிறதே
தெரிகிறதா உனக்கு

நாங்கள் கனவுகள் சுமக்pறோம்
எங்களிடம்
மிச்சமிருக்கும்
சுதந்திர உணர்வுகளின் மீது
எங்கள் கனவுகளைக் கட்டியெழுப்புகிறோம்
நிறங்களற்றுப்போன
இவ்வாழ்வின் நிறம்தருவார் யார்?

- சஹானா

4 comments:

முபாரக் said...

உலகின் மகத்தான கவிஞர்களின் கவிதைகளுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத வரிகள்.

உங்கள் கேள்விகள், சுகவாழ்வு சுகித்துக்கொண்டு ஏளனம் செய்தும், வெட்டிப்பேச்சு பேசி, தீர்வுகள் சொல்லிக்கொண்டுமிருப்பவர்களின் எருமைத்தோலுக்கு உரைக்குமா?

Shanmugampillai Jayapalan ஜெயபாலன் V.I.S.Jayapalan said...

நன்றி அகிலன். இன்னும் கொஞ்சம் பட்டை தீட்டப் பாடக்கூடிய வைரம்
வ.ஐ.ச.ஜெயபாலன்

Chandravathanaa said...

கவிதை அருமை.
ஒலிப்பதிவைக் கேட்க முடியவில்லை.

த.அகிலன் said...

flash player வேண்டும் எனநினைக்கிறேன். சந்திரவதனாக்கா இருந்தும் வேலை செய்யாவிட்டால் சொல்லுங்கள்.