Saturday, September 30, 2006

மீறல்


நிழலுருவில் வசந்தம்
நிஜம்
ஒளியின் எத்தொலைவிலோ

ஒளியின் தொலைவை
விரட்டும் என்காலம்
வழிநெடுக
இருளின் கரங்கள்
என் விழிமறைக்கும்

என்வயசையும்மீறி
மனம் கொதிக்கும்
அதன்தகிப்பில்
என் கரம் எரித்து
ஒளி படைத்தேன்

உயிர் உருக்கி
வழி கடந்தேன்
வலியையும்...

இருள்சொன்னது
நீ வயசுக்கு மீறியவன்
நான் சொன்னேன்
இன்னும் இருக்கிறார்கள்
வயசுக்கு மீறியவர்கள்..

த.அகிலன்

Wednesday, September 27, 2006

மரணத்தின் வாசனை - 02

உருகித்தீர்ந்த ஒரு மெகுவர்த்தி


சந்தையில் வியாபாரம் கொடிகட்டிப்பறந்தது இரைச்சல் காதைப்பிளந்தது

ஓருவன் தலைதெறிக்க ஒடிவந்தான். நண்பா நண்பா

மற்றவன் என்னடா? என்கிறான்.

நான் இந்த சந்தையில் மரணதேவதையை பார்த்தேன். அவள் என்னைப்பார்த்து நக்கலாக சிரிக்கிறாள் நீ உன் குதிரையைக்கொடு நான் பக்கத்து நகரில் ஓடிஒளிந்து கொள்கிறேன் என்றான்.(குதிரையை அபேஸ் பண்ண பார்க்கிறானோ)

இவன் உடனடியாக குதிரையைக் கொடுத்தான். அவன் அடுத்தநகரை நோக்கி ஓடினான்.

சிறிது நேரத்தில் மரணதேவதையை இவன்கண்டான்.

அவளிடம் “என்ன என் நண்பனை பார்த்து நக்கலாக சிரித்தாயாமே” என்றான்.

மரணதேவதை சொன்னாள் “சீ சீ நான் அவனை பக்கத்து நகரில் தானே சந்திக்க வேண்டும் என்ன இங்கே நிற்கிறான் என்று சிரித்தேன்” என்றாள்.

மரணதேவதையை பார்த்து தலைதெறிக்க ஒட எல்லாரும் தயாராக இருக்கிறோம். யாராவது அவளைக்காதலிக்க தயாரா? அல்லது வா வா என்று அவளுக்கு விருந்து வைக்கவும் யார் தயார்.

மரணதேவதையை விருந்துக்கு அழைத்தவனைப்பற்றி அவளை ஒரு சாதாரணப்பெண்ணாகப் பாவித்தவனைப்பற்றிய கதை இது.


ஒரு பொதுக்கூட்டம்

பேச்சாளர் கரகரவென்று அழுகொண்டிருக்கிறார் தனைமறந்து.

“அந்தப் பிள்ளை சொன்னவன் நான் இரண்டு மூன்று நாட்களில் நினைவிழந்து தண்ணீர் தண்ணீர் என்று அரற்றினாலும் தண்ணீர் தராதீர்கள் என்று”

ம்.. அந்தப்பிள்ளை திலீபன்.

அவன் அப்படித்தான் செத்துப்போனான். தண்ணீரும் அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதமிருந்து செத்துப்போனான். அவர் அழுதழுது சொன்னதைப்போல திலீபன் அவனது இறுதி நாட்களில் நினைவிழந்து அரற்றினான்.

தண்ணீர் தண்ணீர் என்று அவன் நினைவிழந்து அரற்றுகையில் யாரும் தரவில்லை அவனது வார்த்தைகள் அவனைச் சுற்றியிருந்தவர்களைக் கட்டுப்படுத்தியது. ஆயிரக்கணக்கானவர்கள் அவனது சாவுக்கு சாட்சியாய் இருந்தர்கள். அவனது சாவு தடுக்கப்பட முடியாததாயிருந்தது.

“ஐயா தீலீபா எங்கய்யா போகின்றாய்”
திலீபன் உண்ணாவிரதமிருந்த மேடைக்கு அருகில். இப்படி ஒரு கவிதை அழுதுகொண்டிருந்தது.

அவன் அதைக் கேட்டானோ கேட்கவில்லையோ தெரியாது. ஆனால் அவன் செத்துவிடக்கூடாதே என்று அத்தனை பேரும் துடித்தர்கள்.

முதல்நாள் திலீபன் மிகுந்த உற்சாகமாகப்பேசுகிறான். எனது மண்விடுதலை பெறவேண்டும். மக்கள் புரட்சி இங்கே வெடிக்க வேண்டும் என்று மிகவும் உற்சாகமாகப்பேசுகிறான்.

பிறகு நாளாக நாளாக அவன் பேசும் சக்தியை இழந்து கொண்டு போகும் நாட்களிலும் அவனது முகத்தின் புன்னனை மாறாதிருந்தது. நம்பிக்கையிழந்துவிட்டன் சாயல் துளியம் இருக்கவில்லை. மரணத்தின் வாசனை தனது நாசிகளில் ஏறுவதை அவன் மறைத்தான் உண்மையில் மக்களிடம் அவன் பிழைத்து விடுவான் என்கிற நம்பிக்கைகள் வீழ்ந்துகொண்டிருந்தது.

திலீபன் தனது நம்பிக்கைகள் சாகும் கணத்தில் அவன் சொல்கிறான்
“உறவுகளே நான் நம் நாடு மலர்வதை எனது தோழர்களொடு வானத்தில் இருந்து பார்ப்பேன்”


அவன் மரணம் நிச்சயமானது என்று அவனுக்கு புரிந்திருந்தது. அது அவனால் தானே நிச்சயிக்கப்பட்டது. அந்த தெளிவுதான் அவன் பலம் அது தெளிவா அல்லது சாகும் துணிவா எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால் அது மரணத்தை அதன் நிரந்தரத்தை அதன் மீதான மனிதர்களின் அச்சத்தை நிச்சயமாக வென்றுவிட்டது.

திலீபனிடம் கடைசியாக ஒரு வைத்தியர் வருகிறார். அவர் திலீபனைப்பார்த்தார். அவன் சாந்தமாக கிடந்தான் நிரந்தரமான அவனது அந்தப்புன்னகை அவரால் எதிர்கொள்ள முடியாததாயிருந்தது. காலம் அவனைக் கொண்டு போய் விட்டது விடுதலையின் மூச்சென்று மேடைகளில் முழங்கியவன் மூச்சடங்கிப்போனான் அவன் மரணத்தை அறிவிக்க வேண்டும். தன் உறவுகளை தன் அன்பான மக்களை துடிக்கவைத்து விட்டு மெழுவாத்தி அணைந்து விட்டது என்று சொல்ல வேண்டும்.

வைத்தியர் இப்போது என்னசெய்வார். அவரைச்சங்கடத்துக்கும் துக்கத்துக்கும் உள்ளாக்கப்போகும் அந்தக்கணங்கள் வந்துவிட்டன. மரணம் அவனை முழுவதுமாக ஆட்கொண்டு விட்டது.

மரணம் கொடியைப்போல அவன் மீது படர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாக கணீர்க்குரல் வலுவிழந்து தொய்து தீனித்து கடைசியில் மௌனித்தது. அந்தப் பெரும் மௌனம் கூடிக்கதறிய மக்கள் வெள்ளத்திடம் கொடுந்தீயெனப்பற்றியெரிகிறது இன்றைக்கும். எப்படி முடிந்தது அவனால். மரணம் அத்தனை இலகுவானதாதா காதலியைக் கட்டிக்ககொண்டதைப்போல மரணத்தை இலகுவில் முத்தமிட்டானே. அது சாத்தியமா மரணம் அத்தனை சாதாரணமா.


அவர் திலீபனை அவனது கால்களை தொட்டு கும்பிட்டார்.வைத்தியரின் உடல் குலுங்கிக்கொண்டிருந்தது (வேறென்ன செய்யமுடியும்) அவனது மரணம் அறிவிக்கப்பட்டது. அந்த திடுக்கிடும் கணங்களில் ஓஓஓஓஓஓ என எழுந்த கூக்குரலும் கதறலும் அடங்க நாளானது. அத்தனை பேரும் அழுதார்கள் மரணத்தை விருந்துக்கு அழைத்த அவனுக்காய் வழிந்த எந்தத்துளிக் கண்ணீரிலும் பொய்யில்லை. அத்தனையும் துயரம். நல்லூரின் தெருக்களில் வாhத்தைகளுக்குச்சிக்காத கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. உறைந்து போன அந்தக்கணங்கள் இன்றைக்கும் நல்லூரின் தெருக்களில் பிரதிபலித்துக்கொண்டிருக்கிறது.




ஒரு மிகப்பெரும் மனோபலமிக்க தலைவன் திலீபன். அவன் மனோபலம் இதனை சாத்தியமாக்கியதா? இந்தப்பூமியின் சுகங்களை தவிர்த்து அவன் முன்பு கூடியிருந்து கதறும் குரல்களைத்தவிர்த்து மரணத்தை எதிர்பாhத்து காத்திருப்பதற்கு அது அத்தனை இன்பமானதா? மரணம் சிலருக்கு ஆச்சரியம் சிலருக்கு சாதாரணமா. சாகப்போகிறோம் என்று தெரிந்த பிறகும் நடுங்காமலிருக்க புன்னகைக்க அதற்காககாத்திருக்க எத்தனை மனிதரால் முடியும் என்னால் உங்களால் யாரால்……..? ஒரு சில அதிசயர்களால் மட்டும் தான் முடியும் போலிருக்கிறது.

த.அகிலன்

Monday, September 25, 2006

பாழடைந்து போகும் நகர்



வெம்பிய நகரின்
கானல்
நீர்மிகும் தெருக்களில்
மழையின்
தேவதைகள் யாரும்
வருவதற்கில்லை

குரல்களற்ற
மனிதர்களின்
கண்கள் ஒளியற்று
மங்கின

நகருக்குள்
தாகித்தலையும்
சாத்தான்கள்
பெருநகரின்
கானல்நீரள்ளிப்பருகி
தெருக்களில்
வேட்டையாடித்திரிந்தன…

இறுதியிலும் இறுதியில்
தேவதைகளின் சாபம்
நகரின் ஓளிவிழுங்க
பாழடைந்து போகிறது
நகர்….

த.அகிலன்

Sunday, September 24, 2006

மரணத்தின் வாசனை - 01

ஒரு சின்னப்பையனின் அப்பா செத்துப்போனார்



கண்ணீரும் கம்பலையுமாக ஒரு தாய் கதறுகிறாள்

“எனது மகனைக் காப்பாற்றுங்கள் அவன் எனக்கு வேண்டும் தயவு செய்து காப்பாற்றுங்கள்”.

சீடர்கள் எல்லாரும் காத்திருந்தார்கள் நிகழப்போகும் அதிசயத்தின் சாட்சியாய் இருக்கப்போகிறோம் என்கிற முறுவல் அவர்களிடம் மிதந்து கொண்டிருந்தது.

புத்தர் அமைதியாய் சொன்னார் “ அம்மா மரணமே நிகழாத வீட்டில் இருந்து ஒரே ஒரு பிடி கடுகு வாங்கிவா” புத்தரின் முகம் புன்னகை மாறாதிருக்கிறது.

அவள் தெருவெங்கும் ஒடினாள் தன்மகனைக்காப்பாற்றி விடுகிற வெறியில் ஓடினாள் ஆனால் மரணம் இறுதியில் அவளை வென்றுவிட்டது. மரணம் காற்றைப்போல எங்குமிருந்தது. மரணத்தின் வாசனை தெரியாத ஒரு பிடி கடுகு கூட இந்தப் பூமியில் கிடையாது.

மரணத்தை வென்று விடுகிற ஆசை எல்லோருக்கும் உண்டு ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிற சகசவீரனைப்போல் மரணம் வாழ்க்கை முழுவதும் நம்மோடு கூட வருகிறது . கடைசிவரை பின்னாலேயே ஒடீ வந்து இறுதியில் முந்திக்கொண்டு விடுகிறது.

எனது வழியில் கடந்து போன மரணத்தின் சுவடுகளின் சிலகாட்சிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

அப்பாவின் மரணத்தை பார்த்திருக்கிறேன் மிகநெருக்கமாக மரணத்தின் வாசனை அவர் முகத்தில் மிதந்து கொண்டிருக்க அவரது இறுதிவார்த்தைகள் எனக்கானவையாய் இருந்தன.

எனக்கு அப்போது 7 வயது அதற்கு முன்பாக என்னிடம் மரணம்குறித்த சேதிகள் அனுபவங்கள் ஏதும் கிடையாது என்னிடம் மரணம் குறித்து இருந்ததெல்லாம் சவஊர்வலமும் அதில் கொழுத்தப்படுகின்ற சீனா வெடி குறித்த பயமும் தான் அதைவிடவும் "பொடிக்கு கையைக்காட்டாதடா கைஅழுகிப்போகும்" என்ற அக்காக்களில் வெருட்டலுக்கும் நான் பயந்து போயிருந்தேன். கை அழுகிப்போகாதிருக்க சவஊர்வலங்களைப்பார்க்கிறபோதெல்லாம் கையைப் பின்னால் கவனமாய் கட்டி மறைத்திருக்கிறேன். என்னையும் மீறிக்கையைக்காட்டிய பொழுதொன்றில் கை அழுகப் போகிறது என்று அழுது அழுது ஊரைக்கூட்டியிருக்கிறேன்.

இப்போது அப்பாசெத்துப்போனார். பாம்பு அப்பாவைக்கடித்துவிட்டது என்றவுடனேயே எல்லாரும் பதறினார்கள். அப்பாவை சூழ்ந்து கொண்டார்க்ள். எனக்கு ஒன்றும் புரியவில்லை அப்பாவைச்சுற்றி நின்ற சனங்களுக்குள் நான் இடறுப்பட்டுக்கொண்டிருந்தேன். அப்பாவைக்காப்பாற்றி விடவேண்டும் என்று எல்லோரும் நினைத்தார்கள் அப்பாவை தூக்கிக்கொண்டு எல்லோரும் றோட்டுக்கு ஒடினார்கள். சந்தி வைரவர் கோயிலடியில் கிடத்தினார்கள். அவர்கள் நினைத்திருபார்கள் வைரவர் காப்பாற்றி விடுவார்.


அப்போதெல்லாம் இந்தியராணுவம் எங்கள் றோட்டுச்சந்தியில் முகாமிட்டிருந்தது. அஞ்சரை மணியோட பெரிய வட்டம் வட்டமாக முள்ளுக்கம்பிகளை போட்டு வீதியைமூடிவிடுவார்கள் யாரும் போகமுடியாது ராணுவ வாகனங்களைத்தவிர யாரும் போகமுடியாது. அப்பாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதற்கு ராணுவத்துடன் யார்யாரேவெல்லாம் கதைக்கிறார்கள் நான் குரல்களை மட்டும் கெட்டுககொண்டிருந்தேன் என்னால் மனிதர்களின் கால்களை மட்டும் தான் பார்க்கமுடிந்தது. சேர் மூர்திசேர் பாம்புகடிச்சிட்டுது சேர் .யாரோ இந்திய ராணுவத்திடம் கெஞ்சினார்கள். NO NO ராணுவம் பலமாக மறுத்துக்கொண்டிருந்தது.நான் சனங்களின் கால்களிடையில் நசிபட்டுக்கொண்டிருந்தேன். கால்களிடையில் புகுந்து புகுந்து அப்பாவிடம்போனேன். அப்பா ஏன்அழுகிறார்? “அப்பா அப்புசாமியிட்ட போட்டு வாறன் பிள்ளை வடிவாப்படியுங்கோ” அவர் குரல் தளுதளுத்தது. அந்த வார்த்தைகளின் இறுதியையும் நிரந்தரத்தையும் என்னால் அப்போது புரிந்து கொள்ள முடியவில்லை. சொல்லப்போனால் மரணம் மறுபடி ஆளைத்திரும்பத்தராது என எனக்கு அப்போது புரியவேயில்லை.

இந்தியராணுவம் இறுதிவரை அப்பாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக விடவில்லலை.(ராஜீவ்காந்தி வாழ்க) அப்பாசெத்துப்போனார். வைரவரும் கைவிட்டார்.

அப்பாவை வீட்டைகொண்டு வந்து கிடத்தினார்கள் யார்யாரோ என்னைக்கட்டிப்பிடித்து அழுதார்கள் நான் கொஞ்சம் அசௌகரியப்பட்டேன் அவ்வளவுதான் துக்கம் எல்லாம் அப்போதிருக்கவுமில்லை தெரியவுமில்லை. நான் அப்பாவை கிட்டபோய் பார்த்தேன் அவர்விழிகள் ஒருமுறை திறந்து மூடியது போலிருந்தது நான்நிச்சயமாய் பார்த்தேன் அந்த வெளிறிய வழிகளை பார்த்தேன். யாரிடமும் சொல்ல முடியவில்லை அப்பா முழிப்பு என்று . அந்த வேதனை இன்றைவரைக்கும் எனக்கு உண்டு. (நான் இப்போது யோசிப்பது உண்டு அது ஒரு பிரமையோ என்று) ஒரு பிரமையின் ஞாபகங்கள் இருபது வருடம் தாண்டியம் மனசில் தங்கியிருப்பது என்பது ம்;;;;;;;… .


ஒப்பாரி காதைக்கிழித்தது. பிறகு எல்லாம் வேகமாக நடந்தது நான் அப்பா இப்போது பொடி என்பதால் அப்பாவுக்கு முன்னுக்கு கையை வெளியில் எடுக்காமல் பின்னாலேயே கட்டிக்கொண்டிருந்தேன். அல்லது அப்பாதானே கையை எடுக்கலாமா விடலாமா என்று நயாசித்துக்கொண்டிருந்தேன். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது அப்பாவுக்கு நிறையப்பேர் கண்ணீர் அஞ்சலி அடித்தார்கள். நான் அதையெல்லாம் ஒரு மூட்டைக்கு மேலிருந்து உரத்து மரணஅறிவித்தல்பாணியில் வாசி;த்துக்கொண்டிருந்தேன்.

நான் அழவேயில்லையா அழுதேன். கடைசியாக சுடலையில் அப்பாவைக்கொழுத்தியபோது. அப்பா இனிமேல் வரவே மாட்டார் என்று எனக்கு புரிந்த போது வீறிட்டு கத்தினேன். யார் யாரோ என்னை அணைத்தார்கள் சமாதானப்படுத்தினார்கள். சோடா கொடுத்தார்கள். இப்போதும் அந்த அழுகை உறங்கிக்கொண்டிருக்கிறது எனக்குள்.

இப்போது 18 வருடங்கள் கழித்து மரணம் பற்றி எனக்கிருந்த எண்ணங்களை அனுபவங்களை எழுதலாம் என்று நினைத்து தொடங்கினேன். அப்பாவின் மரணத்தை தவிர்த்து விட்டு எப்படி?அப்பா எனக்கு சரியாக நினைவுகளில் பதியாத பிம்பம் அவர் மரணம் என்னை நிச்சயமாக பாதித்தது என்னிலும் அதிகமாக தம்பியை அதைவிட அப்போதுதான் பிறந்திருந்து தங்கையை(அவளுக்கு அப்பாவின் முகமே தெரியாது) அந்த மரணம் பாதித்தது அப்பனில்லாப்பிள்ளைகள் என்கிற இலவச இணைப்பு அனுதாபம் என்னோடு எப்போதும் கூடவே வந்து அசௌகரியத்தையும் கூடவே அப்பாவின் நினைவுகளையும் தந்து கொண்டேயிருக்கிறது.

18 வருடம் கழித்து இப்போது யோசித்தேன் இதற்கெல்லாம் காரணம் யார் அப்பாவா அந்த நேரம் அவரைக்கடித்த பாம்பா இல்லை அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவிடாத இந்தியராணுவமா?(அவர்கள் கட்டளைக்கு பணிபவர்கள்)அல்லது இந்திய ராணுவத்தை இங்கே அனுப்பினாரே ராஜீவ்காந்தி அவரா? யார் நண்பர்களே.

த.அகிலன்

Monday, September 11, 2006

நினைவுகள் மீது படியும் நிழல்…


எனை விலகி
புல்லின்
நுனியில் இருந்து
ஒரு பறவையைப்போல்
எழுகிறது
உன் முத்தத்தின்
கடைசிச்சொட்டு ஈரமும்

நான்
புதினங்கள்
அற்றுப்போன
செய்தித்தாளைப்போலாகிறேன்
நீயிராப்பொழுதுகளில்..


மழைநின்ற
முற்றத்தில்
உன்
காலடித்தடங்களற்ற வெறுமை
நிழலெனப்படிகிறது
நம்
நினைவுகளின்மீது

த.அகிலன்

Monday, September 04, 2006

எறும்புகள் உடைத்த கற்கள்


வலி
உணரும் தருணங்களில்
எங்கிருந்தோ முளைக்கிறது
எனக்கான கவிதை

காற்றழிந்த
மணல்வெளியில்
காத்திருக்கும்
என்காலடி
காற்றில் அழிவதற்காய்

நான்
கானலைஅருந்த
தயாராகையில்
எப்படியாவது
காப்பாற்றிவிடுகிறது மேகம்

எனக்குத் தெரியும்
கடித்துவிடுகிற
கடைசிநொடி வரைக்குமே
புகழப்படும் எறும்புகள்

ஆனாலும்
எறும்புகளிற்கு
கவலைகிடையா
எதைக்குறித்தும்

என்
வழியெங்கும்
நிறுவிக்கிடக்கிறது
எறும்புகள் உடைத்த
கற்கள்

த.அகிலன்